Monday 12 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

12. கண்டங்களில் கண்பதிப்போம்!
முக்கனிச் சாறாய் முத்தமிழ்ப் பேறாய்
முகிழ்த்து வரும் முழு நிலவாய்
மூவேந்தர் மணிமுடியாய்
மூதுரை தரும் பெரும் பொருளாய்
முறுவலித்து மகிழ்வளிக்கும் எழிலே!
வாழ்க! பல்லாண்டு வளர்க நின் ஆற்றல்!
ஒளி கண்டோம், வளி கண்டோம்
உருண்டு வரும் உலகு கண்டோம்
உலகோடு பொழிந்த மழை கண்டோம்
இயற்கையின் இயக்கம் கண்டோம்
விளைவுகளின் விளக்கம் கண்டோம்
வளர்ச்சியின் வகைகள் கண்டோம்
புவியின் புகழ் பாடினோம்
பூந்தமிழ் நூல் கூடினோம்
உருண்டு நிலம் ஓடுகின்ற
உன்னத நிலை காணுவோம்!
கண்டங்கள் ஏழு என்றனர்
இருதுருவங்களை ஓட்டி வாழும்
எழில் தூவிய கண்டங்கள் இரண்டு
ஆர்ட்டிக் எனும் வடதுருவக் கண்டம்
எஸ்கிமோக்கள் வாழுகின்ற
இனிமைகள் கொஞ்சும் இடம்
மீனுணவும் நாய் வண்டியும்
பனிக் கரடித் தோலாடையும்
பயன்படும் பொருள்கள் ஆகும்
தென்துருவத் தழுவலால்
தித்திக்கும் அண்டார்டிகா
இயற்கை தன் குளிர் பனியை
கொட்டி வைத்திருக்கும் கொள்ளிடம்
உலகம் முழுவதற்கும் குளிர் தந்து
குதூகலம் கொள்ளச் செய்யும் சீர் நிலம்
மேன்மைதரும் மெல்லிய தென்றல்
பிறப்பெடுக்கும் பெருமை நிலம்
ஆராய்ச்சிக் கூடங்கள் அமைந்திருக்கும்
ஆய்வாளர்கள் உறைந்திருக்கும்
அழகிய தென்கண்டம் அண்டார்டிகா
கொடும்பனியில் வாழ்ந்தாலும்
கொள்ளை இன்பம் கொள்ளுகின்ற
விந்தைமிகு உயிரினங்கள்
வியப்பூட்டி மகிழ்விக்கின்றன
ஆட்கள் இல்லாததால் அழகு தவழ்கிறது
ஒளிக் கடுமையைத் தடுக்கும்
ஓசோனில் ஓட்டையானதால்
உருகும் பனி ஒரு நாளில்
உலகையே அழித்த விடுமாம்
குளிர்பனியால் இரு கண்டம்
கொடும் வெயிலில் ஒரு கண்டம்
இதம் பதமாய் இன்னும் சில
ஆப்பிரிக்க கண்டத்தில்தான்
ஆதிமனிதன் அவதரித்தானாம்
கண்டங்களில் பெரிதாக
கலைகள் மலிந்திருக்கும்
அருமை ஆசியாக் கண்டம்
கடல் நீர் சுற்றி நிற்கும்
கவின்மிகு தீவுக் கண்டம்
கலை கொஞ்சும் ஆஸ்திரேலியா
நினைத்தாலே நெஞ்சினிக்கும்
நேர்நின்றால் மகிழ்வளிக்கும்
அறிவுசார் அய்ரோப்பா கண்டம்
ஆதி தமிழர் வாழ்ந்திருந்த
அழகிய அமெரிக்க கண்டம்
அந்தோ பரிதாபம் தமிழ்வழி மாந்தர்
அடிமையாகிப் போனாரே!
இன்று அந்த இனிய கண்டங்களில்
இயற்கை நிலை மாறிவிட்டது
கண்டங்களின் கடந்த காலம் காண்போம்
பசுமையும் காடுகளும் பரவியிருந்தன
உயிரினங்கள் ஆங்காங்கே
உலவி உயிர் வாழ்ந்தன
தட்பவெப்பங்களுக்கு தக்கவாறும்
தக அமைதலுக்கு உகந்தவாறும்
பல்வேறு வடிவங்களில்
உருவங்கள் உருவாகி வளர்ந்தன
மாறுதல் ஒன்றே மாறாதது என
மகத்தான விதிகளின் வழியே
மாறுதல்கள் நிகழ்ந்தது
மறுமலர்ச்சி தோன்றியது
உருண்டு வரும் உலகில்
ஒவ்வொன்றும் மாறியது
கால ஓட்டத்தில் காட்சிகள் மாறியது
உருவங்கள் ஒன்றாகும் ஆனால்
உணர்வுகள் வேறாகும்
உணர்வுகள் ஒன்றாகும்
உருவங்கள் மாறுபடும்
இயற்கையின் இயக்கத்தில்
எத்தனையோ விசித்திரங்கள்
நில மேலோடு நகர்வதால்
நேரிடும் நிலைகளிலே
கண்டங்கள் நகர்ந்து வரும்
கடல்கள் இடையே புகுந்து விடும்
மற்ற உயிர்களை விட மனிதர்கள்
மளமளவென உயர்ந்தார்கள்
அறிவின் ஆதிக்கத்தால்
எங்கும் சென்றார்கள்
எழில்நிலை கண்டார்கள்
மற்ற உயிரினங்களிடமிருந்து
மாறுபட்டு உயர்ந்தார்கள்
பகுத்தறிவின் பயன்பாட்டால்
பல வழிகள் தோன்றியது
இடம் விட்டு இடம் பெயர்ந்தோர்
இருப்பிடத்தை உருவாக்கினர்
தடித்தவர்களும் தடி எடுத்தவர்களும்
தலைவர் ஆயினர்
இணைந்து வாழ்கின்ற
இனக் குழுக்கள் உருவாகின
எத்தனையோ வகையினங்கள்
ஒன்றையொன்று அழித்தன
ஒன்றோடு ஒன்று இணையவும் செய்தன
பகுத்தறிவின் வளர்ச்சி
பல்வேறு நிலை கண்டன
குரங்கு நிலை மாறி
குடியிருப்புகள் தோன்றின
கோடுகள் எல்லையாகி
நாடுகள் மலர்ந்தன
நாட்களின் நகர்வில்
நாகரிகம் தோன்றின
ஆளுமை விதிகளோடு
அரசுகள் மலர்ந்தன
அறிவின் தொகை பெருகின
ஆற்றலின் வகை தெரிந்தன
அனைத்து நிலைகளிலும்
அன்பு கோலோட்சியது
அறம், பொருள், இன்பம் என்றும்
இயல், இசை, கலை என்றும்
ஏற்றம் காணும் முயற்சிகள்
ஆயினும் அதிலும் வேறுபாடுகள்
அழிவுக்கு வழிகாட்டும் ஆய்வுகள்
பதற வைக்கும் படை அமைப்புகள்
பண்புக்கேடான செயல் முறைகள்
முறைகள் மாறி மோதல் உருவாகி
நாடுகள் தோறும் நாசமூட்டும் போர்கள்
அழிவும் இழிவும் தோன்றி அறம் தோற்றது
இயற்கையின் இருவினைகள்
இங்கேயும் ஆட்சி புரிந்தன
கண்டங்கள் தாண்டியும்
கடும் போர்கள்
பகையுணர்வு, மாச்சரியம், பண்புக்கேடு
இன்றளவும் தொடர்கிறது படர்கிறது
ஆசியா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பியா
அழகிய அமெரிக்கா என்று
கண்டங்கள் கண்களில் தோன்றுகின்றன
ஒன்று பலவாக உருவாவது தான்
உலக இயற்கையின் உயர் குணம்
ஒரு தாய் பெற்ற பிள்ளைகளென
கண்டங்களில் உள்ள
கவினுரு நாடுகளில்
கருதுகின்ற நாள் வர வேண்டும்
களிப்புற்று மகிழ்வுற வேண்டும்
எழிலே! இனிக்கும் தமிழ்ச்சுவையே
அறம் செறிந்த உலகம் வேண்டும்
அரசுகள் இல்லா உலகு வேண்டும்
மாசற்ற மனம் மனிதருக்கு வேண்டும்
மாண்புகள் செழித்து மலர வேண்டும்
புரட்சி வேண்டும், புதுமை வேண்டும் என்றான்
புது உலகைக் காணத் துடித்த
கார்ல் மார்க்ஸ்
மார்க்ஸ் கண்ட கனவுகள்
நல்லவர்களால் நனவாகட்டும்
நாவரசே உன் காலத்தில் நிறைவேறட்டும்.

No comments:

Post a Comment