Thursday 5 January 2017

3. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி..

பாண்டிய மண்டலம்
தென் பாண்டிச் சீமையில் வாழ்ந்த மாவீரர்கள் மாமனிதர்கள், மாமேதைகள் மாட்சிக்குரிய இடங்கள் வரலாற்று நிகழ்ச்சிகள், கண்கவரும் மலைவளம், கடல் வளம், காவியம் படைத்த நிலங்கள் எல்லாம் சுந்தரலிங்கத்தின் மனதை தாலாட்டியது. வளர்தடைந்த பொதிகைச் சாரல், வெள்ளியாய் உருகி வரும் குற்றால நீர் வீழ்ச்சிகள், பாபநாச அருவிகள், அணைகள், நில மகள் மீது ஊர்ந்து உரசிச் செல்லும் ஆறுகள், தாமிரத் தாதுகளோடு தளிர்நடை போடும் தாமிரபரணி எனும் பொருணை நதி, அந்நதி கடல் காதலனோடு கையிணைந்து மெய்தழுவி, முத்துக்களை பிரசவிக்கும் இடத்தில் அமைந்த கொற்கை துறைமுகம், அது கடந்த காலத்தில்... தமிழர்கள் தமிழன் என்னும் உணர்வோடு உலகறிய வாழ்ந்திருந்த நாட்களில்... அனைத்து நாட்டு நாவாய்கள் அணி வகுத்து பொருளிறக்கி அழகமைந்த கலை மகளாய் விளங்கிய காட்சியெல்லாம் அவனை களிப்படையச் செய்தது. அறிஞர்கள், கவிஞர்கள், அறிமாநிகர் மறவர்கள், படைப் பயிற்சி பாசறைகள், பல்வேறு போர்க்களங்கள், மாமன்னர்கள், சிற்றரசர்கள், சீர்மிகு மனிதர்கள் எல்லாம் அவனில் தோன்றி மறைந்தனர்.
சீர்மிகு அரசரின் சிறந்தோங்கி விளங்கிய சேதுமன்னர்கள் அவர்களின் சிறந்த கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, சின்னமனூர் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், பராக்கிரமசாலிகள் ஆகியோரெல்லாம் அவன் நெஞ்சில் நிறைந்தனர்.
பொய்யாக்குலமகள் வைகை எனும் அழகுத் திருமகள் நடைபயிலும், மதுரையம்பதியில் தமிழ் வளர்க்க சங்கம் கண்டு அறிஞர்கள் கூடி ஆய்வுகள் நிகழ்த்தி என்றும் இளமை குன்றாது திகழும் இனிய தமிழ் மொழியை வளர்த்த கவியரசர்கள், தனியரசாய் தமிழரசுகள் திகழ்ந்ததெல்லாம் தெளிவாக தெரிந்தது அவன் திரை மனதில், மனிதர்களில் பண்டைய மக்கள் பாண்டியர்கள் என்பது விளங்கியது. நான்மாடக் கூடல் என்று நனி சிறந்த மதுரை நகரில் அமைப்பும் அதில் அரசோச்சிய மன்னர்களும், காவியங்கள் படைத்த கவிஞர்களும் அவன் கண்ணில் தோன்றினர். சிறந்த நகரமைப்புக்கு எடுத்துக்காட்டாக அந்நகர் விளங்கியது. எல்லாத திக்குகளிலும் ஒரே மாதிரியாக தெருக்கள், சீராக அமைக்கப்பட்டு இருந்தன. நகரின் நடுவில் நல்லதோர் ஆலயம் அக்கால களஞ்சியமாக, கல்விக் கூடமாக அமைந்தது காண அவன் மனம் மகிழ்ந்தது. ஆரியப் படைகளை வென்ற நெடுஞ்செழியப் பாண்டியனும், அநீதி வழங்கியதால் தன் ஆவியைப் போக்கிய மற்றொரு நெடுஞ்செழியனும் அவன் மனதில் தோன்றினர். தன் கணவன் கள்வனல்ல, அவனை கள்வனென்ற நீயே கள்வன் என்று மதுரைக் காவலனை சாடி மதுரையை நெருப்பிலே நீந்த விட்ட கண்ணகியும், சாட்சியாகி, காவியமாகி நின்றாள் படை வீரர் நடையும், பாங்கான வாழ்வும் பெற்று...
மதுரை பலமுடன திகழ்ந்த காலங்கள் எல்லாம் அவனுள் தோன்றி மறைந்தது. நெடுநல் வாடையை மதுரை மணந்து மணம் கமழ்ந்து நின்றது. கபிலரும், பரணரும், கடவுளை எதிர்த்த நக்கீரரும், மற்றும் பல கவிதை மன்னர்களும் காட்சி தந்தனர். விந்தியக் கலாச்சாரத்தைக் காக்கும் கவசமாக நின்றோரின் வழித்தோன்றல்கள் அதாவது பிற்கால பாண்டியர்கள், தங்களுக்குள் சண்டையிட்டு ஒற்றுமையிழந்து விஜயநகர அரசர்க்கு அடிமையாகி, கலாச்சார திரிபுகள் விளைந்து, உரம் இழந்து, தன் உரிமையிழந்து, கேடுகளுக்கு கீழ்படிந்து, பின் முகமதியருக்கு அடிமைப்பட்டது எல்லாம் அவனுள் தோன்றி துயர்படுத்தியது.
இமயத்தில் கொடி பொறித்து வீரத்தை நிலை நிறுத்திய வெற்றியாளர்களின் மைந்தர்கள் மாற்றானின் காலில் வீழ்ந்ததையெல்லாம், எண்ணி இதயம் வருந்தியது. காணப்பேர் எயில் எனும் காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் வீரத்திரு உருவைக் கண்டான். யாரும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகம் ஒரே உணர்வுபெற வேண்டும் என்று தன் உள்ளத்தைத் திறந்து காட்டிய கணியன் பிறந்த பூங்குன்றத்தையும் கண்டான்.
சோழமண்டலம்
மகிழ்ச்சியும் வருத்தமும் மனதில் கலந்தாட சோழர்களின் வானப்பரப்பில் பறந்தான் சுந்தரலிங்கம். இந்திய துணைக் கண்டத்தினை நடுங்க வைக்கும் அளவிற்கு படை வலிமை பெற்றிருந்த செம்பியன், இளஞ்செட்சென்னி, கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி எனும் அறிவும் திருவும் செறிந்த மன்னர்களின் ஆளுமையில் செழித்த சோழமண்டலத்தை கண்டு களித்தான். பின் மாற்றானின் மாயையில் சிக்கி மராட்டிய அரசை அந்த மண்ணில் ஆளவிட்டதையும் பின் மானமிழந்த மாக்களாய் சோழவழிச் செல்வர்கள் மாறியதையும் மனதில் கொண்டுவந்து கலங்கினான். வான் பொய்த்தாலும் தான் பொய்யாவற்றா கருணைக் காவிரி என்ற பாடல் அவனை மகிழச் செய்தது. இன்றைய காய்ந்த காவிரி அவனை கலக்கமடையச் செய்தது. பொங்கிப் பெருகிவந்த காவிரிப்புனலை தடுத்து அணைகட்டிய கரிகாலனின் பொறியியல் திறம் கண்டு பூரித்தான்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நீரில் நிலைத்திருக்கும் அந்த நெடுஞ்சுவர் நெஞ்சில் வியப்பைத் தோற்றுவித்தது. தஞ்சையில் பெருங்கோயிலை எழுப்பி தரணியில் உயர்ந்துநின்ற இராசராசன், அவன் வீரமகன் இராசேந்திரன், ஆகியவர்களின் வீரம், ஆற்றல் திறன் ஆகிய அனைத்தையும் எண்ணி அகம் மிக மகிழ்ந்தான். அலைகடலில் போர் நாவாய்கள் செலுத்தி அயல்நாடுகளை வென்ற அப்பெருவேந்தர்களின் நாவாய்கள் அணிவகுத்த காட்சியும் அவர்களின் படைகள் ஆர்ப்பரித்த காட்சியும் அவனை எல்லையில்லா மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரனாக்கியது.
அவன் கண்ணில் அழகிய காட்சியொன்று தெரிந்தது. கவியின் மகன் அந்தக் காளை. நாளும் காவலனின் குலக்கொழுந்து அந்த கன்ன. இருவர் விழிகளும் சந்தித்து இயங்கள் சங்கமித்தது மறைவிடக்களில் மனம் திறந்து பேசினர். மாசற்ற காதல் பயிரை கனவுகளால் வளர்த்தனர். மன்னனுக்கு தெரிந்தது. மன்னன் உடனே மாபெரிய கொடுமைகள் செய்யவில்லை கொன்றுவிடு என்று சொல்லவில்லை. காளையின் உறுதியை சோதிக்க நினைந்தான். கவியின் மைந்தன் தேர்வு ஒன்றில் திறம் பெற வேண்டும் என்றான். சோதனையில் தவறினால் தலை துண்டிக்கப்படும் என்றான்.
அதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான். கவி தன் ஆற்றலால் இறைவனைப் பற்றிய (பேரின்ப) பாடல் நூறு பாட வேண்டும் என்றான். மறையவனைப் பாடவேண்டுமே தவிர மங்கையைப் பற்றி பாடக்கூடாது என்றான். சரி என்று சபைக்கு வந்தான் அரியின் அவதாரக்கதை எழுதிய கம்பனின் மகன் அம்பிகாபதி. பாடினான் பாவன், பாட்டை பூப்போட்டு எண்ணினானள் பூம்பாவை அமராவதி. ஆனால் எண்ணிக்கையில் தவறு செய்தாள். அதனால் எழுந்தோடினாள். இனியவனைத் தழுவ. பாவையைக் கண்டதும் பாட்டினை மாற்றினான் பாவலன். காவலன் கண்கள் சிவந்தது. காளை கொல்லப்பட்டான். கன்னியும் அவன் ஆவியில் கலந்து விட்டாள். சாவூரில் அவர்கள் இணைந்தனர். சாகாநிலை பெற்றனர்.
கடலலைகள் தாலாட்டும், கவின்மிகு பூம்புகார் நகர் களையுடன் திகழ்ந்த காட்சி, பின் கடலில் மூழ்கிய காட்சியெல்லாம் கண்டான். கவிதைகள் யாத்திட்ட கவிப்பெருமக்கள், காவியம் கண்டு களிபேருவுவகை கொண்ட கலைவாணர்கள், நாட்டினை வளப்படுத்திய நல்லவர்கள், பிறநாட்டு மேதைகள், வணிகர்கள், வீரர்கள் சோழவளநாடு காணவந்த காட்சிகள், பிற நாட்டு வேந்தர்கள் திரையும் பரிசும் வழங்கிய காட்சிகள், யவனர்கள் ஒருகாலத்தில் இங்கு பணியாளர்களாக படை வீரர்களாக விளங்கிய காட்சிகள் எல்லாம் கண்ணில் தோன்றி களிப்பூட்டியது. தொண்டை மண்டலம், கொங்கு மண்டலத்தின் தொன்மைக் காட்சிகள் எல்லாம் தோன்றியது. பாரோர் நடுங்க படை நடத்தி பரணிபாடிய படையமைப்பை இந்நாளில் எங்கு தேடினாலும் காணாது தவித்தது அவன் மனம். வீரக்கனல்பொங்க கலிங்கத்தின்மீது பாய்ந்தது. பாயும் சிறுத்தையென வாதாபியை வென்றது. சிங்களக்காடையர்களை சிரச்சேதம் செய்தது. ஏறுநடை போட்டு இமாலயச் சரிவில் இலச்சினைகள் பொறித்தது என்று வெற்றிப்பதாகைகளை விண்ணுயர ஏந்திய தமிழர்களின் படையமைப்பு எங்கே? கடல் தாண்டி வெளிநாடெல்லாம் வென்ற தமிழனின் மரக்கலப்படை எங்கே? என்று அவன் விழிகள் தேடி, வேதனையில் மிதந்தது. இன்றைய தமிழகத்தை இதயத்தில் எண்ணிப் பார்த்தான்.

No comments:

Post a Comment