Thursday 13 August 2015

சிக்கல்கள்

சிக்கல்கள்
சிந்தையில் தோன்றும் சிக்கல் என்பது எண்ணற்ற வகையில் இடம் பிடிப்பதை காணலாம்.
உடல் சிக்கல், உயிர்ச் சிக்கல், உணர்ச்சியில் சிக்கல், உறவு சிக்கல் உலகில் தோன்றும் ஊடகச் சிக்கல் என்றெல்லாம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பவற்றில் இந்த சிக்கல் மூளையில் முதலிடத்தில் இருக்கக் காணலாம்.
நேரத்திற்கு நேரம் நிமிடத்திற்கு நிமிடம் மாறவும் மறையவும் தோன்றவும் கூடிய ஒன்றாக இந்தச் சிக்கல் இருப்பதை உணர முடிகிறது.
அரசியலில் சிக்கல், ஆட்சியில் சிக்கல், ஆலயங்களில் சிக்கல், ஆண்டவனின் மொழி என்று ஓதப்படும் போதனையில் சிக்கல் ஏன் ஆழ்ந்து நோக்கி ஆராயப்படும் அறிவியல் உணர்வு ஆய்வில் கூட இந்தச் சிக்கல் என்பது உருவாகிக் கொண்டே இருக்கிறது.
சீரிய சிறந்த கருத்துதான் சார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை சிலர் அவர் சிறந்த மனிதர்தான். ஆனால் அவர் பேசுவதில் சில சிக்கல் இருக்கிறது என்பார் சிலர்.
நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, ஒழுக்கத்தில் உத்தமி, அழகுமுதம் அன்ன நடை சார். ஆனால் புரணி பேசும் போக்கு இருக்கிறதே அந்தச் சிக்கல் அந்தப் பெண்ணிடம் இருக்கிறதே என்பார் சிலர்.
அந்தப் பையன் தங்கம் சார், நன்றாகப் படிப்பவன் சார் ஆனால் அவன் பண்ணுகின்ற சேட்டை இருக்கிறதே அது சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது என்பார் சிலர்.
இந்த ஆனால் என்ற தலைப்பில் உரையாற்றினார் அறிவுலக மேதை அண்ணா அவர்கள். அது கூட கூட்டத்தை நடத்தியவர்கள் அண்ணா...தலைப்பில்லை ஆனால்... என்று தயங்கியபடி நின்றார்கள். அதற்கு ஆனால் என்ற தலைப்பிலேயே உரையாற்றுகிறேன் என்று ஓர் அருமையான உரையை உலகிற்கு வழங்கினார் உண்மைத் தமிழ் மகன் அண்ணா அவர்கள்.
ஒரு கருத்தை ஒரு செய்தியை ஒரு பொருளை தெளிவாக சொல்லி விட்டு ஆனால் என்று இழுத்துச் சொன்னால் அதில் தொடர்வது என்னென்ன எது எது என்று விளக்கிய முறை இருக்கிறதே அது ஓர் அருமையான காவியமாகும்.
இங்கு சிக்கல் என்பதில் உறவுச் சிக்கலை எண்ணிப் பார்ப்போம். உறவுகள் பலப்பல உள்ளன. தாய்-மகள்-மகன் உறவு, தந்தை-மகன் -மகள் உறவு, கணவன்-மனைவி உறவு, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமன்-மச்சான், மதினி-நாத்தனார் உறவு, நட்புறவு மற்றும் நல்லுறவு, கொள்கை கோட்பாடு இலட்சிய உறவுகள், சொந்த உறவு, தூரத்து உறவு என்றெல்லாம் நாட்டு நடப்பில் நிலை கொண்டிருப்பதைக் காணலாம்.
ஒரே குடும்பத்தில் பாசஉறவுகளோடு வாழும் உறுப்பினர்களிடையே கூட இந்த எண்ணச் சிக்கல், வார்த்தைச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல் மதிப்பும் மரியாதை பற்றிய சிக்கல் நாளும் தோன்றி மறைவதும் மீண்டும் தொடர்வதையும் காணலாம். இந்த உறவுகளுக்குள்ள பலவகை ஆளுமையும் அதிகாரமும் இருப்பதை அறிய முடிகிறது. வயதில் மூத்த நான் சொல்வதை மறுக்கக் கூடாது என்ற முறை இங்கே நிலை கொண்டிருப்பதை காண முடிகிறது.
ஆய்வு நிலையில் தெளிவில்லாத நிலை எல்லா இடங்களிலும் இருந்திடக் காண்கிறோம். தாய் சொல்லை தட்டாதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வயதுக்கு மரியாதை கொடு, நதிமூலம் ரிசி மூலம் பார்க்காதே என்று எண்ணற்ற நீதி மொழிகளின் மூலம், அறிவு ஆய்வு விளக்கமில்லாத ஆதிக்க நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த இடத்தில் எப்பொருள் மெய்ப்பொருள், எப்பொருள்...எத்தன்மை... என்ற ஆய்வு நெறிகள் அவல நிலைக்குள் ஆழ்ந்து விடக் காண்கிறோம்.
பரிணாமத்தில் வளரும் பருவத்தில் வழங்க வேண்டியதை வழங்காததால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். விளைவு, எணணச் சிதறல்கள் ஏற்பட்டு உருவாகும் இடர்ப்பாடுகள் ஏராளம், ஏராளம்.
உறவுகள் சீர்பட உளத் தூய்மையும் உணர்வில் தெளிவும் உறைந்திருக்க வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் என்ற சமத்துவமும் பாசமும் பண்பாடும் நிறைந்தால் சிக்கல்கள் தோன்றாத நிலை காணலாம்.





.

சிதறாதீர்
பிரிவு என்பது பாசத்தை வளர்க்கும் ஒரு வழிமுறை தான். நெஞ்சில் நிறைந்தவர்களை நினைத்துருகும் இனிய சுகம் தான். பொருள்கள் சிதைந்து பிரிந்தால் தான் புதிய பொருள் பிறக்கும் என்கின்றனர் அறிஞர்கள். அணுவைப் பிளந்து அதன் ஆற்றலின் திறத்தை வெளிப்படுத்தினார்கள் அறிஞர்கள். ஆனால் பிரிவும் பிளவும் ஊடலாக இருந்திட வேண்டும். உறவுக்கும், உயர்வுக்கும் வழி சமைக்கும் பாத்திரமாக வேண்டும். அதற்கு மாறான பிரிவுகளால் வாழ்வு நலியும், வளர்ச்சி குறையும். தமிழர்களில் பல்வேறு பிரிவுகள் அல்லது பிளவுகள் வாழ்க்கை நலிவுக்கு வளர்ச்சிக் குறைவிற்கும் காரணமாக இருக்கிறது.
தமிழர்கள் தங்கள் முன்னோர்களின், தங்கள் மூதாதையரின் வாழ்வினை, அவர்கள் வரலாற்றை எண்ணிப் பார்ப்பார்களேயானால், இதயத்தில் இருத்தி வைப்பார்களேயானால் இன்றைய உணர்வுகளை உள்ளத்தில் இருந்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ கற்றவர் உள்பட பெரும்பாலோர் தமிழரின் சிறப்புக்களை நிலையாக நெஞ்சில் நிறுத்தி வைக்க தவறி விடுகிறார்கள். சாதி, சாதிக்குள் உட்சாதி, சாதியில் கீழ்சாதி, மதம் பல்வேறு மார்க்கம், குலம் குடும்பப் பெருமை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்ச்சிக்கெல்லாம் ஆளாகி தம் உயர்வுக்கு தடை போடுகிறார்கள். தமிழர்கள் முன்னர் வாழ்ந்த எழிலார்ந்த வாழ்வினை எண்ணிப் பார்ப்போமா!
குமரக் கண்டம் எனும் இன்றைய குமாரிக்கு தெற்கே விரிந்த மண் பரப்பில் நிலம் பிரித்து, நாடு கண்டு, அரசு முறை வகுத்து ஆண்டு வந்த நமது பண்டைய மக்களை பாண்டிய மன்னனை நமது இலக்கியங்கள் உயர்வாகப் பேசுகின்றன; பொதிகை மலை மீது நின்று தெற்கே தன் விரல் நீட்டி, ““அதோ பாண்டியனின், தலைநகரம் பொன்வேய்ந்த சபாடபுரத்தில் ஒளியுமிழும் அழகினைப் பார்” என்று அனுமனுக்கு ராமன் கூறுவதாக கம்பன் தன் காவியத்தில் வரைந்து காட்டுகிறான். வரலாற்றை வரையறுக்க இயலாக் காலத்திலேயே வளமுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
சீர் கொண்ட நிலத்தை தென்கண்ட பனிக் கொள்ள (கொல்ல) பல்வேறு திசைகளில் தமிழ் மக்கள் பரந்து சென்றார்கள். கிழக்கே ஆஸ்திரேலியா, மேற்கே ஆப்பிரிக்கா, வடக்கே இமாலயச்சாரல் என்று குழு குழுவாகப் பிரிந்தார்கள். இடம் இயற்கை வேறுபாடு, தட்ப வெட்பத்தால் நிறம் மாறி, மொழி மாறி வாழ்க்கை நிலையிலும் மாறிப் போய் விட்டார்கள்.
மற்ற பகுதி எப்படி இருப்பினும் இந்திய துணைக்கண்டத்தில், இமய மலைச் சாரலில் சிந்து வெளியில் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்ந்தனர். விளை நிலங்கள், வேளாண்மை, மாட கூடங்கள், கலைகல், ஆடல் பாடல், களியாட்டங்கள் என்று வாழ்வியல்த் துறைகலில் மிக வளமோடு வாழ்ந்தார்கள். அரசன், அமைச்சன், ஆள், அம்பு என ஆற்றல் மிகு மனிதர்களாய் வாழ்ந்து களித்தார்கள். துணைக் கண்டத்தின் தென் பகுதியிலும், முத்தமிழ், முக்கொடி, மூவேந்தர் என்று சிறந்ததோர் அரசுகளுடன் ஆட்சி புரிந்தார்கள். வாழ்விற்கு எழில் சேர்க்க உணர்வுக்கு நயம் கட்ட எழில் மிகு இலக்கியங்களை எழுதிக் குவித்தார்கள். கலை வடிவாய் விளங்கும் சிலப்பதிகாரம், எழில் குலுங்கும் மணிமேகலை, கருத்துச் செறிவாய் திகழும் தொல்காப்பியம் அகம் மகிழ அகநானூறு, புற வாழ்வில் புகழ் சேர்க்க புறநானூறு, காதல் வாழ்வின் நுணுக்கங்களை கற்க நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, என்று துள்ளலோசை, செப்பலோசைகளோடு கவி வடித்து காவியம் நிறைத்தார்கள். அறவுணர்வு, அறிவுணர்வோடு பொருள் சேர்த்து இன்பம் பயக்கக் குறள் கண்டார்கள்.
தம் இனத்தை தம் மொழியை இகழ்ந்தோரை படை திரட்டி போர்க்களத்தில் வெண்சமர் புரிந்து விரட்டியடித்தார்கள். கலை படைத்தார்கள். காவியம் கண்டார்கள்; ஆற்று நீரை மறித்து அணை கட்டி, வேளாண்மை பெருக்கி பொருள் குவித்தார்கள். நிலம் அகழ்ந்து கனிச் செல்வம் கண்டு தம் வாழ்வுக்கு தேவையான கருவிகள் செய்தார்கள். வாளும் - வேலும், கேடயமும், தேரும் - ஏரும் கண்டு ஏற்றம் பெற்றார்கள். எழில் வாழ்வை துய்த்தார்கள். ஆரியர்கள் வந்த பின்பு தான், அவர்கள் ஆதிக்கம் கொண்ட பின் தான், அவர்கள் ஆசை மொழிக்குள் அகப்பட்ட பிறகு தான், பக்தி மார்க்கத்தில் கண் பதித்தார்கள், புத்தி கெட்டார்கள். சாதியப் பிரிவுகள் கண்டார்கள், பயனற்ற பாதையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
பிரிவுகளில் தங்கள் மனதைச் செலுத்தி பேதமுற்றார்கள், பேதையானர்கள். விரிந்த நிலப்பரப்பு தமிழர்களுக்கு விந்தியத்திற்குத் தெற்கே என்று ஆனது, பின் அது வேங்கடத்திற்கு தெற்கே என்று சுருங்கியது. பின் இன்னும் குறுகிய இடத்திற்குள் தமிழர்கள் சிறைப்பட்டார்கள். உதிரிப் பூக்களாய், திசை மாறிய பறவையாய் திரிந்திடும் நிலை தமிழர்களுக்கு, வளமிக்கு அரசுகளை இழந்தார்கள். வல்லமை மிக்க தன் படையமைப்பை இழந்தார்கள். இதில் வேதனையென்னவென்றால், யாரும் இவர்களை தோற்கடிக்கவோ, அழிக்கவோ இல்லை. இகம்பர சுகம் தேடும் சோம்பேறியாய் ஆகி இவர்களாகவே இழந்தார்கள். ஆராய்ச்சித் திறவின்றி யாரையும் எளிதில் நம்பி தன் இருப்பிடத்தையும் இழந்தார்கள்.
அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் கூட இனவுணர்வும், இன ஒற்றுமையும் இருந்தாலன்றி உயரவோ, வாழவோ முடியாது என்ற நிலை இருக்கிறது. பல்வேறு கொள்கைகளை ஒதுக்கி விட்டு ஐரோப்பிய இனம் ஒன்றாகிறது. பகை மறந்து அராபிய இனம் ஒன்றாக கருதுகிறது. ஆப்பிரிக்க ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது. அழிந்த நிலையில் கூட ஆரிய வழிக்காரர்கள் வல்லாண்மை பெறத் துடிக்கிறார்கள். ஆனால் தமிழினமோ சீர் கெட்ட நிலையில் சிதைந்து கிடக்கிறது. சாதிக்காக சண்டையிட்டுக் கொள்கிறது. சனாதானச் சகதியை பூசி மகிழ்கிறது. உரியவர் யார்? உற்றவர் யார்? தமிழனத்தை உயர்த்துவோர் யார்? என்று உரை மறுக்கிறது. தமிழன உணர்வற்றோடு, உள்ளத்தில் தமிழன வெறுப்பை வைத்திருப்போர், உதவாக்கரைகள், உலுத்தர்கள், வீணர்கள், சக்கைகள், தக்கைகளுக்கெல்லாம் மலர்தூவி - குஞ்சம் வீசி குதூகலிக்கிறது. மண்டைக் காட்டில் மதச் சண்டை, சாத்தூரில் சாதிச் சண்டை, இராசபாளையத்தில் வம்பர்கள் சண்டை. போடியில் பொறுப்பற்ற மோதல், சென்னையில் சிந்தனையில்லாச் சீற்றம் என்றெல்லாம் எண்ணச் சிதற்களுக்கு ஆளாகி அன்றாட வாழ்க்கை குலைந்து வளர்ச்சி நோக்கம் வற்றி வறுமைச் சேற்றில் தங்களைப் புதைத்துக் கொள்ளும் வழியிலேயே தமிழர்கள் நடை போடுகின்றனர். இத்தனைக்கும் காரணம், தமிழர்களில் உள்ள சாதிப் பிரிவுகளேதான்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமையின்றிடில் அனைவருக்கும் தாழ்வு என்பதை உணருங்கள். சேர வேண்டியதில் சேராததும் இணையக் கூடாததில் இணைவதும் இழுக்கு என்பதையும் உணருங்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் ஒற்றுமையில் உயர்வு காண்பதும் உரியவர்களுக்கு வலுவூட்டுவதும் கடமை என்றும் மனதில் கொள்ளுங்கள். தேவையற்ற எண்ணங்களுக்கு சிந்தையில் இடம் தராதீர், சிதறாதீர்!
மக்கள் தொகை
நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் மக்கள் தொகை மிகுவாக பெருகி வருகிறது. ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் உவமை சொல்ல இயலா வகையில் மனிதர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. மக்களின் தொகையை சொல்லி முடிப்பதற்குள் சொல்ல வந்த தொகை மாறிவிடும் அளவுக்கு வினாடி தோறும் புதமனிதன் குழந்தையாக உருவெடுத்து விடுகிறார். உலக எண்ணிக்கையில் அய்ந்தில் ஒரு பங்கு சீனாவிலும் இந்தியாவிலும் இருக்கிறது. பெற்ற குழந்தையை பேணி வளர்ப்பதற்கு பெருந்துணையாய் இருக்கின்ற பொருளாதார வளர்ச்சியோ மிகக் குறைவாகவே இருக்கிறது. பிறந்து விட்ட மாந்தர்க்கு உணவு, உடை, உறைவிட வசதிகலை வழங்குவதற்கு வளர்ந்து வரும் அறிவியல் வகை செய்தாலும் மனித உற்பத்தி வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது விஞ்ஞானம திணறுகிறது. அறிவியல் மேதைகளின் அயரா முயற்சியால் புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொருள்களை குவித்தாலும், மனித இனம் அத்தனை பொருள்களையும் அரைத்த வண்ணம் இருக்கிறது. பல்கி பெருகி பலம் தரும் பலவித வித்துக்களை விஞ்ஞானிகள் கண்ட வண்ணம் இருக்கிறார்கள். மனித இனத்தை குறைக்கும் மார்க்கங்களை வகுத்த வண்ணம் இருக்கிறார்கள். தொகுத்த வைத்த முறைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன வண்ணம் இருக்கிறார்கள், இருந்தும் மக்கள் தொகை பெருத்த வண்ணம் இருக்கிறது.
ஆசிய-ஆப்பிரிக்க-லத்தீன் அமெரிக்க நாடுகளின் அளவுக்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஏன் கூடவில்லை? அங்கென்ன வளம் குறைவா? வயது வந்த பின்னும் குழந்தை பெறும் வகை தெரியாதவர்களா அங்கிருப்போர்? காதல் உணர்வே இல்லாத மரக்கட்டைகளா? அதுதான் இல்லை. உரிய வயது வரமுன்னரே வாழ்க்கையை துய்க்க முனைபவர்கள். காதல் உணர்வினிலே மிக கை தேர்ந்தவர்கள். கலைச்சுவை உணர்ந்தவர்கள். கவிக் கலைகள் அறிந்தவர்கள். தாய்மை உணர்வு இல்லாதவர்களா அதுவும் இல்லை. தாய்மை உணர்விலே தகைசான்றவர்கள்.
வயதிற்கு முன்னே கூட வாழத் தொடங்கிவிடுகின்றனர். அதற்காக வயிற்ரை பெரிதாக்கிக் காட்டுவதில்லை. காதல் வாழ்வில் களிப்படைகிறார்கள். அதற்காக கைக்குழந்தையை அடிக்கடி சுமப்பதில்லை. கவின் கலைகள் துய்ப்பவர்தான் அதற்காக கண்டபடி சிசுக்களை தோற்றுவிப்பதில்லை. தாய்மையுணர்வு வேண்டும் என்பதற்காக தாயாக வேண்டும் என்று தவிப்பதில்லை. குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டும் குதூகலம் கொள்ள வேண்டும், பிஞ்சு மழலையை நெஞ்சோடு அனைத்து நேசம் கொள்ள வேண்டும், பாசத்தை பொழிய வேண்டும், நெஞ்சம் மகிழ வேண்டும் என்றெல்லாம் இதயத்தில் இனிய உணர்வு கொண்டோர்தாம். அந்த பஞ்சு மேனியில் பலவித அணிகள் பூட்டி அகம் மிக மகிழ ஆசை கொண்டோர்தாம். அதற்கு அந்தக்குழந்தை தன் சொந்தக் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சுயநல எண்ணம் இல்லாதவர்கள்.
பெற்றவளைத் தெரியாதவர்கள் வளர்த்தவளை, அவளோ அடுத்தவர்களோ சொல்லாதவரை அவளை பெற்ற தாயென்றே எண்ணுகின்ற உணர்வு மனித இயல்பில் கலந்திருப்பதை அறிந்தவர்கள். பொருலில்லார்க்கு இவ்வுலகம் இல்ø என்ற பொய்யா மொழியில் புகழ் சொல்லிற்குப் பொருள் தெரிந்தவர்கள். எந்த நாட்டுக் குழந்தையையும் தந்தெடுத்து பிறர் பெற்ர செல்வம் என்ற பேதமின்றி தான் பெற்றக் குழந்தையாய் பேணி வளர்க்கின்ற பெருமனதைப் பெற்றவர்கள். வான்பொழிவின் கணக்கிடும் வளம் குவிக்கும் வகையும் தெரிந்தவர்கல். படிப்பறிவின் பயனும் பட்டறிவின் திறனும் தெரிந்த பண்பாளர்கள், நாளும் நிகழ்கின்ற நாட்டின் நிகழ்ச்சிகளை அறியும் திறம் பெற்றவர்கள். அதற்கேற்ப தங்கள் அன்றாட செயல்களை அமைத்துக் கொள்ளக் கற்றவர்கள். அதனால் அங்கெல்லாம் அவ்வளவாக மக்கள் தொகை கூடுவதில்லை
மென்தோல் தழுவி மேனிசுகம் காண்பது தான் அங்கு இன்பம் என்று எண்ணுவதில்லை. அதற்காக அதை நினைத்து ஏங்கித் தவிப்பதில்லை. மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத் தமிழுக்கு குடில்லை என்றாரே பாவேந்தர். அதுபோல அஹ்கு பல்வேறு செயல்களினால் இன்பம் காண்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதில் சரித்திரம் காண்பதில் தனியாத சுகம் பெறுகின்றனர். அறிவியல் கூடங்களில் அமர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு அங்கும் இங்கும் தம் கவனத்தை அகற்றா வண்ணம் ஆயுள் முழுவதும் இருப்பவர்கள் அங்கே அனேகம் பேர் உண்டு.
நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நிலையை கணக்கீட்டு திட்டங்கள் தீட்டும் அரசுகள் அங்கே உண்டு. எல்லாரும் விவரம் தெரிந்தவர்களாக இருப்பதால் ஏமாற்றுச் செயல்கள் அதிகம் நடப்பதில்லை. மனதைக் கெடுக்கும் மாய்மாலச் செயல்களில் மக்கள் தம்மை பறி கொடுப்பதில்லை.
ஆனால் மக்கள் தொகை விரிவடையும் நாடுகளின் நிலையினை எண்ணிப் பார்த்தால் இதற்கு நேர்மாறான உணர்வுகளே நெஞ்சத்தை ஆளுகின்றன. எழில் வாழ்வைப் பெறுவதற்கு இடையூறாக உள்ள சங்கதிகளை இதயத்தில் இருந்து எடுத்தெறிய துணிவதில்லை. நெடுங்கால மரபுகள் என்று பல பயனற்ற கொள்கைகளை பாதுகாக்கும் பழக்கமும் இங்கே இருக்கிறது. பிள்ளைகள் பெறுவதே பிறவிப் பயன் எனும் எண்ணம் மனதில் இருந்து எடுக்க முடியாதவாறு இறுகிப் போய் விட்டது. சீரற்ற எண்ணங்கள், சிந்தனையற்ற செயல்கள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு பேருதவி செய்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் (மதவாதிகள் ஆதிக்கம் ஏற்பட்ட பின்) இங்குள்ள நிலை இன்னும் மோசம் அடைந்தது. ஆலயங்களில் காணப்படும் சிலைகளின் நிலைகல் நெஞ்சில் காம இச்சையை தோற்றுவிப்பதாக உள்ளது. நாளும் வழிபடும் ஆலயங்களில் பிள்ளை வரம் கேட்பது. பெற்றபின் அந்தக் கடவுளின் பெயரைச் சூட்டி, மொட்டையடித்து, காது குத்தி அந்தப் பிஞ்சுக் குழந்தையை கஷ்டப்படுத்திவிட்டு அடுத்த குழந்தைக்கு அடுத்த கடவுளிடம் மனுப் போடுவதும், ஆண் பிள்ளைகள் பிறந்தால் பெண் வேண்டுமே என்ரு அடுத்தடுத்துப் பெறுவது. பெண் பிள்ளைகள் என்றால் ஆணுக்கு முயற்சித்து அய்ந்தாறு பெண்களை பெற்று விட்டு அவதிகளை சுமப்பது - உண்ண உணவின்றி - உடுத்த நல் உடையின்றி துன்புறுவது, வானமே கூரையாக வெயிலிலும், மழையிலும் காய்ந்து நனைந்து நோய்களை தோற்றுவித்து நொந்த வாழ்வில் மனதை நுழைப்பது என்பதெல்லாம் இங்கு நீக்க முடியாத நித்தியவாழ்வாகி விட்டது. அரசின் திட்டங்களெல்லாம் மக்களின் பெருக்கத்தால் நீர்த்துப் போய் விடுகிறது. நல்ல சூழல்கள் நசிந்து போய் விடுகிறது. வாய்ப்புகல் பங்கிடப்பட்டு உரியவர்களுக்குரியது. கிடைக்காத காரணத்தால் சீரான வழிகள் சிதிலமடைந்து, சீர்கேடான சூழல்கள் தோன்றி நல்லவர்களுக்கு துன்பம் தரும் தறுதலைகளை தோற்றுவித்து விடுகின்றன.
காலிகள், கயவர்கள், தீயவர்கள், திருடர்கள், நலம் கெடுக்கும் நஞ்சுகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபட நெஞ்சிநர் என்று மக்களின் பெருக்கம் தரும் நெருக்கடிகள் மனிதர்கள் மாற்றி விடுகின்றன. இதையெல்லாம் இங்குள்ளோர் எண்ணி வருந்துவதில்லை. இருப்பதை அனுபவிக்க குழந்தை வேண்டாமா? எங்கள் குலம் தழைக்க வாரிசு வேண்டாமா? என்று எண்ணங்களே இதயத்தை ஆளுமை செய்கின்றன.
நாட்டு வளம் என்ன, நமது பலம் என்ன, மாறிவரும் சூழலென்ன, வளர்ந்து வரும் உலகம் என்ன என்று எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர். போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, பொல்லாங்கு, அறியாமை, அடுத்துக் கெடுத்தல் ஆகிய உணர்வுகளை வளர்த்து விடுகின்றனர். அதனால் உண்மை மறைந்து மன ஊக்கம் இழந்த உதவாக் கரைகள் பெருகிவிடுகின்றன. இந்த இழிநிலை மறைந்திட்ட இதயம் களித்திட எண்ணங்கள் இனிதாகி உள்ளம் உவந்திட, உலகோடு நாமும் உயர்ந்திட பெறுவதை பெருகுவதை குறைப்பீர்!
மாசற்ற காதல்
சாதாரணமாக பார்க்கின்றபோதே பரவசமூட்டும் அந்த பேரழகுப் பாவை பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவி. அவன்  அந்த உணகத்தில் பணியாளன். உணவக வேலையனைத்தும் தெரிந்தவன். முதலாளியின் நம்பிக்கைகுரிய நல்ல வேலைக்காரனாக காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்த தன் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிடுவான்.
அந்த ஓட்டலை தாண்டி சற்றுத் தூரத்தில் அவள் வீடு இருந்தது. தாய், தந்தை, தங்கை, தம்பிகளோடு வாழ்ந்த அந்த வாடாமலருக்கு வயது பதினைந்து, அவனுக்கு வயது பதினாறு, அந்த இளவயதில் தான் இனிய உணர்வுக்கு இருவரும் இலக்காயினர்.
ஒளி மலர்களின் நிறம் அவள் மேனியில் வாசம் செய்வது. மனமலர்த்தேன் அவள் குரலில் இழையோடியது. உள்ளமும் கண்ணும் அவள் வசப்பட்டு உருகித் தவித்தான். கண்ணும் கண்ணும் நேரில் காணும் நாள் வருமா? பேசமுடியுமா? இதயம் கலந்து இருவரும் ஒருவராக முடியுமா? என்று எண்ணிக்கிடந்தான்.
அன்று அதிகாலை அந்தத்தோ இடுப்பில் குடத்துடன் அசைந்து வந்தது. அவன் இதயத்தில் ஆவல் கிளர்ந்தது. குடத்துடன் கிணற்றுக்கு சென்றாள். கூந்தலை விரித்தாள், குளித்தாள். குன்று போல் ஆசைகளை அவன் உள்ளத்தில் கொட்டிவிட்டு மறைந்து விட்டாள்.
மறுநாள் மார்கழித்திங்கள் முதல் நாள், அன்றிலிருந்து அத்திங்கள் முழுவதும் அதிகாலையில் எழுந்து ஆண்டாளின் பாசுரங்களை பாடிய படியே குளித்து கூந்தல் விரித்து அங்குள்ள ஆலயத்து முற்றத்தில் கோலமிடும் நேரத்திலெல்லாம் அவள் குளிர்முகத்தை பார்த்து ரசிப்பான்.
அந்த ஆலயமும் ஓட்டலும் அருகருகே இருந்தது. அதிகாலை நாலுமணிக்கு அவர்கள் இருவரைத்தவிர யாரும் இருக்கமாட்டார்கள். நித்தம், நித்தம் காலையில் குளித்து பூந்தளிர் மேனியையும் அவள் கோலத்தின் நேர்த்தியையும் ரசித்து பார்ப்பான். பால்யப் பருவத்திலேயே பகுத்தறிவு நூல்களைப் படித்த காரணத்தால் கோவில் பற்றிய பலசங்கதிகள் அவனுக்கு பரிச்சயமில்லாமலேயே போய் விட்டது. ஆயினும் அவள் வருவதைக்கான அந்த ஆலயத்திற்கருகிலேயே நின்றிருப்பான். அதிகாலை நேரம் ஆவல் கொண்ட உள்ளம், நிமிடங்கள் நடக்க நடக்க நெஞ்சம் படபடக்கும். ஆ..... அதோ வந்துவிட்டாள் ஓட்டலுக்கும் கோவிலுக்கும் பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் குளிக்கிறாள். இவனும் தண்ணீர் இறைக்கும் சாக்கில் கிணற்றிற்கு செல்கிறான். அவள் குளிக்கும் வரை அருகிலிருந்து அவள் அழகை அள்ளிக் குடிக்கிறான். அவளிடம் எந்த ஆட்சேபமும் இல்லாததால் அவளை சாண்டில்யனின் கதை நாயகிகளாக்கி ரசிக்கிறான். பார்த்து ரசித்தபடியே அவள் தன்னை கவனிக்கிறாளா என்பதில் கவனம் செல்கிறது. அவள் அவனைப் பார்த்து முறுவலித்தாள். பின் இதழ்விரித்து முத்துப் பல்வரிசை காட்டி இன்பத்தில் மூழ்கடித்தாள். ஆசாரம் மிகுந்த அய்யங்கார் வீட்டுப் பெண் என்றாலும் அவன் மீது நேசம் கொண்டான்.
அதிகாலை நேரத்தில் ஆலயமுற்றத்தில் கோலமிடும் போதெல்லாம் அவன் அருகில் நிற்பதை பார்த்து கோலம் நன்றாக இருக்கிறதா? என்பாள். போட்டி வைத்தால் உலகில் உனக்கிணை யார் என்பான். சிரிப்பாள், அவன் சிலிர்ப்பான். இப்படி பல நாள் அதிகாலை சந்திப்புகள்.
பிறிதொரு நாள் குளித்துவிட்டு ஈரப்பாவாடையுடன் ஆலய பிரகாரம் சுற்றி வருகிறாள். அழகு செழிக்க அவள் நடந்து செல்லும் எழிலை அவன் கண் கொட்டாமல் பார்த்த வண்ணம் இருக்கிறான். சுற்றி வந்த அவள், விழிகளை அவன்மீது நாட்டிய படியே ஏன் எப்போதும் சும்மாவே நிற்கிறாய் சாமி கும்பிட்டால் என்ன? என்று கேட்கிறாள் அந்த விசயத்தில் அவன் தன் மனதை காட்டவில்லை. மறுநாள் காலையில் ஒப்புக்கு கைகூப்பி நிற்கிறான். அவள் என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்கிறாள் அவன் குறும்பாக உன்னை வேண்டிக் கொண்டேன் என்கிறான். அவள் அந்த கோவில் மணி ஓசையாய் சிரிக்கிறாள்.
கதை கவிதைகளை வார இதழ்களில் படிக்கும் பழக்கமும் சினிமா பாடல்களில் ஈடுபாடும் கொண்ட அவன் அவளருகில் இருக்கும் போதும் அவளிடம் பேசும் போதும் தன்னை ஒரு கதாநாயகனாகவே பாவித்துக் கொண்டான். தன்னுடைய குல ஆசாரங்களையும் மீறி தன் மீது அவள் அன்பு காட்டியதாகவே உணர்ந்தான்.
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோய் என்று காதலை இலக்கியம் கூறுகிறது. ஆனால் அவனைப் பொறுத்தவரை மாலை அரும்பி இரவெல்லாம் போதாகி அதிகாலை மலரும் நேயாகவே காதல் இருந்தது. அவன் வேலை அப்படி.
நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள், அழகும் நிறமும் எடுப்பான தோற்றமும் கொண்ட ஒரு பணக்காரப் பையன் பள்ளி செல்லும் நேரத்தில் அவளைப் பார்த்து பல்லைக் காட்டியிருக்கிறான். குறும்புச் சேட்டைகள் செய்திருக்கிறான். மாலை பள்ளிவிட்டு வரும் போது ஒரு சலூனில் அவன் இருப்பதை பார்த்து கடைக்குள் சென்று கால்ச் செருப்பை கையில் எடுத்து அவனிடம் காட்டி பிய்ந்துவிடும் ஜாக்கிரதை என்று பேசியிருக்கிறாள். அதற்கு அவன் அவளையும் அவளுடைய அவனையும் இணைத்து ஏதோ சொல்லியிருக்கிறான். அதற்கு அவள் அவனை நானும் என்னை அவனும் நேசிக்கிறோம். உன்னைப்போல் பொறுக்கியல்ல... கண்ணியமிக்க காதலன் அவன், பல காரணங்களால் அவனை மணமுடிக்க முடியாது போனாலும் நெஞ்சிருக்கும் வரை அவனை நினைத்திருப்பேன் என்று அவள் கூறியதை இன்றும் நினைத்து இதயம் பூரிக்கிறான்.
கால மாறுதல்.... அவள் குடும்பம் வேறு பகுதிக்கு மாறிப் போய் விடுகிறது. அவனும் வெளியூர் போய் விடுகிறான். பொருளாதார சூழல்கள் பலரை பாதை மாறி செல்ல வைக்கிறது. மூன்றாண்டுகள் கழித்து வந்தான். அவளைப் பற்றி கேட்டான். அவன் வாழ்வில் வைகறை பூபாளம் பாடிய அந்த வஞ்சிக்கொடி மணம் முடித்து தஞ்சைக்கு சென்றுவிட்டதாக சொன்னார்கள்.
அடுத்து ஒரு ஓட்டலில் வேலை செய்தான். ஓய்வு நேரங்களில் அவனுக்கு தெரிந்த கீற்றுத் தட்டி கடையில் உட்கார்ந்து கவிதை நூல்களை படித்துக் கொண்டிருப்பான். அந்த கடையின் எதிர்த் திசையில் அந்த நிலவு உதயமானது. பகலில் முழு நிலவு உதயமானதை அன்றுதான் அவன் பார்த்தான். கடைக்கு எதிரில் இருந்த முஸ்லீம் குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து தான் அந்த அழகு நிலா தன் முகம் காட்டியது. உடைமூடிய இடம் போக மற்றவை ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
அவள் முன் நடந்தால் முழு அழகும் பின் அசைவில் பேரழகும் பிரியாமல் சென்றது. சித்திரமும் சிற்பமும் எழுந்து நடந்தால் அந்த சிங்காரி போல் நடக்கும் என்று எண்ணிக் கொண்டான். காவிய கதாபாத்திரங்களை படித்த அவனுக்கு அந்த நாயகிகளில் ஒருத்தி தன் முன் நடமாடுவதாகவே தோன்றியது. பார்த்தான்.... பார்த்தான்.... பல நாள் பார்த்த வண்ணமே இருந்தான்.
நடந்தாலும் கிடந்தாலும் பார்த்தான் நனைந்தாலும் காய்ந்தாலும் நாலு பேரோடு பேசினாலும் அவளைப் பார்ப்பதிலேயே தன் விழிகள் வினையாற்றுகின்றன என்பதை உணர்ந்தான்.
அவள் தந்தை தங்க வியாபாரம் செய்பவர் அதனால் தான் அந்த தங்கச் சிலையைப் பெற்றாரோ என எண்ணி மகிழ்ந்தான்.
அவன் பார்வையின் பொருளை செய்பவர் அதனால் தான் அந்த தங்கச் சிலையப் பெற்றாரோ என எண்ணி மகிழ்ந்தான்.
அவன் பார்வையின் பொருளை புரிந்தாளோ என்னவோ அவளும் அவனைப் பார்த்தாள். இருவருக்கும் இடையில் இருநூறு அடிகள் அந்த இடைவெளி இருட்டை தங்கள் விழிகளால் விரட்டினர். கண்ணொளியினால் காதல் உணர்வுகளை பரிமாறி உண்டனர்.
ஆனிப்பொன்னால் அச்சிட்ட அந்த உடலை ஆடையின்றி காண அவன் ஆசை கொண்டான். பார்வைகள் சிரிப்புகள் சைகைகள் கண் சிமிட்டல்களை தாண்டி அன்று ஒரு துண்டுத் தாளில் ஓரிருவரிகளில் தன் ஆசையை வெளிப்படுத்தி அவள் பள்ளி செல்லும்போது கண்ணில் படுமாறு போட்டான்.
பிறந்த மேனியுடன்
உனைக்காண வேண்டும்!
பிறவியில் முழுப்பயனை
நான் அடைய வேண்டும்!
இப்படித்தான் அந்தத் துண்டுத்தாளில் எழுதியிருந்தான். மறுநாள் காலையில் அவளுடைய வீட்டின் பக்க வாட்டில் இருந்த கீற்றுத்தட்டி மறைவில் உள்ள குளிக்கும் இடத்தில் இருந்து அந்த பூங்குயில் கீதம் இசைத்தது.
உன்னைக் கண் தேடுதே - உன்
எழில்காணவே உள்ளம் ஏங்குதே;
நடந்து வந்த அவன் சட்டென்று நின்று கீற்றுத் தட்டியின் இடைவெளியில் தன் கண்களை நுழைந்தான். அங்கு தண்ணீர் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தது. சொம்பு நீர் உச்சியில் விழுந்தது. உடலெங்கும் வெள்ளியாய் ஓடுகிறது. தங்கமேரி தந்த மேனியாய் தளிர்மேனியாய் தகத்தகாயம் காட்டியது. காலை இளங்கதிரின் ஒளிமலை அந்த மேனியில் பட்டு அவனைக் கண் கூச வைத்தது.
எல்லாம் காணாத வசந்தத்தை அன்று அவன் வாழ்வில் கண்டான். கலை மோகம் கொண்ட அவன் அந்தக் கோதையின் உடலை கோவில் சிற்பமாகவே கண்டான். கொச்சையாக கொள்ளவில்லை.
பின் கண்ணால் கதைபேசியே பல நாட்களை கழித்தனர். நாளும் பார்த்து இன்பத்தை நெஞ்சளவில் பயிர் செய்தனர். ஒரு நாள் தன் தோழியிடம் சொல்லியிருக்கிறாள். நானும் அவனும் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் நேசிக்கிறோம். ஆனால் இணைந்து இல்லறம் நடத்த இயலாது என்றே கருதுகிறேன். காரணம் எங்கள் வீட்டில் மதக் கட்டுப்பாடும் பற்றும் மிக அதிகம் என்னால் மீற இயலாது. பொருளாதார நிலை அவனையும் என்னோடு இணையவிடாது. பின் அவளுக்கு மணம் பேசினார்கள். கல்யாணம் நடந்தது. பிள்ளைகள் பெற்றாள். ஆனால் இன்றும் அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அவள் கண்களில் காதல் உணர்வுகள் அலை மோதவே செய்கிறது.
மீண்டும் அவன் வெளியூர் சென்றான். நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். கத்தோலிக்க மீனவர்கள் நிறைந்த பகுதி. கல்வி மிகுந்த மக்கள், அங்கிருந்து ஒரு ஓட்டலில் வேலை செய்தான். கடற்கரையோரம் இருந்த அந்த ஊர் மிக அழகானது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகாலை நாலுமணிக்கெல்லாம் நல்ல உடைகளை அணிந்த நாயகன் ஏசுவை வணங்கவும், ஆலயப் பாதிரியாரின் அறிவுரையைக் கேட்கவும் ஆண், பெண், இளைஞர், யுவதி, சிட்டுகளாய்ப் பறக்கும் சிறுவர் சிறுமியர் அனைவரும் அந்த ஆலயத்தல் கூடுவர். நாலுமணிக்கே நந்தவனம் நடந்து செல்வதாகவே நங்கையரின் உடைகள் தோன்றும்.
வியாபாரம் இல்லாத நேரங்களில் அவன் அந்த கடை முன் அமர்ந்து ஏதாவது கவிதை நூல்களை படித்துக் கொண்டிருப்பான்; அன்றும் அவன் குனிந்து நூலைப் படித்தவன் நிமிர்ந்தான். அந்த கடையின் எதிரில் இருந்த இல்லம் ஒரு மலர்த் தோட்டமாக மாறியிருந்ததை காணமுடிந்தது. வித்தையொன்றை பார்க்கின்ற வியப்பு அவன் விழிகளில்.
வண்ண மலர்கள் அனைத்தும் ஒரே வடிவெடுத்து வந்து அந்த வனிதையாய் நின்றது போலிருந்தது. வசந்தமே அந்த வாசலில் நிற்பதாய் எண்ணிக் கொண்டான். அங்கங்களில் இப்படியொரு அமைப்பா? அதிசய உணர்வுகளால் அவன் அலை பாய்ந்தான்.
காலை உதயமானது மாலை மங்கியது. நாட்கள் நடந்து சென்றன. அவன் இதயமெல்லாம் அந்த இளங்கிளியின் எண்ணமே மேலோங்கியது. விழிகள் அந்த வாசலையே வட்டமிட்டது. அவனுக்கு வேலை படவில்லை.
அந்த வீட்டிற்கு ஓட்டலில் ஏதாவது உணவு பொருள் பார்சல் வாங்குவது வழக்கம். ஒரு நாள் அந்தப் பார்சலில் உள்ள இலையில் பேனாவால் சிலவரிகளை எழதினான்.
சிலை உடல் மீது ஆசை வைத்த
இலை மடல் மீது பாவிசைத்து
ஏழை நான் தூது விட்டேன்
ஏற்பாளோ? மறுப்பாளோ?
அன்றும் மாலையில் ஒரு கவிதை நூலை படித்துக் கொண்டிருந்தான். எதிர் வீட்டு வாசலில் வனப்பு மிகுந்த அந்த வனிதாமணி தன் முழு நிலவு முகத்தில் முறுவல் ஒன்றை தவழவிட்டாள். பின் சைகையால் அவனிடமுள்ள அந்த கவிதை நூலைக் கேட்டாள். அப்போது அந்த மீன் கண்களில் தோன்றிய மானின் மருட்சி... அவன் இதயத்தில் இன்பத்தை பூக்க வைத்தது. நாற்பது அடிகள் நடந்து சென்று அந்த நளினத்தின் கைகளில் அந்தக் கவிதை நூலை தவழவிட்டான். காதல் மலரை அவள் கண்ணில் சொருகி விட்டான். ஆதரத்தை விரித்து அவள் இதயத்தை அள்ளினான். பிறகென்ன.. காலையில்... மாலையில் வாரத்தில் இரு நாட்கள் அதிகாலையில் கண்கள் சாந்தித்தன கதைகள் பேசின! கவிதை நூல்கள் கை மாறின. அவன் அந்த நூல்களில் உள்ள இனிய பகதிகளில் அடிக்கோடிட்டுத் தன் உணர்வுகளை அவனுக்கு உணர்த்தினாள். அவனும் அவளை பின் தொடர்ந்தான். அவளைப் பற்றி தெரிந்த செய்திகள். அவள் பெயர் ஜெனிபர். குணக்குன்றாய் திகழ்ந்த தம்பதியர்க்கு கொழும்பில் பிறந்தவள் இந்த குளிர் நிலவு. தாய் தந்தையர் முன்பே இங்கு வந்துவிட்டனர். கொழும்பில் பாட்டி வீட்டில் இருந்து பள்ளியில் தொடங்கி இளங்கலை வரை பயின்றவள். இருமாதங்கள் முன்புதான் கொழும்பிலிருந்து இங்கு வந்தாள். இயற்கையாய்த் தோன்றும் இளவயது உணர்வுகள் அவர்கள் இருவரையும் இணைத்து இதயத்தை இனிப்பால் குளிப்பாட்டியது. அவனை அழ வைத்த அந்த ஞாயிற்றின் அதிகாலையில் ஆலயம் செல்லும்போது அவனும் அவள் அருகில் நடந்து சென்றான். கண்ணில் நீர் தவழ குரல் தழுதழுக்க அவன் காதருகே சொன்னாள். இங்கு நான் தங்கியிருந்த இருமாத காலத்தில் என் இதயத்தை நீ எடுத்துக் கொண்டாய் இது வரை நான் உணராத இனிய உணர்வை என் உள்ளத்தில் பயிர் செய்தாய். நினைவுகள் கனவுகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாய். கல்லூரி காலத்தில் கூட காத்து வைத்திருந்த என் உள்ளத்தை களவாடி விட்டாய். உன் கலையுணர்வும், கவிதை ஈடுபாடும் என்னைக் கவர்ந்தன. கண்மூடும் வரை என் கண்ணனை மறக்க மாட்டேன் என்றாள். சில நாட்களில் கொழும்பு சென்றாள். செல்லும் நாளில், முன்பெல்லாம் கொழும்பு செல்லும்போது குதூகலம் என் நெஞ்சைத் தாலாட்டும், இப்போது உன்னைபிரிவது, உன்முகம் பார்க்காமல் இருப்பது வேதனையைத் தருகிறது. எனினும் உன் நினைவுகள் என்னை நிம்மதியுறச் செய்யும். மீண்டும் சந்திப்போம் என்று விம்மியபடியே விடைபெற்றாள்.
அவளுடைய பிரிவு இதயத்தை பிசைந்தது. உறைந்த உள்ளத்தோடு அவளைப் பிரிந்தான். அவள் கொழும்பு சென்றாள். இவள் சொந்த ஊர் திரும்பினான். பின் அவனுக்கு கிடைத்த செய்தி அவள் தன் தாய் மாமனை மணந்து விட்டாள் என்பதுதான்.
அவன் மூச்சில் கலந்து அந்த மூவரின் உணர்வும் முடிவும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. பகுத்தறிவாளன் என்றாலும் மதப்பிடிப்புள்ள குடும்பத்தை சேர்ந்த அப்பாவையர் மூவரும் அவன் மீது காட்டிய பாசமும் காதலும் மாசற்றதாய் விளங்கியது. இந்த மத சிந்தை கொண்ட எழிலரசி ஜெயாவும் மக்காடிட்டாலும் முழு நிலவு முகம் காட்டி அவன் உணர்வில் ஒளியேற்றிய முஸ்லீம் பாவை பீவியும், பெர்ணான்டோ குடும்பத்தின் பெருமாட்டியாய் பிறந்த திருமகள் ஜெனிபரும் அவன் உள்ளத்தில் இன்றும் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றனர். நினைவுகளை தித்திக்க வைக்கின்றனர். முதலில் முறுவலித்து பின் இதழ் திறந்து முத்துப் பல்வரிசை காட்டி மோகனம் எழில் சிந்தியது போன்றே இப்போதும் மகிழ்விக்கின்றனர்.
தாவணி விசிறிகள் கொண்டு அவன் வழிவழியாய் இதயத்தை தாலாட்டி இதப்படுத்திய நாட்கள் இன்றும் இனிக்கவே செய்கின்றன. பத்தாண்டுகளில் பசுமை நிறைந்த பல நேரங்களில் அவனும் அவர்களுமாய் இருந்த நாட்களிலெல்லாம் கவிஞர் பெருமக்கள் அவனுக்கு துணையாய் இருந்தனர்.
கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொல் எப்பயனுமில என்று வள்ளுவன் வந்தான்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பன் தன் கவிதை அம்புகளை எய்தான்.
கண்ணம்மாளின் பெயர் சொன்னாளே வாயில் அமுதூறும் என்ற பாரதியின் நினைவில் அவர்கள் பெயரை உச்சரித்த போதெல்லாம் அவன் அமுதக் கடலில் தானேமிதந்தான். பார்க்கும் இடங்களெல்லாம் உன் பசிய நிறம் தெரியுதடா நந்தலாலா என்பது போல் பசுமைக் காட்சியெல்லாம் அந்தப் பைங்கிளிகள் முகமே தெரிந்தது.
வேல் விழியாலே என் விலாவை குத்தாதே என்று காதல் வேதனையை வெளிப்படுத்திய பாவேந்தரின் அழகின் சிரிப்பெல்லாம் அந்த அழகு நங்கையரே ஆதிக்கம் செலுத்தினர். படிக்கும் நூலின் பக்கங்களை புரட்டினால் அந்த பனிமலர்ப் பாவையர் அவனைப் பார்த்து புன்னகைத்தனர்.
மதப்பற்றும் குடும்பக் கட்டும் மீறி கோடு தாண்டி வந்து அவன் உடல் தொட்டு அந்த பூங்கொடிகள் படரவில்லை என்றாலும் தங்கள் இதயத்தில் கொலு வைத்து அவனை கொண்டாடினர். உள்ளத்தை நேசித்தனர் உறவை யாசித்தனர்.
இதழ் ஒன்றின் கடைசி பக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதினான். “நான் அந்த விடுதியில் தங்கியிருந்தேன் விடுதியின் எதிரில் இருந்த வீட்டில் மஞ்சள் பூசி குளித்த முகம் மலர் தழுவிய கூந்தல்... அடடா அழகிய அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நான் தான் பார்த்தேன் அதற்கு பிறகு எத்தனையோ ராஜகுமாரிகளை மஞ்சத்தில் சந்தித்திருக்கிறேன் அவர்கள் நினைவில் இல்லை” அது ஆத்மாவின் ராகம் இது சரீரத்தின் தாளம். ஆவியில் கலந்து விட்ட அந்த ஆத்மாவின் ராகமாகவே இன்றும் அவனை ஆனந்தப்படுத்துகிறார்கள்.
காதலின் ஆழம் அல்லது வேகம் ஆகியவற்றின் அளவுகோலான வரலாற்றுச் செய்தி.
காதல்கவிஞன் பைரனை கன்னியர் பலர் அவன் கவிதை வழியாக காதலித்தனர். அவன் மரித்து மரன ஊர்வலம் இலண்டனில் நடந்தபோது அந்த பெண்களில் பலர் தங்கள் கணவர்களின் மார்பில் செத்துக் கிடந்தனர்.
அலைமோதும் நெஞ்சமெல்லாம் அடங்கி அமைதியாய் வாழும் அவன் இன்றும் காதல் வயப்படுகிறான். தன் அன்பு மனைவியை காதலிக்கிறான். அருமை மகன்களை காதலிக்கிறான். மண்ணை, இனத்தை, மொழியை காதலிக்கிறான். உயர்வு உலகம் செல்லும் ஒவ்வொர அசைவையும் காதலிக்கிறான்.
முக்கனியில் சுவை உணர்வோடு அந்த மூவரையும் காதலிப்பான். சமயச் சடங்குகளிலும் மதக் கோட்பாடுகளிலும் நம்பிக்கையும் பற்றும் கொண்ட நங்கையர் மூவரும் அந்த நாத்திகன் மீது கொண்ட மாசற்ற காதல் அவன் உயரில் கலந்து விட்டதால் மரணத்தின்பின் கூட அதை மறக்க முடியாது.
தமிழராய் கூடுவோம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம், பஸ்கள் ஓடவில்லை, கொலை, கொள்ளை, தீவைப்பு, ஆட்கடத்தல்-எரிப்பு என்று கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இதழ்கள் தலைப்புச் செய்திகளில் பறை சாற்றி வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர், சாதிச் சங்கத்தினர் சிலர் அரசை சாடுகின்ற வகையில் அறிக்கைகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
சாதிக் கலவரங்கள் நடப்பது ஏதோ இன்று தான் அதுவும் தி.மு.க. ஆட்சியில்தான் என்பது போல் ஒரு கற்பனைப் பிரசாரத்தை பரப்பிவிட்டு தி.மு.க. கொடிக்கம்பங்களை சாய்ப்பது கலைஞரின் கொடும்பாவியை கொளுத்துவது என்று கொடிய செயல்களுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சாதிக் கலவரங்களின் வரலாறு நாற்பது ஆண்டுகளுக்குமுன் காங்கிரஸின் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கி விட்டது. யாருடைய நலனுக்காகவோ எங்கேயோ பின்னப்பட்ட சதிவலையின் காரணமாக தமிழ்க்குலத்தின் இருபெரும் சமுதாய மக்களிடைய வெறுப்புணர்வு விதைக்கப்பட்டது.
அந்த வெறுப்புணர்வு தொடர்ந்து வளர்க்கப்பட்ட பலர் நீருற்றி உரம் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உணர்ச்சிவயப்படும் அந்த சமுதாய இளைஞர்களுக்கு கொம்புசீவும் வேலை சிலசிறுபான்மை தலைவர்களால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றமும் மைனாரிட்டி மதவாதிகளின் சமத்துவ சகோதரத்துவ சங்கம் எனும் நடவடிக்கையால் புளியங்குடி கலவரமும் அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிறுசிறு மோதல்களும் வெடித்தது.
அதைத் தொடர்ந்து சிறுபொறி பெரு நெருப்பு என்பது போல சாத்தூர், போடி, இராஜபாளையம் பகுதிகளில் என்று சண்டைகள் நடந்தன. இராமநாதபுரம் சீமையில் சிலநாள் சீரழிவுகள் தொடர்ந்தன.
ஜெயலலிதா ஆட்சியில் வரலாறு கானாத அளவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது. காரணம் அந்த இருபெரும் சமூகத்தில் உள்ளவர்கள் அ.தி.மு.களில் செல்வாக்கு மிக்கவர்களாக ஆனார்கள்.
அவர்களுக்குள் உள்ள பனிப்போர் சாதிப்போர்வைக்குள் சண்டையாக மாறியது. இந்தப் பகுதி நாறியது. இதைத் தவிர அந்த இரு சமூகங்களில் உள்ளவர்கள் உள்ளப்பூர்வமாக பகை கொண்டு நேருக்குநேர் களத்தில் நின்றவர்களா என்றால் அதுதான் இல்லை. இலட்சக்கணக்கான எண்ணிக்கை கொண்ட அந்த சமூக மக்களில் ஆயுதமேந்தி கொலை வெறி கொண்டு அலைவோர் சில தூறுவேர்கள் தான். மற்றவர்ள் உழைப்பாளிகள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் அப்பாவிகள். ஆனால் இருபிரிவு மக்களிடையே சுயநலவாதிகள் அல்லது பொழைக்கத் தெரிந்தவர்கள் பகையுணர்வை மூட்டி வளர்த்து வந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதன் விளைவு சற்று அதிகமான அளவில் பதற்றத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. இங்குள்ள சாதி உணர்வுகளை நிலைப்படுத்தும் சங்கதிகள் நிறையவே இருக்கின்றன. நால்வகை சாதியை இறைவனே நியாயப்படுத்துகிறான். நடைமுறையிலோ சாதிகள் பல்கி பெருகி விட்டன. ஆலய விழாக்கள் சாதிக்கொருநாள் (அதாவது மண்டகப்படி) என்று நடைமுறை ஆகிவிட்டது.
விழா நாட்களில் வெறியூட்டும் ஆட்டமும் இசைக்கருவிகளும் ஏராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. உறங்காமல் விழித்திருக்கும் மதுக் கடைகளும், அவற்றிற்குப் போட்டியாக விளங்கும் உள்ளூர் சரக்குகளும் வேண்டாத விளைவுகளை நாளும் வளர்த்து பூச்சூடி அலங்கரித்து நர்த்தனமாட வைக்கிறது. பிறகென்ன நானா? நீயா? யார் பெரியவர் என்பதில் தொடங்கி உயிர்பறிக்கும் எண்ணிக்கையில் உற்சாகம் கொள்கிறது சாதிவெறி. சமூகத் தலைமைக்குள் சில அரசியல்வாதிகள் புகுந்து கொண்டு மக்களை தவறான பாதையில் வழி நடத்தவும் செய்கிறார்கள்.
சாதிச் சங்கங்கள் தங்கள் பணிகளின் எல்லைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். எல்லை மீறி செயல்படக் கூடாது. அதவும் அரசியலையும் அரசியல் கட்சிகளையும் சாதிச் சங்கத்தின் கீழ் கொண்டு வர முயலக் கூடாது.
ஏனெனில் எந்தச் சாதிச் சங்கமும் தனித்து நின்று அரசை பிடித்துவிட முடியாது அரசியல் கட்சிகளின் துணையின்றி தங்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்துவிட முடியாது.
அந்தக் கட்சியை வெறுத்துவிடு, இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடாதே என்றெல்லாம் தங்கள் மக்களை விரட்டக் கூடாது. மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் பட்டியலிட்டுக் காட்டி அதைப் பெற்றுத் தரும் முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
கல்வியில் தங்கள் மக்களை முன்னேற்றுவதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். தங்கள் மக்கள் முழுமையும் கற்றவர்களாக மாறி விட்டார்கள் என்ற நிலை வரும் வரை தங்கள் முயற்சியை முனைப்போடு செய்ய வேண்டும். சமுதாய தலைமைக்கு கற்றவர்களை நல்லவர்களை கொண்டு வர வேண்டும்.
அதைவிட சிறந்த எண்ணம் அந்த மக்கள் தங்கள் இதயத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டம். தங்களை இன்ன சாதிக்காரர்கள் என்று நினைப்பதைவிட தாங்கள் தமிழர்கள் என்று நினைத்துப் பார்த்தால் அதற்குள்ள சிறப்பும் வரலாற்றுப் பின்னனியும் மனதிற்கு மகிழ்வைத் தரும். பிற மாநில மக்களை கூட நாம் தமிழர்களாக மேன்மக்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் வளவாழ்வை அவர்களுக்கு வழங்கி நாம் வறுமைத் தீயில் வாடியிருக்கிறோம். பல்லாண்டுகாலம் அவர்களை ஆட்சியில் கூட அமர்த்திருக்கிறோம். ஆனால் இந்த மண்ணில் பிறந்த தொல்குடிகளில் இருவர் உட்பகையால் உருக்குலைவது சரிதானா? உயர்வைத் தடுப்பது முறைதானா? பொருளாதாரத்துறையில் கால் வைக்காது போர்க்கள வீரம் பேசுவது தேவை தானா? உள்ளத்தில் சினம் கொண்டால் அது சிந்தனையைச் சிதறடிக்காதா? ஏற்றமிகு வழிகளை இழந்துவிடும் நிலை வராதா? தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே எண்ணிப் பார்ப்பீர்! நலம் தரும் வழிகளை நாடுவீர், தமிழர்களாய் கூடுவீர்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கல் சாதிகளை மறந்து தமிழராய் மாற வேண்டும் என்னும் உணர்வோடு நாளெல்லாம் பாடுபடும், போராடும் முதல்வர் கலைஞர் அவர்களின் மேலான சிந்தனைக்கும் கவனத்திற்கும் இதைக் கொண்டு வருகிறோம்.
தமிழர்கள் இன்றுவரை சாதிகளாலும் பல்வேறு குறுகிய உணர்வுகளாலும் தங்கள் உணர்வுக்கு நடைபோட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஒற்றுமை உணர்வுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அவர்களை கொண்டு வர வேண்டும் என்றால் புதிய வழியில் அறிவியல் முறையில் தான் கொண்டு வர வேண்டும். பழைய நினைவுகளை தூண்டும் வகையில் இனி எதையும் இங்கு செய்யலாகாது. வரலாறு, இனம் என்றெல்லாம் சிறப்புக்குரியவற்றை இங்கே புரிந்து கொள்ளவிடாமல் இடையூறு செய்வது பலருக்கு இயல்பாகி விட்டது. இங்கு நிகழ்பவை எல்லாம் தமிழருக்கே என்று மட்டுமே நினைக்கின்ற வகையில் இங்குள்ள அனைத்து செயல்களும் பெயர்களும் இருக்கின்ற வகையில் முதல்வர் வழிகாட்ட வேண்டும். மற்றொன்று வன்முறையால் எதையாவது சாதித்து விடலாம் என்று சாதிச் சங்கங்கள் நினைத்து சட்டமீறல் செயல்களை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் காவல்துறை மண்டியிட்டு வணங்குவது போல் சமாதானம் பேசுகிறார்கள். நல்லவர்களை துன்பப்படுத்தக்கூடாது என்பது தான் நல்லரசின் நோக்கமாக இருக்கவேண்டுமேயொழிய நாசசக்திகளை வளர விடுவதில் தயை காட்டக் கூடாது. ஒரு தவறை இருவர் செய்தால் விசாரிப்பதில் இருவேறு அணுகுமுறை இருக்க கூடாது.
காவல்துறையின் திறமை அணுகுமுறையில் இன்னும் கூர்மை வேண்டும். கலவரப் பகுதிகளில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றுதல், பழைய குற்றவாளிகளை கைது செய்வது என்பதெல்லாம் நிலைமை மோசம் அடைவதற்குள் செய்யப்பட வேண்டும்.

வன்முறை எந்தக் கோணத்தில், எந்த வடிவத்தில் வந்தாலும் யார் செய்தாலும் சற்று கடுமையைக் காட்டத்தான் வேண்டும். ஏனெனில் மக்கள் தொகைப் பெருக்கம் பல தொல்லைகளை தொடர்து வரும். துவக்கத்தில் அவற்றை துடைத்தெறியாவிட்டால் துயரங்கள் சூழ வழி வகுக்கும்.

No comments:

Post a Comment