Tuesday 17 November 2015

பட்டதாரிகளே

பட்டதாரிகளே
படிப்பாளிகள், பட்டதாரிகள் பாரினை உயர்த்த வந்த அறிவாளர்கள். நுண்கலைகள் கற்றுத் தேர்ந்து, புதுமைகள் படைத்து நாட்டுவளம் கூட்டுகின்ற நல்லறிவாளர்கள். படிக்க வைத்தால் நம் குடும்பத்தை காப்பாற்றுவார்கள் நமது பிள்ளைகள் என்று இல்லத்தாரும், நாடு வாழ தன் ஆற்றலை பயன்படுத்துவார்கள் என்று நாட்டோரும் எண்ணியே நம் நலனைக் கூட கவனியாது மாணவர்களையும் - மற்றும் கல்விக் கூடங்களையும் வளமுடன் வளர்க்கின்றனர். சந்தனக்காடுகளையும் மலர்க் கூட்டங்களையும் கடந்துவரும் இனிய தென்றலைப் போன்றது மாணவப்பருவம் என்றார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய மாணவப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனும் பெறுகின்ற இன்பம் ஈடு இணையற்றது. அந்த இனிய பருவத்தில் இதயம் அடைகின்ற மகிழ்ச்சி எல்லையற்றது. மழலைப்பள்ளி முதல் மகத்தான கருத்துக்களைப் போதிக்கும் பல்கலை கழகம் வரை அறிவினைக் கூர்மைப் படுத்தும் பட்டறைகளாக திகழ்கின்றது.
ஏதும் அறியாதவர்களாக இருக்கின்ற காலத்தில் பள்ளி செல்லும் மாணவன் பட்டதாரியாகி வெளிவரும் காலத்தில் எளிதாக எதையும் முடிவெடுக்கின்ற ஆற்றலினை பெறுகிறான். துள்ளி விளையாடும் பருவத்தில் பையில் சில புத்தகங்களோடு பள்ளிக்குள் நுழைகின்ற பாலகன் ஆண்டுகள் பல கடந்தபோது உடல் மாற்றத்தோடு உயரிய மனிதனாக வெளிவரும் காட்சி உண்மையில் உவகையூட்டும் காட்சியேதான்.
மருத்துவனாக, பொறியாளனாக, பொறுப்புமிகு ஆசிரியனாக, நிர்வாகியாக, உயர் கணக்கியல் மேதையாக, அரசுப் பணிகளில் தன் திறன் காட்டும் அதிகாரியாக மற்றும் பல்துறை சீரடங்கிய பண்பாளராக வெளிவருவது காண உளம் மகிழ்கிறது. மாணவப் பருவத்தில் அவர்கள் உற்சாகமாய் உல்லாசமாய் உலாவரும்நிலை காணக்கிடக்கும் கவின்கமிகு காட்சிதான்.
வாசமலர்த்தோட்டமாக இசைபாடும் வண்டாக, விரிவானத்தின் விண்மீன் கூட்டமாக கண்சிமிட்டி, கையசைத்து, கால்குதித்து, கட்டுகளற்று, நினைவில் கவலைகளற்று ஆடிப்பாடி ஓடித்திரிந்து, சுதந்திரம் தரும் சுகம் தரும் உணர்வுகளோடு வாழ்கின்ற காலத்தில் அவர்கள் மனமும் செயலும் மாசுகளற்றதாக விளங்குகிறது.
மலையருவியில் இசைபோன்று அவர்கள் உள்ளம் துள்ளிக்குதித்து திரிகின்ற காலம் முடிந்து, படிப்பின் காலம் கழிந்து பட்டம்பெறும் நாள் வருகிறது. எதிர்காலத் திட்டங்கள் இதயத்தில் நிழலாடுகிறது. எழிலார்ந்த கற்பனைகள் மனதை தாலாட்டுகிறது. பரந்த உலகம் அவர்கள் பார்வையில் தெரிகிறது. பல்வேறு உணர்வுகள் அவர்கள் நெஞ்சத்தோடு நேச உறவு கொள்கிறது. பாசத்தோடு பழகிய பல்வேறு முகங்கள் பல்வேறு திசைகளில் பறப்பதற்கு தயாராகும் நிலை அவர்கள் நெஞ்சில் நெகிழ்வை உருவாக்குகிறது. நெஞ்சோடு நேசித்து பழகியவர்களின் எதிர்கால நிலை என்ன என்ற எண்ணங்களெல்லாம் இதயத்தில் சற்று கலக்கத்தை உருவாக்கும் எண்ணங்களாகின்றன.
பட்டம் பெறும் நாளன்று கறுப்பு வண்ண மேலங்கியை உடுத்தி கையில் பட்டத்திற்குரிய காகிதத்தை வைத்து உள்ளம் களித்திடும் நாளாகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் கருப்பு வண்ணத்தை வெறுக்கின்ற மக்கள் நிறைந்த நாட்டில் எழில் வாழ்வில் திளைப்போர்க்கு இனிய வாழ்வை சுவைப்போர்க்கு, அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் நாளில், தருகின்ற உடை கருப்பு என்பது என் போன்ற அறிவியல் உணர்வு பெற்றோர் மகிழ்கின்ற நாள்தான். பட்டமளிப்பு விழா நாளில் உரை நிகழ்த்தி வழியனுப்புகின்ற சான்றோர் பகிர்கின்ற கருத்துக்கள், அவர்கள் வாழ்க்கையில் உயர்நிலைக்கு வருவதற்கு உரமாகிறது. உந்துகோலாகிறது.
பட்டம் பெறும்வரை எழுச்சி குடிகொண்ட, உணர்ச்சிமயமான உள்ளங்கள் பின் வாழ்வின் ஒரு சிறந்த இடத்தைப் பெறப் போராடுகின்றன. மொத்தத்தில் வாழ்வில் ஒரு திருப்புமுனையை சந்தித்து நல்வாழ்வைப் பெறுகின்றனர். எல்லார்க்கும் எல்லாம் என்று மிக ஏற்றம் நிறைந்ததாக இல்லையென்றாலும், படித்தற்குரிய நிலையை எய்தவில்லை என்றாலும் முடிந்தவரை நல்ல சூழலில்தான் நடைபோடுகின்றனர். பெரும்பாலோர் எழில்வாழ்வை துய்க்கின்ற நிலையைக் காண்கிறோம்.
ஆனால் அந்தப் பெரும்பாலோர் படித்ததற்கேற்ப, பட்டம் பெற்றதற்கேற்ப வாழ்க்கையில் நடந்து கொள்கிறார்களா? அறிவியல் உணர்வோடு ஆராய்ச்சித் திறத்தோடு வாழ்வியலைத் துய்க்கிறார்களா என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு கிடைக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களை கண்ணுறும் யாரும் அதை பயின்றவர்களின் வாழ்க்கை நடைமுறைகளை பார்க்கின்றபோது பெருத்த வேதனையைத்தான் கொள்ள முடியும். பாடத்திட்டத்தின் எந்தக் கூறுகளும் அறிவியலுக்கு மாறான வழியில் செல்வதாக சொல்லமுடியாது. ஒருவேளை தமிழ்ப்பாடத்தின் செய்யுள்கள் வேண்டுமானால் - பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா- என்றும், நரி பரியான கதையும்; ஆண்டவன் பிரம்பால் அடிபட்டதாகவும் போதிக்கலாம். அதைக்கூட மற்ற பாடங்களை பயில்கின்றபோது அது ஒரு கற்பனைச் சித்திரம் என்று தெளிவு கொள்ள முடியும்.
பதினைந்து ஆண்டுகள் பதினெட்டு அல்லது இருபது ஆண்டுகள் பாடங்கள் தரும் கருத்துகளில் மூழ்கி திளைக்கின்ற மாணவர்களின் நெஞ்சத்தை அந்த பாடங்களைவிட அந்தக் கருத்துக்களைவிட நாட்டில் நடப்பில் இருக்கின்ற அறிவியலுக்கு எதிரான ஆராய்ச்சிக்கு உடன்படாத கருத்துக்களே உள்ளத்தை ஆட்கொள்ளுகிறது.
நாட்டில் இருக்கின்ற மடமைகளை, மூடப்பழமைகளை, பாமரத்தனத்தை உதறிவிட்டு நெஞ்சில் உரம்பெற வேண்டும், எண்ணங்களில் உயர்வுபெற வேண்டும் என்பதற்கே படிக்க வைக்கிறோம். புதுமை எண்ணங்கள் நெஞ்சில் ஊற்றுக் கண்ணாக வேண்டும் என்று விரும்பியே அரசும் தன் நிதிநிலையில் கல்விக்கு அதிக தொகையை ஒதுக்குகிறது. ஆனால் அந்த இலட்சிய நோக்கம் ஈடேறும் நாள் வராதா என்று நெஞ்சம் ஏங்குகிறது.
முதநிலை மருத்துவர் ஒருவர் நெற்றியில் பெரிய நீற்றுப்பட்டையும் கழுத்தில் கொட்டையும் கட்டிய நிலையில் தன் மருத்துவமனை தொடக்கத்திற்கு வேள்வி வளர்த்து பொருள்களை வீண்பண்ணும் நிலை காண்கிறோம். உயர் பொறியாளராய் விளங்குபவரின் நிலை இவரைவிட குறைந்ததல்ல, நீண்ட நெடுங்காலம் நிலவி மனிதர்களுக்கு எந்தவித நன்மையும் பயக்காத இதிகாச கருத்துக்களை நாளும் பல்வேறு வழிகளில் பரப்புபவர்கள் முதுகலை பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். பட்டிமன்றங்கள், பாட்டரங்கங்கள், வழக்காடும் நிகழ்ச்சிகள் கருத்து மலர்கள் தூவும் இடங்கள் ஆகிய அனைத்திலும் வளர்ச்சிக்கு உதவாத அல்லது வளர்ச்சிக்கு கேடு செய்யும் வகையிலேயே படித்தவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகிறார்கள். கல்விக் கூடங்களில் போதித்த கருத்துக்களை காற்றில் பறக்கவிட்டு கதைக்குதவாத புதைசேறில் கற்றவர்கள் தம் தலையை மூழ்கடிப்பது ஏன்? என்பது விளங்காத ஒன்றாக இருக்கிறது.
ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் சாதனங்களை பயன்படுத்துவோர், பயன்படுத்தி வாழ்வில் வளம் காண்போர், தம் நெஞ்சில் மூடப்பழமைக்கு இடம்தரும் முரண்பாடு ஏன்? அதிலும் அரசின் அலுவலர்களாக இருப்போர் மதச் சடங்குகளுக்கு மனதில் இடம் தருவதேன்? பாடங்கள் போதிக்கும் கருத்துகள் பசுமையாய் பதிந்திருக்கும்போது காய்ந்த சருகுகளை கருத்தில் கொள்வதேன்? வியப்பாக இருக்கிறது. தந்தை பெரியார் ஒருமுறை கூறினார், கல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியும் என்று கருதினேன். ஆனால் கற்றவன் இரட்டை முட்டாளாக இருக்கிறான், என்று வேதனைப்பட்டார். மனத்துணிவுக்கு கல்வி உதவும் என்று அறிகிறோம். ஆனால் கற்றவர்கள், பட்டம் பெற்றவர்கள் கோழைகளாகவே காட்சியளிப்பது விந்தையல்லவா? ஓர் அடிதடிக்காரனுக்கு அடாவடிச் செயலுக்கு எத்தனை அதிகாரிகள் அடங்கி நடக்கிறார்கள் இந்த நாட்டில் என்பது நடைமுறை உண்மையல்லவா?
உள்ளத்தில் பயம் நீங்கி உரம் பெறும் மனநிலையை படித்தவர்கள் பெற வேண்டும். ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் சிந்தித்து, விவாதித்து தெளிந்து சிந்தையில் ஏற்க வேண்டும். படிக்காதவர்கள் தெளிவுபெற படிக்க வேண்டும். படித்தவர்கள் பட்டதாரி என்ற நிலைக்கு உயர்ந்தவர்கள் ஏன் குழம்ப வேண்டும். மனதில் உறுதிவேண்டும். வாழ்வில் அறிவுகாட்டும் வழியில் செல்ல வேண்டும். பட்டம் பெற்றோர் சிந்திக்க வேண்டும். படிப்பாளிகளே! பட்டதாரிகளே! சிந்திப்பீர்களா?

No comments:

Post a Comment