Thursday 13 August 2015

தடைகள் எது? தகர்ப்பது எப்போது?

தடைகள் எது? தகர்ப்பது எப்போது?
இந்தியா எனும் இந்தப் பகுதி எல்லாவகையான இயற்கைச் செல்வங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் வளர்ச்சி நோக்கி நடந்ததை ஆய்வுகள் பல மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
காட்டுவாசிகளாகவும் நாடோடிகளாகவும் பல்வேறு பகுதிகளில் மக்கள் இருந்தபோது இங்கே எல்லாவகை வாழ்வுச் சிறப்புகளுடன் வாழந்ததாக வரலாறு கூறுகிறது. ஆயினும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி நோக்கில் எதுவும் வளரவில்லை என்றும் தெரிகிறது.
உலகை மேற்கு-கிழக்கு என்று எண்ணிப் பார்த்தால் பல்வேறு முன்னேற்றங்கள். அது அறிவு, ஆய்வு அதன் வழிச் செயல்கள் எல்லாம் கிழக்கில் தான் குடிகொண்டிருந்ததாகவே கொள்ள முடிகிறது.
கிழக்கில் உதிக்கும் சூரியன்போல பல்வேறு ஒளி சிந்தும் உன்னதங்கள் இங்கே விளைந்து சிறந்ததாக சொல்லப்படுகிறது.
சீனாவிலும் தமிழகத்திலும் புதுப்புதுப் பொருள்களும் கருத்துகளும் தோன்றத் துலங்கியதாக பல்வேறு பயன்மிகு செய்திகள் பட்டியலிடப்படுகிறது.
அச்சு இயந்திரம், தாள், பீங்கான், கண்ணாடி வகைகள் சீனத்தில் கண்டதாக சொல்கிறார்கள். அதுபோல் கலையும் சிலையும் சித்திரமும் போர்க்கருவிகள் கூட இயந்திரத்தால் இயங்கியதாக சிறப்பித்துக் சொல்கிறது.
இன்று திருக்குறளை உலகம் முழுவதும் உயர்த்திப் படிக்கிறார்கள். இதில் இல்லாதது எதுவுமில்லை என்கிறார்கள். (அறிவியல் வளர்ச்சி கணிதத்திற்கான கூறியதை (பூஜ்யம்-சைபர்) யும் பத்து பத்தான கூட்டல் முறையையும் தமிழர்களே தந்தார்கள் என்று ஆர்.எஸ். கிரிகள் எழுதிய அறிவியல் வரலாறு உரைக்கிறது)
அந்தக் குறளின்  வடிவம் முழுவதும் சங்க இலக்கியம் வழங்கிய வாழ்வியலின் தொகுப்பு என்று தான் ஆய்வாளர்கள் அறைகிறார்கள்.
கருத்தாய்வு மன்றங்களிலிருந்து அங்கு பல்வேறு செய்திகள் கருத்துகள் சித்தாந்தங்கள் பற்றி கலந்துரையாடி முடிவெடுத்தாக மணிமேகலை உள்ளிட்ட பல நூல்கள் உலகிற்கு சாற்றுகின்றன.
விளையாட்டு வகைகளில் 96 என்று ஓர் ஆய்வாளரின் செம்மொழி மாநாட்டு மலரில் பட்டியலிட்டு பரவசப்படுத்துகின்றன. எல்லாம் சரி ஆயினும் தொடர்ந்து வளர்ச்சி என்ன என்று கேட்டால் பதில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவனைப் போலல்லவா காணப்படுகிறது.
கிழக்கில் தோன்றியதை மேற்குலகு உற்று நோக்கி உள்வாங்கி உணர்த்துவது மட்டுமல்லாது செயல்வகைக்குள் கொண்டு வந்து உலகை செழுமைப்படுத்தியதாக அல்லவா வரலாறு வாழ்த்துகிறது.
இதை இங்கே பல கீழ்மனம் கொண்டோர் திருடிச் சென்று விட்டதாக புண்மனத்தை காட்டுகிறார்கள். ஆனால் மேற்குலக பெருமக்கள் எதையும் மறைக்கவில்லையே?
இன்னும் சொல்வதென்றால் இங்கு மறந்த மறைக்கப்பட்ட உண்மைகள் பல உன்னதங்கள் உருப்பெருக்கிக் காட்டி ஒளிவீசச் செய்தவர்கள் அவர்கள்.
குறிப்பாக சிந்துவெளிச் சீர்மை, புத்த சமணப் புதுமை, அசோகனின் இலட்சணைகளை வெளியே கொண்டு வந்தவர்களே அவர்கள் தானே!
சரி அய்ரோப்பியரின் புது முறைகள் தந்த கல்வி, பல்வேறு அறிவு, ஆய்வுச் செய்திகள் சிந்தையில் நிறைந்த பல சித்தாந்தங்கள் கிழக்குவகை மட்டுமல்ல இருண்ட பலபகுதிகளை வெளிச்சம் காண வைத்தது.
அய்ரோப்பாவில் தோன்றிய அறிவியல் விஞ்ஞானம் மற்றும் தொழில், இயந்திரப் புரட்சி இவ்வாறு வளர்நிலையை தொட்டு தொடர வைத்திருக்கிறது.
ஆயினும் இந்தியா எனும் பகுதிகளில் தேவையான வளர்ச்சியோ விரைவான வேகமான முன்னேற்றமோ உலக நிலைக்கு உயர வேண்டுமென்ற உணர்வோ, உறுதியோ ஊக்கமோ இல்லாத இழிந்த நிலைகளைத் தான் காண முடிகிறது.
எல்லா மக்களிடம் ஒருங்கிணைத்து இருக்க வேண்டிய சிந்தனைக் கூர்மை செயலில் செழுமை நுண்ணறிவும் உளத்தூய்மை உண்மை உணர்வு அற்றதாகவே இருக்கிறது.
மத்தியத் தரைக்கடலை சுற்றியிருந்த நாடுகளில் தானே புதுப்புது சிந்தனைகள் பூத்துக் குலுங்கியதாகத் சொல்கிறார்கள். உண்மையும் அதுவாகத்தானே இருக்கிறது.
அய்ரோப்பிய - அமெரிக்க வளர்ச்சி வளம் என்பது உலகின் எல்லாப் பகுதிகளையும் எழில்படுத்தி வருகிறது. இருண்ட கண்டம் எனப்படும் ஆப்பிக்காவும், தீவுக்கண்டம் என்ற ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - டால்மேனியா போன்றவையும் புதுக்கோலம் கொள்ள வைத்திருக்கிறது.
கிழக்குலகில் சீனா மான உணர்வோடு வளர்ந்த நாடாக காட்சி தருகிறது. யாரிடமும் கடன் பெறாத சீனா இன்று அமெரிக்காவிற்கு கடன் தருகிறது. உலக சந்தையை தன் உள் பையில் வைத்திருக்கிறது. விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பளிச்சிட்டு மின்னுகிறது.
ஆதிநாளில் அந்த சீனாவிற்கு புத்தக் கொள்கையும் போதி தர்மா போன்றோரையும் வழங்கிய இந்தத் துணைக் கண்டம் இன்றிருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் இனிமை பயப்பதாக இல்லை.
ஏழ்மையும் இல்லாமையும் வறுமையும் வாட்டும் அழுக்காறும் அறியாமையும் கசப்பு உணர்வும் காழ்ச் சிந்தையும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் நம்பி நடைபோடும் நலிவும் நீங்காது நிற்கக் காண்கிறோம்.
உலகோடு உயர வேண்டுமெனில் ஆராய்ச்சியில் ஆர்வமும், நுண்ணறிவும், பெரும்பாலோரிடம் நிறைந்திருக்க வேண்டும். கற்பதைக் கசடறக் கற்று, கற்றதை கலந்துரையாடினால் தான் கால், அரை என்றாகி செயல் நுட்பம் முழுதாகும் என்கின்றனர் ஆய்வறிஞர்கள். ஆனால் அப்படி ஒரு நிலை தோன்றுவதற்கு தடைகள் இங்கே தலைத் தோங்கிய வண்ணம் இருக்கக் காண்கிறோம்.
ஏற்கனவே மிகமிகச் சிறுபான்மையினரின் ஆக்கத்தில் கட்டுண்டு அறியாமையில் உளன்றவர்கள் விடுதலை பெறாத அளவுக்கு புதுப்புது விலங்குகள் பூட்டப்பட்டிருக்கின்ற நிலைகள் நிறைந்து கிடக்கின்றன.
குறிப்பாகச் சொல்வதென்றால் ஆலயங்கள் சார்ந்த பக்தர்கள்  அறம் சாராத அரசியல் சார்ந்த புது அடிமைகள் திரைப்பட நடிகர்களின் பின் சென்று திசை தெரியாது தவிக்கும் இரசிகர்கள். கிரிக்கெட் மோகத்தில் கிறுக்குப் பிடித்து திசை தெரியாது பயணிக்கும் இளைஞர்கள். தொலைக் காட்சித் தொடர்களில் தொலைந்து போய்க் கொண்டிருக்கும் மக்களில் சரிபாதியான மகளிர் கூட்டம்.
அய்ந்து வகை நிலம் பிரித்து அதன் ஆக்கம் அறிவு நிலைகளைச் சொல்லி அறம் சார்ந்த உணர்வுகளை ஊட்டியவர்களின் வழித்தோன்றல்கள் இந்த அய்ந்து வகையான அவலங்களில் ஆழ்ந்து அழிந்து வருவதைக் காண விழிகளில் நீர் பெருகி விக்கி விக்கி அழ வைக்கிறது.
இதில் கொடுமை என்னவென்றால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் வானளாவ வளர வேண்டிய அடிப்படைகள் இருந்தும் வளரவிடாமல் தடுத்த மிகச் சிறுபான்மை மனிதர்கள் தன்னலவாதிகளே இதையும் உருவாக்கி நடத்திடக் காணலாம்.
அரசு, அரசியல் அதிகாரத்தை ஊடகம் மற்றும் பல்வேறு இடங்களை பல அடிமைகளின் துணையோடு நட்ட விதைகள் நட்டு வைப்பவர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள். காற்றுப்புகாத இடத்தில்கூட இந்தக் கயவர்கள் புகுந்து கால் பதிப்பார்கள் என்பார்களே அதுபோல கண்ணியம் கெடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
மதங்களின் ஆலயங்கள், மாசு நிறைந்த அரசியல், மயக்கம் தரும் திரைப்படம் எந்தப் பயனுமற்ற கிரிக்கெட், எண்ணச் செழுமையைச் சிதைக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் இவைகளில் ஈடுபாடு கொள்வோரின் நேரமும் நினைப்பும் வாழ்வில் நிமிரவிடாத நிலையையை உருவாக்குகிறது.
இந்த உண்மைகளை சிலர் உணர்ந்தாலும் கூட மூடப் பழமையுடன் பழகுபவர்களாகவே இருக்கக் காண்கிறோம்.

நூறு கோடிக்கு மேல் உள்ள நாடு என்று சொல்லப்படும் இந்த மனிதர்களின் வளர்ச்சி நிலைகளில் நூறு இடங்களுக்கும் பின்னாலே இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை மாறி எல்லார்க்கும் எல்லாம் என்ற இனிய நிலை உருவாக வேண்டுமென்றால் இந்த ஆலயம் அரசியல், திரைப்படம், கிரிக்கெட், நெடுந் தொடர்கள் மீது மோகம் தொன்னூறு விழுக்காடாவது தொலைந்தால் ஒழிய உலகோடு உயர்வது என்பது இயலாத ஒன்றாகும்.

No comments:

Post a Comment