Wednesday 4 January 2017

2. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி..

அண்டார்டிகா
எங்கும் பனி நிறைந்து இளங்கதிர் சூடு கூட இல்லாது எங்கும் வெண்மையாய் விளங்குகின்ற எழிற்கோலம் இதயத்தை ஈர்த்திடும் இனிய உணர்வைத் தந்தது மழலைச் செல்வம் மண்ணில் தவழுவது போல் பெங்குவின் பறவைகள் எங்கும் நிறைந்திருக்கக் கண்டான். பனிப்பாறைகளின் இடையில் தலையை வெளிக்காட்டுவதும் உள்ளிழுத்துக் கொள்வதுமான விளையாட்டுகளில் ஈடுபட்டு கடல்சீல்கள் கவலையின்றி இருப்பதை கண்டு மகிழ்ந்தான். கதிரொளியின் வழியாக தன் உடலில் புதுத்தன்மை கண்டதால் கழிவுப் பொருட்கள் தன் உடலில் இல்லை என்று உணர்ந்தான். இது எப்படி எற்பட்டது என்பது வியப்பாக இருந்தது.
இயற்கை சில நேரங்களில் அறிவியலுக்கு அடங்காத அல்லது விளக்க முடியாத சில செயல்களை சில நிலைகளை தோற்றுவிக்கும் என்று ஒரு மேதை கூறியது அவன் நினைவில் தோன்றியது. அவர் கூறிய கூற்று தன் உடலில் தோன்றியதை நினைத்து நகைத்துக் கொண்டான் சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
அங்குமிங்கும் அலைந்து பறந்து அண்டார்டிகாவின் அழகனைத்தையும் தன் அகத்தில் சேர்த்துக் கொண்டான். உலகம் முழுவதற்கும் குளிர் வழங்கும் மாபெரும் ஏர்கண்டிசன் யந்திரமான அண்டார்டிகா ஒரு இனிய கண்டம் என்னும் உணர்வுகள் அவன் இதயத்தை ஆட்கொண்டது. அண்டார்டிகாவை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் ஆய்வுக்கூடங்கலை தூரத்தே இருந்து கண்ணுற்றான்.இந்தியக் குழுவில் பங்குகொண்ட தமிழரான கணேசன் என்பாரைக் கண்டு தன் உள்ளத்தில் தனி மகிழ்ச்சி கொண்டான் தமிழ் மகனான சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
பின் அங்கிருந்து வடக்கு நோக்கிப் பறந்தான். வரும் வழியில் கடலுக்கு அடியில் ஒரு நகரின் தோற்றத்தைக் கடலுக்கு அடியில் ஒரு நகரின் தோற்றத்தைக் கண்டான் கம்ப்யூட்டர் உடல் படைத்த சுந்தரலிங்கம்.
மேற்கும் கிழக்கும் என்று பறந்து பார்த்தேன். என்றோ ஒரு நாள் எழிலுடன் திகழ்ந்த இனிமை படைத்த நகரங்களும், மலைத் தொடரும் ஆறுகள் பாய்ந்த அழகிய நிலப்பரப்பும் அவன் கண்ணில் தோன்றியது.
தொல்காப்பியும் சிலப்பதிகாரமும் சீரிய இலங்கியங்கள் பலவும் செப்புகின்ற தென்மதுரை எனும் அழகிய நகரமான கபாடபுரமே அந்நகரம் எனவும் அவன் அறிவு கூறியது. குமரியாறும், பஃருளியாறும் மற்றும் ஏழ்தெங்கநாடு, ஏழ்குணநாடு, ஏழ்பனைநாடு என்று நிலம் வகுத்து ஆண்ட தமிழரின்... ஏன் உலக மக்கள் இனங்களின் பூர்வீகத் தாயகம்... அதாவது குமரி கண்டம் எனும் இலமுரியா... அதாவது கோண்டுவானா என்று ஆராய்ச்சி அறிஞர்களால் கூறப்படும் பகுதியே அது என்று உணர்ந்தான். குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதியே இன்றைய இலங்கைத் தீவு என்று உணர்ந்து கொணடான். இயற்கையில் நிகழ்வுகள் எத்தனையோ நன்மைகளை படைப்பது போல இது போன்ற கொடுமைகளையும் நிகழ்த்தி விடுகிறது. பாசத்தில் உறைவோர் பகைமையில் சாய்வதுபோல் உயர்ந்த மலைமுகடுகளையும் உருகிவரும் வெள்ளி போன்ற அருவியுயம் உருவாக்கிய இயற்கை அதை விழுங்கும் வேலையைச் செய்து வேதனைப்படுத்தவும் செய்கிறது. இதை எண்ணியபடியே பறந்த சுந்தரலிங்கத்தின் மனம் பழந்தமிழரின் சீர்நிரம்பிய நிலம் சிதிலமடைந்ததை கண்டதும் விழிகலங்கி வேதனைப்படுத்தியது. கலைகள் மிளிரும் கபாடபுரத்தின் மீது கடல் நீருக்கு எத்தனை காதலோ? என்று எண்ணியவாறு முக்கடலும் முத்தமிடும் குமரிமுனை வந்தான்.
குமரி
முக்கடலும் சூழ்ந்து நிற்க முகத்தில் அழகு தவழ குமரிமுனை உலகில் ஒரு அதிசயமாக்கப்பட்டது சுந்தரலிங்கத்திற்கு. தமிழனுக்கு வடக்கில் ஒரு நினைவுச் சின்னமில்லை என்றாலும் தெற்கில் வடவருக்கு ஏராளாமான நினைவகங்களை வைத்ததில் குமரியும் விதிவிலக்கல்ல. காந்தி மண்டபம் அதற்கொரு எடுத்துக்காட்டு. விவேகானந்தர் நினைவகமும் தமிழனின் பரந்த மனப்பாங்கிற்கு ஒரு அடையாளம்.
தமிழாய்ந்த தலைவர் திரு.கலைஞர் முதல்வராக இருக்கின்ற காரணத்தால், அமெரிக்க சுதந்திரத்தாயின் சிலைபோல் முப்பால் தந்து வாழ்விற்கு அறநூல் வழங்கிய வள்ளுவனுக்கு சிலை அமைக்கும் நிலை வாய்த்தது. அதை எண்ணி மனம் மகிழ்ந்தான். வரலாற்றுத் திருமகன் கலைஞரை வாழ்த்தினான்.
கேரளா
அப்படியே அவன் திருவனந்தபுரம் வழியாக கேரளத்தை காணப் பறந்தான். கடலில் வள்ளங்களும் வானுயர்ந்த தென்னைகளும் மலையழகின் மாட்சியும் எங்கெனும் நீர் சூழ்ந்த இனிய காட்சிகளும் பின்னப் பாடது விரிகுழலும் எழில் கெழுமிய இனிய குணமும் கொண்ட பெண்களின் பேரழகும், பசுமைக் காட்சியும் பாங்கும் அவன் மனதை பெரிதும் ஈர்த்தது. தமிழர்களாகப் பிறந்து இனிய மொழி பேசிய அவர்களை மலையாளிகள் என்ற தனிப்பிரிவாக ஆக்கிய சண்டாளர்களை சபித்தான். பிஞ்சுக் குழந்தைகள் கூட நெடுந்தூரம் நடந்தே சென்று கல்வியறிவு பெறும் காட்சிகண்டு களித்தான். துணைக் கண்ட மக்களில் கல்வி கற்றவர்கள் அதிகம் பேர் அவர்கள் என்பதை நினைத்து உவகை பூத்தான். யாரும் ஊரே யாவரும் கேளீர் என்பது அவர்களாலேயே செயல் வடிவம் பெறுகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதும் அவர்களுக்கே உரித்தானது. திருவாங்கூர் மன்னர்கள் ஆண்ட அழகிய இடங்கள், குணநாடு, குட்டநாடு, வயநாடு கொல்லம், கோழிக்கோடு, கண்ணனூர் எனும் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொண்டு பகுதிகள், நகரங்கள், இடங்கள் ஆகியவற்றை கண்டு களித்தான். திரு என்னும் தூய தமிழ்ச் சொல் இன்றளவும் பயன்படும் பகுதியாக கேளத்தைக் கண்டான். மரியாதைக்குரியவரை திருமேனி என்றும், மன்னர் இறந்தால் திருநாடு எழுந்தருளி விட்டார் என்றும் குறிக்கப்படுவதை அறிந்து மகிழ்ந்தான். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் பெற பெரியார் போராடிய வைக்கத்தை கண்டு மகிழ்ந்தான். வான் பொழிந்து மஞ்சு படர்ந்து ஈரமிகு சூழல் எங்கும் நிலவக் கண்டான். வாசமிகு பூக்களின் பணம் கமழக் கண்டான்.
மேற்கே அரபிக்கடல் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலை இதற்கு இடைப்பட்ட இடத்தில் 65 மைல் அகலத்தில் பச்சைக் கம்பளத்தில் ஆங்காங்கே சில சில வண்ணப் பொட்டுகளைப் போல் ஊர்களும் வளைந்த கோடுகள் போல் நீர் தழுவிய ஆறுகளும், மலையாள அழகை பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது. தெற்கே திருவனத்தபுரத்தில் இருந்து வடக்கே நீலமலையைத் தொடும் வரை அழகுத் திருமேனியாய்த் திகழும் கேரளக் கன்னியின் பேரழகு முழுவதும் பார்த்துக் களித்தான். உலகின் பிற பகுதி மக்களையும் நம்மவராக கொண்டு மனிதர்களாக மதித்து, மனித நேயத்தோடு தம்மக்களை பெண் கொடுத்து மாப்பிள்ளை ஸ்தான என்று தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டி, அவர்களோடு தம்மைப் பிணைத்துக் கொண்ட மலையாளிகளை நினைத்து மகிழ்ந்த சுந்தரலிங்கம் ஆரிய நம்பூதிரிகளுக்கு அளவற்ற அதிகாரத்தை வழங்கி தம் அகவாழ்வு வரைமுறையின்றி புழங்க விட்டதை நினைத்து வருந்தினான். தெற்கே இந்து மதத்தவர், மத்தியில் கிறித்துவ மதத்தினர், வடக்கே முகமதியர் என்று மூவர்ணக் கொடி இந்த நாட்டின் வளர்ச்சியை முடக்கியதுபோல் கேரள அரசியலில் சமயம் தன் சாகத்தை காட்டி மலையாள மக்களின் வாழ்வில் தலை நீட்டி, அவர்களின் மதிப்பைக் குறைத்தது கண்டு நெஞ்சில் துயருற்றான்.
தமிழர்களாக விளங்கிய காலத்தில் சேர மன்னர்கள் வடக்கே இமயம் வரை படை நடத்தி பகைவென்றதை எண்ணி மனம் இறும்பூதெய்தினான். போக்குவரத்து குறைவாகவும், பாதைகள் இடர்பாடாகவும் இருந்த காலத்தில் எப்படி இத்தனை ஆயிரம் கல் படை நடத்தினார்கள் என வியந்தான். இனமானம் காக்க எத்தனை துயர்களை தாங்கினார்கள் தமிழ் மாவீரர்கள் என எண்ணி மனதில் பெருமிதவுணர்வுடன் தமிழகத்திற்குள் பறந்தான்.

கேரளத்தைப் போல் நெடிய மலைத் தொடர் இங்கு இருந்தாலும் அடர்ந்த மலைத் தொடராய் அது இல்லாததாலும் அருகே அரவி போன்று கடல் இல்லாததாலும் மலையாளத்தைப் போல் மழை வளம் இல்லாதது கண்டு வருந்தினான். மேற்கு மலைத் தொடரையொட்டி மீண்டும் கன்னியாகுமரி வந்தான். பிள்ளைத் தமிழ் பேசும் அம்மாவட்ட மக்களின் கொஞ்சுதமிழ் மொழியில் மனம் பறி கொடுத்தான். தமிழகத்தின் நெடுங்கால வரலாறு அவன் நெஞ்சை கல்வி நெறியில் காட்சியாக தோன்றியது.

No comments:

Post a Comment