Sunday 16 August 2015

இளைஞர்கள்

இளைஞர்கள்

வளர்ந்து வரும் நவீன உலகில் சீருடன் வாழ்வதற்கு வளரும் இளைஞர்களின் உணர்வும் அறிவும் கூர்மையாக இருந்திட வேண்டும் என்று சமுதாய இயல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்நாட்டு இளைஞர்கள் தங்களை பண்படுத்தி இருக்கின்றவரா? என்றால், நிறைந்த விழுக்காட்டினர் நீர்மேல் குமிழியாகவே இருக்கின்றனர். ஆழ்ந்து சிந்தித்து அறிவுக் கருவூலங்களை அள்ளி நெஞ்சோடு அணைந்து மகிழ வேண்டிய பருவத்தில், ஆரவாரச் சூழலில் சிக்கி எது எதற்கோ அடிமையாகி வருகின்ற நிலைதான் இங்கே நீடித்து நிலவுகிறது. நாடு, மொழி, பண்பாடு, இயற்கை, வரலாறு, அறிவியல், கலை என்றெல்லாம் என்ன வேண்டிய இளைஞர்களின் இதயம் திரைப்பட நடிகர், நடிகரை நெஞ்சில் பதித்து, மாசுகள் நிறைந்த வாழ்க்கையை சுவைப்போருக்கு மன்றங்கள் அமைத்து தம் மனதைத் கெடுத்து, தம் பொருளை இழந்து,எந்தப் பயனும் இல்லாத பாதையில் நடைபோடும் இளைஞர்களே இங்கே மிகுதி என்ற நிலை மனதை வாட வைக்கிறது. வாழ்வினில் மேலேறிச் செல்வதற்கு பயன்பட வேண்டிய ஆற்றல், வரலாறு சமைக்க வேண்டிய செயல்திறன், பயனற்ற வழிகளில் பாழாவது சரிதானா? விழலுக்கு இறைத்த நீராக வீணாவது முறைதானா? ரஜினியின் ஸ்டைலும், கமிலின் நடிப்பும், கார்த்திக்கின் சிரிப்பும், பாக்கியராசாவின் பசப்பும், இளையராசாவின் இசைக் கருவிகளும் வளரும் வாழ்விற்கு வழி செய்யுமா?

திரைப்பட கருவியை கண்டுபிடித்த ஆல்வா எடிசன் மக்களை பண்படுத்த, அறிவினை கூர்மைப்படுத்த இக்கருவி உதவும் என்றுதான் எண்ணியிருப்பானே தவிர பச்சை வேசித்தனத்தை விளம்பரப்படுத்த பயன்படும் என்று எண்ணியிருக்கவே மாட்டான். தமிழ் படத் துறையில் குறிப்பிடத்தக்க சில படங்களே திரும்பிப் பார். இதுபோன்று வந்த பல படங்கள்தான் சமுதாய மாற்றங்களுக்கு பயன்பட்டன. மற்றவை பெரும்பாலும் மடமைக்கே மக்களை வழி நடத்தின. தாய்மொழிப் பற்றும், நாட்டுப்பற்றும், அறிவியல் கலையறிவும் இடம் பெற வேண்டிய இளைஞர் நெஞ்சில், இடை நெளிவும், விழியசையும், மேலாடைக்குள்ளிருக்கும் மேடு பள்ளங்களும் இடம் பெற்றால் வானோக்கி வளரும் அறிவியல் உலகில் நாம் என்று இடம்பிடிப்பது? எப்போது நாம் எழில் வாழ்வை பெறுவது? மேலை நாட்டுப் படங்களாவது சில கருத்துக்களைப் போதிக்கிறது. சில வினாக்களுக்கு விடை காண்கிறது. அடுத்து என்ன? அதற்கடுத்த என்ன? அடுத்தடுத்து என்ன? என்ன? என்று அறிவை விரிவாக்குகிறது. ஆற்றலை ஒழுங்கு படுத்துகிறது, உணர்வில் கூர்மையேற்றுகிறது. ஆனால் இங்கோ நெஞ்சில் நஞ்சு கலந்து உணர்வை நாசப்படுத்துகிறது. ஆற்றலை முடமாக்கி மடமையில் அறிவை மூழ்கடிக்கிறது.

கிராமங்களின் வளர்ச்சியும், மலர்ச்சியும் தான் நகரமாக உருவெடுத்தது. நகரமே நாகரிகத்தைப் பெற்றெடுத்தது, நகர நாகரிகமே புதுமையையும் அறிவையும் வளர்த்தது. வாழ்வை எழில் படுத்தியது, எளிமைப் படுத்தியது.இனிமையை வாழ்வில் இணைத்தது. ஆனால் இங்கு இளையராசாவின் இசையும், பாரதிராசாவின் சில படைப்புகளும் நம்மை பழமைக்கு இழுத்துச் செல்கிறது. நாட்டுப் புறத்தில் நிற்க வைத்த பரக்க, பரக்க விழிக்க வைக்கிறது. எழவிடாது மேலேறி நடக்க விடாது, ஓரிடத்திலேயே உணர்வுகளை முடக்கிப் போடுகிறது. இளைஞர்களின் உணர்வுகளை சிதைக்கும் இச்சூழல் நிலவுவது சரிதானா? வில்லெடுத்து, வாளெடுத்து வெற்றி குவித்திட்ட வீரர்களின் வழிவந்த இளைஞர்கள்,சொல்லெடுத்து சுவை சொட்டும் கவி தொகுத்து சோர்வகற்றி அறிஞர்கள் வழிவந்த இளைஞர்கள் விரத்திப் பாதையில் வேகமாக நடைபோடுவது சரிதானா? வேதனைக்கு விழா எடுப்பது முறைதானா? இனம் மொழி பண்பாட்டின் அடிப்படையில் இளைஞர்களின் உணர்வில் கூரேற்ற ஓயாது போராடும்ஓர் இயக்கத்தை (தி.மு.க) ஒரு தலைவனை ( தலைவர் கலைஞர்) அறிவுற்றோர் எண்ணிப் பாருங்கள். இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். இளைஞர்கள் தங்களை உணரவேண்டாமா? இளைஞர்களின் ஆற்றல் அளவிட முடியாதது. சாதனை புரிந்தோரில் பெரும்பாலோர் இளைஞர்களே! இளைஞர்கள் வீரிய மிக்கவர்கள். நினைத்ததை சாதிக்கும் நெஞ்சம் மிக்கவர்களள். சுற்றுச்சூழல் - குடும்பப் பொறுப்பு கவலைகள் நெருங்கமுடியாதவாறு நெருப்பு வளையம் சூழ்ந்த பருவம் வாலிபப் பருவம் எதையும் சாதிக்கம் தகுதியுடையவர்கள் இளைஞர்கள். ஆனால் அவர்களின் உள்ளத்தில் செய்திகள் நல்லதாக நிறைந்திருக்க வேண்டும். அறிவியல் கூறுகளின் அடர்த்தி மிகுதியாயிருக்க வேண்டும். வேகத்தை வீணாக்காத விவேகம் வேண்டும்.

சிந்தனைத் தெளிவு வேண்டும். தேர்ந்த நல்லறிவு வேண்டும். குணம் சிறக்க வேண்டும். கூறி மதி வேண்டும். குறுகிய உணர்வுகளை குழிவெட்டிப் புதைக்க வேண்டும். இத்தனையும் வாய்த்தால் இளைஞர்கள் ஈட்டி முனையாய் திகழ்வார்கள் அவர்களின் திறனால் அன்னை பூமி செழிப்புறும் இளைஞர்களே இந்நாட்டின் எதிர்கால மேதைகள் ஆவதற்கு இன்றே எழுச்சி கொள்ளுங்கள்.

ஞாலம் கருதினும் கைகூடும் - காலம்

கருதி இடத்தாற் செயின், எனும்

குறள் மொழியை உரத்து முழங்குங்கள். எமை நத்துவாய் என எதிரிகள் போடி இட்டழைத்தாலும் தொடேன், தொடேன்,  தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன், விடேன் என்றானே பாவேந்தன், அதனை இளைஞர் நெஞ்சில் பதியுங்கள்.

No comments:

Post a Comment