Saturday 7 January 2017

4. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி..

தமிழர்கள்
உலகம் தழுவிய உணர்வும் மனித நேயமும், இனப்பற்றும், மொழிமீது பாசமும் கொண்டு விரிந்த உள்ளமும் பெற்ற உத்தமர்களின் வழி வந்தவன் உள்ளத்தை ஊடுருவிப் பார்த்தான்.  தன் இனத்தானை இகழ்ந்தான் என்பதற்காக ஒரு நீண்ட தூரப் படையெடுப்பை எடுத்தவனின் வழித்தோன்றல், தன் மொழியை எத்துனை குறைத்துப் பேசினாலும் ஏனென்று கேட்காமல் ஊமையாயிருக்கிறானே! தன்மொழியோடு மாற்று மொழி கலந்தவனை தலைமேல் வைத்து ஆடுகிறானே! பல்வேறு மனிதர்கள், தலைவர்கள், உருவாக்கிய எழுச்சியினை கூட என்றும் இதயத்தில் இருத்திவைக்க முயலாது, கண்டவனிடம் எல்லாம் ஏமாந்து போகிறானே! தன்னுடைய காவியம் சூழ்ந்த வரலாற்றுக்கு தொடர்ந்து களங்கத்தை உருவாக்குகிறானே! பெரும் பெரும் கோவில்களைக் கட்டி அதை அரசனின் இல்லமாக ஆரோக்கியசாலையாக, பயன் தரும் இடமாக, நினைவகமாக, ஆக்கியவனின் வழிமகன் சந்து பொந்துகளில் கண்டதற்கெல்லாம் கோவில் என்று கட்டி, அதை அரசனின் இல்லமாக ஆரோக்கிய சாலையாக, பயன்தரும் இடமாக, நினைவகமாக, ஆக்கியவனின் வழிமகன் சந்து பொந்துகளில் கண்டதற்கெல்லாம் கோவில் என்று கட்டி, தன் காசை கரியாக்கும் குறுகிய மனத்தை எண்ணி கவலையுற்றான். உரிமை வேட்கையை நெஞ்சில் ஏந்தியவனின் வாரிசு ஊர்கெடுத்தவனுக்கெல்லாம், உதவாக்கரை பயல்களுக்கெல்லாம் ஊழியும் செய்யும் அடிமையாகி உரிமை இழப்பதை எண்ணி மன அமைதியிழந்தான். அறிவியல் கனிந்தபோது கூட வறுமையில் உழலும் அறியாமையை எண்ணி துயருற்றான். மொத்தத் தமிழகத்திலும் தூய தமிழராக இல்லாது ஆங்காங்கே அயல் மொழி அல்லது அண்டை மொழி பேசுவோர் திட்டு திட்டாக திகழ்வதைக் கண்டு எதிர்காலத் தமிழகம் என்னவாகுமோ என்று கவலையுற்றான். வந்தவனை வரவேற்க வேண்டியதுதான், வாழ்வு கூட தர வேண்டியது தான், நட்புடன் வாழவேண்டியதான், அதற்காக தன் வாழ்வையிழந்து வறுமையுற்று அடங்கியவனாக அடிமையாக வேண்டும் என்பது அறிவுடமையாகாது. இதை எண்ணவில்லையே தமிழன் என்று இதயத்தில் வேதனையுற்றான்.
இருந்தாலும், எதிர்கால இளைஞர்கள் இலட்சிய வேட்கை கொண்டவர்களாக உருவாகி வருகிறார்கள். குறுகிய எண்ணங்களும், குளறுபடிச் சிந்தனைகளும் மறையும். விரிந்த மனமும், சிறந்த உள்ளமும் அதில் வீரமிகு உணர்வும் தோன்றி வளரும் நல்ல தமிழகம் நாளை மலரும் எனும் நம்பிக்கையோடு தமிழகத்தில் இருந்து தெலுங்கு தேசத்தின் விண் பரப்பில் நீந்தினான் சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
தெலுங்கு தேசம்
வேங்கடமலையின் அருகே விரிந்த நிலப்பரப்பும், அதில் கோலமிடும் ஆறுகளும், வயல்வெளிகளும், கற்றளிக் கோயில்களும் அடங்கிய அழகிய பகுதியாக காட்சி தந்தது ஆந்திரம், தமிழர்களாய் இருந்தவர்களை, ஆரியம் தன் மொழியைப் புகுத்தி பாழ்படுத்தி, தன் கலாச்சாரக் கூறுகளை அவர்களுக்குள் பதித்து பேதப் படுத்தி பிளவுபடுத்தி குரங்குகளாக அவர்களை சித்தரித்து தூயகுலம் கெடுத்தது. இலக்கியத் தமிழ் இன்றளவும் அவர்கள் நாவில் நடமாடுவதை கண்டு மகிழ்ச்சியடைந்தான். பழந்தமிழகத்தில் நிலவிய சைவ மதக் கோவில்கள், ஆங்காங்கே தெரியக் கண்டான். மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடி உயிர் நீத்து வெற்றிகண்ட பொட்டி சீராமுலுவும் ஆந்திரத்தை தெலுங்கு தேசமாக்கிய என்.டி. இராமாராவும் அவன் கண்ணில் தோன்றி களிப்பூட்டினர். கலைகூடங்களில் காற்சதங்கை கட்டி ஆடும் கலை மகளிர் நிறைந்ததாக தெலுங்குப் பகுதி விளங்கியது. கலைத்துறைக்கு சிறந்த கலைஞர்களை தானம் செய்யும் நிலமாக அப்பகுதி இன்றும் விளங்குகிறது. விசாகை துறைமுகம் தென்னகத்தில் சிறந்த கடல் துறையாக விளங்குவதை கண்டான். கோதாவரி கிருஷ்ணா நதிகளும் அம்மாநிலத்தை வளமாக்கும் நிலை கண்டான். நீதிக் கட்சியில் உழைத்த பொப்பிலி அரசர், பனகல் அரசர் ஆகிய பெருமக்கள் ஆண்ட நிலமெல்லாம் அவன் கண்ணில் தோன்றி மகிழ்வூட்டியது. விழிகளுக்கு விருந்தூட்டிய அப்பகுதியில் இருந்து கன்னட பகுதிக்குப் பறந்தான்.
கன்னடம்
காடுகள் அடர்ந்த கன்னடம் முன்னொரு நாள் தமிழகமாக இருந்தது. பெருங்கோழியூர் பெங்களூரானது. எருமையூர் மகிஷாவூராகி மைசூராக மருவியது. ஆரியம் தன் கைவரி-சையைக் காட்டி கன்னித் தமிழ்ப் பகுதியை கன்னடமாக்கியது. பல்வேறு மதங்கள் செழிப்புடன் திகழ்ந்ததற்கு கன்னடத்தில் காட்சிதரும் ஆலயங்கள் சாட்சியமான காட்சியாகும். பேடுர் அழி பேடுர் எனும் சைவமத ஆலயங்கள் இன்றும் கலைப் பொக்கிஷமாக காட்சி தருகிறது. சரவணபெலகொலாவில் கோடீஸ்வரர் பிறந்த மேனியாகி நிற்பது சமணத்தின் நிர்வாணக் கொள்கைகளை இந்நிலத்தில் விதைத்ததைத் காட்டுகிறது. சிருக்கேரியில் ஆரியமதத் தலைவரின் இருப்பிடம் குடில் என்று ஒரு அரசாங்கமே நடக்கிறது. மலை சூழ்ந்த இடத்தில் ஒரு மன்னரைப் போல் ஆளுமை செய்கிறார் சங்கராச்சாரியார். காவிரிப் பிறப்பெடுத்த குடுகுப் பகுதி அடர்ந்த மலைப் பகுதிகள், அனைத்தும் அவனைக் கவர்ந்தது. அரசுகள் எண்ணினான் அந்தப் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் அழகுபோல் ஆக்கித் தரலாம். சுற்றுலாத்துறைகள் பல்வேறு வசதிகள் செய்து மக்களை மகிழ்விக்கலாம் என்றெல்லாம் எண்ணினான். மாவீரன் திப்புசுல்தான் ஆண்ட சீரங்கப்பட்டணமும், மற்றும் பல செழுமை மிகு பகுதிகளும் அவனுக்கு ஆனந்தத்தை ஊட்டியது. மங்களூர் வழியாக மர்ம கோவா, கோவா, டையூ-டாமன் ஆகிய எழில் கொஞ்சும் பகுதிகளில் தன் மனதைப் பதியவிட்டான்.

No comments:

Post a Comment