Monday 28 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

4. எழில் சிறந்து வாழ்க!
உதயக் கதிர் விரிந்தால் உலக
உறக்கம் கலையும்!
உண்மை சிறந்து வாழ்ந்தால் உலகில் உயர்வு விளையும்!
அன்பும், அருளும் சுரந்தால்
அது அன்னை மனமாகும்!
தன்னை வென்று தகைமை கொண்டால் தரணி சிறந்து நிற்கும்!
உதயாவின் உயிரும் உண்மைத் தமிழ்ச் செல்வியின் உயிரும்!
இணைந்து வந்த எங்கள் குல விளக்கே!
எளிமை, இனிமை, இதய வலிமை கொண்ட ஏந்தலே!
எங்கும் தமிழ் சிறக்க இனிமைகள் சுரக்க
எழுகதிராய் எழுந்து வந்த எங்கள் எழிலே!
வழிவழி மறத்தமிழர் மாண்பு காக்க வந்த
மாப்புகழே! மணத்தமிழே! வருக! வருக!!
இனம், மொழி, பண்பாடு, இனிய வரலாறு
இமயமாய் வளர்ந்திடவே, சிறந்திடவே
வந்துதித்த இளந்தளிரே பெரும் புகழே!
உதயனின் இன்னொரு வடிவமாய் வந்த
எழில் என்று பெயர் கொண்ட புலிப்போத்தே!
சீயத்தின் குருளையே சிறந்து நீ வாழ்க!
உயர வளர்ந்திடுவாய், ஊர் மகிழ வாழ்த்திடுவாய்!
உலகை அறிந்து நடக்கும் உயர் அறிவு பெற்றிடுவாய்!
கலைகள் அறிந்திடுவாய்! கல்வியில் சிறந்திடுவாய்!
நல்லோரின் பார்வையிலே நாளும் நடந்திடுவாய்!
ஏழையின் உயர்வுக்கு எந்நாளும் உழைத்திடுவாய்!
ஏற்றம் கண்டிடுவாய்! எழில் வாழ்வைப் பெற்றிடுவாய்!
தமிழினம், தமிழ் மொழி, தமிழர் வாழ்வு சிறந்திட பணிபுரிவாய்!
அருந்தமிழர் நிலை உயர ஆற்றலைக் குவித்திடுவாய்!
அன்னைத் தமிழ் சிறந்திடவே ஆன மட்டும் நீ உழைப்பாய்!
5. தலை சிறந்து வாழ்க!
எழிலே! எங்கள் உயிரே!
மாண்புகள் சிறந்திட மலர்ந்த விழியே!
மாசுகள் மறைந்திட சுடரும் ஒளியே!
வளர்ந்திட நீ சிறந்திட வாழ்த்துகள்!
நான்கு கிராம் எடையிலிருந்தே
நலன் காக்கும் கடமையிலே
நாளெல்லாம் வினைபுரிந்தார்
நல்லோராம் உன் தாய், தந்தை!
வீரர் வழி வந்தவர்கள்
விவேகம் சிறந்தவர்கள்
கற்றறிந்த கலை மலர்கள்!
கவிதை மனம் கொண்ட
உன் அன்னை, தந்தை!
அன்பு நெறி உரைப்பார்!
அறிவின் தொகை சொல்வார்!
ஆற்றலை வளர்த்திடுவார்!
ஆசை பொங்க உனை வளர்ப்பார்!
இயல், இசை கலை தருவார்!
இனிய தமிழ் மொழி உரைப்பார்!
இன்னல்கள் தீர்க்கும் வழி
எதுவென்று எடுத்துரைப்பார்!
சீர்தரும் செழுமை சொல்வார்!
சிந்தனையின் நெறி காட்டுவார்!
சிறுமையை அழித்தொழிக்கும்
சித்தாந்த முறை வழங்குவார்!
உலகத்தைக் காட்டிடுவார்!
உண்மையின் பொருள் உரைப்பார்!
ஊருக்கு உழைத்தோரின்
உள்ளத்தைப் படம் பிடிப்பார்!
புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடரும்.....

No comments:

Post a Comment