Thursday 7 August 2014

அண்ணன் முரசொலி மாறன் நினைவாய் எழுதிட்ட நூல்---பகுதி 4

4. கொடுமை

அந்த கொடூரமான குலை நடுங்க வைத்த 2001 ஜூன் முப்பது மட்டும் இதயத்தை விட்டு இடம் பெயர மறுக்கிறது. ஓராயிரம் இடிகள் தாக்கியது போன்று உருக்குலைந்த உள்ளம் தன் நிலைக்கு வர மறுக்கிறது.

தொலைக்காட்சியை பார்க்கின்ற நேரமெல்லாம், தன்மான இயக்கத்தின் தானைத் தலைவர் தகாதவர்களால் தாக்கப்பட்டு தள்ளாடிய காட்சியே கண்களை சூழ்ந்து கொள்கிறது.

உலகம் முழுவதும் உள்ள இதயமுள்ள மனிதர்களை, மனித நேயப் பற்றாளர்களை, நனித்தக்க நாகரிகம் வளர நினைப்போரை, நஞ்சு மனம் இல்லாத நல்லவர்களை, மாசுகலக்காத மனமுள்ளோரை, வேடம் தரிக்காத வெள்ளை மனம் கொண்டோரை, வஞ்சக வலை பின்னத் தெரியாத நெஞ்சத்தைப் பெற்றோரை, ஈர இதயத்தில் இனிமையை பயிர்செய்தோரையெல்லாம், மலைவீழ் அருவியாய் விழி நீரை பொழிய வைத்த அந்த கொடுமை மிகு கோரக் காட்சி தான் கண்ணையும் நெஞ்சையும் கவ்விக் கொள்கிறது.

பொழுதெல்லாம் அழவைத்த, அந்தப் பொல்லாதவர்களால் மனதைப் புண்பட வைத்த காட்சியை மறக்க முயன்றாலும் முடிவதில்லை. உறங்கினாலும் விழித்திருந்தாலும், உள்ளத்தை உறுத்திய வண்ணமே இருக்கிறது! நாட்டு மக்கள் தங்கள் வாழ்வு யாரால் வழி நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவெடிக்கின்ற உரிமை அவர்களுக்கு உண்டென்றாலும், சிந்தையில் செய்திகளை நாட்டு நடப்புகளை, வரிசைப்படுத்தி நல்லது கெட்டது எது என அறிந்து அவர்கள் ஆள்வோரை தேர்வு செய்திருக்க வேண்டும். அப்படியே அவர்கள் தவறு செய்து மாறானவர்களை தேர்ந்தெடுத்தாலும் மக்களாட்சி முறைகள், அந்த முறைகளுக்குரிய சட்டங்கள் எது என்று தெரிந்து - தெரியாது போனால் கூட தெரிந்தவர்களை கேட்டு ஆலோசித்து ஆட்சியில் இருப்போர் நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆற்றல்மிகு ஆட்சி நடத்திய அண்ணாவின் தம்பியை அடித்து இழுத்து சித்ரவதை செய்து கொட்டடியில் கொண்டு அடைத்து வைக்க முயன்ற அக்கிரமக்கார ஆட்சியாளரின் செயலை அகில உலகமும் கண்டித்து மூக்குடையச் செய்தது
போராட்டமே வாழ்வாகக் கொண்ட பொன்னான தலைவரை அடித்து இழுத்துச் சென்றதால் அந்த தியாகியின் புகழ் உலகம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. மனித நேயப் பண்பாடுகளோடு மக்களாட்சி வழியில் மாசற்ற பொது வாழ்வுப் பயணத்தில் எத்தனையோ தியாக முத்திரைகளை பெற்றிருக்கிறார்.

கலைஞர் அவர்கள் கைதாவதில் கூட ஓர் இலட்சியத்தை தனது வாழ்வில் நிலை நாட்டியவர். ஒரு நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்தால் அதை மீறி கைதாவது அவருடைய பழக்கம். ஆகவே கைதாவதற்கு தடங்கல் செய்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்யாகும்.

கலைஞரை அடித்து இழுத்துச் சென்று சிறை வைத்ததின் மூலம் அவர் மேலும் ஒரு தியாகச் சிகரத்தை எட்டியிருக்கிறார் என்பதே உண்மை!

அத்தோடு தி.மு.. வும் தன்னை ஒரு தியாக இயக்கமாக உலகத்திற்கு பறைசாற்றியிருக்கிறது. கழகம் தொடங்கிய நாளிலிருந்து சிறைக் கூடத்தை நிரப்புவதை பழக்கமாகக் கொண்ட இயக்கம் என்பதை மேலும் ஒரு முறை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ ஒர் ஐம்பதாயிரம் பேர் சிறைக் கொட்டடியில் வாடினர் என்பது கழகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி. அதிகாலை வீடுகளில் சென்று முக்கிய பொறுப்பில் இருப்பவரை காவல்துறை பிடித்து வந்ததே ஐம்பதாயிரம் என்றால் ... 

கழகம் போராட்டம் என்று அறிவித்து விட்டால் இந்த நாடே சிறைக் கூடமானால் தான் இடம் கொள்ளும்.

கைது, சிறை, கடுங்காவல் என்பதெல்லாம் கலைஞரும் கழகமும் காணாத ஒன்றல்ல. விரும்பி ஏற்றுக் கொள்ளும் விருந்தைப் போன்றது அது. ஆனால் கைது செய்து பழி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டவர்களின் நெஞ்சில் பல்வேறு விஷத் திட்டங்கள் வேறூன்றியிருக்கிறது என்பதை கொஞ்சம் கூர்ந்து பார்த்து ஆய்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.

கலைஞரைப் பற்றி, அவரது கொள்கை, கோட்பாடு, இலட்சியம், குறிக்கோள் இவையெல்லாம் தமிழுக்கும் தமிழர்களின் உயர்வுக்கும் பாடுபடுவது தான் என்பது தமிழர்களை விட தமிழுக்கும் தமிழர்களின் உயர்வுக்கும் எதிரான மனம் கொண்டவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

கலைஞர் தனது பொது வாழ்வைத் தொடங்கிய நாளில் இருந்த இன்று வரை அவர் அறிவில் தெளிந்து, ஆற்றலில் விளைந்து உருவான தமிழரின் வளர்ச்சி பலரது கண்ணை உறுத்திய வண்ணம் இருக்கிறது.

கலைஞரின் ஆட்சித் திறத்தால், அறிவின் வளத்தால் தமிழர்கள் கடந்த காலங்களில் பல்வேறு உயர்வினை அடைந்திருக்கிறார்கள் என்பது தமிழர்களின் உயர்வினை விரும்பாதோருக்கு மிக நன்றாகத் தெரியும்.

மேலும் கலைஞர் போன்றோர் தொடர்ந்து தமிழர்களுக்கு உழைக்க முன் வந்தால் - அதுவும் தமிழ் உணர்வோடு பாடுபட முன் வந்தால் தமிழர்களின் வளர்ச்சி உலகின் உச்சிக்கு சென்று விடும் என்பதை அவர்கள் மிக நுட்பமாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.”

 அதனால் கலைஞரை அடித்து இழுத்து அசிங்கப்படுத்தி விட்டால் தமிழர்களுக்கு உழைத்திட அதுவும் தமிழுணர்வோடு உழைத்திட எதிர்காலத்தில் யாரும் முன் வர மாட்டார்கள் எனும் தொலை நோக்கோடு தான் அந்த தீய நிகழ்ச்சியை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

தமிழர்கள் இரக்கத்தால் ஏமாந்தவர்கள். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று இதயத்தில் எண்ணமிட்டு எண்ணற்ற நிகழ்ச்சிகளை நிறைவேற்றுகிறார்கள்.

கலைஞரைத் தாக்கினால் அவர் உறவினர், கட்சிக்காரர் என்ற முறையில் மாறன் வந்து கேட்பார். அவரை தாக்கிக் கொன்று விட்டால் மத்திய தொழிலமைச்சர் எனும் முறையில் தமிழகத்திற்கு கிடைத்து வருகின் தொழிற்கூடங்கள் எல்லாம் தொலைந்து விடும் எனும் தமிழர்எதிர்ப்பு நினைவில் தான், தமிழர்களின் எதிரிகள் கூடாரத்து இன்றைய பிரதிநிதி செயலலிதா எல்லாவற்றையும் நிறைவேற்றி மகிழ்கிறார்.

 அவருக்குப் பின்னால் அணி வகுத்து நிற்போரைப் பாருங்கள்? இழிந்த நிலையினராய் தமிழர்களை எண்ணுவோர், தமிழை நீசப் பாஷை எனும் நினைவை இன்னும் நெஞ்சில் வைத்திருப்போர், சாதியத்தை காப்பதாக சங்கல்பம் செய்தோர், தன்னலமிக்கோர் சமத்துவத்தை விரும்பாதோர், தங்களை மேட்டுக் குடியினராக நினைத்துக் கொள்வோர் இவர்கள் தானே அவர்கள்?

அவர்களின் எண்ணங்கள் எரிமுன்னர் தூசாகிப் போகும் என்பதை நாடு அவர்களுக்கு நன்குணர்த்தி விட்டது.

ஒரு கருணாநிதியை அழிக்க முனைந்தால் ஓராயிரம் கருணாநிதிகள் தோன்றுவார்கள் என்பதை உணர்ச்சிப் பிழம்பான தளபதி ஸ்டாலினின் உரையும் தோழர்களின் போர்களப்பரணியும் உலகத்திற்கு உணர்த்தியிருக்கின்றன

கலைஞரை வீழ்த்துவதன் மூலம் கழகத்தை உலர்த்தலாம். கழகத்தை உலர்த்துவதன் மூலம் தமிழுணர்வை உதிர வைக்கலாம். தமிழுணர்வு உதிர்ந்தால் தமிழர்களை அடிமையாக்கி மீண்டும் தமது இனத்தை மேலாண்மை செலுத்த வைக்கலாம் என்பதின் வெளிப்பாடே கலைஞர் கைதின் உள்நோக்கம்.

இதை உணர்ந்து தெளிய வேண்டியவர்கள் தமிழர்கள். தமிழர்களில் அரசை தேர்ந்தெடுக்கும் வாக்காளர், வாக்களிக்கும் கடமையில் இருந்து தவறியோர், எதிர்காலத்தில் இவர்கள் நல்லுணர்வை பெற்றால் தமிழர்களுக்கு நல்லது.

பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பேரறிஞர்கள் தோன்றினால் தான் தமிழர்களின் உயர்வு உறுதிப்படும். இது கல்லைப் போன்ற உண்மை.


இதை பெரும்பான்மைத் தமிழர் உணர பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டோர் அனைவரும் தமிழுணர்வோடு கலைஞரையும் கழகத்தையும் பின் தொடர்ந்து பயணப்பட இன்றே அணி திரள்வீர்.


தொடரும்....

No comments:

Post a Comment