Saturday 28 November 2015

மகத்தான மாமனிதர் முகமது நபியவர்கள்

மகத்தான மாமனிதர் முகமது நபியவர்கள்
கி.பி நாலாம் நூற்றாண்டில் தோன்றி இஸ்லாத்தை கட்டமைத்த மாமனிதர் முகமது நபி அவர்களை போற்றிய மூன்று நூல்கள் என் விழிகளின் முன் விரிந்து ஒளிசிந்திக் கொண்டிருந்தது.
ஒன்று அமெரிக்க எழுத்தாளன் மைக்கேல் எச்.ஹார்ட் என்பார் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட நூறுபேர் எனும் உலகப் பேராளர்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்.
இரண்டாவது முரசொலி நாளிதழில் தத்துவங்களின் தேரோட்டம் என்று நிறைய நிறைய நெஞ்சைக் கவர்ந்த கட்டுரைச் செல்வங்களை வழங்கிய திரு அடியார் அவர்களின் நான் காதலிக்கும் இஸ்லாம் எனும் இதயத்தில் இனிமையூட்டிக் கொண்டிருக்கும் நூல்.
மூன்றாவது இந்தியப் பொது உடமை முன்னோடி உலகப் பொது உடைமையாளர்களின் வரிசையில் இணைந்திருந்த இனியவர் திரு. எம்.என். இராய் அவர்கள் எழுதிய இஸ்லாம் ஒரு வரலாற்றுப் பாத்திரம் எனும் இஸ்லாத்தை ஒரு புதிய வடிவத்தில் வளம் தரும், வாசம் தரும் மலர் போன்ற நூல்.
திரு. மைக்கேல் ஹார்ட் அவர்கள் இந்த நிலவுலகில் ஏறத்தாழ நாலாயிரம் கோடிக்கும் அதிகமானோர் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர்களில் முதலிடத்தில் இருப்பது முகமது நபி தான் என்று முழங்குகிறார்.
அரபுப் பகுதியில் வாழ்ந்த படவிகள் எனும் குலத்தைச் சேர்ந்த முரட்டு மனிதர்களை வீரத்துடன் வெறி கொண்டு போராடும் உணர்வுகளை உற்றுநோக்கி அவர்களுக்குள் இருந்த உட்பகையை சீராக்கி உறவு கொள்ள வைத்து, படைப்போர் பயிற்சியளித்து அவர்களை இழிவுபடுத்தியவர்களை இடுப்பொடித்து போட்டு ஓர் இறைத் தத்துவத்தை நிலைநாட்ட, பரந்த நிலப்பரப்பை வெற்றி கொண்ட நபிதான் முதல் இடத்தில் இருக்கத் தகுதியுடையவர் என்று ஓங்கியறைகிறார்.
மிகக் குறைந்த காலத்திலேயே இத்தகைய இமாலய வெற்றியைப் பெற்றதோடு பல நூற்றாண்டுகள் பின்னரும் அவர் தந்த உணர்வுகள் நிலைத்து நீடித்திருப்பதை நெஞ்சார பாராட்டுகிறார் திரு. ஹார்ட் அவர்கள்.
அண்ணன் அடியார் நான் காதலிக்கும் இஸ்லாம், எனும் நூலிலிருந்து உதிர்ந்த நயத்தக்க நாகரிக சித்தாந்த கோட்பாடுகளை விளக்கிவிட்டு உலகம் காணாத உன்னதக் காட்சியொன்றை நமது உள்ளத்தில் உறைய வைக்கிறார்.
இந்த உலகத்தில் மதகுரு யாரும் மன்னனாக இருந்து வாளெடுத்துப் போர் புரிந்ததில்லை. மன்னர்கள் யாரும் கூரைக்குடிலில் குடியிருந்ததில்லை. ஆக மதக்குரு, மன்னன், குடிசை வாழ் குடிமகன் என மூன்று நிலைகளில் முழுநிலவாய்த் திகழ்ந்தவர் திரு.நபியவர்கள் என்கிறார் இனியவர் அடியார் அவர்கள். அத்தோடு தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணை அதுவும் தலைவனை இழந்த கைம்பெண்ணைக் கைப்பிடித்து தனது இல்லற வாழ்வை அமைத்துக் கொண்ட இலட்சியவாதியாகவும் திகழ்ந்தார் நபிமானார் என்கிறார். நமது நல்ல கலைஞருக்கு நாளெல்லாம் வாழ்த்துப் பாடிசைத்து நலம்பாடிய நமது அடியார் அவர்கள்.
இந்திய விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டு போராடிய வெள்ளை அரசால் நாடுகடத்தப்பட்ட நல்லறிஞர் வங்கத்து திரு. எம்.என் இராய் அவர்கள் தீட்டிய ஒப்பற்ற ஓவியப் பனுவல் தான் இஸ்லாம் ஓர் வரலாற்றுப் பாத்திரம் எனும் நூலாகும்.
அடடா, என்னே! ஓர் ஆராய்ச்சித்திறம். வரலாற்றில் ஏற்படுகின்ற வலிகளை வடுக்களைத் துடைக்கின்ற உளத்தூய்மை அதுவும் இந்தியச் சூழலில் இது ஒரு புதுமையாகும். தந்தை பெரியார் மீது மட்டற்ற மரியாதை வைத்திருந்த திரு.எம்.என். இராய் அவர்களின் இந்த ஆய்வு நூல் இஸ்லாம் தோழர்களிடம் மணம் தூவுமேயானாள் உலகில் இன்னொரு அறிவியல் புரட்சி பூத்துக் குலுங்கும்.
இறைவனின் வாள் என்று இஸ்லாத்தை உருவாக்கிய நபியவர்களும் அவருடைய அருமைத் தோழர்களும் பின், வழிநடந்த பலரும் மிகச் சிறந்தப் பகுத்தறிவு நெறியாளர்கள் என்கிறார் திரு. இராய் அவர்கள்.
கிரேக்க மாமேதைகளின் அரிய அறிவுச் செல்வங்களை அழிக்க முனைந்த இத்தாலிய கிறித்துவத்திடமிருந்து பாதுகாத்து அய்ரோப்பாவிற்கு வழங்கியவர்கள் நபிகள் நாயகத்தின் வழிவந்த தளபதிகள் என்கிறார்.
கணிதத்திற்கும் மருத்துவத்திற்கும் அளப்பறிய தொண்டும் சாதனையையும் புரிந்தவர்கள் அராபியர்கள் என்பது வேறு சில ஆய்வுகளில் கூடுதல் செய்தியாகும். முதன் முதலில் விண்வெளி பற்றிய செய்திகளை சொன்னவர் நபிகள் அருகில் இருந்த அபுபக்கர் என்று ஆராய்ந்து அறைகிறார். இந்த நூல்களின் சாரத்தைச் சுருக்கமாகச் சொன்னால் நூலின் காட்சிப்படி சங்ககால தமிழ் உணர்வுச் செய்திகளாகவே விளங்குகிறது. தமிழிலிருந்துதான் தமிழரில் இருந்துதான் உலக உயிர்களும் உலக மாந்தர்களும் உருவானார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
சமண மகாவீரரின், புத்த சித்தார்த்தரின் முன்னோர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த தமிழர்கள் என்றும், சிந்துவெளி தமிழர்கள் தென்கண்ட கடல்தொடும் இடத்திலிருந்து பரந்து செல்லும் இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் என்றும், இந்த மக்கள்தான் மத்தியதரைக் கடல் பகுதியில் குடியேறினார்கள் என்றும், அதனால்தான் அந்தப் பகுதியில் தமிழின் அறமும் அழகிய கலைவடிவங்களும் கிடைத்தன என்றும் பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர்தான் அய்ரோப்பாவின் கிரேக்கத்திற்குச் சென்றார்கள் என்றும் பின்னர் அவர்களின் தோன்றல் அய்ரோப்பாவில் பரந்து பரவினார்கள் என்றும், உணர்வியல், நிலவியல், உளவியல், மொழிஇயல் என்று ஆய்வாளர்கள் ஆய்ந்தறிந்து அறிவிக்கிறார்கள்.
அதனால்தான் இஸ்லாத்தை உருவாக்கியவர்கள் ஓர் இறைக் கோட்பாடு, அறம், பொருள், இன்பம், இயல், இசை, கலை காதல், மானம், வீரம் ஆகியவற்றில் சங்ககால மான மறவர்களைப் போலவே உருவாக்கினார்கள் என்று உறுதிபட உரைக்கலாம்.

இந்த நூல்களை விரித்து விவரிப்பது என்பது இங்கு இயலாத ஒன்றாகும். நூல்களைப் படித்தால் பல்வேறு உண்மைகள் ஒளிவிடக் காணலாம்.

No comments:

Post a Comment