Monday 5 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

7. ஒளியின் பேராற்றல்!
சிந்தையில் நிறைந்திருக்கும்
சித்திரச் சோலையே!
செந்தமிழ்க் காளையே!
சீராளன் பெற்றெடுத்த
செழுமை தரும் செல்வமே!
சின்ன இதழ் விரித்து காட்டும்
சிரிப்பழகே, தேன்மலரே!
வண்ணங்களை விஞ்சுகின்ற
வடிவழகே, கலை வடிவே!
எழுகதிராய் ஒளிருகின்ற
இலக்கியப் பூ மலரே!
எனக்குத் தெரிந்தவற்றை,
எழுதுகின்றேன் பொறுத்திடுவாய்!
அன்பின் வழி நின்று,
ஆசையில் பேசுகின்றேன்!
என்னையா எழுத்தென்று,
ஏளனம் செய்யாதே!
கவிதையா இதுவென்று
கண்டனம் கூறாதே!
பழைமை போக்கென்று
பரிகாசம் பண்ணாதே!
பாசத்தில் பேசுகின்றேன்
பழக்கத்தைக் காட்டுகின்றேன்!
என்னதான் உள்ளதென்று
ஏறெடுத்துப் பார்த்திடுவாய்!
இதயத்தில் பதிய வைப்பாய்
எதிர் வினைகளின் இணைப்பே
இயக்கத்தின் உயிர் என்றான்
இலட்சியப் பெருமகன் ஏங்கல்ஸ்,
இயற்கையின் எழிலையெல்லாம்
என்னால் இயன்ற வரை
இயம்பிடுவேன் ஏற்றிடுவாய்!
விண்வெளியில் வீசுகின்ற
விந்தை மிகு ஒளிக்காற்று
உருவாக்கும் பொருளெல்லாம்
உள்ளத்தை அள்ளுதய்யா!
உருளுகின்ற உலகுக்கெல்லாம்
ஒளி தான் உயிரய்யா!
ஒளியின் தோற்றம் எதுவென்றும்,
தோன்றியது எங்கென்றும்
சொன்னவர் யாருமில்லை!
சொல்வதற்கு வாய்ப்புமில்லை!
பார்க்கின்ற இடமெல்லாம்
பரவி நிற்கும் பேரொளி
பதுங்கியும், ஒதுங்கியும் கிடந்தது!
நீரில், காற்றில், நிறத்தில், பொருள்களில்
நீக்கமற நிறைந்திருந்தது!
வடிவங்கள் பலவாக வாழ்ந்து மகிழ்கிறது!
நீல வானத்தில் ஒளிருகின்ற
நிலாவிலும் வாழ்கிறது!
நீள்தொலைவில் மின்னுகின்ற
விண்மீன் கூட்டத்திலும் நிறைந்தது!
கண்களில் மட்டுமின்றி காணும்
காட்சிகளிலும் கலை மணம் பூட்டியது!
ஒளி புகாத இடமில்லையென்று
உயர் கவிதைகள் பாடி மகிழ்ந்தன!
ஒளியே இறைவனென்று,
உலகமே வணங்கியது!
இயற்கை ஒளியை ஏவல் செய்தது!
எங்கெங்கும் செல்லப் பணித்தது!
எல்லா நிலைகளிலும் இயங்க வைத்தது!
ஒவ்வொரு பொருளிலும் ஊடுருவி நின்றது!
ஒளியால் தான் அழகும் எழிலும்
ஆனந்தம் கொள்கிறதாம்!
ஒளியலைப் பேரழகை
உலகமே வாழ்த்துகின்றன!
ஒளி படைத்த கண்ணென்று
உயர் கவிதை பாடுகின்றது!
ஒளி நிலா முகமென்று
உவமைகள் பேசுகின்றது!
உலகெங்கும் பரவி நிற்கும்
ஒளி வெள்ளப் பேரழகை
மக்கள் வாழ்வுயர்த்தும்
மகத்தான் பணிகளுக்கு
பயன்படுத்த வேண்டுமென்று
அறிவாளர் எண்ணியதால்
ஆன நிலை அற்புதம் தான்!
ஒளியாற்றலை எளிதாக்கி
உயர்வுக்குப் பயன்படுத்த
உழைத்தவர்கள் ஏராளம்!
துடிக்கின்ற பொருளையெல்லம்
தொட்டுத் தொட்டுப் பார்த்து
துடிப்பது எதனால் என்று
அறிந்திட முனைந்திட்ட
அறிஞர்கள் சிலர் உண்டு!
பொருள்களை துடிக்க வைக்க
தூண்டுகின்ற ஆற்றலினை
அறிந்திடும் ஆய்வுகளைத் தொடர்ந்தனர்!
ஒளியின் இன்னொரு வடிவான
மின்னாற்றல் இருப்பதை அறிந்தனர்!
ஆங்காங்கே ஆய்வுகள் தொடர்ந்தது!
மின்சாரம் காணும் முயற்சியில்
முன்னேற்றம் தோன்றித் தொடர்ந்தது!
பற்பல ஆய்வுகளுக்குப் பின் அறிஞர்
பாரடே முழுமை கண்டார்!
மின்சாரம் கண்ட பின்னே
வேறு வேறு ஆய்வும் வேகம் கண்டன!
மின்சாரத்தைப் பயன்படுத்தும்
பல்வேறு பொருள்கள் வடிவெடுத்தன!
ஆல்வா எடிசன் போன்ற
ஆற்றல்மிகு விஞ்ஞானிகள்
எண்ணத் தொலையாத
இனிய பொருட்களை வழங்கினர்!
மிகு மின் ஆற்றல் என்றும்
இலகு மின் ஆற்றல் என்றும்
பிரித்தாளும் வகை கண்டனர்!
ஆலை இயந்திரங்களும்
அழகிய கருவிகளும் தந்தனர்!
கம்பிகளில் மின்
கலை வடிவம் காட்டின!
குண்டு பல்பு என்றும்
குமிழ் விளக்கு என்றும்
கோல அழகு காட்டி கொஞ்சின!
மின்சாரம் கண்ட பின்னே
மேன்மைதரும் வாழ்வு கண்டது உலகு!
எழிலூட்டும் பொருட்கள்
எத்தனை எத்தனை இனிமை தந்தன!
வாழ்வு சிறப்பதற்கும்
வள்ளலானது மின்சாரம்!
உலகம் இன்று உயர்வில் மகிழ்வில்
ஊஞ்சாலாடிக் களிக்கின்றது!
ஒளியின் உறவான மின்சாரம்
உட்புகாத இடமில்லை உலகில்
திரைப்படமா? தொலைக்காட்சியா?
தித்திக்கும் கணினியா? செல் பேசியா?
      விளக்கா? விசிறியா?
      வியப்பூட்டும் பொருட்கள்,
      நீரிறைக்கும் இயந்திரமா?
      மாவரைக்கும் இயந்திரமா?
      மற்றும் பல செயல்களுக்கும் மின்சாரம்
      தேரிழுக்கும் மின்சாரம்
தெரு விளக்கும் மின்சாரம்
பார் முழுக்க வளர்வதற்கு பயன்படுத்தும் மின்சாரம்
பாட்டரியின் வடிவாக பல்லாயிரம் பொருள்களுக்கு
பயன்தரும் மின்சாரம்
மின்சாரத்திற்கு முன் என்றும்,
மின்சாரத்திற்கு பின் என்றும்,
எழுதிய நூல் ஒன்றில்
உலக வளர்ச்சியைக் கணித்து
இவ்வாறு உவமை சொன்னான்.
“ஒரு மணி நேரம் ஒடுகின்ற”
உயர்வான திரைப்படத்தில்
ஒரு நிமிடத்தைக் கழித்தால்
மீதி நேரம் மின்சாரம் இல்லாக் காலம்.
ஒளி தரும் மின்சாரமோ ஒரு நிமிட நேரம்.
இரண்டையும் ஒப்பிட்டு
எது சிறந்ததென்று வினா எழுப்பி
அறுபது நிமிடத்தில் ஒன்று கழிந்த
மின்சாரம் இல்லாத காலத்தை விட
மின்சாரம் வழங்கிய ஒரு நிமிடம்
ஓராயிரம் மடங்கு உயர்ந்ததென்றான்
ஒளியின் பேராற்றல்,
உள்ளிருந்து இயக்குகின்ற
மின்சார பெருமை சொன்னேன்
மின்சாரம் இல்லையென்றால்
மேதினியில் வாழ்வு, வளர்ச்சியில்லை
எண்ணெயில் மின்சாரம்,
எரிகரியில் மின்சாரம்
தண்ணீரில் மின்சாரம்
தானியத்தில் மின்சாரம்
மனித மேனியிலே மின்சாரம்
காசினியில் காணுகின்ற
காட்சியெல்லாம் மின்சாரம்
பஞ்ச பூதங்களிலும்
படிந்திருக்கும் மின்சாரம்
மின்சாரம் கண்டளித்த
மேல்நாட்டு மேதைகளை
வாழ்த்தி வணங்கிடுவோம்
வாழ்வில் பயன் கண்டிடுவோம்
மாலையானால் இருள் கவிந்து
மண்ணுலகை மறைத்து நிற்கும்
இயற்கையில் இருந்த நிலை
இந்த நிலை மாற்றி இரவெல்லாம்
இனிதான ஒளிமழையை
இறைத்திடச் செய்த
இனிய விஞ்ஞானத்தின்
எழிலார்ந்த நிகழ்வெல்லாம்
ஒளியின் வழியாகவே
உறவாடி மகிழ்கின்றன
சிமிட்டுகின்ற ஒளி அலைகள்
சீருடன் செயல்புரிந்து
வாழ்வின் உயர்வுக்கு
வளமூட்டி மகிழ்கிறது
செவ்வாய்க்கு செல்வதற்கும்
சீர் நிலாவைக் காண்பதற்கும்
வெள்ளி உலா போவதற்கும்
சிக்னல் காட்டும் சீர் வழியைக்
சிந்தையில் பதித்திடுவோம்

செயல்புரிவோம் நலம் பெறுவோம்.

No comments:

Post a Comment