Monday 11 August 2014

காலையில் கண் விழிப்போம்! கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலி கண்டு களிப்புறுவோம்!!



முரசொலி... கலைஞரின் முதல் பிள்ளை, முத்துப்போல் விளைந்து முழுமதியாய் ஒளி வீசி, கனிவாய் மொழி பேசி, காவிய எழில் சிந்தி, உயிர் ஓவியமாய் உலா வரும் ஒப்பற்ற நாளிதழ். தந்தை மகற்காற்றும் கடன் அவையத்து முந்தி யிருப்பச் செயல் எனும் குறள்வழியில் தன் மூத்த பிள்ளையை வளர்த்தது மட்டுமல்லாது, அந்தப்பிள்ளையை தன் கைப்பிடித்தே இன்று வரை நடந்து வருகிறார். அதோடு அந்தப் பிள்ளையின் வழியாக தன் இதயத்தை உலகத்தார்க்கு காட்டுகின்ற பேரழகு இருக்கின்றதே அடடா! அது உலகப் புதுமைகளில் ஒன்று.

அறுபத்தைந்தாண்டு தனது பொதுவாழ்வின் பரிணாம பரிமானங்களையெல்லாம் முரசொலியில் பதித்த விதம் இருக்கிறதே.. அதைப் பதிப்பதில் உள்ள உள விருப்பமும், வேட்கையும், உறுதிப்பாடும் அவரிடம் உள்ள முரசொலிப் பாசத்தை நன்றாக உணர முடிகிறது.

அதைவிட எதையும், என் பிள்ளையின் வழியாகத் தருவேன் என்ற உணர்வு அந்த இதழ்மீது கொண்ட இதயப் பாசத்தை எண்ணிப் பார்க்கின்றபோது எவரால் தான் அவரை வாழ்த்தாதிருக்க முடியும்? சரியாக அறுபத்து மூன்று ஆண்டுகள் தன் அணைப்பில் அடைகாத்து அருமைக் கருத்துக்களை பிரசவிக்கும் அன்பை உலகில் எந்த இதழாசிரியரிடமும் காண முடியாத அற்புதமல்லவா?

எனக்கு பழக்கமான நாற்பத்தைந்தாண்டு கால முரசொலியையும் நினைத்துப் பார்க்கிறேன். அதற்கு முன் வந்த முரசொலியின் வரலாற்றையும், வரவழைத்து இணைத்துப் பார்க்கிறேன்.

அப்பப்பா! எத்தனை செய்திகள், கருத்துக்கள், கலை மலிந்த காட்சிகள், தலை சிறந்த தலைவர்களின் இதய வெளிப்பாடுகள். கனிச்சுவையேற்றும் கவிதைகள், தத்துவசித்தாந்த விளக்கங்கள், நடைமுறை நலன் காணும் நடவடிக்கை வடிவங்கள், கதை, சிறுகதை, தொடர்கதை, உலக நிகழ்வுக் குறிப்புகள், உயர் சிந்தனையார்களின் உள்ளங்கள். ஒப்பற்ற வரலாற்றுச் செய்திகள், ஒளி சிந்தும் உள்ளூர்க் கழகத் தோழர்களின் செயல்கள், தியாகங்கள், பொதுநலன் தேடும் தினப்பலன்கள், கலைஞர் கடிதங்கள், கலைஞர் பதில்கள், பேட்டிகள், தாய் காவியக் கவிதை வடிவம் வான்புகழ் கொண்ட வள்ளுவர் சிந்தனையும், செயலும், வரிசை வரிசையாய் வகை வகையாய் கழகம் நடத்திய மாநாட்டுப் படங்கள், சொற்பொழிவுகள், ஊர்வலக் காட்சிகள், மண, மனைவிழா மாட்சிகள், வாழ்த்துரைகள், சிந்தனைப் பூங்கா, செந்தமிழ்ச்சோலை ஆகிய பகுதிகளில் அறிவார்ந்த சிந்தனையாளர்களின் கருத்து மலர்கள், புதையலில் புதுபுதுச் செய்திகள், சிந்தனையைத் தூண்டும் கவிதைகள், சிறுசிறு துணுக்குகள், இலக்கிய விளக்கம் தரும் எழில்சேர் கட்டுரைகள், எண்ணற்ற இனிய அரிய செய்திகள்.கலை செறிந்த கருத்துக்கனிகள்.

மூர்க்கம் நிறைந்த முரட்டுக்காளையின் கொம்புகளை விட என் கைகள் வலிமையானது என்று காட்டத் துடிக்கும் இளங்காளையின் போர்வடிவக் காட்சியை முரசொலியின் முகத்தில் பதித்தாற்கேற்ப தம் வாழ்வையும், போராட்டங்கள் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டார் அல்லது அமைந்து விட்டது என்பது கூட முரசொலியின் நேசம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சமும் சலிப்பு சங்கடமின்றி நேரங்கிடைக்கின்ற போதெல்லாம் முரசொலிக்கு வருகின்ற கட்டுரை கடிதங்களை, படித்துத் திருத்தி, தலைப்புகள் கொடுத்து வெளியிடுகின்ற உணர்வு... அந்த இதழை இதயத்தோடு இறுக்கப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை காண முடிகிறது.

தந்தை பெரியார் தனது பச்சை அட்டை குடியரசைக் குறிப்பிடும் போது ""படிப்பதற்கு ஆளில்லை என்றால் கூட நானே எழுதி அதில் பதிய வைத்து நானே படிப்பேன் இதழ் தொடர்ந்து வெளிவரும் என்றார்'' அந்தப் பகுத்தறிவு பகலவனின் உணர்வை உள்ளத்தில் பதித்து உயர்ந்திருக்கும் கலைஞர் அவர்கள் தன் கைப்பொருளையெல்லாம் கொட்டி முரசொலியை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறார். கலை மணம் கமழ வைத்திருக்கிறார்.

முரசொலித்தாளின் விலை மூன்று ரூபாய் என்றாலும், அதிலுள்ள செய்திகளும் கருத்துகளும் விலை மதிப்பில்லாதவை, காலத்தால் அழியாதவை, கலை சிந்தும் எழிற்சோலை, கடல் போன்று மனதை விரிவாக்கும் வளம் கொண்டவை.

முரசொலியை முழுவதும் படித்து பதிய வைக்கும் பழக்கம் கொண்டதால் பள்ளி சென்று படிக்காத நான் எழுதும் நிலையை எட்டியிருக்கிறேன். பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நூலாக்கும் செய்திகளை வெளியிட பணமில்லாததால் கோப்புகளில் குடி வைத்திருக்கிறேன். ஏராளமாக எழுதுவற்குரியவற்றை இதய அறையில் அடைத்து வைத்து அடைகாக்கிறேன்.

கலை மணம் தூவி நம்மைக் களிப்புற வைக்கும் கழகத்தை, கழகத்தை காத்து வளர்க்கும் கலைஞரின் ஆற்றலை, குறிப்புகளாகவே கோடிப்பக்கங்களில் நிறைத்து வைக்கலாம். விரித்து எழுதுவதென்றால் விண்வெளியை நிரப்பி விடலாம். இன்றைய எதிர்கால படைப்பாளிகள், படிப்பாளிகள். எழுத்தார்வ மிக்க இளைஞர்கள், இதழாளர்கள், கழகம், கலைஞர் என்று ஆய்வுகளில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் விட சிறந்த ஒன்றை காண முடிகிறது. எத்தனையோ தலைவர்களை சந்திக்கிறார். எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். எவ்வளவோ எழுதுகிறார், பேசுகிறார்.அது எல்லா இதழ்களிலும் ஏடுகளிலும் விரிவாகவே வெளிவருகிறது. ஏடுகள் பலப் பலவற்றிற்கு பேட்டி தருகிறார். ஆனால் அவற்றையெல்லாம் தனது முரசொலியில் பதித்துப் பார்த்து உளம் மகிழ்கிறார். உவகையுறுகிறார் என்பது முரசொலியை உயிர் மூச்சாகக் கருதுகிறார் என்பதை உணர முடிகிறது.

முன்னெல்லாம் முரசொலியை படித்தவுடன் பழையதாய் கருதி பயன்படுத்தும் பழக்கமே இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் உயிருள்ள பொருட்களாக கருதுகின்ற பக்குவம் வந்து விட்டது. கடந்த மூன்றாண்டு கால முரசொலியை நாள் வரிசையில் அடுக்க முனைந்த போது மீண்டும் படித்ததை படிக்கும் ஆசை தோன்றியது. கலைஞர் தன் உள்ளத்தை எப்படியெல்லாம் ஓவியமாக்கி காட்டியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

ஓர் எழுத்தாளராக, பேச்சாளராக, படைப்பாளியாக பயன்மிகு பொது நல தொண்டனாக, அரசியல் அறிஞனாக அடிக்கடி சிறை செல்லும் போராளியாக, நாடு முழுவதையும் கணக்கிலெடுத்து வளர்ச்சித் திட்டங்களை வகைப்படுத்த குவிந்து கிடக்கும் அரசின் கோப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் அமைச்சராக பொறுப்பு வகித்தாலும் தன் மூத்த பிள்ளை முரசொலியை முத்தமிடாத நாளில்லை என்ற பாச உணர்வு பத்திரிக்கையாளர் என்ற உணர்வையும் தாண்டிய உன்னத அன்பாகும்.

சுவை மாற்றம் என்பது நாவிற்கு மட்டுமின்றி உணர்வுக்கும் உரியது என்றாலும் எதுவும் முன்னோக்கி செல்வதுதான் சிறந்தது என்பதை கடந்த ஆண்டில் நடந்த கழகப் பொறுப்பாளர்களின் ஆய்வரகங்களில் அவர் ஆற்றிய உரைகள் நம் உள்ளத்தில் பதிந்திருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்த கழக நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வந்து விளக்கி, இன்றைய தோழர்களின் நிலையையும் விளக்கி எதிர்கால கழக நிகழ்வுகள், கழகம், நடந்து வந்த கொள்கைப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி, கழகத்தின் அடித்தள உணர்வும் கொள்கையும் அர்த்தமும் ஆழமும் கொண்டது என்பதை அழகுபட உணர்த்தியிருக்கின்ற அருமை, நெஞ்சை நெகிழ்வில் ஆழ்த்துகிறது.

எல்லாத் தோழர்களும் முரசொலியைப் படிப்பதற்கு ஏதுவாக மேலும் சில ஊர்களில் பதிப்புகள் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

முரசொலியை வாங்குங்கள் என்று மூத்த கழகத் தோழர்களிடம் கேட்ட போது அதுதான் அனைத்தும் மற்ற இதழ்களில் வந்து விடுகிறதே என்றார்கள். மற்ற இதழ்களில் வந்தாலும், கலைஞர் முரசொலியில் பதிக்கின்ற போது தோன்றும் கலையழகும், எழிலும் நம்மை கவிஞனாக்கும் என்றேன்.

அதிகார வரிசையில் குறளை விரித்துரைத்து வியப்பூட்டிய கலைஞர் சிந்தனையும், செயலும் எனும் தலைப்பில் தன் சிந்தையில் தோன்றிய சீர்மிகு கருத்துக்களை சிலையென செதுக்கி நம் சிந்தனையாற்றலுக்கு செழுமையூட்டிருக்கிறார்.

தற்போது புதுமையாகத் தீட்டி முடித்த காலப்பேழையும் கவிதைச் சாவியும் எனும் வரலாற்றோவியம் ஓர் உலகப் புதுமையென உள்ளம் உவந்து, மகிழ்ந்து உற்சாகம் கொள்கிறது.

பல்லாயிரம் பக்கங்களில் பலப்பல வரலாற்று, அறிவியல் நூல்களில் படித்ததையெல்லாம் சில பல வரிகளில் வண்ணம் தீட்டி நமது உள்ளத்தை வரலாற்று ஓவியக் கூடமாக மாற்றியிருக்கிறார். கருத்து மாறுபாடு கொண்டோர் என்றாலும், தமிழர் என்பதால் தன் கண்ணில் ஒற்றி களிப்புறும் மாசிலா மனம் கொண்ட கலைஞர் யாரையும் மறந்து விடாமல் காலப்பேழையை கவிதைச் சாவி கொண்டு திறந்து காட்டும் சிறந்த உள்ளம்,தமிழ் கூறும் நல் உலகத்தின் நற்சிந்தனையின் நாயகன் என எண்ணி இதயம் இனிப்புறுகிறது.

 இராகுல சாங்கிருத்தியாயன், கல்கி, சாண்டில்யன், கா.அப்பாத்துரையார், நா.பார்த்தசாரதி, செகசிற்பியன், மணிசேகரன், விக்கிரமன், அசோகமித்திரன், கண்ணதாசன், அண்ணா, கலைஞர் என அவர்கள் வரைந்த எத்தனையோ வரலாற்றுப் புதினங்களைப் படித்திருக்கிறோம். ஆனால், கலைஞர் அவர்கள் அவற்றின் சாரத்தையெல்லாம் நம் நெஞ்சில் நிற்க வைத்து மறந்து விடாத மனப்பாடமாய் பதிய வைக்கும் பாங்கு பரவசமூட்டுகிறது.

விளம்பரம் இல்லாத, வியாபாரமாய் இல்லாத, விரசமில்லாத, விவேகபுரிக்கு அழைத்துச் செல்லும் இராசபாட்டையாக ஓர் இதழை, ஏட்டை, அறுபதாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் தலைவர் கலைஞரை, உலகப் பல்கலைக் கழகங்கள், உளங்கவர் விருதுகளை வழங்கும் நிறுவனங்கள், யுனெஸ்கோ மற்றும் கின்னஸ் போன்ற அமைப்புகளெல்லாம் தங்களில் பதித்து வைத்து பெருமை பெரும் நாள் வர வேண்டும்.

காலையில் கண் விழிப்போம்!

கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலி கண்டு களிப்புறுவோம்!!

No comments:

Post a Comment