Monday 11 August 2014

சமூக நலப் போராளியின் புகழ்பூத்த புனித முகம்



ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடும் உணர்வு உலகெங்கும் பெருகி வருகிறது. விழிப்புணர்வற்று வீழ்ந்து கிடந்தவர்களெல்லாம் வீரமுடன் போராடும் நிலை காண்கிறோம். வீழ்ந்தாலும் விழுப்புண் பெற்றவர்களை வீரர்கள் என்றே இலக்கியம் பேசுகிறது.

உலகின் பற்பல பகுதிகளில் பல்வேறு நிலை; முறைகளில் போராட்டங்கள் உருவாகி வலுப்பெற்று வெற்றியும் பெருகின்றது; நலிவுற்று தோற்றும் விடுகின்றது.

ஓர் இனம், மொழி, நாடு, மதம், அரசியல், பதவிகள் தருகின்ற கருத்துக்களின் வழியில் போராட்டங்கள் நடந்து நல்லதையும் விளைவிக்கிறது; நாசத்தையும் உருவாக்கி விடுகிறது.

மனித நேயத்தை மறந்து, மாந்தப் பண்பாடுகளை மாசடைய வைத்து, மகான்கள், மதங்கள், மாபெரும் மேதைகளின் நல்ல போதனைகளைப் பொருட்படுத்தாது ஒருவர் மற்றவர்களை கொல்லுகின்ற கொடூரங்களும் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.

பொதுநல மேம்பாடு, பொதுமக்களின் குறை களைதல், நாட்டில் எல்லா நிலைகளிலும் ஏற்றம் காணும் எண்ணத்தில் உழைத்திடும் நல்லவர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராடும் போக்கு இருக்கிறதே, அதுதான் பொன்னானது, போற்றத்தகுந்தது, புகழுக்குரியது.

சோவியத்தில் போல்ஸ்விக்குகள் நடத்திய போராட்டம் லெனின் தலைமையில் ஒரு பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசைத்தான் உருவாக்கியது. எல்லாருக்கும் எல்லாம் என்ற எண்ணமிருந்தாலும், இனிதான மக்களாட்சி மாண்புகளோ, வழிமுறைகளோ, இல்லாததால் வறுமையும், கடுமையும் உருவாகி சோவியத்தை சிதறடித்துவிட்டது

எளியோரின், ஏழைகளின் வறுமையால், வயிற்றுப் பசியால் உருவெடுத்த பிரஞ்சுப் புரட்சியால், பிரபுக்களின் தலைகள் வெட்டுத் தகடுகளின் பசி அடக்கினாலும், தொடர்ந்து ஒரு தலைமை தோன்றாததால் நெஞ்சுரம் மிக்கவன் என்றாலும், நெப்போலியனால் இருபதாண்டுகள் இரத்தம் பொங்கி நாசத்தையே விளைவித்தது. அவனை ஒரு சக்கரவர்த்தியாக ஆக்கியதைத் தவிர ஆனது ஒன்றுமில்லை.

இர்விங் வாலசின் ஒரு நூலை, வெள்ளை மாளிகையின் கருப்பு மனிதன் என்று தன் தமிழில் அண்ணா தந்த ஓர் கருத்துப் பெட்டகம் தரும் உணர்வுகள் ஜனநாயகத் தொட்டில் என்று போற்றப்படும் அமெரிக்காவில் அன்றிருந்த நிலையிலேயே இருக்கக் காண்கிறோம். நம் காலத்தில் ஒரு கருப்பர் அமெரிக்கா குடியரசுத் தலைவர் ஆவாரா?

சமத்துவ உரிமைகளுக்கான போராட்டங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன என்றாலும், போராடும் பற்பல தலைவர்கள்அல்லது தொண்டர்கள் தன் வாழ்வின் இறுதிவரை போராடுகிறார்களா? நாளும் புகழ்மாலைகளால் சூடப்பட்டு போற்றப்படுகிறார்களா? போராடுவதில் புத்துணர்ச்சியடைகிறார்களா?

தென் ஆப்பிரிக்க உரிமைக்களுக்காக நெல்சல் மண்டேலா போராடி, இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் வாடினார். ஒரு நல்ல சூழல் தோன்றியது. வெளியே வந்தார். நாட்டின், அரசின் தலைவரானார். பின் வயது காரணமாக ஒதுங்கினார்; ஓய்வெடுத்தார்.

மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக தன்னை வருத்திக் கொள்ளும் ஒரு புதிய போராட்ட முறையைக் கண்டார். போராடினார். விடுதலையைப் பெற்றுத் தந்தார். ஆனால், தொடர்ந்து தொண்டாற்ற நினைத்தாரா? தன்னைச் சார்ந்தோரின் செயல்கண்டு, நொந்துபோய் ஒதுங்கிட முயன்றார். சுதந்திர தினத்தின் முதல் மலருக்கு கட்டுரைதர மறுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். ஆனால், அவரையும் ஒழித்து விட்டார்கள்.

கவர்னர் செனரல் என்ற பெரும்பதவியை வகித்த முதல் இந்தியர் என்று பெருமையோடு பேசப்பட்டவர், உடலெல்லாம் மூளை என்று புகழப்பட்டவர், மூதறிஞர் என்று நம்மாலே கூட வாழ்த்தப்பட்டவர், இராசாசி தன் வயதான காலத்தில் பொதுமக்களோடு கலந்து வாழாமல், ஒதுங்கி, சாய்வு நாற்காலியில் அமர்ந்து, ஓய்வெடுத்து, சுயராஜ்ய பத்திரிக்கையோடுதான் உறவு கொண்டிருந்தார்.

பொதுவாழ்வில் உழைத்து விட்டோம்; போதும் இதுவென்று தன் குடும்பம், குழந்தை குட்டிகளோடு, உறவாடி மகிழ்வோம் என்று இயலாத வயதில் இதய உறுதி குன்றிவிடும் இயல்புள்ளவர்களை உலகம் முழுவதும் காணலாம்.

ஆனால், தமிழ் நிலத்தில் தோன்றிய தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தானைத்தலைவர் கலைஞர் ஆகிய அற்புதத் தலைவர்களின் வாழ்க்கைச் சுவடுகளைக் கவனித்துப் பார்த்தால், அடடா...! எத்தகைய இனிய உணர்வுகள் இதயத்தை நிரப்பி மகிழ்விக்கின்றன!


பெரும் பெரும் போராட்டங்களை நடத்திய தந்தை பெரியார் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டுமென்ற உணர்வு கொண்டிருந்ததைக் காண முடியும். கடைசிநாள் நிகழ்ச்சி கூட மக்கள் பணிக்காக பயனிக்கும் உணர்வில் இருந்ததை உணர முடியும். என்றாவது ஒருநாள் மக்களுக்காக உழைக்க இயலாத நிலை வந்தால் உடல்நலம் குன்றிவிடும் என்ற தந்தை பெரியாரின் வாழ்வு வரலாறாய் நின்று நம்மை வாழ்த்துகிறது.

தந்தை பெரியாரின் பிறவாப்பிள்ளையாய் நேசிக்கப்பட்ட நம் நெஞ்சில் நிறைந்து வாழ்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும் எவருக்கும் இதயம் எதையும் தாங்கும் ஈடற்ற உறுதியைப் பெறும்.

சமத்துவதற்கு சம்மதம் பெறும்வகையில் எண்ணற்ற போராட்டங்கள் பெரியாரால், அண்ணாவால் நடத்தப்பட்டபோது தன்னை வருத்திக் கொள்ளும் நிலையே நின்று நிலவியது.

எங்கள் மனச்சாட்சிப்படி நாங்கள் போராடியது குற்றமல்ல. சட்டப்படி அது குற்றம் என்றால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம் என்று தங்கள் சுகங்களை இழக்கும் தியாக உணர்வுகள் இங்கே தழைத்து வளர்ந்த வண்ணமே இருக்கின்றன.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களை தன் உயிரில், உணர்வில், நினைவில், செயலில் நிறைத்து வைத்து நெஞ்சம் குளிரும், கலைஞர் அவர்களின் போராட்டங்கள் ஒரு நிகழ்வாக, வரலாறாக மட்டுமல்ல; இனிய வாழ்வாகவே அமைந்து விட்டது அவருக்கு.


காந்தியின் போராட்ட உணர்வுகளுக்கு உரமேற்றும் வகையிலும், அந்த மாமனிதன் வகுத்த விதிமுறைகளுக்கு உயிரூட்டும் முறையிலும்தான் திமுக-வின் போராட்ட வரலாறு விளங்குகிறது.

 முடை நாற்றம் எடுக்கும் மூடநம்பிக்கையால், மூடப்பட்டிருந்த தமிழர்களை அந்த இருட்டிலிருந்து முழுநிலவாய் வெளிக்கொணர அறிவார்ந்த பகுத்தறிவு கருத்துக்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் இதய வெளிப்பாடுகள் செவியில் விழுந்து சிந்தையில் பதிந்தபோதே அவரை பொதுவாழ்வு போர்க்களத்தில் பூக்கவைத்து விட்டது. அதன் விளைவுதான், பள்ளித்தோழர்களுடன் தமிழ்க் கொடியேந்தி தெருவில் தினமும் ஊர்வலம் நடத்திய அந்த இளம் வயதிலேயே ஒரு பொதுநலப் போராளியாக கலைஞர் உருக்கொள்ள துவங்கிவிட்டார் என்றே எண்ணத் தோன்றியது.

கொள்கையை சொன்னதற்காக கொல்லத் துணிந்த கொடூர மனிதர்களால் தாக்கி, குற்றுயிராக்கி புதுச்சேரி தெருவில் வீசப்பட்ட போது அந்தப் புனித முகத்தில் புகழ் ஒளி தோன்றிவிட்டது.

கழகப் போராட்டங்களில் கலைஞரே கதாநாயகன் என்பது கல்லுப்போன்ற உண்மையாகும். கழகம் நடத்திய மும்முனைப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய கலைஞரின் தியாகத்தை நாடெங்கும் பாராட்டி மகிழ்ந்தனர். வரலாறும் வாழ்த்தியபடி இருக்கிறது. அறப்போர் உணர்வுகளோடு போராடுவோருக்கு கலைஞரின் மனத்தெளிவும், உறுதியும் தேவையென்பதை வருங்கால தலைமுறை உணர வேண்டும்.


தேர்தலில் ஏற்படும் தோல்வியைக்கூட வெற்றிக்குதரும் அச்சாரம் என்றே வேதனையின்றி போராடும் ஒரு தூய போராளியாகவே காட்சி தருகிறார் கலைஞர் அவர்கள்.

மொழிப்போரில் ஈடுபட்டு, தனிமைச்சிறையில் அடைபட்டுக் கிடந்ததைப் பார்த்து முதல்வர் பக்தவச்சலத்தின் மீது பலர் பாய்ந்த போது; பாம்பு, தேள், நட்டுவக்காலிகளோடு தானே என்னை வைத்திருக்கிறார் என்று சிந்தை நோகாது, சிரித்தபடி பதிலளித்த கலைஞரை ஒரு கண்ணியமிக்க பொதுநலப் போராளியாகவே காட்டுகிறது.

அரசிழந்து எதிர்கட்சியாக ஆனதுபோதெல்லாம், அறப்போர்க் களங்களை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்ற சாதனைகளை ஒரு தனி வரலாறாகவே வரையலாம்.

ஒவ்வொரு போராட்டத்திலும், அவரைச் சிறைவைத்த நேரத்திலெல்லாம், தன் உயிர்ப்பூக்களை உதிரவிட்ட தோழர்களின் உள்ள உணர்வுகளை கலைஞரை எப்படியெல்லாம் நேசித்து இருக்கும் என்று எடுத்துச் சொன்னால், இங்கு இலக்கியங்கள் பல தோன்றும்.

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களது இன்னுயிரை இனிப்புடன் இழந்ததை எண்ணிப்பார்த்தால் இதயம் உருக்கத்தால் இளகிவிடும்.

கலைஞர் கழகத் தோழர்களை களத்திற்கு அழைகின்ற போதெல்லாம் உவகையுடன் ஒடிவரும் தோழர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

மிசா காலத்தின் கடுமையான சட்டங்களை மீறி மக்களாட்சியின் மாண்புகளைக் காக்க வலியுறுத்தி ஒற்றை ஒருவராக சென்னை அண்ணாசாலையில் மக்களிடம் துண்டு வெளியீடுகளை வழங்கி அவர் நடத்திய அறப்போர் ஒரு சமூகப் போராளியின் உள்ளத்துடிப்பைக் காட்டுகிறது.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்லுகின்றபோது காவல்துறை தடைசெய்தால் அதை மீறுவதை ஒரு மரபாகக் கொள்கின்ற கலைஞரின் போராட்ட உணர்வு எதிர்கால அரசியல்வாதிகளின் அரிச்சுவடியாக ஆக வேண்டும்.

அறப்போர்க்களத்தை உருவாக்கிவிட்டு அந்தக்களம் களைகட்டி சிறப்பதற்காக காளையர் கூட்டத்தைக் கவர்ந்திழுக்கும் கடித மலர்களை கலைஞர் தூவும் முறை காவிய வடிவம் கொண்டதாகும்.

வயது கூடுவது காரணமாக வலிமை குறைவதில்லை என்பதற்கும், உழைப்புணர்வு ஊனப்படவில்லை; உற்சாகம் குறைவதில்லை என்பதோடு இளமை கூடுகிறது என்பதற்கு உலகிலேயே கலைஞர் மட்டுமே சான்றாக விளங்குகிறார்.

ஒரு போராட்டத்தின் உணர்வுகளை, விளைவுகளைப் புரிந்து கொள்ள ஒரு பொய்மை அரசு மறுத்தாலும், மீண்டும், மீண்டும் வலியுறுத்தி பொதுமக்களின் நலன் காக்கும் போராட்டங்களை நடத்துவது கலைஞருக்கு நெஞ்ச நிறைவளிக்கும் ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல தாய் எட்டடி என்றால் குட்டி இருமடங்கு என்பார்களே, அது பெரியார், அண்ணாவின் வழியில் இன்னும் வேகமான போர்முறைகளை அறப்போர்க் களத்தில் உருவாக்கும் உத்வேகம் கொண்ட சமூகப் போராளி கலைஞர் அவர்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 1ம் நாள் நடக்கவிருந்த போர்க்களத்திற்காக அதைப் பொலிவுறச் செய்வதற்காக, அவர் தீட்டிய மடல்களில் மலர்ந்த சொல்லோவியங்கள் தோழர்களின் உள்ளத்தில் புதிய உத்வேகத்தைத, உற்சாகத்தை உருவாக்கியது. பின் தேர்தல் பணிகளுக்காக பதினைந்து நாள் தள்ளி வைக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15ம் நாள் நடந்த மறியல் அறப்போர்க் களத்திற்காக அவர் தொடர்ந்து வடித்த கடிதச் சிலைகள்; அந்த சிலைகள் உடன்பிறப்புகளின் உள்ளத்தில் ஒளிவிடும் உறுதிப்பாட்டை உருவாக்கியது.

கழகம் நடத்திய் போராட்டங்களில் தவறாமல் சிறை செல்லும் தோழர்கள் நிறைந்த ஊர்களில் எங்கள் ஊரும் (இராசபாளையம்) ஒன்று. 1938, 1948, 1965 மொழிப்போரில் சிறைசென்று மொழிப்போர் தியாகிகளின் சிறப்பூதியம் பெறுவோர் பலர் இங்கிருந்தனர்.

ஏறத்தாழ அறுபது, எழுபது பேர்களே சிறை சென்றதுதான் இதுவரை அதிக அளவாக இருந்தது. ஆனால், கடந்த டிசம்பர் 15ம் நாள் நடந்த மறியல் அறப்போரில் கலந்து கொண்டவர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர். வாகன வசதியில்லாத காரணத்தால் கைது செய்யப்பட்டவர்கள் முந்நூறு பேர் என்ற புதிய வரலாறு இங்கு தோன்றியது. ஒரு திருமணக் கூடத்தில் நாங்கள் அடைத்து வைக்கப் பட்டோம்.காவலர் உள்ளிட்ட அனைவருக்கும் தோழர் வி.பி.இராசன் மதிய உணவளித்தார்.

ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பல்வேறு செய்திகள், கடந்த கால கழகப் போராட்டங்களில் அதில் கலந்து சிறை சென்றோர் தங்களின் அனுபவங்கள், சிறைக்குள் நடந்த கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்று பேசிப் பறிமாறி பெருமை கொண்டார்கள். எங்களை எந்தச் சிறைக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று காவலர்களிடம் சிலர் கேட்டார்கள். அவர்கள் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்கள்; சிலர் மதுரை என்றார்கள். மதுரையில் இடமில்லை பளையங்கோட்டை என்றார்கள். சிறைவைக்கப் போகிறார்கள் என்ற நினைவில் சிந்தை குளிர்ந்து, சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்த தோழர்களைக் கண்டபோது ""மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாற்ற நினைக்கும் சிறைச்சாலை'' என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை எவ்வளவு உயிரூட்டமாக கலைஞர் தன் உடன்பிறப்புகளிடம் பதித்து வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து மகிழ்ந்தது என் உள்ளம்.

மதியம் மணி இரண்டானது. ஒரு தோழர் வந்தார்; கூட்டம் அதிகமாக இருப்பதால் மாலையில் விட்டு விடுவார்கள் என்றார்; மலர்ந்திருந்த முகங்கள் வாடின; வதங்கின. மகிழ்விழந்த நிலை கண்டோரை அணுகி பத்திரிக்கையாளர்களைப் போல நான் பல்வேறு கேள்விகள் கேட்டேன்.

வாழ்நாளில் சிறந்த நாட்களாக சில நாட்கள் வாய்க்கும் என்று கருதியிருந்தோம். அது இல்லையென்றானதும் இதயம் இருண்டது என்றனர் தோழர்கள்.

அடுத்து ஓரிரு மணி நேரத்தில் மற்றொரு தோழர் செல்போனில் கிடைத்த செய்தி ஒன்றைச் சொன்னார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனை நீதிமன்றத் தீர்ப்பை மீறி வீட்டில் கைது செய்தார்கள் காவலர்கள் என்பதற்காக அவரை விடுவிக்கக் கோரி காவல்துறை ஆணையர் அலுவலகம் முன் அமர்ந்து தலைவர் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆகவே நம்மை வெளியே விட மாட்டார்கள். ரிமாண்ட் தான் என்றதுதான் தாமதம் சோர்ந்து, சுருங்கி வாடியிருந்த முகங்களில் ஒளி தோன்றி மலர்ந்து மகிழ்ந்தனர்.


சிறையில் வாடி வதைபடும் நிலையைக்கூட சிந்தைக்கு மகிழ்வூட்டும் செய்தியாகவும்; வாழ்வில் பெறும் பெரும் பேறாகவும் கருதுகின்ற வகையில் தன் உடன்பிறப்புகளின் உள்ளத்தை பண்படுத்திய தலைவர் கலைஞர் ஒரு சமூகநலப் போராளிதான் என்பதை உணர்ந்து மகிழ முடியும்.

விழுப்புரம் மாநாட்டின் தீர்மானங்களை விளக்கிச் சொல்லவோ, விளங்கிக் கொள்ளவோ இயலாத தோழர்கள் சொன்ன பதில் என்னை சிலிர்க்க வைத்தது. நம் தலைவர் உலகில் சிறந்த தலைவர். அவருக்கு எல்லாம் தெரியும். தமிழின் சிறப்புக்காக, தமிழர்களின் வாழ்வு, உயர்வுக்காக தன்னைத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். தலைநிமிர்ந்து போராடும் மாவீரர். உழைப்பின் - உயர்வின் சின்னம் அவர். அவர் என்ன சொன்னாலும் செய்ய வேண்டியது நமது கடைமை. திமு.-வை விட சிறந்த கட்சியில்லை. தலைவர் கலைஞரை விட சிறந்த ஆற்றல்மிகு மனிதர் இல்லை. ஆகவே, எல்லாப்புகழும், பெருமையும் கலைஞருக்கே என்றார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பவர்கள் இறைவனை அறியாது சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் கலைஞரை அறிந்தே சொல்கிறார்கள் எனும்போது நெஞ்சம் எழில்தவழும் இடமாகின்றது.

ஆளுகின்றபோது ஆக்கமிகு சாதனைகளை ஆயிரமாயிரம் நிகழ்த்திய கலைஞர், எதிர்கட்சியான போதெல்லாம் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி தோழர்களை ஈட்டி முனையாக மாற்றுவதோடு, தன்னையும் போர்க்களத்தில் முன் நிறுத்துகிறார்.

பெரியார், அண்ணா கண்ட அறப்போர் களங்களில் சுடர்முகம் தூக்கி போராடிய கலைஞர் தன் உடன் பிறப்புக்களோடு பல்வேறு தடவை கராக்கிரகம் சென்று தியாக வேள்வியில் குளித்து எழுந்திருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்: பெரியாரைத் தீர்த்துக் கட்டுவேன்; ஒழித்து விடுவேன் நான்; அவரை இல்லாமல் செய்து விடுவோம் என்றெல்லாம் சொன்னவர்கள் தத்தமது நிலை தானே மாறிடக் கண்டனர். அவருடைய அருவிப் பேச்சு அறுபதாண்டுகளுக்கு மேலாக மக்களின் நெஞ்சு வயல்களில் பாய்ந்து செழித்தது. பெரியார் கண்ட களங்கள் பல; பெற்றவெற்றிகள் பலப்பல. ஆயினும், இன்னும் போர்க்களத்தில்தான் நிற்கிறார் என்ற அண்ணாவின் இந்த பொன்னான புகழ்மொழி கலைஞருக்கும் பொருந்தும்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தையெழும்
என்று பாவேந்தர் பாடிய பெரியார் பாமாலையை ஒரு சிறிய திருத்தத்தோடு கலைஞர் தோளுக்குச் சூட்டலாம்.
அதாவது,

தூய தமிழ் நெஞ்சில் வாழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தையெழும்
என்று கலைஞருக்கு எதிர்காலம் இந்தப் பாமாலையை சூட்டி மகிழும்.

பெரியாரையும், அண்ணாவையும் தன்னில் நிறைத்து நெறிசார்ந்து போராடும் சமூகப் போராளியின் புகழ்பூத்த புனிதமுகம் பார்த்து போர்க்குண உணர்வைப் பெறுவோம். அறப்போர்க் களத்தில் நம்மை அர்ப்பணித்து உள்ள உறுதியை நெஞ்சில் நிரந்தரமாக்குவோம்.

ஒரு கவிஞன் கலைஞரைப் பாடினான்
உன்மீது அடித்த வெயில் கடல்மீது அடித்திருந்தால் கடல் வற்றிப் போயிருக்கும்;
உன்மீது அடித்த புயல் இமயத்தை அடித்திருந்தால் இமயம் இல்லாது போயிருக்கும்;
கந்தகத்தை தடவி வெற்றிலை போடும் விந்தை மனிதன் - நீ
புயலாலும், வெயிலாலும் புறங்காண இயலாத போர்க்குணத் தலைவனைப் போற்றுவோம்; வாழ்த்துவோம்.

இதோ தான் ஒரு சுயமரியாதைப் போராளி என்பதை உலகிற்கு உணர்த்தும் செயல் ஒன்றை செய்திருக்கிறார். மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார். நியாயங்கள் நிறைவேறாத இடத்தில் இருந்திட விரும்பாததை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியிருக்கிறார்.

நெஞ்சக் கருத்துக்களை நேர்த்தியோடு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த இனிய இயக்கத்தின் அடித்தளங்களை எடுத்து விளக்கியிருக்கிறார்.

ஓர் உண்மை போராளிக்குரிய இதயத்தூய்மையை வெளிப்படுத்திய விதம் என்றென்றும் நினைத்து இன்புறத் தக்கதாகும்.

ஆம்.பேரறிஞர் அண்ணா அவர்கள் தனக்களித்த சான்றுகளையும், புகழார பொன்மொழிகளையும் தனது தம்பிகளுக்கு உரிமையாக்கி, உவகை பூத்திருக்கிறார். அத்தோடு, பதவியை துறக்க ஆண்மையோடு, அரிமா நடைபோட்டார்கள் பாலுவும், ராஜாவும் என்று கூறி, இந்த தியாக உணர்வுகளை ஒளியேற்றி இவ்வுலகை உணர வைத்திருக்கிறார்.

பழுத்த இந்த வயதிலும், புதுமைகளைத்தேடி திரட்டும் மனம் எழுத்தில் மட்டுமல்ல; எடுக்கின்ற முடிவுகள் என்றாலும்; அந்த முடிவுகளை விளக்கும் வகையில் புதுமனிதராகவும் மிளிர்கிறார்; புகழ் வானத்தில் ஒளிர்கிறார் கலைஞர் அவர்கள்.

No comments:

Post a Comment