Wednesday 21 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

18. ஏக்கத்தை தீர்த்து வைப்பாய்
அரும்பிய நான் முதலாய்
அழகொளிர வளர்ந்து வரும்
அறிவாள ர் பெற்றெடுத்த
அன்பழகே! பண்பகமே!
வளம் சேர்ந்து வாழ்க!
எழில் வடிவான ஏந்தலே!
எங்கள் இதயம் மகிழ்விக்கும் எழிலே!
பிறந்த நாள் அன்றே உன்
பிஞ்சு முகம் பார்த்து வந்தோம்
பின்னும் பல நாட்கள் உன்
ஒளிமுகத்தைக் கண்டு வந்தோம்
பிரிந்த நாள் கழிந்த பின்னே
உனைக் காண ஓடி வந்தோம்
பருவ மாற்றங்கள் நாளும்
மாறி வந்து பயன்மிகு காட்சி தரும்
அது போல உன்னிலும்
அழகு குவிந்த முகம்
அருள் சுரக்கும் விழியழகு!
பார்ப்பதற்கு அழகூட்டும்
பல் இல்லாப் புன்னகைகள்
தொட்டிலில் படுத்திருக்கும்
தூய முகம் கண்டேன்
சிந்தனையாளர் தோற்றத்தில்
சீர் தவழப் படுத்திருந்தாய்!
கன்னத்தில் விரல் பதித்து
கனி முகம் காட்டி கண் மலர்ந்தாய்!
விழியின் கருமணிகள்
வைரமாய் ஒளி வீசின்
வீசுகின்ற கைகள் வீரர்களை நினைவூட்டின
அழுவதற்குத் தொடங்கு முன்னர்
ஆவேசம் தெரிகிறது
ஆகாயம் வெளிச்சம் போல
அறிவு முகம் ஒளிருகிறது
உடலில் உரமேறி
உருவ அழகு மிளிருகிறது
மலர் காலால் மிதித்துபோது
மனசெல்லாம் குளிர்கிறது
வளர் பிறையாய்!
வானவில் அழகாய்!
ஒளிரும் உயிர்த் தமிழே!
குப்புற விழுவதும்
குறு நடை பயில்வதும்
பிள்ளை வளர்ச்சியில்
பெறுகின்ற ஒன்றுதான்
உள்ளத்து உணர்வுகளில் - அது
ஒரு போதும் ஆகாதென்பேன்
வீரருக்கு இலக்கணம் கூறும்
விழி நிறைந்த இலக்கியங்கள்
உறங்கும் நிலையில் கூட - அவன்
கால் மடங்கக் கூடாதென்கிறது
விடை பெற்றுச் செல்லும் நேரம்
விழிகளை உற்றுப் பார்த்தேன்
காந்தம் நிறைந்த கண்கள்
களிப்பூட்டும் விழி மலர்கள்
கலை காட்டும் கண்மணிப் பாவை
கவினழகு ஒளிரும் தோற்றம்
கனி மலரே! ஒளி நிலவே!
தாழ்ந்த தமிழர் நிலை மாற்ற
தரணியில் பலர் உழைத்ததுண்டு
தன்னலம் பாராமல்,
தற்பெருமை பேசாமல்,
தன் மானம் காத்திட - பரப்பிட
தலைவர்கள் பலர் உழைத்ததுண்டு
இவர்களின் உழைப்பால்- அறிவால்
ஏற்ற நிலை புற வாழ்வில்
தோன்றி வளர்ந்தாலும்
இதயத்தில் தமிழர் இன்னும்
ஏற்றம் பெற வேண்டும்
பெரியார் - அண்ணா - கலைஞர்
பேராளர்கள் வரிசையும்
பாடுபட்ட பின்னரும்
இன்னும் தமிழன் எழவில்லையே
என்ற ஏக்கம் இதயத்தை அழுத்துகின்றது
ஏக்கத்தை தீர்த்து வைக்கும்
எதிர்காலம் உருவாகட்டும்.

No comments:

Post a Comment