Thursday 13 August 2015

கூர்மையடைந்திடக் கூடுவது எப்போது?

கூர்மையடைந்திடக் கூடுவது எப்போது?
உலகம் முழுவதும் இனம் மொழி சார்ந்த உணர்வுகளை மக்களை ஆளுமை செய்கிறது. ஓரிடத்தில் தோன்றி வளர்ந்த உறவுக் கூட்டம் என்றாலும் பலவகையில் வேறுபாடுகள் வேர் விட்டு படர்ந்து வளர்ந்திடக் காண்கிறோம்.
ஒரு குடும்பத்திற்குள் உறவுகளிடையே வேறுபாடுகளால் உருவாகி பகையாக பரிணமித்து விடுவதைக் காண முடிகிறது. பின் அது சில காரணங்களால் பனிபோலக் கரைந்தும் விடுகிறது. நீரடித்து நீர் விலகாது என்று எண்ணி இனிமையை மனம் பெற்று விடுகிறது.
சூழல்கள் தரும் இந்தச் சிக்கல்கள் எல்லா இடங்களிலும் இருந்தாலும் தமிழர்களிடையே இருக்கும் சங்கடங்கள் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
தொன்மைக் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை உட்பகை உணர்வுகள் ஓயாது வளரக் காணலாம். மானத்தை உயிராகக் கொண்டதால் பகை தோன்றுகிறது என்றாலும் இந்த நீரடித்து நீர் விலகாது எனும் நிலை மட்டும் ஏன் இங்கு நிலைபெறவில்லை.
இந்தத் துணைக் கண்டத்தில் பல்வேறு நாடுகள் அடிமைப் படுத்திய போது தென்னகத்தை எவனும் தீண்டியதில்லை. 13ம் நூண்டுகள் வரை கூட இந்தப் பகுதியை வெல்ல முடியும் என்று எண்ணமும் துணிவும் பிறக்கவில்லை.
அதன்பின், தென்னகத்தில் நடந்த உட்பகை உட்பிரிவுகள் அதனால் விளைந்த குழப்பம், நிலையற்ற அரசுகள், உள்ள உறுதியற்ற ஊனமனம் ஆன்மீக மனிதர்களின் ஆளுமைதான் அன்னயருக்கு தென்னகத்தின் மீது போர்தொடுக்கத் தூண்டியது. கி.மு.வில் மௌரியர்கள் முயன்றார்கள் தோற்றார்கள், ஆனால் ஔரங்கசீப்பின் தளபதி அலி என்னும் திருநங்கையின் மாலிக்காபூரிடம் தென்னகம் வீழ்ந்தது.
அதன் பின்னாவது ஒற்றுமை உணர்வு கொண்டு வீழ்ச்சியைத் தடுக்க நினைத்தார்களா? இல்லை. காரணம் மனதில் மகாபாரதக் கதை ஆழமாகப் பதிந்து விட்டதால் பகை எனும் பாழ் நிலைகள் படர்ந்து பதிந்தவண்ணம் இருக்கிறது.
உலகில் கல்வி நிலைகள் வளர்ந்து கலைகள் பல வளர்ந்து சிறந்த வாழ்வியலை வளப்படுத்தி வரும் இந்தக் காலத்தில் கூட தமிழர்களை பிரித்து வைக்கும் உட்பகை ஊக்கத்துடன் உள்ளத்தில் உறைந்து இருப்பது சரிதானா?
சாதாரண மக்களிடம் மட்டுமல்ல, பொது அறிவு பெற்று புகழ்நிலை சார்ந்தவர்கள் கூட இந்த சாதீய சகதியை தலைமுழுவதும் சுமக்கக் காண்கிறோம். ஆதிநாளில் இருந்து இன்றுவரை தமிழும் தமிழரின் செழுமைகளும் அதன் சிந்தனைச் சீர்மையும் எழுத்தில் இருக்கிறதே தவிர வாழ்வில் சிறப்பாக கைப்பிடித்து நின்றதாக வரலாறு இல்லை. அந்நிய ஆகாத கருத்துக்களை தமிழர்கள் மனதிலும் வாழ்விலும் நிறைந்திருக்கக் காண்கிறோம்.
இன்றும் குழுக்குழுவாய் கோணல் வழிச் செல்லும் அனைத்துக் குழுக்களும் அறம் பொருள் இன்பம், இயல் இசை கலை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் உணர்வுகளில் உள்ளத்தைப் பதியவைத்து உணவில் கூரேற்றி உரிமைகளை நிலைநாட்ட ஒன்றாகக் கூடும் நாள் வருமா?
நியாயமற்று ஒருவன் பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு தமிழனும் துடித்தெழ வேண்டும். அந்த ஒருவனின் துன்பத்தைத் துடைக்க ஊரே எழ வேண்டும். இந்நிலை தோன்றுமா?
தேவையானதைச் செய்வோம்
கணிப்பொறி தொழிற்நுட்பம் சிறந்து வாழ்வில் பல்வேறு செழுமைகளுக்கு ஊட்டச்சத்தாக விளங்குகிறது. நொடி நேரமும் கணினியில் தயவில்லாமல் எந்த நிகழ்வும் இங்கே இயங்காது என்ற சூழல் நிலையாகி விட்டதாக உணர முடிகிறது.
சற்று நேரத்திற்கு முன் தோன்றிய புதுமைப் பொருட்கள் கூட பழசாகும் நிலையில் புதுப்புது வடிவங்களில் வந்தவண்ணம் இருக்கக் காண்கிறோம்.
நாடுகள் பலவற்றில் நடைமுறைச் சாத்தியப்பாடுகளை ஆய்ந்து அறிந்து உண்மைகளுக்கு ஊக்கமூட்டும் முடிவு காண்கிறார்கள். எந்த ஓர் ஆய்விலும் மனித வாழ்வின் நலன் நாடும் பொருட்களையும் அந்தப் பொருட்களின் தரவுகளையும் அதை உண்டாக்கும் செயல் முறைகளையும் வகுத்து வழங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.
இந்தத் துணைக்கண்டத்தில் மட்டும்தான் ஆகாத கொள்கைகளையும் ஆரியச் சிந்தனைக் கருத்துக்களையும் புடம்போட்டு புனிதமாக்கும் பொல்லாத வேளையும் பொழுதெல்லாம் செய்து மகிழ்கிறார்கள்.
ஏடுகள், இதழ்கள், நூல்கள், ஊடகக் காட்சிகள் அனைத்தையும் உற்று நோக்கினால் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். நாகரீகம் என்பது உடல், உடை, ஒப்பனைக்களுக்காக சொல்லப்பட்டது அல்ல அதை உள்ளத் தெளிவுக்காக ஓர் உயரிய ஒழுங்குமுறைக்காக, நல்லுணர்வுக்காக, அறிவு நாணயத்திற்காக முன்னெடுத்து மொழியப்பட்ட முது சொல்லாகும்.
அப்படிப் பார்த்தால் நடக்கின்ற நிகழ்ச்சிகள் முழுவதும் நாகரீகம் சார்ந்து நிகழ்கிறதா? எண்ணங்கள் கருத்துகள் இவற்றின் வெளிப்பாடுகள் இந்த இனிய சொல்லுக்குள் இருப்பது தானா? எண்ணிப் பார்ப்பதே நலமாகும்.
தலையணைக் கணத்தில் இருக்கின்ற ஆய்வுப் புத்தகங்களை புரட்டிப் புரட்டிப் பார்த்தால் ஏற்கனவே சொல்லப் பட்டதையும் எந்த முன்னேற்றத்திற்கும் துணை செய்யாததையும் துடைத்துத் துடைத்து தூய்மை செய்கிறார்கள்.
பழைய வடிவங்களைப் பார்த்தால் ஏற்கனவே சொல்லப்பட்டதை சிறிய மாற்றத்துடன் சொல்வதைக் காணலாம். எடுத்துக் காட்டாக வள்ளுவர் சொன்ன
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்பதை அவ்வையார் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்.
மற்றொரு குறளில் வள்ளுவர்,
கனவிலும் இன்னாது மன்னோ மனம் வேறு
சொல்வேறு பட்டோர் தொடர்பு.
என்பதை வள்ளலார் அவர்கள்,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்.
இந்த இரண்டு கருத்துக்களையும் வள்ளுவர் சொன்னபின் இவர்கள் ஏன் சொல்கிறார்கள். இது ஒரு பழக்கமாக பற்றிக் கொள்கிறது. இது கூட பரவாயில்லை, ஆனால் இன்னொன்றையும் பார்ப்போம்.
அப்பாவித் தமிழர்கள் மட்டுமல்ல, அறிவாளிகள், ஆய்வாளர்கள் கூட எந்தவித அறிவுக் கூர்மையையும் முன்னேற்றத்தையும் தராத ஆரிய வேதக் கருத்துக்கள் தான் ஆளுமை செய்கிறது.
மிக மிக கெட்டிக்காரத்தனமாக தமிழர்களிடம் திணித்து நிலைப்படுத்தப்பட்ட இந்த அசிங்கங்களை அவலங்களை குப்பைக் கூழங்களை மீண்டும் கிளறி நாற்றம் எடுக்கிறதா நறுமணம் கிடைக்கிறதா என்ன எண்ணமே இந்த ஆய்வாளர்கள், அறிவாளிகளிடம் நிலைகொண்டிருக்கிறது.
எந்தவிதமான ஏற்றமும் மாற்றமும் ஏற்படுத்தாது மட்டுமல்ல, இழிவையும் நலிவையும் உண்டாக்கிய ஆரிய வேதக் கருத்துக்களை காட்சிகளை ஓங்கி ஒலித்து, உலா, ஊர்வலம் நடத்துபவர்கள் மத்தியில் சில ஆய்வாளர்கள் அதுவும் தமிழ் மீது தணியாத பற்றுக் கொண்டதாக காட்டுபவர்கள் தமிழ் இலக்கியங்களில் எல்லாம் சரிதானா என்று ஆய்வு செய்து, குறை காட்டி, குற்றம் சுமத்துபவர்களைப் பார்க்க மனம் வேதனையடைகிறது.
தொல்காப்பிய இலக்கணம் சரிதானா? ஏற்புடையதா? வள்ளுவன் குறள்கள் எல்லாம் எல்லாவற்றிற்கும் பொருந்துமா? இளங்கோவின் படைப்பில் எத்தனை குறைகள் என்றெல்லாம் வெளிப்படுத்தி, தங்கள் இழிகுணத்தைக் காட்டுகிறார்கள்.
ஒன்றை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. உயிர்கள் உருவாவதற்கு முதற்பொருள் எதுவென்ற வினாவிற்கு உலகம் முழுவதும் உள்ள மதங்கள், இலக்கியங்கள், மாமேதைகள், சான்றோர்கள், ஞானிகள், ரிஷிகள் எல்லாம் ஆதிகாலத்தில் கடவுள் என்றே சொன்னார்கள்.
ஆனால், தொல்காப்பியன் என்ற தமிழன்தான் நிலம் தழுவிய நீர் என்றான். இன்றல்லா, என்னென்றும், இங்குமட்டுமல்ல எல்லாக் கோள்களிலும் உயிர்கள் உருவாக நீரும் நிலமும்தான் என்ற அறிவியல் உண்மையை ஆதிகாலத்தில் உரைத்தவன் தொல்காப்பியன்தான்.
இன்றைய உலகில் அறிவியல், ஆய்வு நிலைகளில் அதிகம் சார்ந்தது தமிழும் அதன் வடிவங்களும்தான். அதில் ஆய்வு செய்கிறேன், தரவு பார்க்கிறேன் என்று தமிழ் இலக்கியங்களை தலைகுனியச் செய்யாதீர்கள். நல்லோர் உள்ளத்தை புண்ணாக்கும் செயல்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். குறிப்பாக தமிழ் ஆதரவாளர்கள் இதுபோன்றவற்றில் மனதைப் பதிய வைக்காதீர்கள்.

இங்கே நீக்கப்பட வேண்டிய நிந்திக்கப்படவேண்டிய நிறைய நிறைய கருத்துக்கள் காட்சிகள் காடென நிரம்பி வருகிறது. நிறைந்து கிடக்கிறது. அவற்றை அழிக்கின்ற ஆய்வுகளில் ஆக்கமிக முடிவுகளை எடுத்துச் செயல்படுங்கள்.

No comments:

Post a Comment