Monday 4 August 2014

அண்ணன் முரசொலி மாறன் நினைவாய் எழுதிட்ட நூல்--பகுதி 3

3.திகைக்க வைக்கும் திருப்பங்கள்! தித்திக்கும் விளைவுகள்!!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது நாட்களுக்கு மேலாக நாடெங்கும் சுற்றி வந்து, நாளெல்லாம் உழைத்து நாற்பது தொகுதிகளையும் தன்னில் இணைத்து சாதனைப் பட்டியலை மேலும் நீள வைத்து நம் நெஞ்சத்தை மகிழ்வித்திருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்கள் சாதனைகள் நிகழ்த்துவதற்கு முன் அதற்கான முயற்சிகளைத் தொடங்கும்போது விளைவுகள் எப்படியிருக்கும் என்று கணிப்பதை விட, எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளும் துணிவும், எதையும் ஏற்றுக் கொள்ளும் இதய வலிமையும், உளத்தூய்மையும் அவரிடம் இயல்பாகவே குடிகொண்டு இருக்கிறது என்பதை அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஏராளமா எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.
இடர்ப்பாடான நேரங்களில் எதிரிகளின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்திடவும் அவர் வகுக்கும் வியூகங்கள், நிகழ்ச்சி வடிவங்கள், அதற்காக அவர் வெளியிடும் கருத்துக்கள், அவரின் ஓயாத உழைப்பு எல்லாம் இந்த சமூகத்தின் ஏற்றத்திற்கும், எழிலுக்கும் பயன்பட்டது மட்டுமல்லாது அவரது இதய கொள்கைக்கும் வெற்றியாக அமைந்தது மட்டுமன்றி அவரது வழிகாட்டிகளையும் பெருமைப் படுத்தியிருக்கிறது.
இந்தியா என்பது எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்? என்பதில் திராவிட இயக்கத்திற்கு தெளிவான பார்வை எப்போதும் உண்டு. அய்ம்பத்து ஆறு தேசங்கள் என்று இந்தியாவை சில புராணங்கள் புகழ்ந்தாலும் அவை என்றும் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்ததில்லை. ஒருவரையொருவர் எதிர்த்து அழிந்ததாகத்தான் அதன் வரலாறு வாய்விட்டு அழுகிறது.
சங்ககால உணர்வுகளைச் சார்ந்து, முடிந்தவரை அறிவியல்-இயற்கையோடு வாழ்ந்து சிறந்திருந்த மக்களை தங்கள் சுயநல லாபத்திற்காக மிகச் சிறுபான்மை வேற்று நாட்டு கூட்டம் பல்வேறு சதி வலைகளைப் பின்னி இங்குள்ள மன்னர்களின் துணையோடு இங்குள்ள மக்களை அடிமைக் கூட்டங்களாக மாற்றி விட்டனர். மதவாதத் தளைகளால் மவுடீகத்தில் மக்கள் சாய்ந்து விட்டதால் பெரும் நிலப்பரப்பு மாற்றாரின் வேட்டைக்காடாக மாறிப் போனது.
அடிமைத் தளைகளை அவர்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் வகையில் சூது வலை விரித்து வெற்றி கண்டார்கள் சூழ்ச்சிக்காரர்கள். இந்திய துணைக் கண்டத்திற்கு காந்தியாரால் விடுதலை கிடைத்தது என்றாலும் சனநாயகத்தின் பேரில் இங்கே மீண்டும் ஆதிக்கமே நிலை கொண்டது. துணைக் கண்டம் முழுவதும் ஒரே கட்சி ஆட்சி என்பது, மேலும் மக்களை அடிமைப் பள்ளத்தாக்கில் ஆழ்த்தியது.
இந்திய தேசியம் என்பதை ஒரு தெய்வீகம் என்பதுபோல கருதுவதும், விமர்சிக்கவே கூடாது என்பதுபோல் இங்கே ஓர் எண்ணம் நிலவுகிறது.
தவிர்க்க இயலாததால் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினாலும் அதற்குரிய மரியாதையை வழங்கியதாகத் தெரியவில்லை. அரசின் அதிகாரங்கள், மிகுதியாக, மத்திய தொகுப்பில் வைத்துக் கொண்டது மட்டுமின்றி மாநில தொகுப்பில் உள்ள அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ளும் நீதியற்ற நிலையும் நெடுநாள் நிலவுகிறது. இதை பல்வேறு சமயங்களில் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்து விளக்கியிருக்கிறார்கள்.
மத்திய, மாநில உறவுகள் குறித்து பல்வேறு காலகட்டங்களில் தலைவர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சி மாநாடுகளும் நடத்தி, நீதியரசர் ராசமன்னார் குழுவையும் அமைத்து தீர்மானங்களையும், அறிக்கைகளையும் நாட்டுக்கு அளித்தார்.
பன்முகத் தன்மையும், பல்வேறு வகையான மொழிகளும், கலை, நாகரீகம், நடப்பியல், வாழ்வியல் வேறுபாடுகளும் நிறைந்த இந்தியா ஓர் ஓவியம்போல் விளங்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் தம் கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.
“வண்ணங்கள் பலவும் தன் நிறத்தை இடமாற்றிக் காட்டி எழிலூட்டி ஒளிர்ந்தால்தான் அது ஓவியமாக இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒன்றாக கொட்டி வைத்தால் அது ஓவியமாகாது” என்ற உவமையை தலைவர் பல நேரங்களில் விளக்கியிருக்கிறார்.
இந்தியா எப்படி இருந்தது? இருக்கிறது? இருக்க வேண்டும் என்பதை இயற்கை வழியிலும், அறிவியல் முறையிலும், ஆய்ந்தறிந்த அவரது தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் உயிரோட்டமாய் தன் உணர்வுகளைப் பதிய வைத்து, சிந்தித்து பலகாலம் தன் பணிகளை திட்டங்களை அமைத்துக் கொண்டு அதற்காக பல்வேறு செயல்களையும், போராட்டங்களையும் நடத்தினார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தல் காலங்களில் அவரது சிந்தனை ஓட்டம் எப்படியிருந்தது என்பதை அவரது வாழ்க்கை வழித்தடத்தைக் காண்போர் புரிந்து கொள்ள முடியும். அண்ணாவின் மறைவிற்குப் பின் கழகத் தலைமையேற்ற தலைவர் கலைஞர் டெல்லி அரசின் அதிகார வரம்புகளையும், அதன் விளைவுகளையும், கூர்ந்து நோக்கி தன் அடிகளை அளந்து வைக்கத் தொடங்கினார்.
1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்து இண்டிகேட் சிண்டிகேட் என்று வேறுபட்டுக் கிடந்தது. இந்திரா காங்கிரஸ் நிஜலிங்கப்பா காங்கிரஸ் என்று ஒரே கட்சிக்குள் எதிரெதிர் நின்றார்கள்.
காங்கிரஸ் நீலம் சஞ்சீவி ரெட்டியை நிறுத்தியது. காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி கட்சியை எதிர்த்து நின்ற வி.வி.கிரியை வெற்றி பெறச் செய்வதற்காக மனச்சாட்சிபடி வாக்களிக்க எம்.பி., எம்.எல்..,க்களை வலியுறுத்தினார். பிற கட்சி ஆதரவையும் கோரினார்.
அதில் அன்று இரு அணிகளில் ஒருவரை வெற்றி பெறச் செய்கின்ற வலிமை கழகத்திற்கு இருந்தது. இந்திரா கலைஞரை நாடினார். கலைஞர் சில முற்போக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி சில நிபந்தனைகள் விதித்தார். ஏற்றுக் கொண்டார் இந்திரா காந்தி அவர்கள்.
கலைஞர் தன் காலடிகளை டெல்லி அரசியலில் இப்படித்தான் பதிய வைத்தார்.
இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் சமத்துவம் பெற வேண்டும் என்ற அண்ணாவின் எண்ணத்தை, அறைகூவலை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்ற வேட்கை மட்டும் அணையாத் திருவிளக்காய் அவரது இதய வேள்வியாய் எரிந்து கொண்டு இருந்தது.
தமிழகத்தில் வெற்றி கண்ட அண்ணாவின் கூட்டணி முறையை அகில இந்தியாவில் கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்க எல்லா நேரமும் விழிப்புடன் இருந்தார், நம் இனிய தலைவர் கலைஞர் அவர்கள்.
மத்தியில் இதுவரை ஆறேழு கூட்டணி அரசுகள் கோலோட்சியிருக்கின்றன. அதில் சந்திரசேகரைத் தவிர மற்றவை கலைஞரால் உருவாக்கப்பட்ட கூட்டணி அரசுகள்தான்.
ஆனால், எரிதழல் நிகழ்வுகளையும், எதிரிகளின் ஏளனங்களையும் கடந்து சென்றே கூட்டணிகளையும், அரசுகளையும் உருவாக்கினார். மிசாவின் மிரட்டல் - பல்வேறு பாதிப்புகள், சனநாயகச் சிதைவு என்பது மட்டுமல்ல, தானும், தன் இயக்கமும் பேரளவிற்கு பாதிக்கப்பட்ட பின்னர் உருவான கூட்டணி 1977ல் அமைந்த கூட்டணி. அந்தக் கூட்டணி பல்வேறு சரித்திர பரிணாமங்களை உருவாக்கியிருக்கிறது.
மதவாத இயக்கமாக மட்டுமே இருந்த சனசங்கம் தன் பெயரை மாற்றிவிட்டு பாரதீய ஜனதாவாகி அரசில் பங்கேற்ற நிகழ்வும் நடந்தது. காங்கிரசாய் இருந்தவர்கள் ஜனதாவாகவும், சனநாயக காங்கிரசாகவும் உருமாறி அதே கூட்டணி அரசில் இடம் பெற்றார்கள்.
மிசா..... அதன் கோர வடிவத்தை உணர்ந்த கலைஞர் அவர்கள் அதனை எதிர்த்து இந்தியாவிலேயே தனது இயக்கத்தின் சார்பில் முதல் தீர்மானத்தை முன் வைத்தார். தன் இயக்கத்திற்கு அந்த நேரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சனநாயக நலன் கருதி அந்த எதிர்ப்பை காட்டினார். அது மக்கள் மீதும் மாசற்ற அரசியல் நடைமுறை மீதும் அக்கறை கொண்ட ஒரு சமூக நலப்போராளியைத் தவிர வெறும் அரசியல்வாதி அதைச் செய்திருக்க முடியாது.
ஒவ்வொரு கூட்டணியை உருவாக்கும் பொழுதும் அதை வெற்றி பெறச் செய்ய அவர் வகுக்கும் வியூகங்களும், செயல்வடிவங்களும் அதைச் செயல்படுத்த-அவர் மக்க ளை கூட்டுகின்ற மாநாடு, ஊர்வலம் போன்ற பிரமாண்டமான நிகழ்ச்சிகளும்-, எழில்மிகு எழுத்துக்களும், இதயத்தை அள்ளி அடித்துச் செல்லும் சொற்பொழிவுகளும், அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுபவையாகும். இது வருகின்ற வரலாற்று ஆசிரியர்களால் வண்ணப்படுத்தி சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.
திராவிட நாட்டின் விடுதலைக் கோரிக்கையை இந்திய நாட்டின் பாதுகாப்பு கருதி சீனப்படையெடுப்பு நேரத்தில் கை விட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தக் கோரிக்கைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கிறதென்று கூறி வட இந்தி அரசியல்வாதிகள் இதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும் என்றார்.
எழிலுறு இந்தியா, இதயம் கவர் இந்தியா, ஏற்றதாழ்வற்ற இந்தியா, எல்லார்க்கும் எல்லாம் என்ற இனிய இந்தியா என்ற அண்ணாவின் எண்ண ஓட்டத்தை தன் இதயத்தில் ஏந்தி நிற்கும் கலைஞர் அவர்கள் அதை செயல்வடிவில் கொண்டு வர பாடுபட்டு பல்வேறு சோதனை, வேதனைகளைத் தாங்கி, படிப்படியாய் வளர்ந்து வந்த நிலைதான் பல்வேறு கூட்டணி அரசுகள் மத்தியில் வெற்றிகரமாக செயல்பட்ட நிலை எனலாம்.
பாரதிய சனதா மதவாத இயக்கம் என்றாலும், அதன் தலைவர்கள் பலர் அரசியலில் பாதிப்படைந்தவர்கள் என்பதாலும், சனநாயக மீட்புப் போரில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதாலும் அவர்களைப் பண்படுத்தி சமூக நலனுக்கு அவர்களை பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பாரதீய சனதாவோடு கூட்டுச் சேர்ந்து வெற்றி கண்டு, மதவாத சிந்தனையில்லா குறைந்த அளவு செயல்திட்டதோடு ஓர் அய்ந்தாண்டுகள் நிலையான அரசை இயக்கிய அருமை கலைஞருக்குரியது.
வி.பி.சிங்-கின் தேசிய முன்னணி ஆட்சியில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருபத்தேழு விழுக்காட்டை பெற்றுத் தந்தது மட்டுமல்லாது தமிழ்நாட்டில் நலன் காக்க காவிரி நடுவர் மன்றம் அமைத்தது கலைஞரின் சாதனையோடு, கூட்டணி ஆட்சியால் ஏற்பட்ட நீதியான, நியாயமான முடிவுகள் ஆகும்.
மத்திய அரசியலில் கலைஞரின் தாக்கம் அல்லது செல்வாக்கு அல்லது அவரது அணுகுமுறை, நட்பியல் ஆகியவற்றால் ஏற்பட்ட நல்விளைவுகள் இந்தியாவில் நிலவிய நெடுநாள் கொடுமைகள் அல்லது குறைகளை நிவர்த்திக்கும் நிலை கண்டது.
ஆம், இது சனநாயக நாடு என்றாலும், சகலருக்கும் சமத்துவம் என்ற சட்ட அமைப்பின் கீழ் இயங்கினாலும், சில மேட்டுக் குடியினருக்கே உயர் பதவிகள் அனைத்தும் உரியனவாகி, உரிமையாகி உறவாகிக் கிடந்தது. ஆனால், இத்தகைய கூட்டணி அரசுகளின் உதவியால்-அன்புத் தலைவர் கலைஞரால் திராவிட இயக்கத்தின் இதயமாகிய சமூகநீதியின் வழித்தடத்தில் அந்த உயர் பதவிகள் கிடைக்கத் தொடங்கின.
இந்திரா காந்தியின் நட்புக் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பஞ்சாப் ஜைல்சிங்கை இந்தியக் குடியரசுத் தலைவராக கொண்டு வருவதில் கலைஞர் வெற்றி கண்டார்.
தேசிய முன்னணியின் மூலம் பிராமணரல்லாத வி.பி.சிங் பிரதமராக வழிவகுத்தார். பின் அய்க்கிய முன்னணியின் வழியாக பிரதமராக திரு.தேவகவுடாவும், பின்னர் அய்.கே.குஜ்ராலும் பிரதமராக வழி கண்டார்.
உலகப் பெரும் அதிசயமாக இந்தியாவில் ஒரு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒரு பெருமகன் திரு. கே.ஆர்.நாராயணனை இந்தியக் குடியரசுத் தலைவராக கொண்டுவர முயன்று வெற்றிகண்ட மிகப்பெரிய சமூக நலக் காவலர் கலைஞர் அவர்கள்.
மதவாதத் தளைகளில் சிக்கி, மயக்கத்தில் கிடக்கும் இந்தியாவில், அறிவியலின் மகத்துவத்தை உணர வைக்கும் மகத்தான பணியில் தன்னை ஈடுபடுத்தி அதில் வெற்றியும் கண்ட மாவீரர் கலைஞர் அவர்கள்.
ஆம். மதவாதச் சார்புடைய பாரதீய சனதாவை இணைந்து தேசீயச் சனநாயகக் கூட்டணயை உருவாக்கி, மதமாசு மருவற்ற ஒரு குறைந்த அளவு செயல்திட்டத்தை முன் வைத்த கலைஞர் அவர்கள் அந்த தேசிய சனநாயக கூட்டணி அரசின் மதசார்பற்ற நிலையை உலகிற்கு உணர்த்த மாபெரும் அறிவியல் மேதை அன்புத்தமிழ்க் கவிஞன் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பரிந்துரைத்தார் என்பது கலைஞரின் சாதனை நோக்கில் பல்வேறு பரிணாமங்கள் வளர இருக்கிறது என்பதை உணர்த்துவதாகும்.
ஏறத்தாழ கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக கலைஞர் செல்லும் வழியில்தான் மத்திய அரசாங்கம் சார்ந்த அரசியல் வலம் வருகிறது. அதனால் இந்தியா வளம் பெறுகிறது.
கடந்த நாற்பதாண்டு கால தமிழ்நாட்டின் - இந்தியாவின் வரலாற்றுக் காட்சிகளை அதாவது எல்லாத் துறைகளிலும் வளர்ந்த நிலைகளை நிரல்படுத்திப் பார்த்தால், அதில் கலைஞரின் பங்களிப்பை இணைத்துப் பார்த்தால், திகைக்க வைக்கும் திருப்பங்கள் இருக்கும். அதில் தித்திக்கும் விளைவுகள் நிறைந்திருக்கும்.
மத்திய அரசியலில் கலைஞரின் ஈடுபாடும் முயற்சியும் அவரது வாழ்வில் வரலாற்றில் ஓர் அத்தியாயம் மட்டுமல்ல. தனி வரலாறாக எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கே அண்ணன் முரசொலி மாறன் நினைக்கப்பட வேண்டியவராவார்.

தொண்டு, தொலைநோக்கு தொடர் முயற்சி ஆகியவற்றில் தூங்காது விழித்திருந்து துணிவுடன் வினை முடித்து வெற்றி கண்ட விடியல் கதிர் கலைஞர் அவர்கள்
தொடரும்.....

No comments:

Post a Comment