Tuesday 17 January 2017

14. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

அய்ரோப்பா
அய்ரோப்பா உலகிற்கு புதுவாழ்வு தந்த புத்துலக அறிஞர்களை ஈன்ற மணி, அறிவுப் புரட்சியினால் உலகை புதிக்கிய.. புதிமையாளர்களை படைத்த புனித பூமி, உலகம் முழுவதற்கும் ஒளி வழங்கிய உன்னத திருவிடம் ஒப்புயர்வற்ற பேராளர்களை ஈன்றெடுத்த இலக்கியச் சோலை, மனித வாழ்வின் தொடக்க காலத்தில் நாகரிகத்தை படைத்த பகுதிகளைக் கண்ட இனிய கண்டம்.
கிரேக்கம், ரோமாபுரி, உலக விழிப்புணர்வுக்கும், உயர்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது. அறிஞர்களை, அரிமா நிகர் வீரர்களை அள்ளித்தந்த அழகுமிகு பூமி, இந்த மண்ணில் மனிதர்கள் வாழ்கின்றவரை வரலாறு மறக்காத மாவீரர்களை தந்த வீரத்திருவிடம். உலகின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோலிய மாசற்ற மனம் படைத்த மாமேதைகளைத் தந்த மண் அய்ரோப்பா. அய்ரோப்பாவில், தனித்தனி அரசுகள் இருந்தாலும் தனித் தனி மொழி பேசிய நாடுகள் என்றாலும் அவர்கள் அனைவரும் இன அடிப்படையில் ஒன்றுபட்டவர்களாக, ஒருங்கிணைந்தவர்களாக வாழ்வதை கண்டான். பல்வேறு புதுமைகளை, புதுமைக் கலைகளை நாளும் படைத்து வாழ்வில் வற்றாத வளத்தை இன்பத்தை துய்க்கின்றவர்களாக இருக்கக் கண்டான். எங்கும் எழில் சிந்தும் இனிய காட்சிகளாக அந்த மண் விளங்கக் கண்ட சுந்தரலிங்கத்தின் மனம் மகழ்ச்சியில் திளைத்தது. எண்ணிலடங்கா அறிஞர்களும், மாவீரர்களும், மாமனிதர்களும், அவன் மனத்திரையில் மலர்ந்த முகம் காட்டிய வண்ணம் இருந்தார்கள். பழம் பெரும் கிரேக்க மாமேதைகளும், மாவீரர்களும், ரோமாப்புரிப் பெரு வீரர்களும், அவர்களின் அசகாய சூரத்தனங்களும் அவர்களின் ஆர்ப்பரிக்கும் படை வரிசையும் அவன் முன் தோன்றி மெய்சிலிர்க்க வைத்தது. தூங்காமை, கல்வி, துணிவுடமை என்று வள்ளுவன் வலியுறுத்திய ஆளுமைக் கோட்பாடுகளை அவர்கள் தங்களின் விழிகளில் நிறுத்தி வைத்து தங்கள் மண்ணை வீரம் நிறைந்ததாக விவேகம் செறிந்ததாக விழிப்புணர்வு கொண்டதாக ஆக்கிய வண்ணம் இருந்தார்கள். வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு புதுப்புது வரலாறுகளை படைத்த வண்ணம் வாழ்ந்தார்கள்.
வேறுபாடுகள் பல அவர்களுக்குள் இருந்தாலும் அவை சீர்கேடுகளை பெரிதும் உண்டாக்கவில்லை. நேர் கோட்டில் நடைபோட்டு தம் மக்களின் நெஞ்சில் நெறி முறைகளை வளர்த்தார்கள்.
அய்ரோப்பாவில் தோன்றிய சிந்தனைப் புரட்சி, சிந்தனைப் புரட்சியினால் ஏற்பட்ட தொழிற்புரட்சி, தொழிற்புரட்சியின் பயனால் தோன்றிய அறிவியல் புரட்சி, அறிவியற் புரட்சியால் இந்த அகிலமே அடைந்த வளர்ச்சி, அந்த வளர்ச்சியால் ஏற்பட்ட வாழ்வு மாற்றம், இயந்திரம், இயந்திரம் கண்டு பொருள் குவித்து அய்ரோப்பா ஏற்றம் கண்டதால் இனிமை - மனிதர்களின் வாழ்வில் புகுந்து எழில் படுத்தியது. காலால் நடந்து சென்றவனை, காரில் செல்ல வைத்தது. உடல் அலுக்காமல் நெடுந்தூரம் செல்ல ரயில் வந்தது. வானை ஏறிட்டுப் பார்த்தவனை விண்மீது பறந்து பூமியை குனிந்து பார்த்துக் குதூகலம் கொள்ள வைத்தது. பட்டாடை உடுத்தி பரிணம் கந்தம் பூசி, பல்லக்கில் பவனி வந்தவரையும், காலில் செருப்பின்றி கல்லிலும், முள்ளிலும் நடந்து பல்லக்கு சுமந்தவனையும் சரிசமமாக உட்கார வைத்து உருண்டு செல்லும் வண்டியைக் கண்டது அய்ரோப்பா! மார்புக் கச்சையை அணிந்து மானத்தை மறைக்க முயன்ற மங்கையர்களுக்கு மார்டன் ட்ரஸ் தந்தது அய்ரோப்பா! சிங்கர் கண்ட தையல் இயந்திரம் இன்று உலகப் புரட்சியையே தோற்றுவித்திருக்கிறது. தன்முதுகு தனக்கு தெரியாது என்பார்கள். ஆனால் முதுகென்ன உடலின் உள்ளுருப்புகளையெல்லாம் தானே பார்க்கின்ற வகையில் அரிய கருவிகளை படைத்தது அய்ரோப்பா! புகைப்படம், எக்ஸ்ரே, ஒளிநாடா, என்றெல்லாம் உயர்கருவிகளை உலகிற்கு வழங்கியது அய்ரோப்பா. ஒளியலைகளால், ஒலியதிர்வுகளால் மனிதனின் இதயம் எண்ணியதைச் செய்து முடிக்கும் உன்னத கருவிகளைக் கண்டு கணிப்பொறித் தொழில் நுட்பத்தில் உலகை கொண்டு வந்து நிறுத்தி உயர்வு காண வைத்தது அய்ரோப்பா.
இங்கிலாந்து, உலகம் முழுவதையும் தன் ஆட்சியில் ஒரு குடையின்கீழ்ஆண்ட நாடு. தொழிற்புரட்சியை துவங்கி வைத்த நாடு, அந்த நாட்டில் தலைநகர் லண்டன். அந்த நகரில் அழகு கொலுவிருக்கும் அரண்மனை. பரம்பரையாய் வாழ்ந்து வந்த மன்னர் குடும்பத்து மரபுக்கு மாறாக சாதரணக் குடிப்பெண்களை காதலித்தார் ஒரு மன்னர். பிரபுக்களின் குடும்பக் குலமகளை மணம் கொள்ள வேண்டியவன் குடியானவப் பெண்ணை மணப்பதா என்று ஆளும் வர்க்கம் ஆத்திரம் கொண்டது. மனம் நிறைந்தவளா? மணிமுடியா? என்ற நிலையில் அந்த மன்னர் மனித உள்ளத்தோடு மனதில் உறைந்தவளை மணந்து மணிமுடியைத் துறந்தார். மாசற்ற காதலை வாழ வைத்தார். மனிதரில் மணியாக ஒளிர்ந்தார்!
அதே இங்கிலாந்து மக்கள் ஒரு நாட்டை விட ஒரு கவிஞனை, ஒரு கலை உள்ளத்தை நேசித்தனர். ஆம் ஷேக்ஸ்பியருக்கும் அரசு குடும்பத்திற்கும் பிணக்கு நேர்ந்தபொழுது எங்களுக்கு நாடு வேண்டாம், அந்த நல்ல கலைஞனே வேண்டும் என்று ஓங்கி முழங்கினர். அந்த ஈடு இணையற்ற கவிஞன் வரைந்த காப்பியங்களில் தங்கள் கண்பதித்தனர். ரோமப் பேரரசில் ஒளிவீசிய சீசர், அந்தோணி, எகிப்தியபேரழில் மங்கை கிளியோபாட்ராவை உலக மக்களின் உள்ளத்தில் பதித்தவன் அல்லவா? ரோமியோவையும், ஜுலியட்டையும் காதலுக்கு கலங்கரை விளக்காக காட்டியவன் அல்லவா? ஒத்தல்லோவின் மன உறுத்தல்களை உலகுக்குக் காட்டி உணர்ச்சிகளின் விளைவுகளை உருப்பெருக்கிக் காட்டியவன் அல்லவா அந்தக் கவிஞன். அந்தக் கவிஞன் மீது அந்த மக்கள் காதல் கொண்டதில் வியப்பில்லை என்று எண்ணினான். அவன் படைப்புக்களை படித்தோர் அவன்மீது பாசம் கொண்டனர். அவன் எழுத்துக்களைக் காட்சியாக கண்டோர் அவன்மீது பைத்தியமாகினர். அவன் படைத்த பாத்திரங்களை நெஞ்சில் பதித்தோர் நயமிகு உணர்வுகளை பெற்று நாகரிக மனிதர்களாக மாறினர். உலகம் முழுவதும் தன் படைப்புகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியரை நெஞ்சோடு நினைத்தான்.
ரோம் இன்றைய இத்தாலியின் தலைநகர். அன்றைய நாளில் அது ஒரு தனி நாடு. நகர நாகரிக காலத்தில் செழித்து வளர்ந்து செல்வத்தில் குளித்த நாடு. கலைகள் வளர்த்து காவியங்கள் வரைந்த மண் கேளிக்கைகளில் திளைத்திருந்த ஆளும் வர்க்கத்தின் வாலைக் குமரிகல் போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல. உடல் தினவெடுத்து உல்லாசத்தில் ஊறிக்கிடந்த அந்த நாரிமணிகளின் இச்சை உணர்வுகள் எல்லையற்றதாக இருந்தது.
காலையில் ஒரு காளை, மதியத்தில் வேறொருவன், மாலைப் பொழிதின் மந்தகாச நேரத்தில் மற்றொருவன், மாலை இருட்டாகி மறுநாள் உதயமாகும் நேரம் வரைக்கும் நினைப்புக் குகந்தவாறு மஞ்சத்தில் கொஞ்சுவதற்கு நிறையபேர் என்று உடல் கலந்து உல்லாசம் பெறுவது மட்டுமின்றி அரசியலில் நாளுக்கொரு மாற்றத்தையும் உருவாக்கி நாசத்தை ஏற்படுத்தியவர்கள் அவன் முன் தங்கள் சாகசத்தைக் காட்டி மறைந்தனர்.
அய்ரோப்பாவின் அழகிய நாடுகளையும் எழில் தவழும் அதன் நகரங்களையும் இதயப் பேழையில் வைத்து எழிலுணர்வில் தோய்ந்தான் சுந்தரலிங்கம். இங்கிலாந்தின் லண்டன் மாநாடும், பிரெஞ்சு நாட்டின் பாரிஸ், இத்தாலியின் எழில்மிகு ரோம், நேபிள்ஸ், கிரேக்கத்தின் ஏதென்ஸ், ஆஸ்திரேலியாவின வியன்னா, சுவிட்சர்லாந்தின் சமாதானப் புறாவான செனிவா, சூரிச், செர்மனியின் பெர்லின், பான், ஆலந்தின் ஆம்ஸ்ம்டாம், சோவியத்தின் மாஸ்கோ என்று உலகப் புகழ் அழகு நகர்களை கண்டு மகிழ்ந்தான். மணலைக் கயிறாக திரிக்க முடியாது என்பார்கள். ஆனால் மண்ணை இரும்பு கம்பிகளாக்கி, கல்லை சிமெண்டாக்கி, மணலையும் அதனோடு இணைத்து காங்கிரீட் தூண்களாக்கி விண்ணைத்தொடும் கட்டிடங்கள் கட்டி அதன் மேலேறிச் செல்வதற்கு வாகனமும் (லிப்ட்) கண்டு பிடித்த அய்ரோப்பியர்களை எண்ணி வியப்புற்றான். வழி வழிக் குடும்பமே மன்னர்கள் என்ற நிலை உலகெங்கும் இருந்த நாளில், செனட் என்றும் கான்சல் என்றும் மக்களாட்சி முறைகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அவர்களை நெஞ்சில் நினைத்து வாழ்த்தினான்.
திரியை எண்ணையில் நனைத்து எரியவிட்டாலும் இருட்டிலே வாழ்ந்த உலகை மின்சாரம் கண்டு ஒளி வெள்ளத்தில் நீந்த விட்ட அவர்களை உள்ளத்தில் நினைத்து உவகை கொண்டான்.
பொல்லாங்கு மறைந்திட புதுமைகள் துலங்கிட புதுப் புது முறைகள் கண்ட புகழ் மனிதர்களை எண்ணி புளகாங்கிதம் அடைந்தான், உலகப் பொது மனிதன் சுந்தரலிங்கம். அந்த இனிய கண்டம் தந்த அறிவாளர்கள் அனைவரும் அவன் இதயத் திரையில் இன்முகம் காட்டினர். தன் நாடு, அறிவுநலம் கொழிக்க நல்வழிகளை நாளும் எடுத்துச் சொல்லியதற்காக நஞ்சூட்டி கொல்லப்பட்ட கிரேக்கத் திருமகன் சாக்ரடீஸ், சாக்ரடீஸின் இதயத்தை உலகுக்கு காட்டிய... தனது குடியரசின் வாயிலாக உலகில் புதுமைச் சமுதாயத்தை படைக்க வலியுறுத்திய... தன் இறுதிக் காலம் வரை இளைஞர்களுக்கு அறிவு போதிக்கும் பணியில் ஈடுபாடு கொண்ட அறிஞன் பிளாட்டோ.
அறிவியல் புதுவழி சொல்லி ஆராய்ச்சியாளர்களின் வாழ்த்துக்களுக்கு உரித்தான... அலெக்சாண்டரின் ஆசான் அரிஸ்டாட்டில், சிந்தனைச் சிற்பி ரூசோ, எழுதுகோலில் புலிப்பாய்ச்சலை பொருத்திய வால்டேர், தன் பேருரைகளின் வாயிலாக சீர்மைகளை உணர்த்திய சீராளன் சிசரோ, அய்ரிஷ் விடுதலைக் கீதமிசைத்த டிவேலரா, பழமைக் கருத்துக்களை சுக்கு நூறாக்கிய கோபர்நிகஸ், கலிலியோ, ஜேகன்னஸ் கெப்ளர், புது உலகைப் படைக்க புத்திசேர் புதுவழிகள் கண்ட நியூட்டன், அய்ன்டின், பகுத்தறிவு நெறி பரப்ப பாடுபட்ட பெட்ராண்ட்ரஸ்ஸல், பிராட்லா, எரிதணலுக்கு தன் எழிலுடலை இரையாக்கிய ஜியார்னாடோ புரூனோ, பிரெஞ்சுப் புரட்சி, இங்கிலாந்து தொழிற்புரட்சி, சோவியத்தின் பாட்டாளி வர்க்க பெரும்புரட்சி என்றெல்லாம் இனிய காட்சிகள் அவன் இதயத் திரையில் தோன்றி இனிப்பூட்டியது.
அலெக்சாண்டரில் தொடங்கி இராபர்ட் கிளைவ் வரை அகிலம் முழுவதும் அய்ரோப்பியரின் கீழ்கொண்டு வர பாடுபட்ட அரும்பெரும் வீரர்களெல்லாம் அவன் விழிப்பெரும் வெளியில் வலம் வந்தனர். அரசும் தனியார்துறையும், போட்டி போட்டுக் கொண்டு, அழகையும் வளத்தையும் அய்ரோப்பா முழுவதையும் அள்ளிக்குவித்து அலங்கரித்த காட்சி அவன் அகத்திற்கு மகிழ்வூட்டியது. புரட்சிப் பாதையில் புதுமெருகூட்டி புகழ்க்கொடியேற்றிய கரிபால்டியும், மாஜினியும் அவன் கண் மலரில் ஒளிப்படமாய் தோன்றினர். இரோமாபுரிச் சீசரும், சல்லாவும், பாம்பேயும், அந்தோணியும், அகஸ்டசும், அவனுக்கு அநேக வரலாற்றுக் காட்சிகளை வரிசைப் படுத்தினர்.
செர்மானிய பிஸ்மார்க்கும், கதேயும் மாக்கிய வல்லியும், ஆடம் ஸ்மித்தும், இமானுவேல் காண்ட்டும், ஹெகலும், ஏங்கல்சும், மார்க்சும் தங்களது ஏற்றமிகுந்த சித்தாந்தங்களை காட்டி அவனை மகிழ்வித்தனர். கருத்துப் புரட்சியை கவிதைகள் வழியாக விதைத்த ஷெல்லியும், காதல் பாவிசைத்த பைரனும், நாடகங்கள் வாயிலாக நவரசம் வழங்கிய ஷேக்ஸ்பியரும், அறிவுத் தெளிவு பெற தன் இதயத்தை திறந்து காட்டிய இங்கர்சாலும், இயற்கையின் படைப்புகளை இறைவனுடையதென்று கள்ளமொழி பேசியவர்களின் கருத்துக்களை கல்லறைக்குள் வைத்த சார்லஸ் டார்வினும், மதவாத சழக்கர்களின் மாய்மால செப்படி வித்தைகளை மறைய வைத்த, மண்ணுக்குள் புதைத்த மாமேதைகளெல்லாம் அவன் கண்முன் தோன்றி களிப்படைய செய்தனர். அழகு தவழும் ஆல்ப்ஸ் மலைக் கன்னியின் அங்கம் முழுவதும் தழுவிச் சுகம் பெற்றான் தமிழ் மகன் சுந்தரலிங்கம்.
அனைத்து இனங்களுக்கும் சம உரிமையளித்து பல மொழிகளை தன் ஆட்சி மொழிகளாக்கிய சுவிட்சர்லாந்து நாட்டைக் கண்டு பெருமை கொண்டான்.

தன் போர்த்திறத்தால் அஞ்சா நெஞ்சு கொண்ட அரிமாநிகர் வீரத்தால், இருபது ஆண்டுகள் மனிதக் குருதியால் அய்ரோப்பாவை குளிப்பாட்டிய நெப்போலியன், தன் இறுதிக் காலத்தில் எலினாத் தீவில் அனாதையாய் இறந்த அவலமும் அவன் கண்ணில் தோன்றியது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்திய சீரிய உணர்வுகளை தொடர்ந்து தன் சிந்தையில் பதித்து வைக்காததால் தான் நெப்போலியனுக்கு அக்கதி ஏற்பட்டதாக அவன் நினைத்துக் கொண்டான். ருஷ்யப் புரட்சியின் நாயகர்கள், லெனின், ஸ்டாலின், ட்ராஸ்க்கி ஆகியோரின் திறம் கண்டு பூரித்தான். சைபீரியா பாலைவனத்தில் துயர்பட்ட விடுதலை வீரர்களின் நினைவை நெஞ்சில் ஒற்றி வழிபட்டான். வார் மன்னனின் கொடுமைகள், கெய்சரின் போர்வெறி, ஹிட்லரின் கொடூரங்கள் எல்லாம் அவனிடம் தன்னைக் காட்டி மறைந்து கொண்டன. மலைகள், அருவிகள், ஆறுகள், காடுகள், பல நாடுகள், நகரங்கள், இயற்கை எழில் சிந்தும் இடங்கள், மாளிகைகள், ஆலயங்கள், ஆலைகள், அழகிய சாலைகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், வானூர்திகள், வாகனங்கள் வசதிகள், செல்வத்தில் திழைக்கின்ற தீதறியா மாமனிதர்கள் ஆகிய அனைத்து இனிமைகளை சுவைத்தவாறும், ரொட்டியில்லை வயிற்றுக்கு என்று அழுத மக்களிடம் கேக் சாப்பிடுங்கள் என்று கிண்டல் செய்த பிரபுக்களையும், சீமான்களையும், மன்னன் குடும்பத்தையும் கூண்டோ ஒழித்து பாஸ்டில் சிறையை உடைத்து பெரும் புரட்சித் தீயை மூட்டிய பிரெஞ்சு மக்கலை இதயத்தில் ஏந்தியவாறும் தமிழர் வரலாற்றுக்கு சான்றுகள் தந்த அய்ரோப்பியரையும் திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல்லுயம், மற்றும் ஜி.யு. போப்பையும், பிரெஞ்சுப் பிலியோசாவையும், குறளை தன் குருதியல் கலக்கவிட்ட ஆல்பர்ட் சுவைட்சரையும், நெஞ்சில் நினைத்தவாறு அமெரிக்கக் கண்டத்தில் தன் அழகு உடலை மிதக்கவிட்டான் அன்புத் தமிழன் சுந்தரலிங்கம்.

No comments:

Post a Comment