Saturday 21 January 2017

18. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

18. 
புத்துலம்
மேகக் கூட்டத்தின் கீழிருந்து மேல் நோக்கிப் பார்த்தான். கடல் நுரை போல அந்தப் பூமியைச் சுற்றிலும் மேகத்திரள் நிறைந்திருந்த காட்சி அவன் நெஞ்சைக் கவ்வியது. அவன் பிறந்த பூமியில் இருந்ததை விட அடர்த்தியாக அந்த முகில் இருந்ததைக் கண்டான். அந்த இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்தவாறு அந்த நிலம் நோக்கி கீழிறங்கினான். அந்தப் புதிய நிலத்தில் கால்வைத்ததும் அவன் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு உவமை சொல்ல இயலாது.
அவன் இறங்கியது ஆளற்ற ஒரு கடற்கரையின் அருகில். நேரம் அதிகாலை, கருமை இருள் தன் கட்டுக் குலைந்து வெளுத்துக் கொண்டுவரும் வைகறை நேரம், காலைப் பணியின் மென்மை அவன் உடலைத் தழுவியது. நெடுந்தூரம் பறந்து மற்றொரு பூமியில் கால் வைத்ததால் குதூகுலம் உள்ளத்தைத் தழுவியது. கொஞ்சம் கொஞ்சமாக கீழ்வானத்தில் சிவப்பேறிக் கொண்டிருந்தது. காலைக் கதிரவன் தன் பொன்னிறக் கதிர்களை தொடுவானத்தைத் தொடுமாறு பணித்துக் கொண்டிருந்தான்.
பறவைகள் தங்கள் உறக்கத்தை கலைத்து தன் சிறகடித்து மகிழ்ச்சி குரலெழுப்பி பறந்தது. குக்கூ சிக்கி என்ற இரைச்சல் இசையாகி சுந்தரலிங்கத்தின் இதயத்தில் இனிமை உணர்வுகளை தேக்கியது. வட்ட வடிவாய் வார்த்தெடுத்த தங்கத் தட்டு ஒன்று கடலின் உள்ளிருந்து வெளிக் கிளம்புவது போல் உதய சூரியன் கடலோடு ஒட்டி நின்றான். உதித்து வரும் அந்தக் கதிரொளியை மறைத்திட மூடிநின்ற மேகங்களும், முக்காடு போட்ட இருளும் இருந்த இடம் தெரியாமல் எங்கோ மறைந்துவிட்ட காட்சி கருத்தான காட்சியாக அவன் சிந்தைக்குப் பட்டது.
காலை இளஞ்சூடு அவனுக்கு களிப்பினையூட்ட மெல்ல பறந்து சென்றான். சில கல் தூரம் பறந்து சென்றவன் அங்குள்ள ஒரு ஊரில் இறங்கினான். அந்த ஊரில் இறங்கும்போது இனிய இசையுடன் கூடிய ஒரு பாடல் செவியில் விழுந்தது.
இன்ப நல் வாழ்விற்கு
இனிய நூல் வழங்கிய
வள்ளுவன் வாழ்கவே!
தெள்ளுதமிழ் வளர்கவே!
என்ற பாட்டு கேட்டு பரவசம் அடைந்தான் தமிழ்மகன் சுந்தரலிங்கம். நாம் எங்கு இருக்கிறோம் எனும் சந்தேகம் கூட அவனுக்கு வந்துவிட்டது. மெல்ல அந்த ஊரில் நடந்து சென்றான். எங்கும் மனித நடமாட்டமே காணாது, வண்டிகளே விரைந்தோடிக் கொண்டிருந்தது. நடந்து சென்ற இவனைக் கண்டதும் ஒரு வண்டி  அருகில் வந்து நின்றது. வண்டியின் கதவு திறந்து இவனை அதில் ஏறும்படி பாவனையால் வலியுறுத்தினார் ஒரு நடுத்தர வயது கொண்ட மனிதர். சுந்தரலிங்கம் அதில் ஏறிக் கொண்டான். காருக்குள் இருந்த மனிதரை பார்த்ததும் வியப்பால் இமைக்க மறந்தான் சுந்தரலிங்கம். அந்த மனிதரின் முகத்தில் மூன்று கண்கள் இருந்தது தான் அவன் வியப்பிற்குக் காரணம். காரோ காற்றில் மிதப்பது போன்று சென்றது. காரில் ஒலியோ, உருளும் சக்கர ஓசையோ இன்றி சென்றது. அதன்பின் காரின் வெளிப்புறம் நோக்கினான். சாலையில் செல்லும் எந்தக் காருக்கும் சக்கரங்கள் இல்லாதது அவன் கவனத்தை ஈர்த்தது. அந்தக் காரினை ஓட்டிச் சென்ற மனிதரைப் பார்த்து சுந்தரலிங்கம் பேச்சுக் கொடுத்தான். அய்யா, இங்கு தமிழ்ப்பாட்டு ஒன்று கேட்டது. இங்கு தமிழ் தெரிந்தோர் இருக்கிறார்களோ? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் இனிய குரலில் இன்பத் தமிழ் மொழியிலேயே பதில் தந்தார். ஆம் அய்யா இந்த உலகம் முழுவதுமே தமிழும் மேலும் சில மொழிகளும் பேசப்படுகிறது. மொத்தம் நான்கு மொழிகள் வழக்கில் இருக்கிறது. அதில் தமிழும் கிரேக்கமும் முதன் மொழிகளாக விளங்குகிறது. மற்ற இரண்டு மொழிகள் சில பகுதிகளில் பேச்சு மொழிகளாக இருக்கிறது என்று கூறிவிட்டு சுந்தரலிங்கத்தைப் பார்த்து நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். சுந்தரலிங்கம் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் கூறினான்.
அந்தக்கார் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நின்றது. காரிலிருந்த சுந்தரலிங்கத்தை அழைத்துக் கொண்டு அந்த மாளிகையின் உள்ளே சென்றார் அந்த மனிதர். அங்கிருந்த ஒரு யந்திரத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினார். சில நிமிடங்களில் அந்த ஊரில் உள்ள மக்களில் பெரும்பாலோர் அங்குவந்து குவிந்து விட்டனர். மாடியில் உள்ள மண்டபத்திற்கு எல்லோரையும் அழைத்துச் சென்றார் அந்த மனிதர். அங்கு வந்த அத்தனைபேருக்கும் ஆண் பெண் அனைவருக்கும் மூன்று கண்கள் இருக்கக் கண்டான் சுந்தரலிங்கம். அவர்கள் அனைவரும் அவனை விழியிமைக்காமல் வியப்புடன் பார்த்தனர். மூன்று கண்களை தவிர மற்றபடி சுந்தரலிங்கத்தின் உலகில் உள்ள மனிதர்களையே ஒத்திருந்தனர். ஆனால் யாரும் ஆறடிக்குக் குறைவாக இல்லை. உடைகள் இருபாலருக்கும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. தலை முடியையும் ஒரே மாதிரியாகவே செப்பனிட்டிருந்தனர். சுந்தரலிங்கம் மட்டும் அய்ந்தடி உயரத்தில் இருந்தான்.
அவனை அழைத்துச் சென்ற மனிதர் இவனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து இனிய தமிழிலும் எளிய கிரேக்க மொழியிலும் பேசினார். மற்றொரு உலகத்தில் இருந்து தனி முயற்சியின் அடிப்பøடியல் இங்கு வந்திருக்கும் இவரை நம் உலக விருந்தினராக கருதி மதிப்போம்  என்ரார். சுந்தரலிங்கத்தைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவரே விளக்கிக் கூறினார். அவருடைய உரையும் அங்கிருந்தவர்களின் தோற்றமும் அந்த உலகம் முழுவதும் தொலைக் காட்சியில் காட்டப் பட்டது. ஹாலிவுட் படங்களிலும் பறக்கும் தட்டுகளில் கண்டதாக கூறப்படும் உருவங்களைப் போலல்லாது தன் உலகில் உள்ளது போலவே இங்குள்ள மனிதர் இருப்பதும் அங்குள்ள மொழிகள் இங்கு இருப்பதும் சுந்தரலிங்கத்திற்கு மிகுந்த மகிழ்வினை ஊட்டியது. அந்த உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்க உரியவர்களிடம் அனுமதி பெற்று வழங்கிய பின் அவர்கள் கலைந்து சென்றனர். அந்த உலகைப் பற்றிய முக்கிய விவரங்கள் அடங்கிய குறிப்பொன்றும் அவனிடம் தரப்பட்டது.
அந்த உலகில் மொத்த மக்கள்தொகை 120 கோடி என்று குறிக்கப்பெற்று இருந்தது. மற்ற கால்நடைகளும் பறவைகளும் பலநூறு மடங்கு அதிதம் என்று காட்டப் பட்டு இருந்தது. சாலையில் öச்லலும் கார்கள் தலைக்கு மூன்று என்றும் சரக்குந்துகள், கப்பல்கள், தொடர் வண்டிகள் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டு இருந்தது. உணவுப் பொருள் மக்களின் தேவையைப் போல் பலமடங்கு உற்பத்தி செய்து, சேமிப்பில் பதப்படுத்தப் பட்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் அதிகம் இல்லை. அதிலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கட்சியே கிடையாது. மதங்கல் அங்கு இல்லை, அதனால் மடமையைப் பரப்பும் ஆலயங்கள் இல்லை. கள்வர்கள், கயவர்கள் இல்லாத காரணத்தால் காவல்துறை இல்லை. நோயாளிகள் இல்லாததால் மருத்துவமனைகள் இல்லை. குற்றங்கள் இல்லாத நிலையில் கோர்ட்டுகளும் இல்லை. பகை இல்லாத காரணத்தால் படையமைப்புகள் இல்லை. அச்சம் இல்லாத அந்த உலகில் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இல்லை. ஆசிரியர் இல்லாததால் சாதிகள் இல்லை. வேதியர்கள் இல்லாததால் மூட சாஸ்திரங்கள் இல்லை.
பெண்களின் உடலில் ஆடைகள் தவிர வேறு அணிகலன்கள் இல்லை. காதிலும், மூக்கிலும், கழுத்திலும் எதையும் தொங்கவிட்டு அழகு காட்டுவதில்லை. காலில் சதங்கையும், கையில் வளையலும் பூட்டி ஓசையெழுப்பி ஆண்களின் மன ஆசைகளை தூண்டுவதில்லை அதனால் காதல் உணர்களுக்கு அங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது. இருவர் விழிகளும் சந்திந்து இதயங்கள் கலந்து விட்டால் தனியறையில் அவர்களின் காதல் உணர்வுகள் கரைபுரண்டோடும்.
உரிய முறையில் உடல், மன, மூளை, அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக அனைவரும் விளங்கியது காண அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்த வண்ணம் இருந்தது வேலை செய்ய வேண்டிய நிலையில் இல்லையென்றாலும் அவர்கள் யாரும் வேலையற்று வீண் பொழுது கழிக்கவில்லை பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டு சீரிய முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சி கூடங்களில் புதுப்புதுக் கருவிகளை வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் எங்கும் இல்லாமை இல்லை அதனால் ஏழ்மை இல்லை. ஏழ்மை இல்லாததால் ஏய்ப்போர் இல்லை. பொருள் குவிந்து கிடப்பதால் போட்டியில்லை. எல்லா வளங்களும் இருப்பதால் யாரிடம் பொறாமை உணர்வுகள் இல்லைச. பொறாமையில்லாததால் பொல்லாங்கு நிகழ்வது இல்லை. எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதால் அரசுகளே கூட ஆங்காங்கு இல்லை. உலக அரசு என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அதன் உறுப்புகளாக அறிஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தலைமை நிர்வாகக் குழு நிர்வாகிகளை நியமித்து உலக முழுவதையும் சீரிய முறையில் நிர்வாகிக்கின்றனர். ஆறுகள், கனிமவளங்கள், காடுகள் மற்றும் இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் பொதுவாக்கப்ப பட்டிருக்கிறது. எங்கும் இல்லாமை என்பது இல்லாமல் இருக்கிறது. இயற்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், பலம், பலவீனம் அனைத்தும் அறிவியல் வழியாக சரி செய்யப்படுகிறது. முரண்பாடுகள் ஆராயப்படுகின்றன. முடிவெடுக்க முடியாதவை நீண்ட ஆய்வுக்காக மனதில் - கோப்புகளில் வைக்கப்படுகிறது. மனிதத் திறமைகள், ஆற்றல்கள் அனைத்தும் அனைவராலும் மதிக்கப்படுகிறது. எல்லாம் என்னால்தான் என்ன ஆணவ உணர்வு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. வேளாண்மையில் பெரும்பகுதி யந்திரங்களே ஈடுபடுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளிலும் அதே நிலை தான், தனித்தனி வீடுகள் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் அவரவர் இல்லங்களில் சேர்க்கும் பொறுப்பினை அரசே ஏற்றுக் கொள்கிறது. தங்கள் கற்பனை வளத்திற்கு ஏற்ப கட்டிடங்கள் கலைப் பொருட்களை உருவாக்கும் உரிமை உண்டு. எனினும், அங்கு ஆட்சி புரியும் அறிவியல் பண்பாட்டுக்கு மாறாக எதையும் செய்யக்கூடாது எனும் கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அங்குள்ள உணர்வுகளை எண்ணிப்பார்க்கும்போது இதயம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தது. தொல்லையற்ற வாழ்க்கைச் சுழலே அங்கு நிலவின. இன்பம் நிறைந்த அந்த இனிய நிலத்தில் எல்லா வளமும் இருந்தன, எங்கும் அடர்ந்தும் வானுயர்ந்து வளர்ந்தும் உள்ள மரங்கள் அந்தப் பூமியுருண்டை முழுவதும் மூடியிருந்த காட்சி இயற்கை ஆட்சியை எடுத்துக் கூறுவதாக இருந்தது.
ஒரு ஊருக்குள் நுழையுமுன் அங்கு மரங்களையும் மலர்பூத்த செடிகளின் பேரழகினையுமே முதலில் காண முடியும். பின்னால் உயரமான கட்டிடங்களைக் காண முடியும் எழில் மிகுந்த இயற்கையின் இனிய சூழல் எல்லா வகையிலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. கவிஞர்களும்  கலைஞர்களும் இருக்கின்றனர். ஏடுகள் நிறைய வந்து கொண்டிருந்தன. எழுத்தாளர்கள் ஏராளமாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் படைப்புகள் அனைத்துமே, வளர்ச்சி நோக்கத்திற்கும் அறிவியல் ஆக்கத்திற்கும், உணர்வை நயப்படுத்தி நாகரிக வாழ்விற்கு மனிதர் இராசபாட்டையில் பயணம் செய்வதாகவும் இருந்தன. சாலைகள் அனைத்தும் காந்தத்தால் போடப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளும் அந்த அடிப்படையில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆகவே இயந்திரப் பொருள்களின் தேய்மானம் என்பது மிகுதியும் இல்லாமல் இருந்தது. அதிகாலையில் உடற்பயிற்சியும், தொடரும் நேரத்தில் படிப்பும், மாலையில் விளையாட்டும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும், கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எல்லா மனிதர்களுமே கற்றவர்களாக இருந்தனர். கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு எனும் உணர்வுகளை இதயத்தில் குடி வைத்தவர்கள். அதனால் ஏற்றமிகு நிலையை எய்தியவர்களாக இருந்தனர். சுந்தரலிங்கம் அந்த உலகம் முழுவதையும் ஊர்தியிலேயே சென்று பார்த்தான். எங்கும் காந்தச் சாலைகளில் வண்டிகள் இரைச்சல் இன்றி செல்வதற்கு ஏற்பாடுகள் இருந்தது. தொலைவிடங்களுக்கு செல்ல தொல்லைகளற்ற வகையில் பாதைகள் சீர் செய்யப்பட்டு இருந்தது.
அவன் பல்வேறு பகுதிகளை கண்டாண். ஆப்பிரிக்காவில் உள்ளது போன்ற மிருகங்களைக் கண்டான். அங்குள்ளதைவிட அதிகமான வகைகளில், எண்ணிக்கையில் அவை இருந்தன. அமேசான் போன்ற ஆறுகளையும் அடர்ந்த காடுகளையும் கண்டான். நகரங்கள் ஊர்கள் என்று பலவற்றைக் கண்டான். நகரங்கள் ஊர்கள் என்று பலவற்றைக் கண்டான். ஆனால் எங்கும் கிராமத்தையோ, கூரைக் குடிசைகளையோ, ஆதிவாசிகளையோ ஆடைகளற்ற நிலையோ அழும் குழந்தை, உணவற்ற நிலையிலோ அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. வாகனங்கள் பலவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே அறிஞர்களின் சிலைகள் நிறுவப்பட்டு இருந்தது. முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையில் மக்கள் முழுமனதுடன் ஈடுபட்டு மகிழ்ச்சியில் திழைத்தனர். பிரிவுகள் இல்லை, பேதங்கள் இல்லை. சிறுமை இல்லை அதனால் சீற்றங்கள் இல்லை. மாற்றங்கள் இருந்தன. ஆனால் அது வளரும் நோக்கில் இருந்தது. தமிழ் இங்கு போல் சிக்கலானதாக இருக்கவில்லை. ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருக்கவில்லை. ஒரு சொல்லில் பல பொருட்கள் குறிப்பிடும் நிலை அங்கில்லை. சொற்கள் குவிந்து கிடந்தது. அரசியல் மட்டுமின்றி அனைத்து இயல்களையும் விளக்கும் ஆற்றல் அங்குள்ள தமிழ்மொழிக்கு இருந்தது. அவனுடன் வழிகாட்டுதலுக்காக வந்த மாறன் பிசிராந்தை, அரிக்லியஸ் ஆகிய இருவர் அவனுடைய இனிய தோழர்களாக மாறியிருந்தனர். செல்லும் வழியில் எல்லாம் பல்வேறு பொருள் பற்றி விவாதித்துக் கொண்டே சென்றனர். மாலை நேரம் அந்தி வானத்து பகலவன் வானமெங்கும் பொன்னிறக் கதிர்களால் அழகினை குவித்த வண்ணம் அவன் வழி நடந்து சென்றான். மாலை இருட்டாகியது. என்ன ஆச்சர்யம் ஒரு திக்கில் நிலவு முழுவடிவிலும், அதன் எதிர் திக்கில் மதிபிறை வடிவிலும் தெரியக் கண்டான். அருகிலிருந்த தோழர்கள் இந்தப் பூமிக்கு இரு நிலவுகள் என்று எடுத்துக் கூறினர். எப்போதும் குளிர் நிலவு ஒளிரும். இருட்டு என்பதே இந்த பூமியில் கிடையாது. மக்கள் இதயங்களிலும் தான் என்றனர் அந்த இனிய நண்பர்கள்.
உலகம் முழுவதும் காந்தத்தில் சாலையமைத்து இருக்கிறீர்களே? இவ்வளவு காந்தம் எங்கிருந்து கிடைக்கிறது என்றான் சுந்தரலிங்கம். அதற்கு அந்த தோழர்கள், சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் இருந்து எங்கள் உலகத்தின் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தால் காந்தத்தை பல்வேறு நிலைகளில் உள்ள பொருளாக கொண்டுவந்து இங்கு காந்தச் சாலைகள் அமைத்திருக்கிறார்கள். இதனால் இங்குள்ள இயற்கைச் சூழல் கெடுவதற்கு வாய்ப்பில்லை என்றார்கள். இப்படியே அந்த உலகத்தைச் சுற்றி இதயத்தில் என்றுமில்லாத இன்ப உணர்வுகளைத் தேக்கி வைத்துக் கொண்டான். உலகின் எல்லாப் பகுதியிலும் உள்ள மக்கள் அனைவரும் சுந்தரலிங்கத்தின் மீது அன்பைச் சொரிந்தார்கள். வளைவுகளற்ற வாழ்க்கைப் பாதையைக் கொண்ட அந்த மக்கள் எல்லாக் காலங்களிலும் இன்புற்று வாழ வேண்டுமென்று வாழ்த்தினான். மாசற்ற சூழலில் மனித நேயத்தை வளர்க்கும் அந்த மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட மனதார வாழ்த்தினான். அவன் பிறந்த உலகின் நல்லறிஞர்கள்  கண்ட கனவுகள் இஹ்கு செயல் வடிவில் வாழ்வதை நெஞ்சார வாழ்த்தினான். அந்த உலகம் முழுவதும் கண்டு மகிழ்ந்த சுந்தரலிங்கம், அங்கிருந்து விடைபெற்று செல்ல விரும்பினான். அவனை வழியனுப்பும் விழாவிற்கு அவ்வுலக முதல் குடிமகனும் தலைமை செயற்குழுவின் தலைவரும் ஆன அறிஞர் தலைமை தாங்கினார். அவர் சுந்தரலிங்கத்தை மிகுவாக புகழ்ந்து பேசினார். புறப்பொருள் எதுவுமின்றி தன் உடலையே பறப்பதற்கு ஏதுவாக மாற்றியது விஞ்ஞான உலகில் ஒரு புதுமையாகும். அந்த வகையில் தொலை தூரத்தில் உலவுகின்ற இருவேறு உலகத்திற்கிடையே இணைப்பினை ஏற்படுத்திய புதுமை மனிதர் அறிஞர் சுந்தரலிங்கம் நம் மக்களின் முழுமையான பாராட்டுதலுக்கு உரியவர்.
அவருடைய முயற்சிகள் தொடர்ந்து பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சியை அவ்வுலக மக்கள் அனைவரும் பார்த்துக் களித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வீட்டையும் கதவை தட்டி சொல்லுவதற்கேற்ப கருவிகள் அமைக்கப்பட்டிருந்தது அந்த உலகில்.
இறுதியாக சுந்தரலிங்கம் விடைபெறும் வகையில் மனம் உருகு பேசினான். உள்ளொன்ரு வைத்து புறமொன்ரு பேசாத பெருங்குணமும் உயர்வினையே நோக்கமாக கொண்ட கலாச்சாரக் கூறகளை உள்ளத்தில் பதிய வைத்திருக்கும் உறுதிப்பாடான தன்மையும் மாந்தர்கள் அனைவரும் ஒன்று என்று எண்ணுகின்ற தூய இதயமும் கொண்ட உங்களை பிரிவதென்பது வேதனை உணர்வுகளை என் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது இந்த உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்த வகையில் என் உள்ளம் மிகுந்த களிப்பில் மிதக்கிறது. எங்கள் உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் கவிஞன் கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகம் எல்லையற்று விரிந்ததாக வேண்டும் என்று விரும்பினான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று அவரவரின் மனமே ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணம் என்றான். அவனுக்கு பின் வந்த ஜெர்மானியப் பேரறிஞன் காரல்மார்க்ஸ் அறிவியலை மைய இழையாகக் கொண்டு நெய்த தன் சித்தாந்த கோட்பாடுகளில் உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் பாச உணர்வுகள் தழைத்து செழிக்க வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் என்பதாக பொதுமை உணர்வுகள் பொங்கி வழிய வேண்டும். பூத்துக் குலுங்க வேண்டும், என்றெல்லாம் தன் இதயத்தை திறந்து காட்டினான். மற்றும் பல அறிஞர்கள் எல்லாம் இந்த வகையில் சிந்தனைச் சுரங்கத்தை மக்களுக்காக திறந்துவிட்டார்கள். ஆனால் எங்கள் உலகத்தில் அந்தக் கருத்துகள் ஏட்டில் எழுத்தாகவே உறக்கம் கொண்ட வண்ணம் இருக்கிறது. ஆனால் இங்கு அந்தச் சிந்தனை மலர்ந்து மணம்பரப்பிக் கொண்டிருக்கும் காட்சியை காண்கிறேன். எண்ணத்தில் தோன்றிய இலட்சிய உணர்வுகளை செயல்வடிவாக்கிய உங்களை பாராட்டுகிறேன். எங்கள் உலகில் நான் பிறந்த தமிழ்நாட்டுப் பகுதியில் முக்கண்ணன் என்று சிவபெருமானை வணங்குவார்கல். சிவனுக்கு நெற்றியில் ஒரு கண் உண்டு. அந்தக் கண் வழியே முருகன் என்றொரு கடவுள் தோன்றினார் என்றெல்லாம் கதைகள் உண்டு. ஆனால் இங்கோ கோடிக்கணக்கான முக்கண்ணர்கலை பார்க்கிறேன். ஆனால் நெற்றிக்கண் வழியே குழந்தை பிறக்கும் என்று இங்கு யாரும் கூறவில்லை. இங்கு செப்படி வித்தைகளும் தங்கள் சிந்தையை தராதது உங்கள் மீதுள்ள மதிப்பை மேலும் அதிகமாக்குகிறது. உங்களை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை என்றாலும் பிரிவு ஒரு சாதனையைப் படைக்கும் என்றால் பிரியலாம் என்று விடை தருவீர்கள் என்று கருதுகிறேன். இந்த உடலில் பறக்கும் ஆற்றல் பழுது அடையும்வரை இதுபோன்ற பல சூரியக் குடும்பங்களை பார்க்க ஆசைப்படுகிறேன். காலங்கள் கடந்தது கடந்ததுதான். மறைந்துவிட்ட தந்தை வரப் போவதில்லை. மகன் தான் வருவான். மாண்டுவிட்ட தாத்தா வரப்போவதில்லை. எந்த ஒரு பூமியிலாவது எல்லா உலகங்களுக்கும் தொடர்பு கொள்ளும் வழியிருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளுவேன். எங்கள் உலகத்துப் பேரறிஞன் அய்ன்ஸ்டீன் அணுவே அண்டம், அண்டமே அணு என்றான். அவன் வகுத்த கோட்பாடு உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லையற்ற இந்த பெருவெளியில் உருண்டு உலவுகின்ற மீன்களும், கோள்களும், ஒளியால் தொடர்பு கொண்டது என்று சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் கூறுகிறது. எல்லையற்றது அண்டப் பெருவெளி என்பதை விளக்க தமிழ்க் கவிஞன் ஒருவன் கூறியதை நினைத்துக் கொள்கிறேன். ஆம் அவன் கூறினான்.
கண்டவர் கூறினான்
விண்டவர் கண்டிலர்
என்று. அவன் இறைவனை நினைத்துக் கூறினான் என்று நான் கொள்ளவில்லை. ஒளியலைகள் பரவி நிற்கின்ற அண்டப் பெருவெளியின் விளிம்பினை பார்க்க முனைந்தால் அவன் இங்கு வரமுடியாது. அப்படியே வந்தால் அவன் அந்த விளிம்பை கண்டிருக்க முடியாது என்ற கருதுகோள் ஆராய்ச்சி பூர்வமாக அறிவியல் பூர்வமாக எவ்வளழு உண்மையானது என்பதை இந்தப் பயணத்தின் மூலம் உணர முயல்கிறேன். அதற்கு அன்பான் உங்கள் வாழ்த்துக்களை கோருகிறேன். என் பொருட்டு நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் இனிய அன்பிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விடைதாருங்கள் என்று கூறி அமர்ந்தான். கூடியிருந்தோர் முகம் மலர முகத்தில் உள்ள மூன்று விழிகளில் பாச ஒளி மின்ன கையை அசைத்து விடை தந்தனர். தமிழ் நில் பெற்ற அந்த தங்க மகன் மேல் நோக்கிப் பறந்து விண்வெளியில் வேகமாகப் பறந்தான். வானப் பெருவெளி கருவானத்தில் விண்மீன்கள் கண்சிமிட்டி வழியனுப்பவும் வரவேற்கவும் தலைப்பட்டன. ஏகப் பெருவெளியில் ஆங்காங்கே ஒளிசிந்தும் பிரமாண்டமான மீன்கள், கோள்கள் மற்றும் நிறைவடிவாய் உயிர்ப் பொருள்கள் பிரபஞ்சப் பெருவெளி முழுவதும் போக்குவரத்துக் கருவியாய் இயங்குவதையெல்லாம் கண்ணில் காணும்போது கண்ணனையும் அவருடைய நண்பர் தையற்கலைஞர் பாலு சொன்ன சொற்கோவை அவனுடைய நினைவில் வந்தது.
எண்ணியல் மாற்றங்கள் பண்பியல் மாற்றங்களை தோற்றுவித்து திடப்பொருளாய், திரவப் பொருளாய், ஆவிப்பொருளாய் மாறிக்கொண்டு வளர்ந்து கொண்டு, என்றும் இருந்து கொண்டே இருக்கும். அதுதான் பல உலகங்கள் உருவாகும் பின் மாறும். மறையும் தோன்றும் என்று விடுகதையைப் போல் கூறுவார். முதலில் அதைக்கேட்டு நகைத்துக் கொண்டான். ஆனால் இன்று பொருளின் வடிவமும் பலமும் அவனுக்குப் புரிகிறது. ஒரு திறமைமிக நாடகக் கலைஞர் பல வேடங்களில் வருவதுபோல பொருள் பல்வேறு நிலைகளில் தன் திறன் காட்டுகிறது என்று எண்ணியவாறு பறந்து கொண்டு இருந்தான் சுந்தரலிங்கம். புத்துலகம் கண்ட புதுமனிதன் எனும் பூரிப்போடும் தமிழன் எனும் பெருமித உணர்வோடும்.

முற்றும்.

No comments:

Post a Comment