Sunday 3 August 2014

அண்ணன் முரசொலி மாறன் நினைவாய் எழுதிட்ட நூல்--பகுதி 1

1. மறக்க முடியுமா?
மாறன் ... வரலாற்றை மணக்க வைக்கும் வாசமிகு பெயர். தென்னவரை அழைப்பதற்கு இலக்கியங்களில் வழங்கப்பட்ட இனிய பெயர். தென்னவர் திருக்குவளையும், மாறன் எனும் இன்னொரு மானமிகு மாமலரை தமிழருக்கு அளித்தது.

உறவும், அன்பும், உயிரில் விளைந்ததாக அமைந்திட வேண்டும். அது கலைஞருக்கு மாறனைப்போல் இருந்திட வேண்டும். எத்தனையோ உறவினர்கள் கலைஞருக்கு இனம் தெரியாமல் போயிருப்பார்கள். ஆனால், மாறன் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருப்பதற்கு காரணம் என்ன? மருமகன் என்பது முழுக்காரணமல்ல. அவர் இந்த இயக்கத்தின் இனிய கொள்கைகளை இதயத்தில் ஏந்தி வாழ்ந்தவர். அந்தக் கொள்கை இந்த மண்ணில் நிலைபெற பலகாலம் எதிர்ப்பில் நீந்தி வந்தவர் என்பதே காரணம்.

சின்ன வயதிலேயே சிந்தனையாளராக வளர்ந்த சீர்மையாளர் அவர். இளமை நாளிலிருந்து கலைஞரின் நெஞ்சை, தன் நெஞ்சில் வைத்து கழகப் பணியாற்றிய கண்மணி அவர்.

அண்ணா அவர்கள் வென்ற இடத்தில் அவரை அண்ணாவே நிறுத்தி வைத்தார். புகழ்மிக்க தென்சென்னையில் வென்ற நாளிலிருந்து டெல்லியில் அவர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது. கலைஞர் கண்கள் செல்லும் வழியெல்லாம் அரசியல் காட்சிகளைப் படைத்தவர் அவர்.
தமிழர்களின் வாழ்வில் புதுவசந்தம் படைத்து சாதனைகள் புரிந்து கலைஞரின் நெஞ்சத்தில் எழும் எண்ணங்களுக்கு டெல்லியில் வலுவூட்டும் திருத்தூதராக பணியாற்றிய பயன்மிகு கழகத் தொண்டர் அவர். எண்ணிப் பார்த்தால், டெல்லியின் கடந்த கால அரசியல் காட்சிகளை இதயத்தில் இயக்கிப் பார்த்தால் அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் அயராத பணிகளின் பயன் தெரியும்.

  • குவிந்து கிடக்கும் மத்திய அதிகாரங்களை நாடு முழுக்க பகிர்ந்து அளிக்கும் நோக்கத்துடன் பாடுபட்ட கழகத்தின் கொள்கைகளை பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பதித்திட அவர் ஆற்றிய தொண்டு, பயன்மிகு நிலைகண்டு, இந்தியா பல புதுமைகளை அரசியலில் கண்டது.

  • ஒரு கட்சி ஆட்சியால் ஏற்பட்ட ஓர் அலட்சிய மனோபாவத்தால் இந்தியா உயர்வதற்கு இருந்த தடைகளை தகர்த்திட, ஆதிக்க மேடுகளை அகற்றி இந்திய சனநாயகமும் பல்வேறு தேசிய இனங்களும் சமத்துவம் காண்பதற்காக கலைஞரின் கருத்துவழி நின்று டெல்லியில் அவர் சுழன்று பணியாற்றிய பாங்குதனை நெஞ்சத்தில் எண்ணிப் பார்த்தால் புதிய வரலாற்று நூல்கல் ஆயிரம் இங்கே தோன்றி வளரும்.

  • உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர்தான் இந்திய பிரதமராக முடியுமென்ற ஓர் ஆதிக்க நிலையை மாற்றியது மட்டுமின்றி. ஒரு கட்சி ஆட்சி என்ற ஏகாதிபத்ய நிலையையும் மாற்றியது மட்டுமின்றி, மிசா காலத்தின் வேகாத செயல்களின் வேதனையையும் மாற்றிய கலைஞர் அவர்களின் கைநீட்டும் திசையிலெல்லாம், தன் கடும்உழைப்பை நல்கியவர் அண்ணன் மாறன் அவர்கள்.

  • 1967ல் டெல்லி பாராளுமன்றத்தில் அண்ணாவின் இருக்கையில் அமர்ந்த நாளிலிருந்து இன்று வரையில் உள்ள நாட்களையும், டெல்லி அதிகார பீடத்தில் ஏற்பட்ட அதிசய மாற்றங்களையும் பல்வேறு மாறுதல்களையும், அதனால் ஏற்பட்ட நல்ல வளர்ச்சி நிலைகளையும், எதிர்கால இந்தியாவின் வளமான நிலைக்கும், இரும்பனைய உறுதிக்கும், பலத்திற்கும் அடித்தளமிட்டவர் தலைவர் கலைஞர் என்பதை வரலாற்று நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, வகைப்படுத்திப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
அத்தகைய கலைஞரின் மனச்சான்று மாறன் என்பது மறக்க முடியாத உண்மையல்லவா?

இளமை நாளிலிருந்து, இறுதிநாள்வரை அவர் அண்ணாவை, கழகத்தை, கலைஞரை நெஞ்சில் வைத்து செயல் புரிந்து தனது வரலாற்றை செழுமைப்படுத்திக் கொண்டதோடு, தமிழர் வளர்ச்சிக்கு தணிப்பரிய உணர்ச்சியோடு, அளப்பரிய தொண்டு செய்தவர் என்பதும் மறக்க, மறைக்க முடியாத உண்மையாகும்.

இந்தியாவை இன்று கூட்டணி ஆட்சியால்தான் கொண்டு செலுத்து முடியுமென்று இன்றைய பிரதமர் வாஜ்பாய் கூறுவதற்கு மத்தியில் மாறன் ஆற்றிய மகத்தான பணிகளே காரணம் என்பதை மாறன் டெல்லி செல்லா முன்னர் டெல்லியின் இதயமும், மூச்சும் எப்படி இருந்தது என்பதை அறிந்தோரால் உணர முடியும்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க எதிர்க்கட்சியிலிருந்தபோது முயன்று, முயன்று தனி நபர் தீர்மானத்தைக் கொண்டு வந்து ஆற்றிய அரிய உரை ஒன்றை மறக்க முடியுமா?

டெல்லி அரசியலில் மாறி, மாறி அமைந்த கூட்டணிகளை வெற்றிக் கூட்டணியாக ஆக்குவதற்கு உழைத்த உழைப்பையும், உன்னத அறிவையும் மறக்க முடியுமா?

டெல்லியில் அவரால், அவரது உழைப்பால் ஏற்பட்ட நல்விளைவுகளை எடுத்தெழுத இங்கே இடம்கொள்ளாது. இந்திய வரலாற்றின் பல்வேறு மாற்றங்களை, ஏற்றங்களை அவரது அருகில் இருந்தோர் உணர்ந்து எழுதினால் இந்த நாடு மேலும் பயன்பெற முடியும்.

உலகிலுள்ள பதிப்பகங்களின் புதுப்புது நூல்களை அண்ணாவிற்கு பெற்றுத்தரும் பொறுப்பை வகித்து புகழ்நிலை கண்ட அண்ணன் மாறன் படிப்பாளியாய், அறிவாளியாய் ஆனது மகிழ்ச்சிக்குரியது. அது அந்தத் தலைவரைப் புரிந்து கொண்டது என்பது என்றும் மறக்க முடியாததது.

பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் தலைவர் என்பதும், அவர் பத்திரிக்கைத் துறையில் வைத்த பற்றை முரசொலியை வளர்த்து நிலைநிருத்தப் பாடுபட்டதையும், சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் தலைவராகி உழைத்து, முழுநிலவாய் அதை ஆக்கியதையும் இன்றைய இதழாளர்கள் மட்டுமல்ல, படிக்கின்ற யாரும் மறக்க முடியாது.

அவருடைய எழுத்தாற்றல் எண்ணி, எண்ணி இன்பம் பெறக் கூடியது. திரைக்காவியங்களில் அவருடைய உரையாடல்களும், உணர்ச்சிக் கருத்துக்களும் நம் உள்ளத்தை கொள்ளை கொண்டது. ஒரு குடும்பப் பெண்ணால் ஏற்படும் குலவளர்ச்சி, குலப்பெருமையையும், குலதெய்வம் படத்தில் அவர் காட்டும் பாங்கை என்றும் மறக்க முடியாது?

மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக்கொலை எனும் திரைக்காவியத்தில் மெலிதாய் நடைபோடும், தெளிந்த தெள்ளிய நீரோடை போல் கதையும், உரையாடலும் தமிழர் நெஞ்சில் உறைந்ததை எவர்தான் மறக்க இயலும்.

சாம்ராட் அசோகன், சாம்ராஜ்ய வெறிபிடித்த சாம்ராட் அசோகன் என்ற இடியோசை கிளப்பும் உரையாடல்களும், அன்னையின் பாச உள்ளம், பாசத்திற்காக பழிதீர்க்கத் துடிக்கும் மகனின் கடைமை உணர்ச்சியென்று அன்னையின் ஆணை படத்தின் அனைத்து அம்சங்களும், அவரை மறக்க விடுமா? 

   மாண்டுவிட்ட மணாளனை நினைத்து மருகிய ஒரு மங்கையின் மன உறுத்தலைக் காட்டி அவளை மறுமணத்திற்கு இசைய வைத்து உருவாக்கிய புதிய பாதை படத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை தமிழகத்தில் படரவிட்ட அந்த பண்பாளரை யார்தான் மறக்க இயலும்?

ஒரு நாட்டின் விடுதலைக்கான காரணங்களை விளக்கி அவர் படைத்த ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் எனும் நூலை இதயம் என்றுமே மறக்காது.

ஆரிய ஆதிக்கத்தால் அறிவுக்கொவ்வாத கொள்கைகளால் அடிமைப்படுத்தப்பட்ட, திராவிட இன மக்களின் நலிவுகளை எடுத்துக்காட்டி, உயரிய ஓர் இனம் இழிவடைந்த நிலை சொல்லி அவர்கள் ஏற்றம்பெற திராவிட இயக்கக் கொள்கை, செயல்களை எடுத்துக்காட்டி புள்ளி விபரங்களால் பற்பல புதிய செய்திகளைச் சொல்லி, அவர் படைத்த திராவிட இயக்க வரலாறு எனும் பயன்மிகு நூலை படித்தவர் மறந்திட இயலுமா?

கழக மாநாடுகளில், பொதுக்குழு கூட்டங்களில், கழகத்தை வலிமைப்படுத்தவும், அடாவடிகளை எதிர்த்திட்கழகத் தோழர்களை ஊக்கப்படுத்தவும், கழகத்தின் அழியாக் கொள்கைகளை தோழர்களின் உள்ளத்தில் ஆழப்பதிக்கவும், அவர் ஆற்றிய உரைகளை மறந்திடத்தான் மனம் இசையுமா?

மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டுமென்ற கழகக் கொள்கையை வலியுறுத்தி வாதாடிய அண்ணன் மாறன் அவர்கள் தமிழ் உலகளவில் உயர்ந்திட உலகத் தமிழ் உணர்வாளர்களையும், கணினித் தமிழ் அறிவாளர்களையும் அழைத்து ஓரிடத்தில் கலைஞர் முன் அமர வைத்து, தமிழைக் கணினியில் கையாள உலகம் முழுவதும் ஒரே விசைப்பலகையை உருவாக்க தமிழ்நெட் 99 என்ற மாநாட்டை நடத்தி, அந்த விசைப்பலகையை உருவாக்கி உலகில் தமிழ்க் கொடி உயர்ந்திட உழைத்துப் பணியாற்றியதை யாரும் மறைத்து விட முடியுமா?

இந்தியப் பாராளுமன்றம் என்றாலும், அமைச்சரவை அரங்கம் என்றாலும் பல்வேறு குழுக்கூட்டம் என்றாலும், உலகளாவிய பல்வேறு சந்திப்புகள், மாநாடுகள் என்றாலும், உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும், வேறெங்கு நின்றாலும், சிறைச்சாலை என்றால் அங்கு தனக்கு ஏற்பட்ட சித்ரவதை, துன்பங்களுக்குப் பிறகும் தன்னை ஒரு திராவிட இயக்க சிந்தனையாளனாகவும், திமுக தொண்டனாகவும் உறுதி கொண்டு பணியாற்றி உழைத்த அந்த உத்தமனை உலகம் மறந்து விடுமா என்ன?

சிறையும், துன்பமும் எதிரிகளின் கொடுந்தாக்குதல்களும், பொது வாழ்வில் தேர்ந்திட எழுதும் தேர்வு என்றே எண்ணி வாழ்ந்து, வரலாறு படைத்த அந்த ஈடற்ற தியாகியை தியாகத் திருவிளக்கை இதயம் மறந்திட முடியுமா?

அவரைப் பல்வேறு மாநாடுகளில், பொதுக்கூட்டங்களில் அறிவாலய நிகழ்ச்சிகளில் வேறுபல அரங்குகளில் உற்றுக் கவனித்தால் அவர் ஓடி ஓடி பணியாற்றுவதில் உள்ள உணர்வுகளை உணர முடியும். இயக்கம் பெரிதென, இயக்கக் கொள்கை இனிதென, நெஞ்சில் உறுதி கொண்டு வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வண்ண சபாரியும், வெள்ளை வேட்டியும், உடுத்தி ஒரு புதிய கலவை உடையோடு, அழகொளிர உலவியதை மாசற்ற உள்ளங்களால்  மறந்திட இயலுமா?

கொடுமை கண்ட இடமெல்லாம் குறுக்கிட்டு குறை களைய முயன்றதால் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி இவ்வளவு விரைவில் தன் இறுதிநாளைக் கண்டார் என்பதை வரலாறு வாய் விட்டு அழுதவாறு வருங்காலத் தமிழருக்குச் சொல்வதை யாரும் மறைத்திட முடியுமா?

உலக நவீன அரசியல் சட்டங்கள், உலக தேசிய இனங்கள், ஒன்றிய ஆட்சிகள், கூட்டாட்சித் தத்துவம், இந்திய அரசமைப்புச் சட்டம், விடுதலைக்கு முன்னிருந்த இந்திய நிலை. விடுதலைக்குப்பின் மாறிவிட்ட கூட்டாட்சி தத்துவங்கள், அதனால் ஏற்பட்ட வளர்ச்சிக் கேடு, பொருளாதார நலிவு, உரியவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், மாநிலங்களின் நலிவு, பல்வேறு தேசிய இனங்களுக்கு உரிய உணர்வுகள், உரிமைகள், இனம், மொழி மீது பற்று, இந்தியா உயர்வதற்குரிய வழிகள் ஆகியவற்றை ஆய்ந்து ஆராய்ந்து பல்வேறு மேதைகளின் கருத்து மேற்கோள்களைக் காட்டி, நான்கு பகுதிகளில் நாற்பத்து நான்கு தலைப்புகளில் 575 பக்கங்களில் இந்திய அரசமைப்புச் சட்டம் இயங்க வேண்டிய வழிகளையும், அதனால் ஏற்படும் வளங்களையும், உலக நாடுகளிலுள்ள அரசமைப்புச் சட்டங்களால் வளர்ந்த நிலைகளையெல்லாம் விளக்கி, விரித்துரைத்த, அவரது மாநில சுயாட்சி எனும் நூலை மீண்டும் படித்துக் கொண்டிருந்தபோது அவர் மறைந்தார் எனும் செய்திப் பேரிடி என் செவிகளில் இறங்கியது.

1975ல் மாநில சுயாட்சி நூலை படித்த காலத்தில் அவர் எழுத்தில் இதயம் பதிந்து பாசத்தில் மறக்க முடியாததாக அவர் பெயர் உள்ளத்தில் உறைந்து விட்டது. அதன் விளைவு 1977ல், 1978ல் என் பிள்ளைகளுக்கு முன்னமே நினைத்திருந்த உதயகுமார், இதயசந்திரன் என்ற பெயர்களை மறந்து, பெயரை மாற்றி உதயமாறன், இதயமாறன் என்று பெயர் சூட்டினேன்.

திராவிட இயக்க வரலாறு எனும் நூலை படிப்பதை ஒரு படம்எடுத்து பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இன்று மறைந்தார் என்பதை மனம் மறக்க முடியாது. கண்களை அருவியாக்கியிருக்கிறது.

மாறனை மனதில் வைத்திருப்போர் யாராக இருந்தாலும், கடந்த 35 ஆண்டுகலுக்கு முன்பிருந்த டெல்லியை, அதன் அரசியல் அரங்கையம் பார்ப்பார்கள். அங்கு அண்ணன் மாறன் வழியாக கலைஞர் ஒரு மாற்றத்தை, கூட்டாட்சி மறுமலர்ச்சியை உருவாக்கிய நிலைகளையும் பார்ப்பார்கள். இன்றைய இந்தியா என்றாலும், எதிர்கால இந்தியா என்றாலும், வளமிகு இந்தியா, வலிமைமிகு இந்தியா உருவாக ஒரு கட்சி ஆட்சி மறைந்து கூட்டாட்சிகளை உருவாக்கிய ஆற்றல்மிகு கலைஞரோடு இயைந்து, இணைந்து கழக உணர்வுகளை உள்ளத்தில் உறைய வைத்து உழைத்த அண்ணன் மாறனை மறக்க முடியாது. நினைத்து மலைப்பார்கள்.

அண்ணன் மாறன் எனும் வேர் மறைந்தாலும், அவர் ஆற்றியபணிகளும், அவர் நேசித்த அண்ணாவின், கலைஞரின், கழகத்தின் கொள்கையும், கருத்தும், அவர் படைத்த அற்புதப் படைப்புகளும், அவரால் உருவான தமிழக வளங்களும், உலக அரங்குகளில் அவர் உதிர்த்த கழக உணர்வுகளும், உலகில் உயிருடன் உலவும். அவற்றைப் படித்து அறிந்து, அவரின் விழுதுகளாக, எதிர்கால இளைஞர் உலகம் தங்களை உருவாக்கும்.

சின்னஞ்சிறு வயது முதல் கொள்கை அமுதம் ஊட்டி வளர்த்த கண்மணி மாறனை கலைஞர் இழந்திருக்கிறார். நடிகர் கமலஹாசன் உருகி கூறியது போல் அவர் மனம் தேற வேண்டும். அவர் அருகிருந்து அரசியல் பணியாற்றும் ளைஞர்கள் அவரை மாறன் புரிந்து பணியாற்றிய பாங்கினைப் பெற வேண்டும். அண்ணன் மாறனாக அவர்கள் மாற வேண்டும். அதுதான் நாம் கட்டும் மகத்தான, மறக்க முடியாத நினைவுச் சின்னமாக அமையும்.


மறக்க முடியுமா? எனும் அவருடைய திரைக்காவியத்தில் கற்பு நெறி காக்க அரிவாள்மனையால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு நங்கையின் கழுத்து நரம்புகள் துடிக்கும் காட்சிகள் தமிழர்கள் இன்றும் மறக்க முடியாது தவிக்கின்றனர். அவர்தந்த அந்தப் படத்தினை மட்டுமல்ல, அந்த மகத்தான மனிதன் அண்ணன் மாறனையும் மறக்க  முடியுமா
தொடரும்.....

2 comments:

  1. மாறனுக்கு பிறகு கலைஞர் தனக்கான டில்லி தூதராக சரியான ஒரு நபரை நியமிக்க முடியாமல்தான் அவதிப்படுகிறார்............

    ReplyDelete
  2. ஆமாம் தோழர் சோழன்

    ReplyDelete