Thursday 7 August 2014

பெரிய மனிதர்கள்?

 பெரிய மனிதர்கள்?

நாடெங்கும் மதவெறியில் உச்சியில் குதித்தாடும் மனிதர்களை கண்டித்து குரல் எழுப்பிய வண்ணம் பலர் தங்கள் முகங்களை பாருக்கு காட்டியபடி இருக்கிறார்கள்.

மதவெறி கூடாது சகிப்புத் தன்மை வேண்டும், மனித நேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு இதழ்களில் எழுதிய வண்ணம் இருக்கிறார்கள்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமையின்றிடில் அனைவருக்கும் தாழ்வு என்று பழம் பாட்டை பாடுபவர்களும் உண்டு.

மதவெறி மட்டுமல்ல, லஞ்சம், ஊழல், தீண்டாமை, சாதி ஆகிய அனைத்தும் ழிந்து போக வேண்டும் என்று இந்த மகானுபாவர்கள் ஓலமிடாத நாளில்லை.

 பொது வாழ்வில் பல்லாண்டுகாலம் வலம் வரும் இந்தப் பெரிய மனிதர்கள், பல்வேறு துறைகளிலே பணியாற்றுபவர்கள். பெரும் பதவிகளில் தங்களை பிணைத்துக் கொண்டவர்கள். எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை பிரார்த்திப்பவர்களும் இவர்களில் அடக்கம்.

 ஆனால் இவர்களின் இதயம் இவர்கள் சொல்வதுபோல் இயங்குகிறதா? இவர்களின் உள்ளம் இவர்கள் உதடுகள் உச்சரிக்கும் தன்மைக்கேற்ப உருவம் பெற்றிருக்கிறதா?

நான் அரசியல்வாதிகளை மட்டும் குறிப்பிடவில்லை. சமூகத்தில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சகலரையும் கேட்கிறேன். அரசின் பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், அரசியல்வாதிகள் உள்பட சமூகத்தின் உறுப்பாய் விளங்குபவர்கள் அனைவரும் மனதில் மாசில்லாதவர்களா? மத உணர்வை மனதில் பதித்து வைக்காதவர்களா? மற்ற மதத்து வேசத்தை அல்லது ஒரு அருவருப்பை, குறைந்தது மற்ற மதத்தின் மீது மன இகழ்வை காட்டும் இயல்பற்றவர்களா? லஞ்சம் பெரும் மனமில்லாதவர்களா?

 தவறுகள் செய்தோர் மீண்டும் அந்தப் பதவியை - பணியை ஏற்காது இருந்திருக்கிறார்களா? சாதிமனப்பான்மை, மதவேறுபாடு இல்லாத உள்ளங்களை இங்கே விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆனால் பெரும்பாலோர் அந்தச் சாக்கடை நீரில் தானே சந்தன மணம் இருப்பதாக கருதுகிறார்கள். தன் மதம் உயர்வு என்றால் மற்ற மதம் தாழ்வு என்றுதானே எண்ணுகிறார்கள்.

தன் சாதிதான் சிறப்புடையது என்று கற்றறிந்தவர்களே எண்ணுகின்ற இழிவு இங்கேதான் நிலவுகிறது.

பஞ்சாயத்து பியூனிலிருந்து பாராளும் பிரதமர்வரை லஞ்சப்புகார் இல்லாத அரசு அலுவலர் ஏது? சாதி மதம், லஞ்சம், ஊழல் இவைகளின் வளர்ச்சி என்ன செய்யும் என்பது தெரிந்த அறிவாளர்கள்கூட தனக்கு ஆதாயம் என்றால் அவற்றை உள்ளத்தில் ஒற்றிவைத்து அதன்வழியே செயல்படுபவர்கள்தானே இவர்கள்.

 அறிவியல் கோலோச்சும் இந்த நாளில் அறிவியலுக்கு எதிரான சங்கதிகளைத் தானே அகத்தில் பதியம் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். உடலில் வலிமை, உள்ளத்தில் தூய்மை ஒழுக்கத்தில் நேர்மை என்பவர்களை பொதுவாழ்வில் எங்கே காணமுடிகிறது?

சுயநலம், சுற்றத்தார் நலம், சாதி நலம், தான் சார்ந்த மதநலம் இவைகளில்தானே இதயம் சுழல்கிறது. அப்பழுக்கற்ற உள்ளத்தை பெற்றவர்கள் என்று அளந்து காட்டும் கருவி வந்தால் இங்கே எத்தனைபேர் தேறுவார்கள்? இதற்கெல்லாம் முடிவு என்ன? விடிவு என்ன?

 களங்கமில்லா உள்ளத்தைப் பெற, கலாச்சார மாற்றம் இங்கே உருவாக வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடுவோரை புடம்போட்டு எடுக்கின்ற புதியமுறை ஒன்றை தோற்றுவிக்க வேண்டும்.

வழிவழியாய் நல்லவர்களை தோற்றுவிக்கும் வழிமுறை ஒன்றை கண்டாக வேண்டும்; இல்லையென்றால், ஏழைகளுக்காக பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டே நாளுக்குநாள் ஏழைப்பட்டாளத்தை பெருக்குவதுபோலத்தான் மேற்கண்ட சிரமங்களும் சிக்கல்களும் கூடிக்கொண்டே இருக்கும்.

 மத வெறிப்பேய், சாதிச்சனியன், லஞ்சப்பூதம், ஊழல் வேதாளம், ஆகிய கொடியவர்கள்தான் இங்கே கோலேந்துவார்கள்.

ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம்
                  பேரறி வாளன் திரு.


என்று வள்ளுவன் கூறியது போல அறிவும், தெளிவும், அதைப் பெற்ற அறிவாளர் ஆற்றலும், அந்த ஆற்றலால் விளைந்த பொருளும் எல்லார்க்கும் பொதுவாய் ஆனால்தான் மனிதர்கள் சிறப்படைய முடியும்

தொடரும்...

No comments:

Post a Comment