Saturday 9 August 2014

கலைஞர் தந்த உழவர் சந்தை! கண்டால் மகிழும் நமது சிந்தை!!


கலைஞர் தந்த உழவர் சந்தை!கண்டால் மகிழும் நமது சிந்தை!!


என் பிள்ளைகளைக் காண கோவைக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னை ஒரு நாள் உழவர் சந்தைக்கு கூட்டிச் சென்றிருந்தனர்.

இராசபாளையம் நகரில் இருந்ததை விட மிகப் பெரிய இடத்தில் நிறைய கடைகளால் நிரம்பியிருந்தது உழவர் சந்தை. இயற்கை மனிதனுக்கு அளித்த எண்ணற்ற இனிய காய் கனிகள் அனைத்தும் அங்கே அழகழகாய் அணி செய்த வண்ணம் இருந்தன.

இதில் இனிப்பூட்டும் அம்சம் என்னவென்றால் கடைகளில் வணிகம் செய்தவரெல்லாம் நாளும் நாளும் உழைப்பால் வாடி விட்ட முகம் கொண்ட வேளாண் குடியைச் சேர்ந்தவர்கள். காய்கனிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களோ மகிழுந்துகளிலோ, துள்ளுந்துகளிலோ வந்திறங்கும் வசதி கொண்ட வள மனிதர்கள். இது கடவுள் மனிதரிடம் வரம் கேட்பது போல இருந்தது.

காலைப் பனி, கடுங்குளிர் இருப்பினும் எங்கு நோக்கினும் கைகளில் பைகளுடனும், கண்களில் ஆவலுடனும் கடைக்காரர்களின் கனிந்த மகிழ்வையும் காய்கறிகளுடன் நிரப்பியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

உழைத்து உற்பத்தி செய்பவனும், அதைத் துய்ப்பவனும் பெறுகின்ற பயனை இடையில் உள்ள இடைத் தரகர்களும், வணிகர்களும் ஏமாற்றிப் பறித்து இருவரையும் வதைப்பதைத் தவிர்த்து மன மகிழ்வை ஊட்டியிருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.

உற்பத்தி செய்பவன் உள்ளம் வருந்தாமலும், பெற்றுத் துய்ப்பவன் வருத்தம் கொள்ளாமலும் மகிழ்கின்ற வகையில் உழவர் சந்தையை உருவமைத்த கலைஞர் அவர்களை உண்மை உள்ளம் கொண்டவர்கள் வாழ்த்தவே செய்வார்கள்.

விளைவிப்பவன் தன் பொருளுக்கு விலை நிர்ணயிக்க இயலாத நிலையில் இருந்த வேளாண் பெருமக்களின் வேதனையை விரட்டி நியாய விலையை அவர்களே நிர்ணயிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார் கலைஞர் அவர்கள்.

நேர்மையும், நல் நெஞ்சமும் கொண்ட வேளாண் பெருமக்களின் உள்ளத்தில் ஆசைகள் அலை மோதாது என்பதை அறிந்த கலைஞர் அவர்கள் உழவர் சந்தை மூலம் அவர்களை உலகம் உணரச் செய்திருக்கிறார்.

ஆம்! பெரிய நிறுவனங்கள் நடத்தும் அங்காடிகளில், வணிகர் சங்கங்கள் நடத்தும் அங்காடிகளில் உள்ள விலையில் பாதி விலைக்கே உழவர் சந்தையில் விற்கப்படுகிறது என்பதை இந்த இரு இடங்களுக்கும் செல்வோர் தெளிவாகவே புரிந்து கொள்வர்.

கலைஞர் தந்த இலவச மின்சாரத்தால் சிறிது நிலத்தில் கூட காய்கனி விவசாயம் செய்து இலவசமாய் ஏற்றி வரும் பேருந்துகளில் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து அதை அங்கு விற்று வறுமையிலிருந்து தன் குடும்பத்தைக் காத்து நிற்கும் சூழலை ஏழை விவசாயி பெறுகிறான் என்பது இனிக்கும் நிலையல்லவா.

வேளாண் பெருமக்களின் விடியலுக்கான விதவிதமான திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர் அவர்கள். தனது அரசில் ஏழாயிரம் கோடி ரூபாய் வேளாண் பெருமக்களின் கடனைத் தள்ளுபடி செய்த கலைஞர் அவர்கள் தான் சார்ந்த இயக்கம் பங்கு பெற்ற நடுவரசின் எழுபதாயிரம் கோடி உழவர் கடனை தள்ளுபடி செய்ய ஊக்கமூட்டினார்.

அதுபோல் ஒவ்வொரு நாளும் உழவன் மனம் களிப்புறும் வகையில் உழவர் சந்தையை உருவாக்கி உழவனின் தோழன் நான் என்று உலகோர்க்கு உணர்த்தியிருக்கிறார் கலைஞர் அவர்கள்.

உலகில் மனிதர்கள் வாழ உணவு தேவை. அந்த உணவை தன் உழைப்பின் மூலம் உருவாக்கித் தரும் உழவன் வறுமையில் உறையக் கூடாது. வாட்டத்தில் திளைக்கக் கூடாது. அவன் வஞ்சிக்கப்படக் கூடாது என்பதற்காக எண்ணற்ற வகையில் பாடுபட்ட கலைஞரால் இன்னும் ஏராளமாகக் கிடைக்க இருக்கிறது.


 அவரும் அவரது இயக்கமும் இந்த மண்ணில் இயங்குகின்ற வரை உழவனின் துயர் நீக்கும் உன்னதப் பணிகள் தொடரும் என்று உழவர்கள் உறுதியாக நம்பலாம்

No comments:

Post a Comment