Tuesday 17 November 2015

கலைஞரை புரிந்து கொள்வது கடினமா?

கலைஞரை புரிந்து கொள்வது கடினமா?
கலைஞர்... ஏறத்தாழ ஓர் அறுபதாண்டுகளுக்கு மேலாக ஒரு கொள்கை நோக்கோடு அதற்குரிய குணத்தோடு, தன்னையே இழக்க நேர்ந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் இதயத்தோடு மக்கள் பணியாற்றுகின்ற ஒரு மகத்தான பொதுநலப் போராளியாவார்.
தமிழ்ச் சமுதாய மீட்சிக்கு தன்மான இயக்கம் கண்ட, அன்றைய சூழலில் ஒரு நல்லரசு நடத்தி, பின் நலிந்த நீதிக்கட்சியையும் தன் தோளில் சுமந்த தந்தை பெரியாரின் பின் அணிவகுத்த அண்ணன் பட்டுக்கோட்டை அழகிரி, பேரறிஞர் அண்ணா, அண்ணன் நடிகவேள் ராதா போன்றோரின் பிரச்சாரப் பெருமழையில் நனைந்து, குளிர்ந்து, குதூகலம் கொண்ட உள்ளத்தோடு அந்த இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கலைஞர் அவர்கள்.
பொது வாழ்வில் நுழைபவர்கள் எந்த நோக்கத்தோடு நுழைகிறார்கள்; எந்தக் காலத்தல் நுழைகிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால்தான் கலைஞர் பொதுவாழ்வில் இணைந்ததை, உழைத்ததை உணர முடியும்.
பொதுவாக சமூகம், ஏற்றுக் கொள்ளாத செய்திகளை சொன்னாலே நெற்றிக் கண்ணைத் திறக்கும் நிறைய மனிதர்கள் இருந்த தஞ்சை மாவட்டத்திலே பிறந்தவர் கலைஞர். அதுவும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலே பிறந்தவர். இருப்பினும் தன் இதய சுத்தியோடு பெரியாரின் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
பொருளாதாரத்தில் உயர்ந்திட சில புதுச் செய்திகளை சொன்னதற்கே பொதுவுடைமைத் தோழர்களைக் கொன்று போட்ட தஞ்சைத் தரணிப் பண்ணையார்கள் வாழ்ந்த மண்ணில் கடவுள் இல்லை; சாதி இல்லை என்று சொல்வதற்கும் ஏன் ஊருராய் சென்று பரவச் செய்வதற்கும், உளத்தூய்மையும், உறுதிகொண்ட மனமும் வேண்டும். அந்தத் துணிவோடு தன்னை இந்த தூய இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர் தான் கலைஞர்.
அன்றிலிருந்து இன்று வரை ஒரே கொள்கைக்காக போராடுகிறார். சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் உணர்வுகளோடு திராவிடர் கழகத்தில் பணியாற்றினார். பின் அரசியல் இயக்கமான அண்ணா கண்ட தி.மு.கழகத்தில் பல்வேறு நிலைகளில் உழைக்கிறார் - போராடுகிறார் - அரசின் வழியாக தமிழர் மீட்சிக்காக அரும்பெருந் தொண்டாற்றுகிறார்.
மகத்தான தமிழர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி தமிழ் மக்களை மாபெரும் வளர்ச்சிப் போக்கில் வழிநடத்தி வந்திருக்கிறார். அவரால் விளைந்த மாற்றமும் வளர்ச்சியும் மகத்தானது - மறக்கவோ - மறைக்கவோ முடியாதது.
சாதிய உணர்வுகள் அவரிடம் அண்ட முடியாது. சாதிகள் வழியில் கூட சில காரியங்களை செய்திருக்கலாம். அதை அனைத்துச் சாதியினருக்கும் செய்திருக்கலாம். அதன் நோக்கம் அனைவரும் வளர்ந்து தமிழர்கள் என்ற உணர்வுக்கு வந்து எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்பதற்கே செய்திருப்பார்.
தி.மு.கவில் உறுப்பினரான பின் சாதிய உணர்வுகளை எண்ணத்தில் பதித்திருப்பது சரியல்ல என்பதை பலர் உணர வேண்டும்.
பள்ளி மாணவனாகி விபரம் தெரிந்த நாளிலிருந்து பன்னாடுகளில் வாழ்கின்ற பாசமிகு தமிழர்களின் தலைவனாக மிளிரும் இந்த நேரம் வரை ஒரே உணர்வோடு வாழ்கிறார்; போராடுகிறார் என்பதை தொலைதூரத்தில் இருக்கின்ற எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அவரின் அருகில் இருப்பவர்கள், அவரது அன்பைப் பெற்றவர்கள், அவரால் இந்த இயக்கத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள், ஆளாக்கப்பட்டவர்கள். பதவி பெற்று, பவுசடைந்து, பல்வேறு நிலைகளில் தன்னை உயர்த்திக் கொண்டவர்கள் அவரைப் புரிந்து கொள்ளாதது ஏன்? வியப்பாக இருக்கிறது.
மிகப் பெரும் சாம்பவான்களையெல்லாம் எதிர்த்து அரசியில் நடத்தியவர்கள் தன்னுடன் இயக்கத்தில் வளர்ந்தவர்களால் முதுகில் குத்தப்பட்டவர், தொடர்ந்து வந்த துரோகங்களால் துளைக்கப்பட்டவர்.
ஆயினும் தொடர்ந்து சுடர் முகங்காட்டி ஒளி வீசி மக்களிடையே உலா வருகிறார். இள வயதில் பதிந்த அறிவியக்க உணர்வுகளை இன்னும் உயிரோட்டமாக வைத்திருக்கிறார். தன்னை ஒரு நாத்திகன், கம்யூனிஸ்ட் என்று ஒளிவு மறைவின்றி ஓங்கி முழங்குகிறார். அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். உளத் தூய்மையுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் வருவார்கள்: போவார்கள். அவரது வாழ்க்கையும், வரலாறும், சாதனைகளும் வானளாவியது; வளம் நிறைந்தது; வரும் தலைமுறைக்கும் மறைக்க முடியாதது.

No comments:

Post a Comment