Saturday 5 November 2016

கண்ணதாசனின் பகுத்தறிவு வெளிப்பாடு!

கண்ணதாசனின் பகுத்தறிவு வெளிப்பாடு!
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆழ்ந்த பக்தி உணர்வு கொண்டவர். கீதையின் மீதும், கண்ணனின் மீதும் அளப்பரிய காதல் கொண்டவர், அதை அவர் அவரது பல்வேறு பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். மதக் கோட்பாடுகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதன் விளைவே அர்த்தமுள்ள இந்து மதமும், ஏசு காவியமும். ஆயினும் பல ஆண்டுகள் பகுத்தறிவு நெறி பரப்பும் இயக்கங்களில் பங்கு கொண்டு உழைத்தால் பகுத்தறிவுப் பூமணத்தை அவரது பாடல்களில் நுகரலாம். மதவாதக் கொள்கைகளுக்கும், கோட்பாடு, விதிகளுக்கும் மாறாகத் தனது கவிதைகளில் ஆங்காங்கே தனது கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார். பக்திமானாக இருந்த போது நெற்றியில் திருநீறும், குங்குமமும் வைத்திருந்தவர் பகுத்தறிவு மேடைக்கு வந்த நாளன்றே நெற்றியைச் சுத்தப்படுத்தி விட்டே வந்தார். அது முதல், பகுத்தறிவு அவரைப் பற்றி கொண்டது எனலாம். பல்வேறு திரைப் படங்களின் பாடல்களில் மட்டுமல்லாது, திரை உரையாடலில் கூடத் தன் மனதைக் காட்டியிருக்கிறார் கவிஞர். மதக் கருத்து கொண்டோர் வேதங்கள் உபநிடதங்களை வெறுத்தோ, வாழ்விலிருந்து வேறுபடுத்தியோ பார்க்க மாட்டார்கள். வேதம் படிப்பது, பின்பற்றுவது வாழ்வில் புனிதம் என்றே போற்றி வணங்குவர்.
ஆனால், நமது கவிஞர் அவள் ஒரு தொடர்கதை படத்தில்
“தெளிவாகத் தெரிந்தலே சித்தாந்தம்
தெரியாது போனாலே வேதாந்தம்”
என்று வேதாந்தச் சிந்தனைகள் வீணானது என்கிறார்.
கடவுள் பக்தர்கள், அல்லது மதவாதிகள் கடவுள் இல்லை என்று சொல்லமாட்டார்கள். அது எல்லை கடந்த ஆற்றல் கொண்டதே என்று அறைவர். ஆனால் நமது கவிஞர் ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில்
“தெய்வம் என்றால் அது தெய்வம்
சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை”
என்று கடவுள் உணர்வு மனித மனத்தின் எண்ண அலைகளேயன்றி, இயற்கையாக கடவுள் இல்லையென்று தனது இதயத்தைத் திறந்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
ஆன்மீகம், ஆத்திக உணர்வுகளை, மதவாத வெறியார்களின் கொடுமைகளைத் தாண்டி, அறிவுக் கருத்துகள் பரவி, ஆக்கமிகு கண்டுபிடிப்புகளால் பகுத்தறிவு, அறிவியல் மக்களின் வாழ்வில் புதிய மலர்ச்சியை உண்டு பண்ணி, மேலும் மேலும் அறிவியல் ஆய்வுகள் முன்னேறி விண்வெளியில் மனிதன் வலம் வந்து, பிற கோள்களை ஆய்வு செய்யும் காலத்தில் வாழ்ந்த நமது கவிஞர்
“நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்”
‘பணக்காரக் குடும்பம்’ எனும் படத்தில் பகுத்தறிவின் பயன்பாட்டை எழுதிக் காட்டுகிறார்.
மனித குலச் செழுமைக்கு எவையெல்லாம் தேவை என்று எண்ணிய கவிஞர், காதல் உணர்வுகள் தலையாயது என்பதால் எண்ணற்ற பாடல்களைப் பல காலம் தமிழக வானில் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். இதோ
“ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அருகினிலே நீவா! வா! வா!
அழகுடன் இளமை தொடர்ந்து வராது!
இருக்கின்ற போதே நீவா! வா! வா!”
என்று ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சொல்கின்றாரே! அடடா! காலத்தில் வாழ்க்கையைத் துய்க்கச் சொல்வது பகுத்தறிவு நெறிதானே!
பகுத்தறிவின் வெளிப்பாடு, அதன் மூலம் அறிவியல் வளர்ந்து, இயந்திரவியல் உருவாகி, அய்ரோப்பிய தொழிற்புரட்சி தோன்றி, கருவிகளைக் கையாளும் தொழிலாளர்களின் அறிவில் கூர்மை கண்டதால், உழைப்பின் பயன் என்ன? அதனால் ஏற்படும் வளம் என்ன? என்ற வினாக்கள் தொடுக்கப்பட்டு உழைப்பிற்கு ஊதியம் என்பது மாறி உழைப்பினால் ஏற்படும் தொழில் மற்றும் உபரியில் அனைவருக்கும் சம பங்கு என்ற கோரிக்கைகளும், போராட்டங்களும் தொடங்கிப் பொதுவுடைமைச் சிந்தனை மலரச் தலைப்பட்டது. அதைக் கவிஞர் தனது படைப்பான ‘கறுப்புப் பணம்’ என்ற திரைக் காவியத்தில்
“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடைமை நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”
என்று தனி உடைமைச் சமுதாயத்தின் ஆன்மீகச் சிந்தனையைக் கடந்து, பகுத்தறிவின் பொதுவுடைமையை வலியுறுத்துகிறார்.
கவிஞரின் திரைப்பட உரையாடல்களில் எழிலும், எழுச்சியும் மிக்க உணர்வுகளை வெளிப்படுத்தியவர் என்பது நாடறிந்த நல்ல செய்தி.
“வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயகமே
ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டிருந்த தென்னகமே
போர்க்களத்தில் சிரிக்கின்ற பொன்மதுரை மண்டலமே
மன்னன் திருமலை மன்னிப்பு கேட்கிறான்
மாபாதகம் செய்த மன்னன் மன்னிப்பு கேட்கிறான்
மன்னியுங்கள்! மன்னியுங்கள்!”
என்ற ‘மதுரை வீரன்’ படத்தில் அனல் தெரிக்கும் உரையாடலால் உணர்ச்சியூட்டி உளம் மகிழ வைக்கிறார். அறிவியல் வல்லாரின் ஆய்வு முறையால், ஆற்றல் நிறை முயற்சியால் இன்று உலகம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வானோக்கிச் சென்று விண்வெளியில் நிகழும் விந்தைகளைப் பல்வேறு வடிவங்களில் நமக்கு விளக்கிக் கொண்டிருக்கிறது. ஆயினும், நமது மக்கள் பகுத்தறிந்து பார்க்கும் திறனற்று, முற்றாக மூட நம்பிக்கை முடைநாற்றத்தில் மூழ்கி நாளும் நாளும் நச்சு மனம் படைத்தோரின் நாசமிகு எண்ணங்களுக்கு மனம் கொடுத்து ஏமாந்து நிற்கும் நிலை காண்கிறோம். கல்வி அறிவற்ற சடாமுடிச் சாமியார்கள், அருள் வாக்கு சொல்பவர்கள், ராசி பலன், சோதிடம், மனை கட்டிடங்களின் மாசுகள் (வாஸ்து) என்று தமது பகுத்தறிவைப் பயன்படுத்தாது பயத்தால் நலிவடைகிறார்கள். இவர்களுக்குத் தெம்பூட்டும் வகையில் கவிஞரின் உரையாடல் கேட்டோம்.
“சூழலின் விளைவாக இருவர் மணம் கொள்ள நேர்கிறது; தனியறை காண்கின்றனர். கணவன் கள்ள மனம் கொண்டவன் என்பதை அறியாத அவள் அன்பொழுக நோக்குகிறாள்” அவனோ வேறொருத்தியை நினைத்தவாறு விரக்தியில் இருக்கிறாள். ஆயினும் அந்த அழகு மங்கை “அத்தான்” என அழைக்கிறாள். அவன் விரக்தியிலிருந்து விடுபடாமல் வியப்புச் சொல்லால் “அப்படிச் சொல், இந்த சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்” என்கிறான். அவளோ “ஆ” என அலறி அமங்கலமாய் “அப்படிச் சொல்லாதீர்கள்” என்று வாயைப் பொத்துகிறாள். அதற்க அவன், “சும்மா இருடி பைத்தியக்காரி! சொல்லும் சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தியிருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்கும்” என்று கூறும் உரையாடலை ‘மகாதேவி’ திரைப்படத்தில் கவிஞர் வழங்கியிருக்கிறார்.
பக்தி மனம் கொண்ட கண்ணதாசன், ஈரோட்டுப் பெரியாரின் பாசறை உணர்வுகள் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் பகுத்தறிவை பலவாறு ஊட்டினார். மேலும் நமது நாட்டில் மக்களை எளிதில் சென்றடையும் செய்திக் தாள்களைப் பார்க்கிறார் நமது கவிஞர். நாளும், நாளும் மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஏடுகளும், இதழ்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. எப்படி நடைபோடுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கிறார். இதயம் நொந்து எழுதுகிறார் பாருங்கள். அறிவியல் உலகம் ஆக்கித் தந்திருக்கும் அளப்பரிய நலன்களும்,வளங்களும், வாய்ப்புகளும், வசதிகளும், வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் கூட ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் எப்படி இருக்கின்றன என்பதை நாம் இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆம்! இதோ கவிஞர் தனது கைத்திறத்தால் பகுத்தறிவை “சுகம் எங்கே-யில்” பறைச் சாற்றும் பாங்கு பாரீர்!
ராசிபலன் - உங்கள் இராசிபலன்!
காசைக் கொடுத்துப் பேப்பர் வாங்கி
கதையைப் படிக்க விரிச்சுப் பாத்தா....
ஆசைப்பட்டவன் படிச்சுப் பார்த்தா
அதிர்ஷ்டப் பலனும் கிடைக்கும்!
அவஸ்தைப் பட்டவன் தேடிப்பார்த்தா
அதுக்கும் சிலது இருக்கும்!
வாரந்தோறும் படிச்சுவந்தா
மனசைத் திருப்பிப்படுத்தும் - நம்ம
வாழ்வு மட்டும் பரம்பரையா
எப்போதும் போல் நடக்கும்!....
ஏழைக்கெல்லாம் தனம் கிடைக்கும்
எளைச்சஉடம்பு பெருக்கும்!
வாழைக் கொல்லையில் புதையல் இருக்கும்
மாசம் பொறந்ததும் கிடைக்கும்!
இப்படியெல்லாம் இருக்கும் - இன்னும்
எத்தனையோ பலன் இருக்கும் - அதை
எழுதிவிட்டவன் சொந்தப் பலனைக் கேட்டா ஊரு சிரிக்கும்!
மேஷ ராசிப் பெண்களுக்கு நடக்கும் வளைகாப்பு!
ரிஷப ராசிக்காரருக்கு காலம் ரொம்ப டாப்பு!
மிதுன ராசிக்காரருக்கு வாழ்க்கை ரொம்ப சீப்பு - என்று
வெத்து வேட்டு ஜோசியரு அடுக்குறாரு தப்பு....
அன்னிக்கொரு நாள் படிச்சுப் பார்த்தேன்
கல்யாணமுன்னு இருந்தது எனக்கு,
கல்யாணமுன்னு இருந்தது - இப்போ
ஆறு மாசம் ஆச்சுதையா
கல்யாணம் எங்கே நடந்தது?
வீடு வாசல் காடு கரை பொண்ணுமில்லேன்னு போச்சுது
போண்டி ஜோசியர் பலனைப் பார்த்தா
அதிர்ஷ்டமின்னு காட்டுது!
காட்டுக் கிழங்கைத் திண்ணு செத்தது
கத்தாழையில் வயிறு வளர்த்தது
வீட்டை வித்தது மாட்டை வித்தது
விளைஞ்சு வந்த நிலத்தை வித்தது
விக்கிறதுக்குப் பொருளில்லாம
பெத்தெடுத்த பிள்ளையை வித்தது! - இப்படி
ஆடிக்காத்தில் எலவம் பஞ்சு அலையுறாப்புலே
ஜனங்க அலையும் போதிலே
நல்ல புத்தி சொல்ல வேண்டிய
நாட்டிலுள்ள பேப்பர்களிலே
என்ன இருக்குது? சொன்னா மானம் போகுது!

‘வண்ணத்தோகை’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் “கண்ணதாசன் கவிதைகளை பாராட்டாது போனால், தமிழை அறியாதவன் ஆவேன்” என்று அறிஞர் அண்ணாவும்,  கண்ணதாசன் நினைவு நாள் நிகழ்ச்சியில், “கண்ணதாசா! எண்ணமெலாம் இனிக்கம் நேசா”! என்று கலைஞரும் மாறுபாடு கொண்ட காலத்தில் மனம் திறந்து பாராட்டியது என்றென்றும் நம் இதயத்தில் நிறைந்திருக்கும், வாழ்க கவியரசர்.

No comments:

Post a Comment