Saturday 24 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

21. மலரில் இணைந்த மணமே!
மலரில் இணைந்த மணமே!
மறவர் குலத்தின் மான உணர்வே!
மாசற்று ஒளிரும் மணியே!
மாண்புகளின் சிறப்பே!
மன்பதை சிறக்க வந்த சீர் மரபே!
வளரட்டும் வையகம் உன்னால்!
வாழ்க நீ வானத்து வயதாய்!
உன் உயிர்த்தந்தை உதயமாறன்
ஓர் இனிய செய்தியை சொன்னார்
வானத்தை நோக்கி பார்த்த முகம்
மறுபக்கத்தில் பூமியைப் பார்த்தது
உருண்டும், புரண்டும் உருவம் வளர
உட்காரும் நிலை கண்டாயாம்!
இனிப்புடன் சொன்ன செய்தி
இதயத்தை மகிழ்வித்தது
உட்காரத் தொடங்கினாலே
உறுதியும் வளருமன்றோ!
எழுந்திட வேண்டுமென்ற
இதய வலிமை தோன்றுமன்றோ!
எழுச்சி தரும் இளங்கதிராய்!
எழுந்திடும் நாள் வரட்டும்
எங்கள் இதயமெல்லாம்
இனிமைகள் நிரம்பிடட்டும்!
எட்டு மாதத்தில் குழந்தைகள்
எட்டு வைக்கத் தொடங்குமென்று
எனதன்னை உரைத்திடுவார்
மாதங்கள் நடக்கும் போது
மாற்றங்கள் ஏற்படுமாம்
ஏற்றமும், வளர்ச்சியும்
ஏறுநடை போட்டிடுமாம்
எண்ணங்கள் தோன்றும் வேளை
இதய மகிழ்வு அடைந்திடுமாம்!
உன் தந்தை உதயனுக்கும்
இளைய தந்தை இதயனுக்கும்
என் அன்னை முன் நாளில்
பாடிய தாலாட்டுப் பாடல்கள்
பைந்தமிழின் பாங்கு சொல்லும்
சீர்தவழும் செந்தமிழை
சிந்தையில் சுமந்த அன்னை
செப்பிய பாடல் கேளாய்!
கடலளந்து கப்பலிட்டு
கப்பலிலே தோணியிட்டு
துறையறிஞ்சு தோணியிடும்
சோழருட வம்முசமோ
வங்காளஞ்சிட்டு
வயலிறங்கி மேயுதுன்னு
சிங்கார வில்லெடுத்து
தெறிக்கப் பிறந்தானோ!
இதுபோல நிறைய பாடி
இருவரையும் வளர்த்தார்கள்
உட்காரும் நிலை கண்ட
உயிரில் நிறைந்த எழிலே!
விரைந்து நீ எழ வேண்டும்
வீரர் நடை காட்ட வேண்டும்!
உறவினர் வாழ்த்தும் மொழி
உள்ளத்தில் நிறைய வேண்டும்
உரம் பெறும் உடலெடுத்து
உயர்ந்துயர்ந்து ஓங்க வேண்டும்!
உள்ளத்தில் தூய எண்ணம்
ஒரு கோடி வளர வேண்டும்
கருத்துக்களின் பிறப்பிடமாய்
கலை நெஞ்சம் துலங்க வேண்டும்!
கனித் தமிழ் வழியினிலே
கல்வியறிவு பெற வேண்டும்
உலகில் தமிழ் சிறந்துயர
உன் அறிவு ஓங்க வேண்டும்
உழைப்பின் சிறப்போடு
உளத் தூய்மை வேண்டும், வேண்டும்.
அறிஞர்களின் வழிச் செல்லும்
ஆவல் கொண்ட மனம் வேண்டும்
நல்லோரை வாழ்த்துகின்ற
நல்ல நெஞ்சம் நாளும் வேண்டும்
மேதமையைப் பாராட்டும்
மேன்மைக் குணம் மேவ வேண்டும்
வாய்மை தவறாத வழி நடக்க வேண்டும்
பொருள் வளம் வேண்டும்
புதுமை செய்ய வேண்டும்
கலை மொழியில் புது வழிகள் பெற்று
கவின் தொழில்கள் காண வேண்டும்
செய்க பொருளையெனும்
குறள் மொழியின் குணம் வேண்டும்
தேன் சுவையாய்,
தேயாத பெரு நிலவாய்
தெம்மாங்கு இன்னிசையாய்
சீர் நிறைந்து திகழ வேண்டும்!
இலட்சிய வரலாறாய்
சிந்தை நலம் பெற வேண்டும்
இனிக்கும் சுவையெல்லாம்
எழிலே உன்னில் இணைய வேண்டும்
கனிவாய் மலரெல்லாம் உன்
கண் மலராய்த் தோன்ற வேண்டும்
விடியலின் பூபாளம் உன்
விழி பார்த்துப் பாட வேண்டும்
வேழத்தை வீழ்த்துகின்ற
வீரனின் உடல் மன வலிமை
விரைவில் நீ பெற வேண்டும்
விஞ்ஞானம் வெளிப்பட்டு
விந்தைகளைத் தோற்றுவித்து
வெற்றி கண்ட நிகழ்வுகளை
விருப்புடனே அறிய வேண்டும்
நலிந்தோரின் நிலையுயர்ந்து
நல்லோராய் தனையுணர்ந்து
சமுதாய நலன்கள் பேணும்
நல்வழிகள் தழைக்க வேண்டும்
எல்லாமே எல்லாருக்கும்
என்ற நிலை தோன்றுவதற்கு
இனிதா மன உணர்வில்
இலட்சியங்கள் பூக்க வேண்டும்.
சிந்தையிலே நிறைந்திருக்கும்
செந்தமிழின் செழுமை காண
திக்கெட்டும் பரந்து சென்று
சீர் வளர்க்கும் நிலை வேண்டும்
குவலயத்தில் தமிழ் பரப்ப
கொட்டட்டும் இன முரசு
வானோக்கித் தமிழ் வளர
வாழ்த்து மொழி குவிந்திடட்டும்!
உட்காரும் உன் வளர்ச்சி கண்டு
உவகை கொண்ட உள்ளத்தின்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தி

வாழ்த்துகிறேன்! வாழ்க!!

No comments:

Post a Comment