Saturday 9 August 2014

படைப்புகளைத் தருவோம்


படைப்புகளைத் தருவோம்
 
(கவிஞர் கனிமொழிக்கு கடிதம்)


பேரன்புடையீர், வணக்கம்!

நலம் வாழ நல்வாழ்த்துக்கள். கடந்த மார்ச் 29ம் நாள் தியாகராய நகரில் தாங்கள் பேசியதை தொலைக்காட்சியில் கேட்ட போது மனம் அளவிலா மகிழ்வைப் பெற்றது.

திராவிட இயக்கப் படைப்பாளிகள் தங்கள் பணிகளை இடையறாது ஆற்ற வேண்டும். இல்லையெனில் எதிர்காலத் தமிழர்கள் சுய மரியாதையை இழந்து விடுவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். சுயமரியாதை இழந்தால் உரிமைகளை இழந்தது விடுவார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.

இதைப் படைப்பாளர்களால்தான் மக்களின் உள்ளத்தில் பதிய வைக்க முடியும் என்பதை உணர்ந்து உணர்த்தியிருக்கிறீர்கள். என்னுடைய இதயமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி மகிழ்கிறேன்.

உங்கள் சிந்தனையில் இந்தப் பேச்சின் மூலம் , திராவிட இயக்கச் சிந்தனை சீரான இடத்தைப் பெற்றிருப்பதாகக் கருதுகிறேன். செழுமை கொண்ட பொது உடமைச் சிந்தாந்தத்தின் வழி நடப்பதாக சொல்லும் நிறைய சிற்றிதழ் அல்லது நூல்களில் அதன் செழுமையைக் காட்டாது. சிதைந்து சிறுத்துப்போன இலக்கிய பொது உடமைச் சார்பாளர்கள் இங்கே பலவேறு படைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிட இயக்கப் படைப்பாளிகளின் ஆற்றல் இளைத்துப் போன காரணத்தால் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளிகள் கூட வர்க்க, பேத அல்லது ஒருவகை வக்கிரமான பொருளை - நடையை இலக்கிய நயம் என்று எண்ணுகின்ற இரக்க நிலை இங்கே நிலவுகின்றன.

கடந்த காலத்தில் சமூக அவலங்களை அகற்றுகின்ற அற்புதமான படைப்புகளை அண்ணாவும், அருமைத் தலைவர் கலைஞரும், அவர்களைப் பின்பற்றிய கழகக் காவலர்களும் படைத்த சிறுகதைகள், புதினங்களை கண்ணெடுத்துப் பார்த்தால் அதில் கலை கொஞ்சும், காவிய வடிவம் தோன்றும். அந்த இனிய வடிவத்தின் வரவில் இடைவெளி தோன்றியதால் இன்று யார் யாரோ தமிழுக்கும், படைப்புகளுக்கும் சொந்தம் கொண்டாடும் சோகம் இங்கே நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிவகுமார் வந்திருந்தார். பல்வேறு பொருள்கள், தமிழக நிலைகள் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது. தங்களின் முதல் மண உறவு முறிந்த நேரம்.

அவர் மிகுந்த மன வேதனையோடு தங்களைப் பற்றிய குறிப்புகளை வெளிப்படுத்தினார். அவரிடம் தாங்கள் ஓவியம் பயிலச் செய்ய தலைவர் அழைத்து வந்ததாகக் கூறினார். கூறி விட்டுச் சொன்னார், கலைஞரின் அச்சு என்றால் அது கனிமொழி தான். கனிமொழி மட்டும் ஆணாக இருந்தால் இந்த அகிலத்தை வழி நடத்தும் ஆற்றலைக் குவித்திருப்பார் என்று கூறி விட்டு, தங்களை அரசியலில் ஈடுபடுத்தாத தலைவரை நினைத்து வருந்தினார்.

அவரது கருத்தை அப்படியே தலைவருக்கு எழுதினேன். ஆனால் உரிய நேரத்தில் முடிவெடுக்கின்ற தலைவர் தங்களை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி எங்களைப் போன்றோரை மகிழ்வித்து இருக்கிறார்.

இன்று இனமான இயக்கத்தின் அடித்தளத்தைப் புரிந்து கொண்டு திராவிட இயக்கப் படைப்பாளர்கள் இடையறாது மக்களுக்கு தெளிவூட்ட வேண்டுமென்று வேண்டியிருக்கிறார்கள்.

ஏற்கனவே இது பற்றிய எனது வேண்டுகோளை தலைவருக்கு தெரிவித்து இருக்கிறேன். தமிழக முழுவதும் உள்ள கழகப் படைப்பாளர்களின் வெளிப்பாடுகளை கழகம் பெற்று அவைகளுக்கு பரிசும், பாராட்டும், சான்றுகளும் தர வேண்டும் என்று வேண்டியிருந்தேன்.

கடந்த தலைமுறையின் கழகப் படைப்பாளிகள் வந்து முதிர்ந்தும், வாழ்வு முடிந்தும் போய் விட்டார்கள். இன்றைய இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் படைப்புத் திறனை வளர்த்திடும் முயற்சியில் தாங்கள் முழுமையும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

தி.மு.. வரலாற்றை வரைவதென்றால் துறை தோறும் எழுதப்பட வேண்டும். ஈடுபட்ட ஒவ்வொரு துறையிலும் அதன் சாதனைகள் சொல்லப்பட வேண்டும். ஆடவர், மகளிர் உள்ளிட்டோர் மனங்களில் பதிக்கப்பட வேண்டும். அதற்கு தங்களின் பணி பயன்பட வேண்டும். ய்ந்து  பார்த்தால் தி.மு.. போன்று மனித உணர்வுகளில் ஊடுருவி உறைந்து ஊட்டச் சத்தாய், உந்து சக்தியாகி உழைத்த இயக்கங்களை உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது.

அந்த உயர்வான உன்னதமான இயக்கத்தின் இதயமான படைப்பாளர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட தங்களை வாழ்த்துகிறேன். ஆற்றல்மிக்க நீங்கள், நடிகர் சிவகுமாரின் கூற்றுப்படி கலைஞரின் அச்சான நீங்கள், நான் அடிக்கடி இங்கே குறிப்பிடுவது போல சங்க கால இலக்கியச் சூழலும், புதுமைப் பயனும் தமிழகத்தைத் தழுவ கலைஞரைத் தொடர என் இதயமார்ந்த வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறேன்

No comments:

Post a Comment