Monday 11 August 2014

கலைஞர் கண்ட நெருப்புக் களங்கள்



கலைஞர் கண்ட நெருப்புக் களங்கள் பலவுண்டு.மாணவராய் திகழ்ந்த நாட்களிலேயே இந்தி எதிர்ப்பு, தீக்களத்தில் குதித்தவர் கலைஞர். தென்னவர் பண்பாட்டை, வீரமும் காதலும் மனித வாழ்வின் உயிர்மூச்சென விரும்பிய தமிழர் வரலாற்றை, வஞ்சமில்லா எழில் கூட்டும் தமிழரின் தாய் மொழியை அழிப்பதற்கு பல்லாண்டுகளாய் நடந்த அயலவரின் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நின்று போர் தொடுத்து தடுத்தனர் பேரறிவாளப் பெருமக்கள்.


 தமிழகம் மாச்சர்யங்களை மறந்து நின்ற போர்க்களம் அது. அப்போது மாணவராய் அந்த மாத்தமிழர் கலைஞர் அவர்கள் தமிழ்கொடி பிடித்து தருக்கர்களின் முடி நொறுக்க தன் தோழர்களோடு திருவாரூர் தெருக்களில் வலம் வந்தார் எனும் வரலாற்றுச் செய்தி வாளேந்தி களத்தில் நிற்கும் வீரனுக்குள்ள மன உறுதியைக் குறிப்பதாகும்.


தந்தையை பறிகொடுத்த நேரத்தில் மருத்துவர் மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தார் என்பதும், மனைவி உயிரோடு போராடி உலகைப் பிரிந்த சமயத்தில் ஓரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் என்பதும் மனதைப் பொறுத்தவரையில் நெருப்புக் களங்கள் தானே!


மும்முனைப் போராட்டம் என்பது தமிழர் மான உணர்வில் கழகத்திற்கு உள்ள ஈடுபாட்டை காட்டிய மிக முக்கியமான போராட்டம். முத்துக்குளிக்க மூச்சடக்குவது போன்று தோழர்கள் முனைப்புக் காட்டிய அந்தப் போராட்டத்தில் அதிகபட்ச தண்டனை பெற்றதே தலைவர் கலைஞர்தான். தண்டவாளத்தில் தலை வைத்து உயிர் தரும் அளவுக்கு நெஞ்சுரம் காட்டிய நெருப்புக் களம் அது.


62ல் நடந்த விலைவாசி மறியல் போராட்டம் என்பது கழகம் மிக வேகங் காட்டிய போராட்டம். சில தோழர்கள் உயிர் குடிக்கின்ற அளவுக்கு சிறையில் இடமில்லாமல் செய்த போராட்டம்.


65 மொழிப் போர்க்களம். தமிழக வரலாறு காணா தீக்களம். பக்தவச்சலம் தம் ஈரமில்லா நெஞ்சை திறந்த காட்டினார். தமிழக இளைஞர் பட்டாளம் வீரமிகு வரலாற்றை வரைந்து காட்டியது. அன்றைய முதல்வர் அதிகாரத்தின் கொடுமை அனைத்தையும் அவிழ்த்து விட்டார்.


 கொடுமைமிகு அதிகாரத்தின் துப்பாக்கி குண்டுகளை தன் மார்பில் தாங்கிய மாணவத் தங்கங்கள் தமிழரின் புதுக்கொடியை தன் குருதியில் நனைத்துப் பறக்க விட்டனர். இந்த போராட்டத்தின் காரணகர்த்தா தலைவர் கலைஞர் என்று கருதிய காங்கிரஸ் அரசு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தது. சனநாயக நாட்டில் தனிமைச் சிறை என்பது மிகப்பெரிய கொடுமையாகும். இந்த நெருப்பாற்றிலும் நீந்திய கலைஞர் அவர்கள் தமிழர் நெஞ்சங்களில் நின்றார்.


என் தம்பி கருணாநிதி அடைந்து கிடக்கும் பாளையங்கோட்டை தனிமைச் சிறை எனக்கு யாத்திரை ஸ்தலம் (அதாவது கோவில்) என்ற புகழ்க்கொடி வேந்தன் அண்ணாவின் பாகுமொழிப் பாராட்டையும் பெற்றார்.


69 அண்ணாவின் மறைவிற்குப் பின் கழகம் தலைமையேற்று தலைவர் கலைஞர் நீந்திய நெருப்பாறுகள் நீண்ட வரலாறு படைத்தவை. இந்திய அரசியலில் புதுமை காண வேண்டும் என்று நினைத்தார் கலைஞர் அவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு யாகங்கள் நடத்தி பஞ்சாங்கம் பார்த்துக் கிடந்த பழமைவாதிகள் நிறைந்த காங்கிரசில் ஒரு மின்னல் கீற்றாய் தோன்றியவர் நேரு பிரான் பெற்றெடுத்த நேர்த்திமிகு பெண்மணி இந்திரா காந்தி அவர்கள்.


நாட்டு மக்களை அடிமைகள் போல் நடத்திய மன்னர்களுக்கு தந்த மானியத்தை நிறுத்தவும் வங்கிகளை நாட்டுடமையாக்கவும் இந்திராவுக்கு கலைஞர் தந்த ஆதரவு தான் இந்திய அரசியலில் அவருக்கு நிரந்தர இடத்தை வழங்கியது.


ஆனால் அந்த இந்திராகாந்தியால் கொண்டுவரப்பட்ட சனநாயகத்தை மடியவைக்கும் மிசா சட்டத்தை எதிர்த்துக் கலைஞர் கண்ட நெருப்புக் களம் இருக்கிறதே... அதை கவிஞர்கள் எழுதி கலைஞர்கள் நிகழ்ச்சியாக நடத்தப் தொடங்கினால் மனித உள்ளம் மலைத்துப் போகும் அளவுக்கு ஆயிரமாயிரம் செய்திகள் அதில் ஊற்றெடுக்கும்.


அதுமட்டுமின்றி நங்கவரம் விவசாயப் போராட்டம் பேருந்து அதிபரை எதிர்த்துப் போராட்டம் என்று அவர் கண்ட களங்கள் ஏராளம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் அநீதியை, அக்கிரமத்தை எதிர்த்து அவர் நடத்துகின்ற நிகழ்ச்சியனைத்துமே நெருப்புக் களங்கள் தான். அவரை அழித்து விட துடித்த மனிதர்கள், கட்சிகள், பிற சக்திகள் அனைத்தையும் தனது உறுதிமிகு போர்க்குணத்தில் நீர்த்துப் போக செய்து விட்டவர் கலைஞர் அவர்கள். நெருப்பில் வீழ்ந்து புது வேகத்துடன் எழுந்து வரும் கிரேக்கப் புராணத்து பீனிக்ஸ் பறவையைப் போன்றவர் கலைஞர் என்பதற்கு இந்த உதாரணத்தைக் கூறலாம்.


எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நாட்களில் ஒரு நாள் சேலத்தில் பொதுக்கூட்டம். கூட்டத்திற்கு அரசு தடை போடுகிறது. நாளை தடையை மீறுவேன் என்கிறார் கலைஞர். நிரூபர்கள் ஏன் இப்படி? சில நாள் கழித்துப் பேச வேண்டியது தானே என்கிறார்கள். அதற்கு கலைஞர், தடை போட்டு கடந்த நாட்களில் தான் மீறாமல் இருந்தது கிடையாது, என்று ஒரு போர் வீரனுக்குரிய உறுதியோடு கூறினார்.



அம்மாவீரர் கண்ட, காண இருக்கின்ற நெருப்புக் களங்கள் நம் நெஞ்சை உருக்கும். இந்த நிலம் சிறக்கும். வாழ்க கலைஞர்

No comments:

Post a Comment