Thursday 28 August 2014

செம்மொழித் தமிழாய் ஒளிர்க!!!

தனது இளம் வயதில் தாய்மொழி ஏற்படுத்திய தாக்கம் இந்த 84 வயதிலும் இளமை குன்றாத உணர்வுக்கு உரமூட்டிக் கொண்டிருப்பதற்கு நமது தலைவர் கலைஞர் அவர்களே சான்று.அதிலும் அறிவார்ந்த கொள்கைகளோடு குடியேறிய தமிழ் இன்னும் அவருள் தழைத்து செழித்துக் கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகால அடிமை உணர்வில் - நிலையிலிருந்து தமிழ்ச் சமுதாயத்தின் பிரளய மாற்றத்திற்கு- பெரியார் உருவாக்கிய பெரும் படையில் ஒரு வீரனாக இணைந்து எழிற்மிழ் அண்ணாவின் அழகு தமிழை அப்படியே அடியொற்றி நடந்ததால் இன்று தமிழுக்கு அமுதனைய உயிராய் கலைஞர் திகழ்கிறார்.

தமிழருக்கு உயர்வு தரும் சுயமரியாதை இயக்க உணர்வுகளையும் சங்க காலத் கவிதை தரும் அருமையான எண்ணங்களையும், ஆற்றல்மிகு ""பா''த்திறத்தால் தமிழரிடையே பரவ விட்ட பாவேந்தர் படைப்புகளை தனது உயிரில், உணர்வில் பயிர் செய்ததால் இன்று உலக மகா கவிஞராய்த் திகழ்கிறார் கலைஞர் அவர்கள்.

ஈரோட்டுக்குருகுலத்தில் காலூன்றி கண் பதித்து கல்வி கற்ற காரணத்தால் எதையும் ஆய்வு நோக்கில், அறிவு நோக்கில் கூர்ந்து பார்த்து பயின்றதால் இன்று எல்லாத் துறைகள், நிலைகளில் ஏறு நடை போடுகிறார் இனிய தலைவர் கலைஞர் அவர்கள். இதழ்களில்,மக்கள் இதயங்கவர் இனிய திரைப்படங்களில்,அவர் வெளிப்படுத்திய தமிழ் இன்று வரை இளமை குன்றாது எழிலூட்டிக் கொண்டிருக்கிறது.


மேடையில் பற்பல நிகழ்வுகளில் மாலை நேரத்து பூங்காற்றைப் போல் மணம் தூவும் தமிழை மக்கள் நுகர வாரி வழங்கிய வண்ணமே இருக்கிறார். படைப்பிலக்கியத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. எழிலும், அழகும் இணைந்து அவர் படைப்பிற்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.

சிறு கதைகள், தொடர் கதைகள், நாவல்கள், கட்டுரைகள், கடிதங்கள் எல்லாம் கனிச் சுவையூட்டும் கலைப் படைப்புகளாகவே காட்சி அளிக்கிறது.

எத்தனையோ உரை ஆசிரியர்கள், எத்தனையோ வகைகளில் குறளுக்கு உரை சொன்னாலும் கலைஞரின் குறளோவியம், குறள் உரை, வான் புகழ் வள்ளுவம் மட்டுமே எல்லார் மனதிலும் நின்று நிலை பெற்றிருக்கிறது.

அதுபோலவே சங்கத் தமிழின் சத்து நிறைந்த பாடலுக்கு பகுதி பகுதியாக பலர் உரை எழுதியிருந்தாலும், அந்தப் பாடலைப் போலவே உரைகளைப் புரிந்து கொள்வதும் கடினமாக இருக்கும். ஆனால் கலைஞர் புதிய வடிவங்காட்டி எளிதாய் புரிந்து கொள்ளும் பொருள் வளம் ஊட்டி சங்கத் தமிழை உண்டு, உவகை கொள்ள வைத்தார்.


அதைப் போலவே தொல்காப்பியத்தின் கடினமான சூத்திரங்களை சுவைபடக் காட்டி சுடரொளி ஏற்றி உலகோர் இலக்கண வெளிச்சம் பெற வைத்தார். இன்று செம்மொழியாய் தமிழை சிறந்தோங்கச் செய்திருக்கும் கலைஞர் அவர்கள் தமிழாக என்றும் தரணியில் ஒளிர்வார்! வாழ்க கலைஞர்!! 

No comments:

Post a Comment