Thursday 31 July 2014

கழக அமைப்பு ஆய்வுக் குழுவுக்கு எழுதிய மடல்

பேரன்புடையீர் வணக்கம்,
 வாழ்த்துக்கள்.

கழக அமைப்புகள் குறித்து ஆய்ந்து தலைமைக்கு பரிந்துரை அளித்த தலைமைக் கழகம் அமைத்த குழுவின் தலைவரான தங்களுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் வணக்கமும் வாழ்த்தும் கூறி என்னுடைய கருத்துக்களை முன் வைக்கிறேன்.

தங்கள் தலைமையில் முன்னொரு தடவை வந்த குழுவின் முன் என் கருத்துகளை வழங்கியிருக்கிறேன். மற்றும் அண்ணன் நீல நாராயணன், அண்ணன் சி.டி. தண்டபாணி, தோழர் சதாசிவம் ஆகியோரிடமும் என் சிந்தையில் தோன்றிய செய்திகளை தெரிவித்து இருக்கிறேன்.

உலகம் காணாத ஒப்பற்ற இயக்கமான கழகம் இன்றைய தமிழர்களின் எல்லாவகையான ஏற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரண கர்த்தாவாக இருந்து வரலாறு படைத்திருக்கிறது.

ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில், நீதிக்கட்சியின் தந்தை பெரியாரும் அவர் வழி நடந்த பேரறிஞர் அண்ணாவும் அண்ணாவைப் பின் தொடர்ந்த தலைவர் கலைஞர் அவர்களும் ஆற்றிய தொண்டு வெளிப்படுத்திய அறிவு, ஆற்றல் திறன் தியாகம் ஆகியவை அறவழி மக்களாட்சி ஆகியவற்றால் பாடுபட்ட மனிதர்களில் மகத்தானவர்கள் இவர்கள்.

இன்னும் சொல்வதென்றால் நமது இயக்கம் போன்ற (திமுக) ஓர் அமைப்பு உலகெங்கும் தேடினாலும் காண முடியாது. அரசை எண்ணாத காலத்திலும், பின் அரசாண்ட காலத்திலும்-- ஆற்றிய-- அதாவது, அகம், புறம் ஆகிய துறைகளில் சாதித்த சாதனைகளை சொல்வதெனில் அண்ணா பெரியாருக்கு சொன்னதை நினைவு கொள்ளலாம். ஆம், அவர் சொன்னார்

“அய்ரோப்பாவில் இருநூறு ஆண்டுகளில் சாதித்ததை தந்தை பெரியார் இங்கே இருபதாண்டுகளில் சாதித்தார். கசப்பு மருந்தை இனிப்பு கரும்பில் தருவது போல இங்கே கொள்கையை விதைத்து சாதித்தார் என்று”.

அத்தகைய அருமையான இயக்கத்தை இன்றைய மக்களில் இளைஞர்களும், மாணவ மாணவிகளும் நெஞ்சில் வைக்கவில்லை, நேசிக்கவில்லை. இதற்கு பெரிய புதைபொருள் ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை என்று கருதுகிறேன்.

ஆட்சியை மய்யமாக வைத்தே ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக கழக முன்னோடிகளின் உள்ளம் இயக்கியது. அதை விட மோசம் ஆட்சியின் வழிவரும் வருமானத்தை குறிவைத்தே தங்களது எண்ணங்களை திட்டங்களை வைத்துக் கொண்டனர்.

அரசியல் வாதிகள் சில வழிகளில் (தவறாக இருந்தாலும்) பணம் பெறவது தவறல்ல. ஆனால் அதில் கட்சிக்கு எவ்வளவு, அதை எந்த வழியில் தருவது போன்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் போய் விட்டது. அதில் அதிமுகவினர் சரியாக இருக்கின்றனர்.

குறிப்பாக மாவட்டச் செயலாளர்களின் வல்லாண்மை வழிகளில் தோழர்களை துச்சமென கருதினார், துதிபாடுவோரை தூய்மையற்றோரை துணைக்கு வைத்துக் கொண்டனர்.

மக்களாட்சி தத்துவத்தின் உயிர்நாடி நமது கிளைக்கழகத்தின்தான் இருப்பதாக ஒரு காலத்தில் ஊரார் பாராட்டினர். ஒரு கிளைக் கழகம்தான் கழகத்தின் அரணாக இருக்க முடியும். அந்தக் கிளைக்கழகம் தங்கள் மேலடைப்பு நிர்வாகிகளால் தன்னலத்திற்காக வளைக்கத் தொடங்கினார். கழகத்தின் வலிமையை தொலைத்தனர். உறுப்பினருக்கான தொகையை இவர்களே மொத்தமாக செலுத்தி உறுப்பினர் அட்டைகளை இவர்களே வைத்துக் கொண்டு போட்டி போடுவோரின் பாரங்கள், அட்டைகளை உருக்குலைத்து தேர்தலில்  தில்லுமுள்ளுகளைச் செய்து பொறுப்புக்கு வந்து விடுகின்றனர்.

ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். போட்டியிடுகின்ற நகரத்தில் ஓட்டுரிமை இல்லாதவர்களுக்கு தலைமையில் இருந்து பெற்றுவந்த பச்சை அட்டையை வழங்கி தனக்கு சாதகமாக தேர்தலை நடத்தி முடித்தார் ஒரு மாவட்டச் செயலாளர்.

தங்களின் ஆய்வுப் பார்வை, திட்டம், எப்படி இருந்தாலும் கிளைக்கழகம் வலிமையுடன் செயல்படும் வகையில் பரிந்துரைக்க வேண்டுகிறேன்

இதை நீண்டகாலமாகவே வலியுறுத்துகிறன். தலைவர் அவர்களுக்குஇறைவனே இறைஞ்சுகிறேன். என்று ஒரு மடல் எழுதியிருக்கிறேன். மேலும் பல மடல்கள் எழுதியிருக்கிறேன். இது தலைவர் பார்வைக்கு போகாது என்றெல்லாம் சொன்னார்கள்.

ஒவ்வொரு தோழனிடமும் உறுப்பினர் கட்டணம் பெற்று அவரிடம் அட்டை வழங்கியதிற்கான சான்றொப்பமிட்ட உறுதிப்படுத்தும் வழிகாண வேண்டுகிறேன். மற்ற கட்சிகளிடமிருந்து வருபவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவது சரியல்ல என்று கருதுகிறேன். ஏனெனில் அது உண்மைத் தோழர்களையும், உழைப்பவர்களையும் ஊனப்படுத்திவிடும். அதுமட்டுமல்ல மற்ற கட்சிகளிலிருந்து வருபவர்கள் இங்கு அணிகளை எதிர்த்தவர்களை ஒழிக்கின்ற உணர்வு இயல்பாகவே தோன்றும். இதனால் மாவட்டத்தில் நல்ல தொண்டர்கள் தோழர்கள் கொள்கையாளர்கள் ஒதுக்கப்பட்டனர், ஓரம் கட்டப்பட்டனர் அதுமட்டுமல்ல, இங்கு உழைத்தவர்கள், உண்மைத் தொண்டர்கள் மறைந்தபோது அவருக்கு ஒரு மரியாதை கூட செலுத்த முன்வருவதில்லை.

மற்ற கட்சிக்காரர்கள், வணிக மன்னர்கள் வீடுகளுக்கு ஓடிவரும் மாவட்டச் செயலாளர்கள் அல்லது நகர / ஒன்றிய  தோழர்களை புறக்கணிப்பது சரிதானாகட்டுக்கோப்பானக் கழகத்தை கரையான்கள் அரிப்பதையும் இருப்பாலான கழகம் இற்றுப் போவதையும் தடுக்கின்ற வகையில் தங்கள் குழுவின் பரிந்துரைகள் இருக்க வேண்டுகிறேன்.

கழகத்தில் ஏறத்தாழ அய்நூறுக்கு மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களால் பல்சுவை அறிவு கொண்டவர்கள் பல்வேறு செய்திகளை விளக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைப்பதில்லை.

பொருள்பட பேசாதவர்கள் பலர் தங்களுக்கு ஒரு கூட்டணியை வைத்துக் கொண்டு அதுவும் சாதி அடிப்படையில் வைத்துக் கொண்டு வாய்ப்புகளை வளைத்துக் கொள்வதாக சில தகவல்கள் உலவுகின்றன. அது உண்மையென்றால் அதையும் சரி செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

இப்படிச் செய்யலாம், ஒரு கூட்டத்தை கூட்டி வாய்ப்பு தந்து சில மணித் துளிகள் சிறப்பாக பேசுபவர்களை தேர்வு செய்து பகுதி பகுதியாக அனுப்பு வைத்து பரப்புரை செய்யலாம். இறுதியாக ஒன்றை இயம்ப விரும்புகிறேன். சாகாத பொருள் கூறி கவிதை தந்த சங்க காலப் பாவலரின் ஒருவன்.

 உலகை ஒரு குடை நிழலில் ஆளத்துடிக்கும் வேந்தனாயினும்
தன் உயிரைக் காக்க நாளும் ஓர் உயிரை கொல்லும் வேடனாயிலும்
உண்பது நாழி உடுப்பது இரண்டு!
மற்றெல்லாம் ஓரொக்கமோ! (ஒரே மாதிரித்தான்)
செல்வத்தின் பயன் ஈதலே!
துய்ப்பேன் எனின் தப்புநபலவே!
என்றான் இனிய கவிஞன். இதை உலகம் உணர்ந்து செயல்படின் ஆசை, அழுக்காறு, இன்னாச் சொல் இல்லாது உயர்வின் ஒளிமழையில் செயல்பட வையம் சிறந்து நிற்கும்.

இதை உலகம் உணர்கிறதோ, இல்லையோ பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறிப்பாக உன்னத இயக்கமாம் தி.மு.கவின் முன்னணித் தோழர்கள், பொறுப்பில் இருப்போர் புரிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாக வேண்டும்.

இதை தலைமை வழியாக ஆய்வுரையாகவோ, ஆணையாகவோ வழங்க வலியுறுத்த வேண்டுகிறேன். அதாவது பெருஞ் செல்வர்களுக்கு பொறுப்புக்கு வருவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கொரு விதி செய்தால் கழகம் தன் வலிமை குறையாமல் இருக்கும். காரணம், கழகத்தை மக்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.

  மற்ற கட்சிகளின் குற்றம் குறைகளை மக்கள் மன்னித்து விடுகிறார்கள். நிறைந்த தியாகத்தால் கட்டப்பட்ட தி.மு.. தூய்மையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.

குறிப்பு: இத்துடன் தலைவருக்கு எழுதிய மூன்று கடிதங்களையும் இணைத்திருக்கிறேன். 1988லிருந்தே கழகக் குறைகளையெல்லாம் நிறைய மடல்களில் எழுதியவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க, நன்றி

பெறுநர்

திரு. பெ.சு. திருவேங்கடம் அவர்கள்,
மற்றும் குழு உறுப்பினர்கள்
கழக அமைப்பு ஆய்வுக்குழு

No comments:

Post a Comment