Thursday 13 August 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள். நீங்காத நினைவில் நீந்துகின்ற நீயா? நானா? நிகழ்வில் பெரியவர்களின் எரிச்சலும் இளையவர்களின் பதில்களும் எனும் தலைப்பில் பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இரண்டு தரப்பிலும் இருக்கின்ற குறைகள், இடையூறுகள், இழிதகைச் சொற்களுக்குக் காரணம் இங்குள்ள ஏடுகள், இதழ்கள், திரைப்படங்கள்தாம்.
குறிப்பாகச் சொல்வதென்றால் திரைப்படங்களில் நகைச்சுவைப் பகுதியில் வரும் நக்கல், நையாண்டி, கேலி, கிண்டலுக்குப் பயன்படுத்தும் சொற்கள், கருத்துக்கள் வேறு சில போதனைகளும்தான்.
இந்த நிகழ்வை இன்னும் சற்று விரிவாகப் பார்த்தால் நெஞ்சை குளிர்விக்கும் நிலைகளைக் காண முடிகிறது. நேற்றைய இளைஞர்களை விட இன்றைய இளைஞர்களுக்கு அறிவும், தெளிவும் மிகுதி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உணர்வுகளில் கூர்மை குறைந்தே காணப்படுகிறது.
அதற்குக் காரணம் பொருள் நிலை மேம்பாடு அடையும்போது, இந்த சுகபோக உணர்வுகள்தான் ஆளுமை செய்யும். இது பெரிதும் தவிர்க்க முடியாதது ஆகும்.
இந்த நிகழ்வில் என்னை மகிழ்வித்தவர் திரு. ஸ்ரீதர் சுப்பிரமணியமும் தம்பி பாலாவும்தான். இளமையின் விரைவு வேகத்தை சிறப்பு விருந்தினர் இருவருமே சொன்னார்கள் என்றாலும் திரு. ஸ்ரீதர் சுப்பிரமணியம் தெளிவான புள்ளி விபரங்களைச் சொல்லி நிகழ்வில் தனி இடம் பெறுகிறார்.
அடுத்தவர் தன் நெஞ்சைக் காழ்புணர்வை வெளிப்படுத்தினார். தானாகவே அமெரிக்காவில் போராட்டம் நிகழ்ந்ததாகச் சொன்னார். அது சரியானது அல்ல. ஒரு கூட்டம் போர் உணர்வைப் பெற வேண்டுமெனில் ஒரு தலைசிறந்த மனிதனின் -தலைவனின் சொல்லாக்கவும் தூய செயல் திட்டமும் இருந்தாலாலொழிய தானாகவே எதுவும் நடக்காது.
விடுதலைப் போர், மொழிப்போர் மற்றும் சில போராட்டங்களைச் சொன்னார்கள். அதில் மொழிப்போர் ஒன்றுதான் முடிந்தளவு பயனைத் தந்தது. மத்திய அரசின் இராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் பின்புலமாய் நின்றவர்கள் தி.மு.கவின் தலைவர்களும் தொண்டர்களும்தான் உயிர்களை இழந்தவர்களும் அவர்கள்தான் இதை இன்றும் கூட வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.
மொழிப்போர் புரட்சியின் பயனை அறுவடை செய்தவர்கள் அரசியல் கட்சியினர்தான் என்றார் திரு.மேலாண்மை அவர்கள். அதன் பயன்தான் தி.மு.கவின் ஆட்சி, அரசு ஆகும். அந்த அரசின் சாதனைதான் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட எத்தனையோ நன்மைகள் முன்னேற்றம், வளர்ச்சி ஆகும்.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னவெனில் இந்த இருமொழிக் கல்வித் திட்டம். இது இங்கு இளையவர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஒரு மறுமலர்ச்சியை ஏன் ஒரு கல்விப் புரட்சியையே தோற்றுவித்திருப்பதைக் காணலாம்.
கலைஞர் காலத்தில் ஏற்பட்ட கணினித்துறை வளர்ச்சியும் கல்விக்கூட பெருக்கமும், சமச்சீர் கல்வி தந்த மேம்பாடுதான் உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்களே அதுபோல ஊரார் மறுக்கமுடியாத உண்மையாகும். இதில் இங்குள்ள வேதனையும் வெறுப்பும் என்னவென்றால் உண்மைகளைச் சொல்வதில் மட்டுமே ஊமையாகி வரும் நிலை காண்கிறோம்.
ஸ்ரீதர் சுப்பிரமணியன் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டால் இந்த நிலை காண மாணவர்களை கூர்மைப்படுத்திய அறிஞர் அண்ணாவும் அவர் கண்ட கட்சியும் தான் என்பதும் உண்மைதானே.
இந்த அருமை அண்ணாவுக்கும் மாணவர்களுக்கும் இருந்த உறவு நிலை என்பது உலகம் காணாத ஒன்றாகும். உயிரும் உடற்பொருளும் கருவில் இணைந்தே இருந்ததால்தான் உலகம் இயக்கநிலை பெறுகிறது. அதுபோல அண்ணாவும் மாணவர்களும் உள்ளத்து உணர்வில் இணைந்திருந்ததால்தான் இன்றைய தமிழகம் இந்தியாவிலும் உலகிலும் ஒளிவிடும் நிலைகண்டு ஓங்கி நிற்கிறது.

குறிப்பு: என்னை ஒரு குறிப்பிட உணர்வுப் பகுதிக்கு உரியவன் என்று முத்திரை குத்திவிடாதிருக்க வேண்டுகிறேன். சமூக உணர்வுகள் அனைத்தையும் அலசிப் பார்க்கும் ஆர்வம் உள்ளவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment