Thursday 13 August 2015

பாரதி ஏன் பாடவில்லை?

பாரதி ஏன் பாடவில்லை?
சங்க கால இலக்கியங்களும் தொல்காப்பிய இலக்கணமும் திகட்டாத திருக்குறளும் செவ்வியத் தன்மை கொண்டது என்று இன்றும் கூட இதய வாழ்த்தை வழங்கும் நிலை காண்கிறோம். அதே நேரம் அதைப் பின்பற்றாத சூழலையும் பார்க்கிறோம்.
தமிழ் யாப்பிலக்கணங்களை தெளிவாகக் கைக்கொண்டாலும் கருத்துக்களை தெளிவாகவும் துல்லியமாகவும் விதைத்ததும் உழைத்து வளர்த்ததும் உண்மை என்றாலும் கூட தமிழில் தோன்றும் அத்தனை படைப்புகளும் ஆய்வு அறிவு சார்ந்தவையென்று சொல்ல முடியாது.
சங்கப் பாடல்களிலேயே கூட போற்றுதல் புகழ்தல் என்ற நிலையில் பல அவலமான செய்திகள் எல்லாம் சொல்லப்படுகிறது.
ஒரு மன்னனின் வெற்றியைப் பாராட்டுகின்ற ஒரு புலவர் எதிர்நாட்டு நீர் நிலைகளை நிர்மூலமாக்கு அவனது நிலங்களில் கழுதையைவிட்டு உழுது வெள்ளை எருக்கையை விதை என்கிறார். இது அறம் சார்ந்ததா? அறிவு சார்ந்ததா? எண்ணுவது கடைமையாகிறது.
கி.பி. தொடங்கி, ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் வரை பேரளவு இயற்கையையும் அதன் இயக்கத்தையும் உயிர்களின் இயல்பையும் பாவலர்கள் பாடியதைக் காண முடிகிறது. நேரடியாக மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலைகளை உணர முடிகிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளைக் கூறலாம். மனித உணர்வுகளை நேர்படுத்தி, நெறிப்படுத்தி, செழுமைப்படுத்தும் செய்திகள் அனைத்தும் செதுக்கி அழகுமிகு சிலையாக்கப் பட்டிருக்கிறது.
பெரிதும் முரண்பாடற்ற கருத்துச் செறிவுகளை கலைவண்ணமாக்கி தருகிறார் வள்ளுவர். ஆயினும் மேற்காணும் செழுமையும் சிந்தனைக் கூர்மையும், தமிழைத் தொடாமலே ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகள் ஒதுங்கிக் கிடந்தது.
சுய சிந்தனையும் உளத் தூய்மையையும் இழந்து அன்னியர்களின் அனைத்து ஆகாத உணர்வுகளுக்கும் அடிமைப்பட்ட அடியாள் நிலையிலே தமிழும் தமிழர்களும் இருந்தார்கள். அவ்வப்போது ஆங்காங்கு சீராளர்கள் சிலர் சீர் நிலைகளைக் காட்டியிருந்தாலும் அது தமிழர்களின் பொதுப் புத்தியில் புகாமலேயே போய் விட்டது.
விளைவு 20ம் நூற்றாண்டு இடைப்பட்ட காலம் வரை பசியும் பஞ்சமும் ஏழ்மையும் அறியாமையும் கல்வியின்மையும் தமிழர்களை தவிக்க விட்டிருந்தது. பற்பல பழைய புலவர்கள் பாவலர்களிலிருந்து சித்தர்களும் பின்னர் பாரதியும் அவரோடு இருந்த பாரதிதாசனும் அவர்பின் வந்த வழி வழிப் பாவலர்கள்தான் சமூக இருள் நீக்கும் ஒளி வடிவ பாக்களைப் படைத்தார்கள்.
இதில் பாரதியின் இயல்புகள் சிலவற்றை எண்ணிப் பார்க்கலாம். இந்திய விடுதலை இயக்கத்தையும் காந்தியாரையும் மிகவும் நேசித்த பாரதியார், அதற்காக உள்ளத்தை உருக வைக்கும் பாக்களைப் படைக்கிறார். இந்தியா எனும் ஏடு நடத்திய பாரதியார் இந்தத் துணைக் கண்டத்தை இந்தியா என்று விளிப்பதை விட ஆரிய தேசம், ஆரிய மதம், ஆரிய மாதா, ஆரிய ராணி, ஆரிய வேதம் என்றே போற்றுகிறார்.
அடுத்து இந்து மதம், இந்து தேசம், இந்து ராஜ்ஜியம் என்றே தனது இதய மகிழ்வை வெளிப்படுத்துகிறார். அடுத்தடுத்த காலங்களில் தமிழைக் கையாளும் திறம் கண்டு, புதிய வடிவில் தமிழ் கவிதைகளைப் படைக்கிறார். எளிய வகையில் கருத்துக்களை எல்லாரும் புரிந்து கொள்ளும் எழிலோடு தம் பாக்களைப் படைக்கிறார்.
விடுதலை உணர்வில் வேட்கைக் கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் பாரதியார் அதற்காக தியாகத்தைக் காட்டும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தாரா எனத் தெரியவில்லை. வ.உ.சியைப் போன்றோ, சுப்பிரமணிய சிவா போன்றோ திருப்பூர் குமரன் போன்றே, லாலா லஜபதிராய் போன்றோ தன்னை இழக்கும் துணிவைப் பெறவில்லை. இங்கு சிறைப்படும் சூழல் இருந்தால் மிகழும் பாதுகாப்பாக பிரான்சின் ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்குள் புகுந்து மறைந்து கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்தார்.
விடுதலை ஆர்வம் மிகுந்த பாரதி, காந்தியார் உள்ளிட்ட பலரையும் பாராட்டிப் பாடியிருக்கிறார். ஆனால், அவர் பிறந்த மண்ணில், அவருக்கு முன்பே போராடி உயிர்களைத் துறந்த மாவீரர்களைப் பற்றி பாடவில்லை என்றே வருந்துகிறார்கள் ஆய்வாளர்கள்.
மாமன்னன் பூலித்தேவன், கட்டபொம்மன், வெள்ளையத் தேவன், ஊமைத்துரை, மருது பாண்டிய சகோதரர்கள், திண்டுக்கல் கோபால நாயக்கரையெல்லாம் பாடவில்லையே ஏன்?
தம் காலத்தின் அருகில் இவர் நேசித்த விடுதலை உணர்வுகளுக்காக மானத்துடன் போராடி மறைந்தவர்களைப் பாடவில்லையே என்ற செய்தி உண்மைதானா? உண்மையென்றால் அதன் உள்நோக்கம் என்ன? பாரதியை வானளாவப் புகழ்ந்து பாடும் பாவலர்களும் பலநிலை மனிதர்களும் விவரம் தந்து விளங்க வைப்பது அறிவு நாணயம் ஆகும்.

No comments:

Post a Comment