Saturday 15 August 2015

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

ஆசிரியப் பெருமக்கள், காலையில் ஒளி தரும் கதிரவைனப் போன்றவர்கள். உயிர் வழங்கும் காற்றுக்கு ஈடானவர்கள். மூக்கில் வழிவதை துடைப்பதற்கு வகையறியா சிறுவனை உலகறிவு கொண்டவனாக, உயர்வு பெற்றவனாக, வல்லமை மிக்கவனாக, வாழத் தெரிந்தவனாக மாற்றுகின்ற ஆற்றல் பெற்றவர்கள். பெற்றோர் செய்த பெருந்தவறு காரணமாகவோ, சுற்றுச்சூழல் ஏற்படுத்திய சூனிய விளைவினாலோ இடர்பாடாக இயல்புகளை கொண்ட மாணவனைக் கூட இரும்பினை காய வைத்து ஈட்டி முனையாய் மாற்றுகின்ற பட்டறையைப் போல், நேராக கருத்துக்களையும் நெறிசான்ற எண்ணங்களையும் அவன் நெஞ்சிலே ஏற்றி நேர்வழியில் செலுத்துகின்ற மீகாமான்கள். மேய்ப்பர்கள்.

அறிவியல் சாலையில் ஆராய்ச்சிக் கூடங்களில் அறிஞர்கள் வார்த்த புதுமைக் கருத்துக்களை - புத்துலகக் கருவிகளை பாடத் திட்டங்களாக்கி புரியாதோர் புத்தியில் புகட்டுகின்ற பொறுப்பிலே இருப்பவர்கள்.

நாட்டு நிலை என்ன, நல்லறிஞர் தொகை என்ன, அரசு தீட்டுகின்ற திட்டம் என்ன? மக்கள் நடைபோடும் பாதை எது, அவர்களின் பாங்கு என்ன, பாதை மாறிப்போனால் அவர்கள் படும் பாடு என்ன, நிகழ்கால நிலை என்ன, நேற்று நடந்த கதை என்ன, எதிர்கால விளைவென்ன, ஏற்றம் பெற வழியென்ன, இடர் களைய திட்டம் என்ன, வளர்ந்து வரும் உலகம் எது? அதில் குவிகின்ற வளம் எவ்வளவு? அது ஏழையர்க்கு கிடைப்பதற்கு மார்க்கமம் எது? எட்டாத தூரத்தில் இருப்போர்க்கு கிடைப்பது எத்தனை விழுக்காடு?

உலகில் போர் மேகம் சூழுவதேன், பொல்லாங்கு நிகழுவதேன், பொய்யர்கள் தோன்றுவதேன், பொது வாழ்வில் புரட்டர்கள் நுழைவதேன், அதை நல்லோரும் பொறுத்துக் கொள்ளுவதேன்? அதிகார வர்க்கம் மக்களை ஆட்டிப் படைப்பது ஏன்? அநீதியை ஒழித்திட அவர்கள் ஆண்மைச் சிங்கங்களாய் மாறுவது எங்ஙனம்? அவர்களை மாற்றுவது எப்படி? பூமிக்குள் புதைந்திருக்கும் பொருள்கள் என்னென்ன? அதை வெளிக் கொணர்ந்து ஆக்குகின்ற புதுப் பொருள்கள் என்னென்ன? அதை வெளிக் கொணர்ந்து ஆக்குகின்ற புதுப் பொருள்கள் எத்தனை வகை? கடலடியில் காணப்படும் செல்வம்  யாது? அதை கைக்கொணரும் வழிகள் யாது? வளர்ச்சி முகட்டில் ஏறி நின்று வானோக்கிப் பறந்து சென்று அண்டப் பெரு வெளியில் ஆய்வுகளை நிகழ்த்துகின்ற நாடுகளின் நோக்கம் என்ன? பிரபஞ்சப் பெரு வெளியில் சுழலுகின்ற மீன்களென்ன? சுற்றுகின்ற கோள்களென்ன? அவைகள் ஒழுங்கமைத்து வலம் வரும் விதிகளென்ன? அரசுகளின் கொள்கைகள் என்ன? அதனால் அடைந்த பயன் என்ன? வாழ்வென்றால் என்ன? வகை தெரிந்தோர் வாழுகின்ற திறம் என்ன? ஏற்றம் கொள்வதெப்படி? எழில் வாழ்வை பெறுவதெப்படி என்றெல்லாம் மாணாக்கனுக்கு போதித்து, புத்தியில் கூர்மையேற்றி அடுத்த தலைமுறை மனிதர்களை ஆற்றல் மறவர்களாக மாற்ற வேண்டிய மிகப் பெரிய கடப்பாடும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. சமூக மாற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஆதாரமானவர்கள் ஆசிரியர்கள்.

அய்யா...ஆசான்களே சமுதாயத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக வாழ இயலாது. நிறைந்த மக்கள் கூட்டத்தில் வெவ்வேறு விதமாக இயல்புகள் இருக்கும் சிலருடைய தியாகத்தாய்ல்தான் பெரும்பான்மையோரின் வாழ்வு சிறக்கும். அத்தகைய தியாகிகள் பட்டியலில் நீங்களும் அடங்குவீர்கள். பொது வாழ்வில் உண்மையாய் பணி புரிந்து தங்களை உருக்கிக் கொள்வோர் படையமைப்பில் ஈடுபட்டு தங்களை பலியிட்டுக் கொள்வோர் என்றெல்லாம் சமுதாய அமைப்பில் சில உறுப்புகள் உண்டு.

சீர்படாத சமூக அமைப்பில் சிலர் கொள்ளைக்க்காரர்களாக இருப்பார்கள். குணம் கெட்ட குடிகேடர்களாக சிலர் இருப்பார்கள். கையூட்டுப் பெற்று களிப்படைபவர்களாக சிலர் இருக்கக் காண்கிறோம். அறியா மக்களின் உணர்வுகளை அடிமையாக்கி அவர்களின் பொருளைச் சுரண்டி கோடி தேடி கொடிமரம் நாட்டி மாடங்கள் அமைத்து மந்தகாச வாழ்வினை சிலர் நடத்தலாம். இந்தக் காட்சிகளெல்லாம் நம் மனதை சங்கடப்படுத்தலாம். சலனங்களைத் தோற்றுவிக்கலாம்.

இவைகளையெல்லாலம் மாற்ற வேண்டியதில் நம் பங்கும் இருக்கிறது, என்ற உணர்வை நல்லவர்கள் பெற வேண்டும். அதிலும் கூர்மையாளர்களைத் தோற்றுவித்து இந்த நோயினை குணப்படுத்தும் மருத்துவர்கள் நாமே எனும் உணர்வு கொள்கையாக உருவெடுத்த ஆசிரியர்கள் உள்ளத்தில் குடியேற வேண்டும்.

நம்முடைய தொண்டில், நமது தியாக வாழ்வில் நாட்டின் வாழ்வு உயர வேண்டும் எனும் எண்ணம் இதயத்தை இறுகப் பற்ற வேண்டும். வாழ்வின் இறுதிக்குள் எதையாவது சாதிக்க வேண்டும், இலட்சியவாதிகள் சிலரை உருவாக்க வேண்டும் என்னும் தாகம் இதயத்தின் அடித்தளத்தில் இருக்க வேண்டும்.

டெசர்ட்லயன், அதாவது பாலைவனச் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட லிபிய நாட்டின் விடுதலை வீரனாய் திகழ்ந்து தூக்குமரத்தை முத்தமிட்ட உமர் முத்தார் ஒரு ஆசிரியர்தானே! சமுதாய மடமைகளை சாய்ப்பதற்கு எழுச்சி முரசம் கொட்டிய புரட்சி கவிஞன் பாரதிதாசன் ஒரு ஆசிரிய குல விளக்குதானே! இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகள் ஏராளம் கூறலாம்.

ஆகவே ஆசான்களே உங்கள் மன அவலங்களை மாற்றுங்கள். ஆசைகளை நீள விடாதீர்கள். அறிவொளி பாய்ச்சுங்கள். நாடு வாழ நல்முயற்சி கொள்ளுங்கள். நாடு வாழ்ந்தால் நல்லோர் உங்களை வாழ்த்துவர். வாழ்த்துப் பெற்ற நீங்கள் வாழ்வீர்கள்.

No comments:

Post a Comment