Friday 8 August 2014

மாமழை(லை)ப் பயனிலும் மகத்தானவர் பேராசிரியர்

மாமழை(லை)ப் பயனிலும்
மகத்தானவர் பேராசிரியர்

இனமான உணர்வு, இலக்கியச் சிந்தனை, இயக்கப்பற்று, எதிலும்ஆய்வு, இயக்கத்தோடு இணைந்த இதயம், சோர்வு தட்டாதசொற்பொழிவு, சோகம் தீண்டாத மன திட்பம், தோழர்களோடு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை செல்லும் தொண்டுள்ளம்,எந்த ஒரு செய்தியிலும் ஆதியை, மூலத்தைப் பார்க்கும் பெரியாரியல்,எந்தப் பொருளைப் பேசினாலும் எழில் அழகு, இலக்கியப் பெருமை இனிமை இணைந்தோடப் பேசும் பேராற்றல், இயக்கத்தை முன்னிருத்தித் தம்மை பின்னிருத்தும் எளிமை, நாத்திக மனம், நல்ல குணம், தமிழ்மீது கொண்ட தாளாத பாசம், தளராத உழைப்பு, உடலில், உணர்வில் என்றும் குறையாத இளமை, "இன்னும் சொல்லப்போனால்எனும் சொற்சொடரைச் சொல்லி விட்டு கடல் மடை திறந்தாற்போல் வரும் கருத்துபிரவாகம், வரலாற்றை வரிசைப்படுத்திக் காட்டி விளைந்த பயன்களை விளக்கிக் கூறும் வித்தகம், பழைமை கூடத் தக்கநேரங்களில் பயனளித்த பாங்கு, பகுத்தறிவைப் பயன்படுத்தாதால் ஏற்படும் பாதகம் பற்றி எடுத்துக் கூறும் எழில்,இன்னும் எத்தனையோ சீர்மைகளில், சிறப்புகளில் சிகரமாய் திகழ்ந்திடும் பெருந்தகை பேராசிரியப் பெருமகனார் அவர்கள்.

அண்ணா தன் தம்பிகளை தன்னையொத்தவராக வளர்ப்பதில் தனியார்வம் கொண்டவர். அந்த அருமை அண்ணாவின் அருகிலிருந்து பணியாற்றிய ஆற்றலாளர்; அறிஞர் பெருந்தகையின் இதயத்தில் தனியிடம் பெற்றவர் பேராசிரியர் அவர்கள்.

அவர் ஒருமுறை பேசியதை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம்இதயம் இனித்து மகிழ்கிறது. கவிஞன் ஷெல்லியைப் பேசும்போது, இங்கிலாந்து தொழிற்புரட்சி, பிரஞ்சுப் புரட்சி, அமெரிக்க உள்நாட்டுப்புரட்சி, சோவியத் தொழிலாளர் பெரும் புரட்சி ஆகிய புரட்சிகளுக்கெல்லாம் ஷெல்லியின் கவிதையே, கருத்தே ஆணிவேராக இருந்தது என்பதை எடுத்துச் சொல்லும் அறிவாற்றல் அற்புதமானது.

அவருடைய இயக்க உணர்வு, பற்று என்பதை எடுத்துக்காட்டஎத்தனையோ உதாரணங்களைச் சொல்லி விளக்க முடியும். அண்ணாவின் மறைவிற்குப் பின் நாவலரால் எடுக்கப்பட்ட ஒரு இடர்ப்பாடான நிலையால் கழகத்திற்கு தலைவர் பதவி உருவாக்கவேண்டிய தவிர்க்க இயலாத நிலை தோன்றியது. கலைஞர்தலைவரானார்.

பின் நாவலரிடம் நல்ல வார்த்தை சொல்லி தாங்கிதடுக்கி என்பார்களே அதுபோல் நடந்து அவரை பொதுச்செயலாளராக தொடர வைத்தார்கள். அப்போது திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள் கழகப் பொருளாளர் ஆனார். பின் அவரும் ஒரு சூழலைஉருவாக்கிக் கொண்டு தனிக் கட்சித் தலைவரானார். அவரிடத்தை நிறைவு செய்ய பேராசிரியர் கழகப் பொருளாளர் ஆனார்.

பின் நாவலர் அவர்களும் கழகத்தின் நெடுநாள் தோழர்களாக விளங்கிய ப..., மாதவன், தில்லை வில்லாளன் மற்றும் ஆதித்தனார் ஆகியரோடு தனிக்கட்சி தொடங்கி பின் எம்.ஜி.ஆர். கட்சியோடு முடங்கிப் போனார் - வரலாற்றில் முடிந்தும் போனார்.


அப்போது அவருடைய இடத்தை நமது பேராசிரியரே நிறைவு செய்தார். ஆனால் மேற்கண்ட பொதுச் செயலாளர் பொருளாளர் பொறுப்புகள் முதலில் பேராசிரியருக்கே கிடைத்திருக்க வேண்டும்.

ஏனெனில் இயக்கத்தில் இவரே மூத்தவர். இருப்பினும் இழப்பு ஏற்படுகின்ற போதெல்லாம் அதை ஈடு செய்யும் இவருடைய நிலை இனிக்கின்ற ஒன்றாகும்.

எம்.ஜி.ஆர். பிரிவுக்குப்பின் கழகத்தின் இளந்த நிலை மாற்றி எழுச்சியூட்டுவதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் 1973ம் ஆண்டு சென்னையில் முப்பெரும் விழாவை முதன்முதலில் அறிவித்தார். லட்சக்கணக்கில் தோழர்கள் திரண்டனர். சென்னை திக்குமுக்காடியது.       இராசையிலிருந்து நகரச் செயலாளராக இருந்த அண்ணன் திரு..மு.. கந்தசாமி அவர்கள் தலைமையில் ஒரு பேருந்தில் நிறைய தோழர்கள் சென்னை சென்றோம்.

அதற்கு பின்னர்தான் எம்.ஜி.ஆரை எதிர்த்து இயக்கம் ஏறுநடை போட்டது. அன்றிலிருந்து மாநாடுகளுக்கு மட்டுமே சென்று வரும் நாங்கள் தலைவரின் பொதுக்கூட்டங்களுக்கும் செல்லத் தொடங்கினோம்.

எங்களின் இனிய நண்பர் மறைந்த வேலாயுதம் அவர்களின் முயற்சியால் நண்பர்கள் குழாமுடன் எங்கெங்கு கலைஞர் பேசுகிறாரோ அங்கெல்லாம் செல்லத் தொடங்கினோம். அந்த இனிய நண்பர் மறையும் நாள் வரை அந்த இனிமை எங்களோடு இணைந்திருந்தது.

நாவலர் பிரிந்து பேராசிரியர் பொதுச் செயலாளராகிய தஞ்சைப்பொதுக் குழுவின் விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு சென்றிருந்தோம்.அங்கே பேராசிரியர் பேசிய பேச்சு இயக்கத்தை எப்படிநேசிக்க வேண்டும் என்பதற்கோர் இலக்கணமாக இருந்தது.


ஆம் அவர் சொன்னார். என்னை விட அறிவாளி இல்லை என்ற எண்ணம் கொண்டவன் நான் - ஏன்? இறுமாப்பே கொண்டவனும் கூட. எவருடனும் இணைந்து என்னை இளைக்க விட விரும்பாதவன்.

எனினும் இயக்க உணர்வு காரணமாக கடந்த ஓராண்டாக கலைஞரை உற்றுப் பார்க்க வைத்தது. ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும்(முரசொலி) வைத்துக் கொண்டு ஒரு மாபெரும் இயக்கத்தை கொடுமைமிகு மிசாவிலிருந்து காத்து நின்ற பேராற்றலை எண்ணிப்பார்த்தேன். அவருடைய ஆற்றல் அளவற்றது. அவரது கண்கள் கலைக் கண்கள். ஆகவே அவரின் கீழ் இயக்கம் காப்பதென்று முடிவு செய்து விட்டேன் என்று கூறிய பேராசிரியர் இன்று வரை கலைஞரோடு இணைந்திருக்கிறார் - இறுதி வரை இருப்பார்.


ஏற்கனவே ஒரு முறை கலைஞர் அவர்கள் எழுதினார் "நாங்கள் மக்களுக்காக எழுதுகிறோம் - பேராசிரியர் எங்களுக்கா எழுதுகிறார்" என்று.

அத்தகைய இனமான ஏந்தல் பெருமைக்குரிய பேராசான் பேராசிரியப் பெருந்தகையின் பிறந்த நாளில் அவரோடு புதுமையைப்போற்றுவோம்! பொது வாழ்வு பொறுப்பினைப் போற்றுவோம்!பெரும் புகழினைப் போற்றுவோம்! இயக்கப் பற்று, இலக்கியப்பண்பினைப் போற்றுவோம்!

மலை வளம் மனதைக் கவரும் என்பர்.மழை வளம் மண்ணின் நிலை மாற்றி வளம் செழிக்கச் செய்யும் என்பர்.

பேராசிரியர் மாமழை(லை)ப் பயனிலும் மகத்தானவர். வாழ்க பேராசிரியர் பல்லாண்டு, பல்லாண்டு.

No comments:

Post a Comment