Wednesday 9 November 2016

காந்தியாரைக் கொன்ற மதவாதக்கொடுமை

காந்தியாரைக் கொன்ற மதவாதக்கொடுமை
காந்தியார்... உலகின் எங்குமில்லாத ஒரு புதிய முறையைக் கையாண்டு ஒரு பெரிய நிலப்பரப்பிற்கு விடுதலை வாங்கித் தந்த வித்தகர். 17ம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் அறிவுத் தெளிவு கொண்டோரால் தொழிற்புரட்சியின் விளைவால் புதுப்புதுக் கருவிகளும், புதிய பொருள்களும் உருவானது. குவிந்த பொருளை விற்க சந்தைகளை நாடி கடல்களை கடக்கும் வழியும். பயிற்சியும் துணிவும் கொண்ட இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் நாற்திசைக்களிலும் பயணங்கள் மேற்கொண்டன. அதற்கு முன்னர் அய்ரோப்பாவில் மலர்ந்த கிறித்தவ மதத்தைப் பரப்புவதில் சமயப் போதகர்கள் பல்வேறு நாடுகளில் முகாமிட்டிருந்தனர். அதற்கு முன்னர் அதே அய்ரோப்பாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் பல்வேறு நாட்டின் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். வணிகம் செய்ய வந்த அய்ரோப்பியர்கள் ஆங்காங்கே இருந்த நாட்டின் சமூகச் சூழல்களை ஆய்வுசெய்து தங்கள் அரசுகளை அமைக்க முடிவெடுத்தனர். மிகப்பெரிய நிலப்பரப்பும் நிறைந்த மக்களும் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை, பிரிட்டிஷ், பிரான்ஸ், போர்ச்சுகள் ஆகிய நாடுகள் தங்கள் வலிமைக்கு தக்கவாறு பங்கு போட்டுக் கொண்டனர். அதுபோலவே, ஆசிய, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளை ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டன. இந்தியாவின் பெரும் பகுதியை பிரிட்டிஷ் நூற்றைம்பது ஆண்டுகள் ஆண்டது.
குஜராத்தில் ஒரு வணிகரின் மகனாகப் பிறந்த நமது காந்தி இலண்டனில் பாரிஸ்டர் படித்து வழக்கறிஞர் தொழில் செய்ய பிரிட்டிஷ் காலனி நாடான தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றார். அங்கு வெள்ளையர் அரசின் நிறவெறிக் கொடுமைக்கு ஆளாகி அதை அங்குள்ள தமிழர்களின் ஆதரவோடு எதிர்த்துப் போராடினார். தாக்கப்பட்டார். பின்னர் இந்தியா திரும்பினார் திரும்பிய போது ஷெர்வாணி - கோட்டு அணிந்து குஜாரத்து குல்லாவோடு ஒரு பாரீஸ்டராகத்தான் வந்தார். இந்திய துணை கண்டத்தின் சூழ்நிலைகளை உற்றுப்பார்த்து ஆய்வு செய்தார் பல்வேறு சமயங்களில் சிக்கிக் கிடந்த மக்களையும் அவர்களின் உளப்பாங்கையும் அலசி ஆய்வு செய்தார். அய்ம்பத்தாறுதேசம் என்று மதவாதிகளால் அழைக்கப்பட்ட இந்த நாட்டின் மன்னர்களின் வரலாற்றையெல்லாம் கூர்ந்து பார்த்துக் குறித்துக் கொண்டார். ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு காட்டிக் கொடுத்து இந்த மன்னை அன்னியர்களுக்கு அடிமையாக்கியதையும் அறிந்து கொண்டார். இந்தியாவை எந்த முறையில் பிரிட்டிசாரிடமிருந்து விடுவிக்கலாம் என்ற சிந்தனையோடு இந்த நாட்டின் முக்கிய இடங்களுக்கு பயணித்தார் காந்தியார். வடநாட்டின் முக்கிய இடங்களைப் பார்த்து ஒருமுடிவோடு தென்னிந்திய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் காந்தியார். பல்வேறு இடங்களில் மக்களின் நடவடிக்கைகளைப் பார்த்த காந்தியார் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. மக்களின் மனதில் அறிவாளர்களுக்கு அதிகம் இடம் இல்லை என்பதை தெரிந்து கொண்டார். காவி உடை, சடைமுடி, தடித்த உடல் இன்னும் சொல்வதென்றால் உடையில்லா உடல் கொண்டோரை மக்கள் தொழுது வணங்கி வரம் கேட்கும் அவலத்தையெல்லாம் மனதில் பதிவு செய்து கொண்டார், மதம் சார்ந்த மவூடிகம், மடமை எண்ணங்களை.  இதயத்தில் பயிர் செய்த சமூகமாகவே இருந்தது இந்தியா.
இப்படிப்பட்ட இந்தியர்களிடம் எதைச் சொல்லி எதைக் காட்டி இந்திய விடுதலையை பெறலாம் என எண்ணினார். தென்னியப் பயணத்தின்போது இரயிலில் சோழவந்தான் அருகே வந்தபோது ஒரு காட்சியைக் கண்டார் காந்தியார். ஆம் அங்கே வயலில் ஒரு சிறு துண்டுத் துணியை கோவணம் என்று கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு வயலில் வேலை செய்த உழவர்களைக் கண்டார். (உலகிலேயே கோவணம் கட்டிய நாடு தமிழ்நாடு என்று நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் விமர்சனம் இங்கு நினைவு கூரத்தக்கது.) உடனே தனது செர்வாணி கோட்டு, குல்லா ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, இரு துண்டுகளை இடுப்பிலும், தோளிலும் மூடினார். அதாவது மக்களின் செல்வாக்குப் பெறும் ஆண்டிகளின் தோற்றத்திற்கு மாறினார் காந்தியார். மக்களின் மனதில் உள்ள தெய்வங்களை முனுமுனுத்தார். அதாவது இராம் இராம் என்றார். இராம்ராம், சீதாராம் என்றார் இராமனை அந்தராத்மா என்றார். மக்களை அது கவர்ந்தது. செல்வாக்கு பெருகியது. இந்திய மக்களின் ஏகோபித்தத் தலைவரானார் காந்தியார். இந்தியாவை பிரிட்டிசாரிடம் இருந்து மீட்கும் முறைகளை வகுத்தார். விடுதலைப் போராட்டங்களில் ஆயுதமேந்தி போரிடும் முறையைத் தவிர்த்தார். அகிம்சை முறை என்றார். மற்றவர்க்கு துன்பம் தராது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் துறவுமுறையை மேற்கொண்டார். பாதயாத்திரை, தர்ணா, மறியல் பட்டினிப்போராட்டம் என்றெல்லாம் தனது போர் முறைகளை பறைசாற்றினார். இதெல்லாம் பிரிட்டிஷ்காரர்களுக்கு பிடிக்காதது. இதை சண்டித்தனம் என்றனர். ஆண்மையறற போர்முறை என்றனர். விரதம் பிரிட்டிசாருக்கு அறவே பிடிக்காத ஒன்றாகும். ஆனால் இந்த முறையை கடைப்பிடித்து இந்தியவிடுதலையைப் பெற்று வெற்றி கண்டார் காந்தியார். பிரிட்டிஷ் இந்திய சுதந்திரத்தை வழங்கியது.
சுதந்திரம் என்பது கொடுத்துப் பெறுவதல்ல எடுத்துக் கொள்வது என்று ஆயுதமேந்திய பகத்சிங்கும், நோதாஜியும், வெற்றி பெறவில்லை. அரையாடைத்துறவி காந்தியார் இந்தியர் உளவியலைத் தெரிந்ததால் வென்றார். இந்து மதச்சிந்தனையின் வழியில் வாழ்ந்த காந்தியார் பகவானின் பகவத் கீதையையும் இராமனையும் மனதில் பயிர் செய்தவர். இருப்பினும் பகவான் கீதைக்கு மாறாகவும் இந்து மதக் கோட்பாட்டுக்கு விரோதமாகவும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது சில புரட்சிக் கருத்துக்களை வெளியிட்டார். இந்துமத ஈஸ்வரனும் முஸ்லீம் அல்லாவும் ஒன்றே என்றார். இழிபிறவி என்று இந்து மதம் சொன்ன தலித்துகளை அரியின் சன், அதாவது கடவுளின் பிள்ளைகள் என்றார். கோயில்கள் கொடியவரின் கூடாரம் மட்டுமல்ல குச்சுக்காரிகளின் இருப்பிடமாகி விட்டது என்றார்.
விடுவார்களா மதவாதிகள் அவரை தொலைத்துக்கட்ட இந்து மதவாதிகள் திட்டமிட்டனர். இந்துமகாசபை. ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் போதனைகளில் வளர்ந்த நாதுராம்கோட்சே கைகூப்பியவாறு காந்தியாரின் முன் நின்றான். அருள் வழங்கும் விழிகளால் அவனையும் வாழ்த்தினார். ஆனால் அவன் கைகளுக்குள் மறைத்து வைத்த துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டு அருளாளனின் உயிரைக் குடித்து விட்டான். உலகம் அழுதது. உளத்தூய்மை கொண்டோர் உருகினர். உலக உத்தமர் காந்தியார் என்று வானொலியில் உளம் உருக உரையாற்றினார் பேரறிஞர் அண்ணா, இந்த நாட்டற்கு காந்தி நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்றார். தந்தை பெரியார் காந்தியார் சாந்தியடைய என்ற நூல் வெளியிட்டார் வாலிபப் பெரியார். ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் காந்தியார் கொள்கையில் ஈடுபாடில்லா, எதிர்ப்புணர்வு கொண்ட திராவிட இயக்கத் தலைவர்கள் நேசித்த அளவுக்கு அவரைச் சார்ந்தோர் அவரது கட்சிக்காரர்கள் அவரால் வளர்ந்தவர்கள் காந்தியாரை நேசிந்திருந்தால் இந்த நாட்டுக்கு காந்தி நாடு என்று பெயர் வைத்திருப்பார்களே! காந்தியார் தின நினைவு நெஞ்சில் தோன்றுகிறபோது இந்தநாடு எப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பில் இடம்பெற்ற இது ஓர் மதசார்பற்ற சோசலிசக் குடியரசு எனும் சொற்றொடர் தூயநிலை பெற வேண்டும். அரசும் கட்சிகளும் பிற அமைப்புகளும் மதசார்பற்ற நிலைகொண்டது என்று உறுதிபெற வேண்டும்.

இங்கு கருத்துக்களை வெளியிடும் அமைப்புகள் எல்லாம் மக்களாட்சி முறைகளும் அறிவியல் உணர்வுகள் முறைகளுக்கும் மாறாக வெளியிடுவதை தடைசெய்யும் நிலை வேண்டும். கடைசி நாளில் காந்தியாரிடம் தோன்றிய மறுமலர்ச்சி உணர்வுகள் தழைத்திடுவது நல்லது. காந்தியாரின் எண்ணற்றப் பெருமைகளோடு தமிழையும் குறளையும் அவரது உள்ளத்தில் வைத்திருந்தது கூடுதல் சிறப்பாகும்.    வாழ்க காந்தியாரின் நினைவுகள்.

No comments:

Post a Comment