Wednesday 12 August 2015

நேர்மையும் நெறிகளும் நிலைகொள்ளுமா இங்கே?

நேர்மையும், நெறிகளும்
நிலைகொள்ளுமா இங்கே?
“நெஞ்சறிய பொய்சொல்லற்க’’ என்ற நீதிமொழி ஒன்று நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வருகிறது. பொய் என்ற சொல் கூட சட்டமன்றங்களில் நாடாளுமன்ற அவைகளில் பயன்படுத்தக் கூடாது என்று விதி ஒன்று இருக்கிறது. உண்மைக் கலப்பற்றது, உண்மைக்கு மாறானதென்றே உரைக்க வேண்டும் என்று ஓதப்படுகிறது.
ஆனால் நீதிமன்றங்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் சிரிப்பதா? அழுவதா? என்ற உணர்வுச் சிக்கல் நம் உள்ளத்தில் உருவாகும்.
குற்றங்களுக்குத் தக்கவாறு தண்டனை என்று சொல்லும் சட்டம், பொய்களுக்கு என்ன தண்டனை என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சிவில்-கிரிமினல் குற்றங்களைக் கண்டுபிடித்து குற்றாவாளிகளை கூண்டிலேற்றி தீர விசாரித்து, பின் சாட்சிகளை சார்பாகவும், எதிராகவும் கேள்வி கேட்டு பதில் பெற்று உண்மைக் குற்றவாளிகளை நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு காவல்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, வனத்துறை என்றெல்லாம் அமைப்புகள் இருக்கின்றன. அது ஓர் அரசாங்கம் சார்ந்ததாகவும், சில நாடுகளில் தனியார் துறையிலும் செயல்பட்டு வருகின்றன.
நீதி மன்ற நீதி அரசர்கள், குற்றம் சாட்டப்பட்டவர் - சாற்றியவர்களின் சாட்சிகள், சாட்சிப் பொருள்களின் அடிப்படையில் வழக்கு தொடுப்போர், தொடுக்கப்பட்டோர் சார்பில் வழக்குரைஞர்களின் வாதத்தைக் கேட்டு  நிறைகுறை பார்த்து நீதிபதிகள் தீர்ப்பு சொல்வார்கள்.
மேற்காணும் அனைத்திலும் அனைவரும் உண்மைதான் சொல்கிறார்கள் என்று கொள்ளமுடியாது. ஒருவர் சார்பு உண்மையென்றால், இன்னொருவரின் நிலை பொய்யாகிவிடும்.
உண்மை எதுவென்று உணர்ந்து நீதி சொல்பவர்கள் பொய்சொன்னவருக்கு குறைந்த அளவு தண்டனையோ, கண்டனமோ கூட தருவதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நீதியரசர்களாக இருப்பவர் பலர் பொய்களின் பொய்யர்களின் புகழிடமாகவேதான் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். இது இங்கு மறுக்க இயலாத மறைக்க முடியாத உண்மையாகும்.
எடுத்துக் காட்டாக சில வழக்குகளைப் பார்க்கலாம். 1. பாபர் மசூதி வழக்கு, 2. சேது கால்வாய் 3. செல்வி ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு மற்றும் வேறு சில வழக்குகளாகும்.
பாபர் மசூதி வழக்கில், திரேதா யுகத்தில் பிறந்து வளர்ந்து, ஆண்டு, இலங்கையின் மீது போர் தொடுத்ததாக இதிகாச கதைகளில் வரும் செய்தியை அதாவது கற்பனையாக எழுத்தாளர்கள் எழுதியதை வைத்து பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் உச்சநீதி மன்றத்தில் இருந்தார்கள்.
அறிவியல் சான்றோ, அகழ்வாய்வுச் சான்றோ, பதிவுச் சான்றோ இல்லாமல் பாபர் சமாதி இருந்த இடத்தில்தான் அதுவும் இங்குள்ள சாதி சார்ந்த சனாதன மதக் கருத்துக்களைக் கொண்ட இன்னும் சொல்வதென்றால் மனித நேயம் அற்ற மூர்க்கர்களால் இடிக்கப்பட்ட இடத்தில்தான் திரேதா யுகத்தில் அதாவது 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தான் ராமன் என்று தீர்ப்பு எழுதினார்கள்.
சேது கால்வாய் வழக்கில், இதே ராமன்தான் சேதுவை (பாலம்) கட்டினான் என்று தீர்ப்பு சொன்னார்கள். அது சேது அல்ல (பாலம் அல்ல) அது ஒரு அணையாகும். அப்படித்தான் இராமாயணம் சொல்கிறது. வானரங்கள் (குரங்குகள்) கல்லெடுத்து அணை கட்டியதாகத்தான் கம்பர் சொல்கிறார். (இது கூட சங்கப் பாடலின் காப்பி தான்) அந்த அணைக்குஅணிலும் மணலைத் தள்ளியதாகவும், அந்த அணிலை தனது மூன்று விரல்களால் தடவியதால்தான் அந்த அணிலுக்கு மூன்று கோடுகள் விழுந்ததாகவும் கூட கதையளந்தார்கள். இந்த அறிவு, ஆய்வு வேதிநிலை விளைவு இல்லையென்றாலும் இன்னும் நம்பிக் கிடக்கின்றவர்கள் நிறைய நிறைந்திருக்கிறார்கள். அலைகளால் மணல் குவிந்ததை ராமன் கட்டிய பாலம் என்று உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு தந்தார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் இராமாயணத்தின் முரண்பாடு கொண்ட செய்திகள், கருத்துக்களை விளக்க கம்பர் மீது இராவணன் வழக்குப் போட்டு வாதங்களாலும் கேள்விக் கணைகளாலும் திக்குமுக்காட வைக்கும் நாடகம் ஒன்றை நாட்டுக்குத் தந்து, அதில் இராவணனாக அவரே சிறப்பாக நடித்து விவாத வெளிச்சத்தைத் தந்தார்.
பின்னர் இராவணன் நீதி தேவன் என்னும் நீதிமன்ற நடுவரையும்  அன்றிருந்த அறமன்றக் காப்பாளர்கள் (ஜுரிகள்) விசுவாமுத்திரன், பரசுராமன், சேக்கிழார் போன்றவர்களின் குண இலட்சணங்களையெல்லாம் சொல்லி நீதிபதியைக் கேள்வி கேட்டு விளக்கங்கள் பற்பல சொல்லி வாதாடினான். ஆனால் அந்த நீதிபதி நெஞ்சறிய பொய் சொல்லத் தயங்கி தன் நிலையிழந்து மயங்கிக் கீழே விழுந்ததாக நாடகச் காட்சி முடிகிறது.
செல்வி ஜெயலலிதாவின் வழக்கிலும் குற்றம் சுமத்தியவர்களின் வாதத்தைக் கேட்காமலே 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடிக்க துணை செய்த நீதிபதிகள் ஆங்காங்கே இருந்தார்கள். நீதி சொல்வதற்குப் பதிலாக நெஞ்சறிய பொய் சொன்னார்கள். இறுதியாக குற்றம் சுமத்தியவர்களின் வாதமே இல்லாமல் அவசரப்பட்டு திரு. குமாரசாமி என்னும் நீதியின் காவலர் (!) நெஞ்சறியப் பொய் சொன்னதாகக்தான் சாதாரண மனிதர்களே கருதுகிறார்கள்.
18 ஆண்டுகள் நடந்த வழக்கின் பல்வேறு தீர்ப்புகளில் முரண்பாட்டுத் திருப்பங்கள், சட்ட நுணுக்கங்களையெல்லாம் வகுத்து, பகுத்து, தொகுத்தும் அவ்வப்போது தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள். சமூகத்தின் கடைசி நிலை மனிதர்களின் உணர்வுகளையும் உற்றுப் பார்க்க வேண்டிய உயரிடத்தில் இருக்கின்ற நீதிபதிகளின் எண்ணமும் மனமும் இடர்பாடு கொண்டதாகவே இருந்திருக்கக் காணலாம்.
அந்தக் காலத்து அரிச்சந்திரா நாடகத்தில் வரும் ஆதியிலும் பறையனல்ல, சாதியிலும் பறையனல்ல, பாதியிலேயே பறையனானேன் என்பது போலக் கூட இல்லாமல் ஆதியிலும் நீதியில்லை, சாதியிலும் நீதியில்லை, நீதி சொல்லும் நடுவர்களிலும் நீதி இல்லை என்றுதான் செல்வி ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு சொன்ன திரு. குமாரசாமியின் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
இந்தத் தீர்ப்பு நீதிபதி பாலகிருஷ்ணனின் காலத்திலே வந்திருக்க வேண்டியது. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் பாலகிருஷ்ணனுக்கு மனச்சாட்சி இருந்தால் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க மாட்டார்- - கூடாது  என்ற அறிக்கையைக் கண்டு மனச் சாட்சி இருந்ததால் அவர் அந்த வழக்கில் இருந்து விலகி விட்டார்.
ஆனால் கலைஞர் அறிக்கைகளில் மட்டுமல்ல பல்வேறு நிலைகளை மூளைக்குக் கொண்டு சென்று பதிய வைக்காமல் ஐம்பொறிகளையும் மூடிக்கொண்டு திரு. குமாரசாமி, வேறு சில நீதிபதிகளும் இயங்குகிறார்கள் என்பது பிரசாந்த் பூஷன் சொன்னது போல நீதிமன்றங்களின் மீது இருட்டு சூழ்ந்த நிலைதான், கருப்பு நாள் தான் என்பது உண்மையாகும்.
ஆனால் கூரிய ஆய்வாளர்கள், அறிவாளிகளுக்கு இதன் காரணங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். அதாவது சிறுபான்மையினரின் ஆதிக்கப் பலமும் அவர்களின் கீழ் அடிமைகளாக இருந்த, இருக்கின்ற சமூக மனிதர்களின் பலவீனமும்தான் என்பதும் தெரியும்.
தந்தை பெரியார் ஒருமுறை சொன்னார், இங்கு எது நடந்தாலும் இனப்போராட்டம்தான். சாதி, மதம் சார்ந்த நிலைகள் தான் என்று.
இப்போது இந்த ஜெயலலிதா இல்லாமல் திரு. ஓ.பன்னீர் செல்வமாக இருந்தால் குன்கா தந்த தண்டனையை விட இன்னும் அதிகமாகவே குமாரசாமி வழங்கியிருப்பார். இங்குள்ளவர்களை எத்தனையோ பேர் வைத்திருந்தார்கள் (வைப்பாட்டி போல) இப்போது டெல்லிகாரன் வைத்திருக்கிறான் என்றார் நடிகவேல் எம்.ஆர்.ராதா அவர்கள்.
இதில் மோடியாக இருந்தாலும் மன்மோகனாக இருந்தாலும் சனாதன சார்பாளர்கள் தானே. இந்த உண்மைகளை உணர்வதற்கான சூழல்கள் மிக மிக குறைவாகவே இருக்கிறது. அதனால் இந்திய சூழலில் விழிப்புணர்வோ விளக்கமான நிலைகளோ தோன்றுவது குதிரைக் கொம்பு போலத்தான் இருக்கும்.
புது எண்ணங்கள், புதுச் சிந்தனை கூர்மையடைந்து முழுமை பெறும்போதுதான் புரட்சி முகிழ்க்கும், புரட்சிகளின்தான் புதுவேகம்தான் சமத்துவத்தையும் தூய சனநாயகத்தையும் வழங்கி இந்த சனாதனத்தைச் சாய்க்கும். சரிநிகர் சமானம் எனும் பாரதியின் கவிதை மொழிக்கு உயிர் கிடைக்கும்.
இதெல்லாம் இப்போதைக்கு இயலாது. அது நீதி நிலைகளாக இருந்தாலும் சரி, அரசியல் ஆட்சி நிலைகளாக இருந்தாலும் சரி, மக்களின் நிலைகளாக இருந்தாலும் சரி, ஆதிக்கம் அடிமை நிலைகளில் தான் நிற்கும், நிற்கிறது. மேம்போக்காகவும் சரி, நுட்பமாகவும் சரி, உண்மைநிலை இதுதான்.
தவமிருந்து, சாந்தநிலையில் ஆண்டவனின் அருள் பெறத் துடித்த சம்பூகனைக் கொன்ற ராமனின் நீதியும், துரோணரை நினைத்து வில்வித்தை பயின்றதற்காக ஏகலைவனின் கட்டை விரலை குரு காணிக்கையாகப் பெற்றதையும் நீதி என்று கருதுகின்ற நிலை இங்கே நீடிக்கின்ற வரை நீதிமன்றங்கள், நியாய சபைகள், அறக்காப்பாளர்கள் அனைவரிடமும் உண்மையையும் நீதியையும் எதிர்பார்க்க முடியாது. நேர்மையும் நெறிகளும் நிலைகொள்ள முடியாது.
        பெறுநர்:   முரசொலி நாளிதழ்

No comments:

Post a Comment