Friday 8 August 2014

கருத்து வெள்ளம் பாயட்டும்

கருத்து வெள்ளம் பாயட்டும்

தமிழ் ஒரு மதம் சாராத மொழியாக இருந்ததாலேதான் பன்னெடுங்காலமாக மக்கள் நாவில் நடைபோடும் மொழியாக நலன் தந்திருக்கின்றது.

ஆரியமும், இலத்தீனும் ஆலய மொழியாக, ஆண்டவன் மொழியாக ஆதிக்கம் கொண்டதாக இருந்தும் மக்கள் ஆதரவின்றி அனாதையாகி அழிந்துபட்டதாக ஆகிவிட்டது.

நீசமொழியென்று மதவாதிகளால் நிந்திக்கப்பட்ட தமிழ் போன்ற மொழிகள் மக்கள் நெஞ்சில் கொஞ்சிடும் வகையில் நீடித்து, நின்று நிறைவு கண்டிருக்கிறது.

கால மாற்றம், கலை மாற்றம், வாழ்க்கை நிலை மாற்றம், வந்தேறிகளால் ஏற்படும் சூழ்நிலை மாற்றம், ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம், அன்னிய மொழிகளின் ஆதிக்க தோற்றம் ஆகியவற்றுக்கிடையில் மக்களின் வாழ்வியல் மொழியாக சுவையூட்டும் தமிழை நினைத்து விழிகள் வியப்பால் விரிகின்றது.

தோன்றிய நாள் எதுவென்று தெரியாது, தொலைவைக் கூட கணிக்க இயலாத ஒரு மொழி இன்றும் அழகும், இளமையும், இனிமையும் கொண்டு வாழ்வது இனிக்கின்ற ஒன்றுதான்.

தொடர்பு கொள்ளும் கருவிகள் இல்லாத காலங்களில் தொகை தொகையாய் மொழிகள் தோன்றின. ஆனால் ஆற்றல்மிக்க மொழிகளாக, அருங்கலைகள் கண்ட மொழிகளாக உலகில் குறைந்த அளவே வளர்ந்தன.

கீழை நாட்டு மொழிகள் அரேபியத் தொடர்போடு கிரேக்க மொழிக்கு ஊக்கமூட்டியதால் கிரேக்கம் அய்ரோப்பிய மொழிகளுக்கு செழுமையூட்டி ஆக்கமிகு அறிவு உணர்வுகளை தோன்றச் செய்தது.

அதன் விளைவு அய்ரோப்பாவில் ஆய்வுக் கூர்மை தோன்றி வாழ்க்கையை பல்வேறு நிலைகளில் உயர்த்துகின்ற வழியாக தொழிற்புரட்சி தோன்றியது.

புதிய புதிய ஆய்வுகள், அதனால் விளைந்த புதுப்புதுப் பொருட்கள், கருவிகள் அதை விளக்குவதற்கு அனைத்து பகுதி மொழிகளிலிருந்தும் சொற்கள் பெறப்பட்டு சொற்களை குறைத்தும், கூட்டியும், கூரேற்றியும் புது வடிவம் கொடுக்கப்பட்டு ஆங்கில மொழியாக பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு உலகம் முழுவதும் பின்பற்றும் சூழல் நிலவுகிறது.

வாழ்க்கையை எளிதாக்கி வளம் தரும் அத்தனை பொருட்களையும் விளக்கி வழிகாட்டி வியத்தகு காட்சிகளை விவரிக்கும் ஆற்றல்மிகு மொழியாக ஆங்கிலம் விளங்குகிறது.

இதில் உலகில் உள்ள சில பகுதிகளில் தங்களது தாய்மொழியில் அறிவியல் கருவிகளை உருவாக்கி மகிழ்கிறார்கள். இருப்பினும் ஆங்கிலத்தை உணவில் ஊறுகாய் போல தொட்டுக் கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆயினும், அகிலமெங்கும் அறிவாளிகளை, ஆற்றலாளர்களை, இன்னும் சொல்லப்போனால் மக்களுக்கு தொண்டு செய்யும் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பல மக்கள் நலன் பேணும் மனிதர்களை ஆங்கிலம் போல் எந்த மொழியாவது உருவாக்கியிருக்கிறதா என்றால் இல்லையென்பதுதான் உண்மை ஆகும்.

உண்பது நாழி உடுப்பது இரண்டு மற்றெல்லாம் ஓரொக்குமே - என்ற சங்ககால சமத்துவ சிந்தனை எல்லா நிலைகளிலும் தேவைதான் என்றாலும் ஒரே மாதிரியாக உண்ணுவதும், உடுத்துவதும் சுவை கொண்டதா என்றால் இல்லெயென்பதும் உண்மைதான்.

உண்ணும் நாழியை கூழாகக் கரைத்தும் குடிக்கலாம். நானாவித வடிவம் தந்து நாவின் சுவைக்கு நலன் கூட்டவும் செய்யலாம்.

ஆக சுவை மாற்றமும், உணர்வுச் சுகமும் பல்வேறு சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. உண்பதிலும், உடுத்துவதிலும் வண்ணங்கள் சேர்ந்து வடிவங்கள் மாறுகின்றன. மாறுகின்றபோது பொருள்கள் புதுப்புது வடிவமெடுக்கின்றன. வடிவெடுக்கின்றபோது அதற்கு பெயர் சூட்ட வேண்டியிருக்கிறது. பெயர் சூட்ட புதுப்புது சொற்கள் தேவைப்படுகின்றது. சொற்களைத் தேடுகின்றபோது மொழியியல் அறிவு மேம்படுகின்றது.

உலக மொழிகள் அனைத்திலுமே இந்த வகையில் மேம்பாடு கண்டிருக்க முடியும். எந்த மொழிக்காரர்கள் புதுப்புது பொருள்களைக் கண்டுபிடிக்கின்றார்களோ அவர்கள் அவர்களது மொழியில் பெயரிடுகிறார்கள். அது உலகமெங்கும் மக்களுக்குப் பயன்படுமேயானால் அவர்கள் அந்தப் பெயர் சொல்லித்தான் அந்த பொருட்களைப் பெற்றுத் துய்க்கின்றார்கள்.

இப்போது தமிழ்நாட்டில் எங்கும் ஓர் குரல் ஒலித்தவண்ணம் இருக்கிறது. தமிழில் பாடமொழி, பயிற்று மொழி, ஆலய மொழி, நீதி மொழி, மருத்துவ மொழி, பொறியியல் மொழி உள்ளிட்ட ஆட்சி மொழியாகவும் தமிழ் வேண்டும் என்று தமிழை தங்கள் வாழ்வியலில் கலக்காதவர்கள்கூட வாய்விட்டு கூவுகிறார்கள்.

தங்கள் பெயர்களைக் கூட தமிழில் வைக்காதவர்களெல்லாம் மறைமலை அடிகளைக் காட்டி, பாவாணரைக் காட்டி எல்லா இடங்களிலும் தனித்தமிழை நிலைநிறுத்து என்று ஓலமிடும் நிலையும் இங்கு தெரிகிறது.

ஏதோ தமிழ்நாடு தனித்து இயங்குவது போல ஒரு கற்பனையை தங்கள் மனங்களில் வைத்துக் கொண்டு இந்திய அரசியல் சட்டத்தின் கடுமையை உணராது கூவுகின்ற கூட்டத்தை நாம் காண முடிகிறது.

படிப்படியாக இந்தியாவின் வல்லாண்மையான அரசியல் சட்டத்தை தனக்கு உட்படுத்தி தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு ஆற்றுகின்ற அரும்பணியைக்கூட பங்கப்படுத்திப் பேசுகின்றவர்களையும் நாம் காண முடிகின்றது.

தமிழில் புலவர்கள், அறிஞர்கள் கவிதை பாடியிருக்கிறார்கள். காவியங்கள் இயற்றியிருக்கிறார்கள். இசைப் பாடல்களை இயற்றி இனிமை கண்டிருக்கிறார்கள். கதைகள், சிறுகதைகள், புதினங்கள் என எத்தனையோ எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் மண்ணின் கலை, பண்பாடுகளை, தகுதியற்றவர்களுக்கெல்லாம் உரித்தாக்கி தலைமக்களாக புனைந்திருக்கிறார்கள். புராண இதிகாசப் புனைவுகளை இன்றும்கூட இனிக்க இனிக்க எடுத்துரைத்து இதயம் மகிழ்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

ஆனால் அய்ரோப்பிய தொழிற்புரட்சி தோன்றி நலம் தரும் நாளில் பழமையில் பவித்தரமும் புனிதமும் காணுகின்ற புலமையாளர்கள்கூட, துய்ப்பதைத் தவிர்க்க முடியாத புதுமைப் பொருள்களை விளக்கவும், மேலும் இதுவரை தோன்றாத பொருட்களை கண்டுபிடிக்கவும் இவர்கள் காட்டிய வழியென்ன? மொழி என்ன?

மனதை மட்டுமே இனிமைபடுத்தும் கவிதையும் காவியமும் போதுமென்றால் அவன் ஆசிரமவாதியாகத்தான் இருக்க வேண்டும். உலகியல் மனிதனாக உலா வரவேண்டுமெனில் ஓராயிரம் பொருட்கள் அவனுக்கு உதவு வேண்டும். அந்தப் பொருட்களை எந்த மொழிக்காரன் தந்தாலும் பயன்படுத்த தயங்க மாட்டான்.

மம்மி, டாடி என்று கூறி தமிழை மாய்க்கிறார்கள் என்று வருந்துவது நமக்குப் புரிகிறது. இந்த இடத்தில் ஒன்றை நினைவு கூர்வது கடமையெனக் கருதுகிறோம்.

தமிழர்களில் பெரும்பாலோர் அம்மா, அப்பா என்று அழைத்ததைவிட ஆத்தா, அய்யா என்றே அழைத்தார்கள். மணிவாசகர் கூட இறைவனை அத்தன் என்றே அழைக்கிறார்.

நகர நாகரீகமும், நாளிதழ்களும் பாடத் திட்டம் தயாரித்தவர்களும் ஆத்தா, அய்யா என்ற அழுத்தமான பாசம் தரும் சொற்களை அழித்து விட்டார்களே! அத்தா என்பதை முகமதியர்களுக்கு மட்டும் உரித்தாக்கி விட்டார்கள். இதற்காக எத்தனை தமிழ்ப் பற்றாளர்கள் அழுது புரண்டு அரட்டினார்கள்? என்ன குறை கண்டார்கள் ஆத்தா, அய்யா என்ற சொற்களில்?

பாரதிராஜாவின் படங்களைத் தவிர மேற்கண்ட சொற்களோடு அப்பத்தாள் என்ற அருள் சுரக்கும் சொல்லை வேறு எங்குமே காணவில்லையே! ஆகவே தன் தாய்மொழிச் சொல்லை தவற விடுவது என்பது வரலாற்று வழித்தடத்தில் நாம் காணுகின்ற காட்சிகள்தாம்.

ஆயினும் அது சரியென்று நாம் சொல்லவில்லை. ஆனால் அரசியல் உரிமையிழந்து விடும் மொழிகள் வளர்ச்சிப் பாதையில் ஏற முனையும் போதெல்லாம் வழுக்கி விடுவதும் இயல்பானதுதான்.

பகுத்தறிவும், அரசியல் உரிமையும் பல்லாண்டுகளாக இழந்த தமிழ் இந்த அளவு எழுந்து நிற்பது என்பது உலக விந்தைகளில் ஒன்றுதான். அவசியமற்ற இடங்களில் ஆங்கிலத்தின் ஆளுமை அல்லது ஆதிக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான். ஆனால் அந்த மொழியின் அருமையும், பயனும் இதயத்தில் எண்ணிப் பார்த்தால் இனிக்கின்ற ஒன்றாகவே இருக்கும்.

வளர்ச்சிப் பாதையில் உலகத்தை அழைத்துச் செல்லும் வகைகளில் ஆங்கிலம் ஆற்றியிருக்கின்ற அரும்பணி அளவிட முடியாதது, அற்புதமானது. அதற்காக அந்த மொழி தன்னை தூய்மையின் தூதுவன் என்றோ, தனித் தன்மையின் தாயகம் என்றோ தன்னைத்தானே துதி பாடிக் கொள்வதில்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்றி நெஞ்சம் மகிழ்விக்க எங்கிருந்தும் எந்த மொழிச் சொல்லையும் ஏற்றுக் கொள்ளும் இதயமுள்ளதாகவே தன்னை அறிவித்துக் கொள்கிறது.

இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலம் தமிழோடு நெருங்கிய உறவுடைய மொழியாகும். ஆம். தமிழ் மொழிக் குடும்பத்தின் குடகுப் பகுதி கொங்கணி மொழியிலிருந்து சென்றவர்களால்தான் ஆங்கிலம் உருவானதாக மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய திரு.ராமச்சந்திரராவ் எனும் பேராசிரியர் ஆய்வு செய்திருப்பதாக செய்தி ஒன்று உண்டு.

இன்னும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் பற்பல ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பு தமிழை ஒட்டியே இருக்கும். அதுவும் ஒரு மக்கள் கூட்டத்தைக் காத்து நிற்கும் போர்க்களத்தில் பயன்படும் சொற்கள் தமிழாகவே தெரியும்.

களம், வாள், முரசு, வீரர், வெஞ்சினம் ஆகிய அனைத்தும் தமிழில் ஒலிப்பது போலவே இருக்கும். நாவாய் (நேவி), மலர் (பிளவர்), இஞ்சி (சிஞ்சர்), அரிசி (ரைஸ்), பெற்றோர் (பேரண்ட்ஸ்), நாசி (நோஸ்), கற்றறிந்தோர் இன்னும் கணக்கெடுத்தால் கணக்கற்ற சொற்கள் கனித்தமிழ் ஒலியாகவே இருக்கும். ஆகவே ஆங்கிலத்தை நாம் அறவே ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.

கலைஞரின் முயற்சியால் தமிழ் செம்மொழியாகி இருக்கின்றது. கணிசமான தொகை தரப்பட்டிருக்கின்றன. பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் தமிழ் மன்றம், தமிழ் மேம்பாட்டு மன்றம், செம்மொழி மன்றம் ஆகியவை அமைந்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் வானளாவ வளர்ந்தோங்கும் எனும் இனிய நிலை கலைஞரால் நமது இதயங்களில் நிரப்பப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற மேலவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய போது சொன்னார் "உலக மக்களுக்கு வாழ்வியல் கொடை வழங்கிய இனத்தின் பிரதிநிதியாக நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்றார். "உலகிற்கு வழங்க இன்னும் ஏராளமான அறிவுச் செல்வங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம் என்ற நிலையில் நான் நின்று கொண்டிருக்கிறேன்'' என்றார்.

அந்த மாபெரிய இனத்தின் மகத்தான மொழி தமிழ். இரங்கும் நிலையிலேயே நெடுநாள் நின்றது. இன்று பெரியார், அண்ணா, பெருமைக்குரிய கலைஞரால் பெருமித நிலை காணும் பேறடைந்தருக்கிறது. உலக பல்கலைக் கழகங்களில் எல்லாம் ஒளி வீசும் உயர் நிலை கண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இனிய தமிழ்ப் பற்றாளர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சான்றோர்களுக்கும், பெரிய, சிறிய பொருள் வளம் கொண்டோருக்கும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறோம்.

இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல்மிகு அருமைத் தமிழ் மொழியை அய்ரோப்பிய பேராளர்களும், மதகுருமார்களும்தான் வெளியே கொண்டு வந்து வெளிச்சத்தில் காட்டினார்கள்.

உறங்கிய தமிழனை எழுப்பி உட்கார வைத்து இது உனது தாய்மொழி, உலகம் காணாத உயர் மொழி, இதைக் காப்பதும் வளர்ப்பதும் உனது கடமை என உரைத்து உணர வைத்துவிட்டு போய் விட்டார்கள்.

ஆனால் அவர்களின் வழித்தோன்றல்கள் இன்று வந்து தமிழை புது உலகத்திற்கு அழைத்துச் செல்லும் முன்னர் இங்கிருப்போர் அவர்களை முந்திக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

இதுதான் நாம் வைக்கும் வேண்டுகோள். கற்றறிந்தோர், கலை தெரிந்தோர், கவின்மனிதர், கல்விக் காவலர்களாக தங்களை பறைசாற்றி மகிழ்வோர் யாவரும் தங்கள் உள்ளங்களில் தோன்றும் தமிழ் ஏற்றக் கருத்துக்களை கடல் மடையெனத் திறந்து விட வேண்டுகிறோம். தங்களால் முடியும் என்று நம்பிக்கை கொண்டோர் இதோ எங்களால் இது முடிந்தது. இது எதற்கும் ஈடு இணையில்லாதது. தமிழ் இதுவரை காணாதது என்று அறிவியல் படைப்புகளுக்குரிய ஆக்கம் தரும் வடிவங்களைத் தர வேண்டுகிறோம்.

இயற்பியலை தமிழில் விளக்கி செய்முறைப் பயிற்சிகளை வழங்கும் நிலை கண்டு, வேதியியலை விளக்கி விவரித்து விதிகள் தமிழில் தந்து, உயிரியலை அதன் உன்னத நிலைகளை உணர்த்தி உருப்பெருக்கிக் காட்டி தமிழில் உலவ விட்டு, மற்றும் வானியியல் வரலாற்றியல், பல்வேறு பொறியியல்கள், விலங்கியல், தாவரவியல், பல்வேறு மெய்யியல் கோட்பாடுகளையெல்லாம் எளிதாக்கி இதயம் இனிக்கின்ற வகையில் இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தை விஞ்சுகின்ற வகையில் புதிய ஆய்வுகள், புதிய நிகழ்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் என்பதையெல்லாம் எளிதாய், இனிதாய் பெறுகின் வகையில் தமிழில் தருகின்ற முயற்சியில் கற்றறிந்த பெருமக்கள், கலை தெரிந்த வல்லுனர்கள் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து அருமையான முடிவுகளை வெற்றியுடன் தர வேண்டுகிறோம்.
      
     செம்மொழி தமிழ் மன்றம், தமிழ் மேம்பாட்டு மன்றம், அறிவியியல் தமிழ் மன்றம் ஆகிய அலுவலகங்களில் தங்களின் பரிசோதனைகுட்பட்ட, ஆக்கமிகு செயல்திறன் கூட்டுகின்ற கருத்து மலர்கள் குவிந்தவண்ணம் இருக்கட்டும். குவலயத்தில் தமிழ் தன் கொள்கை முழக்கட்டும்.

 வாழ்த்துக்கள்.

தொடரும்....

No comments:

Post a Comment