Monday 4 August 2014

அண்ணன் முரசொலி மாறன் நினைவாய் எழுதிட்ட நூல்--பகுதி 2

2.மறக்க முடியுமா?

மாசற்ற உளம் படைத்த அழகு மாறனே!
மக்களவையில் உன் உரை கேட்காத நாள் நாளாகுமா!
அண்ணா அமர்ந்த இருக்கையில் அமர்ந்த கழக மலரே!
தென்னவர் நலன் காத்த திருநிறைக் கழகத் தூதனே!
நின்றதுபோல் நின்றாய்! நெடுந்தூரம் பறந்தாயே!

கழகமே கண்ணாகக் கருதி உழைத்தவனே!
கலைஞரைப் பாராது கண்மூடி தூங்கி விட்டாய்!
மேகமாய் அறிவு மழை பொழிந்த மேதமை அரசே!
மாநில சுயாட்சி நூலை மலர வைத்தாய்!
மாசற்ற கழக கொள்கையை புரிய வைத்தாய்!
பாச்சுவை தருகின்ற பைந்தமிழ்ச் செல்வனே!
நெஞ்சத்தைக் கலங்க விட்டு எங்கு சென்றாய்!

உன்னால் கனிந்த கணினித் தமிழை மறந்து விட்டு
உலகில் வளரும் நாடுகளின் வாழ்த்துகளை துறந்து விட்டு
உயிர்க் கலைஞர் தன்னோடு உரையாடாமல்
எங்கே சென்றாயோ! எப்போது வருவாயோ!

இனமான எழில் செறிந்த ஏந்தலே!
குலம் காக்கும் கொற்றமாய், கொடி நிழலாய்,
குணக்குன்றாய், கொற்கை முத்தாய், கொள்கைச் சிங்கமாய்,
வாழ்ந்து சிறந்தவனே, வையப்புகழ் பெற்றவனே,
மறைந்து ஏன் போனாய்? உன் மக்கள் பெருமை காணாமல்!
சிந்தனைப் பூ மலராய் திகழ்ந்த தமிழ் மணமே!
நிந்தனை செய்வோரையும் நெஞ்சில் தாங்கி நின்று,
பந்தனைய துள்ளலோடு பணிகள் பல ஆற்றிய,
சொந்தமிகு சோதரனே சொல்லாமல்
சென்ற வழி எங்கே? சேர்ந்த இடம் எங்கே?
தேடுகின்றோம், தேம்பி விழி கலங்குகின்றோம்.

பேசிய பேச்செல்லாம் உன் பெருமை பேசுதையா!
எழுதிய எழுத்தெல்லாம் எழுந்து வந்து
இன்பத் திராவிடம் காட்டுதய்யா!

டெல்லியில் நல் மாற்றமெல்லாம்
நெஞ்சத்தை ஆளுதய்யா! நேசத்தைக் காட்டுதய்யா!
நாடாளுமன்றம் தன் நாயகனை இழந்ததய்யா!
கழகத்தில் உன் பிரிவு கண்ணீரைக் கொட்டுதய்யா!

சோதனை காலத்தில் நீ துன்பங்களைத் தாங்கியதால்
சாதனை வரலாறாய் சரித்திரம் பேசுதய்யா!
வேதனை தீர்ப்பதற்கு மீண்டும் வருவாயா
தொடரும்.....

No comments:

Post a Comment