Tuesday 18 August 2015

காதலர் தினம்

காதலர் தினம்

காலையில் தொலைக்காட்சியை இயக்கினால் கண்ணில் படும் காட்சியும்,செய்தியும் காதலர் தினத்தன்று கலவரம் செய்திட ஆயுதங்களுக்கு பூசை போடும் அவலத்தைப் பார்க்க நேர்ந்தது.

விபரீத உணர்வோடு செயல்பட்டு பலருக்கு வேதனையை ஏற்படுத்தும் வெட்டி மனிதர்கள் நிறையவே இந்தியாவில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை தடுக்கின்ற வகையில் தடிகளுக்கு பூசை போடும் பொல்லாதவர்கள் அறிவியல் கோலோச்சும் இந்த நவீன காலத்திலும் இருக்கிறார்களே என்று மனம் வேதனை கொள்கிறது.

உற்று நோக்கினாலே உணர்வுகள் கிளர்ந்தெழுந்து ஒருவரை ஒருவர் தங்கள் உள்ளத்தில் பதிவு செய்து இணைந்திடும் இருவரின் தனிப்பட்ட ஒரு நிகழ்வில் ஊராருக்கு என்ன வேலை?

சிவசேனா, ராமசேனா என்ற மத வெறி அமைப்புகளால் நடத்தப்படும் நாகரீகமற்ற வெறியாட்டங்களை வேடிக்கை பார்ப்பது என்பது நாட்டைச் சீரழிக்கும் நச்சுச் செயல்களுக்கு துணை செய்வதாகவே இருக்கும்.

மதவாத அமைப்புகளின் எதிர்ப்புகளின் அவர்கள் நேசிக்கும் கடவுள்களே கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று இராமாயண காவியத்திலும் காதல் வயப்பட்ட இராமனையும், சீதையையும் கம்பன் சித்தரித்துக் காட்டுகிறான்.

சிவனும், பார்வதியும் சிநேகம் கொள்ளும் சித்திரங்கள் இங்கே எத்தனையோ போதிக்கப்பட்டிருக்கின்றன. புராண இதிகாசங்களைப் புரட்டினாலே பார்வையில் படுகின்ற செய்திகள் காதல் படமாகவே தோன்றுகிறதே! கோபியரைக் கொஞ்சுகின்ற கோகுலகிருஷ்ணனின் சிருங்கார லீலைகள் கொஞ்சமா? நஞ்சமா? காதலும், கல்யாணமும் தோன்றாத காவியங்கள் உலகில் எங்கும் இல்லையே. கண்களின் இயல்பே அழகு தோன்றும் இடமெல்லாம் ஆலவட்டம் போடுவதுதானே. விழியிழந்த குருடன் கூட இசை கேட்டு செவி குளிர்ந்து இதயத்தில் காதல் செய்வதும் இயல்புதானே. கூனனும், குறளனும் காதல் செய்வதாக சங்க இலக்கியம் காட்டுகின்றதே.

எல்லா நிகழ்வுகளுக்கும் உலகம் ஒவ்வொரு நாளைக் குறிப்பிட்டிருக்கிறது. அன்னையர் நாள், பிள்ளைகள் நாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாள் என்று இருக்கிறது. இந்தக் காதலர் தினமும் அப்படித்தானே. பின் எதிர்ப்பது ஏன்?

இறைவன் புகழ்பாடி அவன் இருப்பிடத்தை நாடி ஓடும் பக்தசிகாமணிகளின் பக்திக் கண்கள் எழில்வழி மாதர்களை ஏன் பார்க்கின்றன?

சீதா ராம கல்யாணம், சீனிவாச கல்யாணம், சொக்கர் மீனாட்சி, சிவன் -பார்வதி என்றெல்லாம் கல்யாணம் நடத்தி பள்ளியறைக்கு தூக்கிச் செல்வது என்பது இங்கு எல்லா ஆலயங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள்தானே. கல்யாணம், பள்ளியறை காணலாம். ஆனால் காதலர் தினத்தைக் காணக் கூடாதா?

காதல் மணம், கலப்பு மணத்தை ஆதரிக்கின்ற சட்டம் அண்ணாவால் இங்கே இயற்றப்பட்டிருக்கின்றன. அது கலைஞரின் முயற்சியால் மத்திய அரசிலும் சட்டமாக இருக்கிறது. இந்தச் சூழலில் எதிர்ப்பவர்களின் செயலை இடுப்பு ஒடித்துப் போடுவதுதான் அரசாங்கத்தின் கடமையாகும்.

No comments:

Post a Comment