Tuesday 12 August 2014

தண்டனை பெறுவீர்


தமிழுக்கு ஏதும் செய்யவில்லை திமுக என்று வாய் நீளம் காட்டும் வன்நெஞ்சர்கள் அவ்வப்போது தோன்றி தங்களின் வக்கிரபுத்தியைக்  காட்டுவது வழக்கமாகி விட்டது.

தமிழ்... என்றோ தோன்றி எண்ணற்ற இலக்கிய வடிவங்களை காலந்தோறும் வழங்கி வரலாற்றில் தனது வளமையை பதிவு செய்திருக்கிறது. முடிமன்னர் நெஞ்சிலும், குடிமக்கள் உள்ளத்திலும், கோலோட்சியதை சங்கத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. தனி மனித வாழ்வையும், சமூக வாழ்வையும் வரையறைக்குள் வைத்து வளமான சூழலை உருவாக்கும் வழிமுறைகளை வாரி வழங்கிச் சென்றிருக்கிறது.

இயற்கை, அதன் எழில், அழகு, இயக்கம், அதனால் உருவாகும் பயன், அந்தப் பயன்தரும் பரிணாமங்கள் ஆகிய அனைத்தையும் அறிஞர்கள் வழியாக அள்ளி, அள்ளி வழங்கி அருள் பொழிந்தது தமிழ்.

இயற்கையின் எல்லாச் சிறப்புகளையும் தன் இதயத்தில் பயிர்செய்த இனிய தமிழ், சங்க காலத்தை தாண்டுகின்றபோது நிலை தடுமாறி, நெஞ்சம் கலங்கும் காட்சியைக் காண்கிறோம்.

அறிவியல் உணர்வேற்றும் அருமையான கவிதைகளையும், கருத்துக்களையும் வழங்கிய தமிழ் அடிமை உணர்வை உருவாக்கும் அம்சங்களைப் பெறத் துவங்கி விடுகிறது.

 ஓர் அறிஞன் குறிப்பிட்டதுபோல் அகம், புறம் என்று வகை கூறி அறம், பொருள், இன்பம் என்று வாழ்ந்த தமிழ் இகம்பர சுகம் தேடும் சோம்பேறிகளின் கையில் சிக்கிவிடுகிறது.

 வாழ்வியல் சுவைகளை மனிதர்களுக்கு வழங்கிய சங்கத்தமிழ் தன் மொழிவடிவங்களை தொடர்ந்து மனிதர்களுக்குத் தந்திருந்தால் தாய்த்தமிழ் என்றோ அறிவியல் மொழியாகி உலகை ஆளுமை செய்திருக்கும்!.

ஆனால் அழகிய தமிழ் சொற்றொடர்களையும், அதன் வளமிகு வடிவங்களையும் கண்ணில் தெரியாத கற்பனைப் பொருள்களுக்கும், தனி மனிதப் புகழ்பாடும் தான்தோன்றித்தனங்களுக்கும், பல்லாண்டு காலம் பயன்படுத்தியதால்தான் தமிழின் வளர்ச்சி தடைபட்டு நின்றது.

அகவல், துதி, அந்தாதி என்று மனித உணர்வுகளை மாய்க்கும் வடிவங்களை இன்றும் மக்களிடம் பதித்த வண்ணமே இருக்கிறார்கள். ஏற்றம் பெற வேண்டிய தமிழை இறக்கத்தில் தள்ளுவதை ஆன்மீகம், பக்தி என்று அறைகூவுகிறார்கள்.

இல்லங்கள் தோறும், இதயங்கள் தோறும் பதிக்கப்பட்ட மத உணர்வுகளை, மவுடீக எண்ணங்களை மாற்றுவதற்கு அல்லது மாய்ப்பதற்கு நூறாண்டுகள் ஆகலாம். தொடர்ந்து செய்தாலும், துருக்கியின் முகமது கமால் பாட்சா போல ஆணையிட்டு மிரட்டினாலும் இங்குள்ளவை மாற அரை நூற்றாண்டுகாலம் ஆகலாம்.

அய்ரோப்பிய தொழிற்புரட்சிக்குப் பிறகு அறிவியல் பூத்துக் குலுங்குகிறது. பல்லாயிரக்கணக்கான புது புதுப் பொருள்கள் படைக்கப்பட்டு வாழ்க்கையின் வளங்கள் பலவாறாக வகைபடுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தப் பொருட்களின் பெயர்களையும், பயன்களையும் சொல்வதற்கு ஆங்கிலத்தால் முடியாமல் அகிலமெல்லாம் இருக்கின்ற மொழிச்சொற்களை, யாரையும் கேட்காமலேயே பயன்படுத்தி பயன் காண்கிறது ஆங்கிலம்.

ஆங்கிலம்போல் தமிழ் பயன்படும் மொழியாக மாறவேண்டுமெனில் எழுத்தாளர் சுஜாதா சொல்வதுபோல இங்கே கண்டுபிடிப்பாளர்கள் கணக்கற்றவர் தோன்ற வேண்டும். உணர்வில் அறிவியலாக்கம் பெற்று புதிய புதிய படைப்புகள் தோன்றினால் அதாவது பொருட்களில் புதியவை தோன்றினால் தமிழில் சொற்கள் தோன்றுவது ஒன்றும் கடினமல்ல

அந்த அறிவியல் தோன்றுவதற்கு இங்குள்ள தமிழ்ப் புலவர்களோ, தமிழ்க் கவிஞர்களோ, தனித்தமிழ் பற்றாளர்களோ, தங்களைத் தமிழின் மூலமென்று தம்பட்டம் அடிப்பவர்களோ அறிவியல் மனப்பான்மை தோன்ற மொழியிலோ, சமுதாய அளவிலோ என்ன செய்து கிழித்தார்கள் என்று கேட்கிறேன்.

இங்கு தமிழாசிரியராக பயிற்சி பெற்றோர், பட்டம் பெற்றோரிடம் விவாதித்துப்பார்த்தால் கம்ப ராமாயணம், மகாபாரதம், பெரிய புராணத்தை விளக்கி சொல்வதைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை என்பது வெள்ளிடைமலையாக விளங்கும்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றதாக அகம் மிக மகிழ்பவர்களிடம், அவாவினால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன், பைரன் என்பதைத் தாண்டி அவர்கள் வேறெங்கும் செல்லவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்

. இன்னும், பேராசியர்களையும், பேரறிஞர்கள் வரிசையில் பேசப்படுவோரையும் நெருங்கி நின்று பார்த்தால் நித்தம், நித்தம் மதக்குளத்தில் குளிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

தமிழோடு வாழ்கிறேன், தமிழுக்காக வாழ்கிறேன் என்று வாய்ப்பறை கொட்டுபவர்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பார்த்தால் தமிழ் தரும் மான உணர்வு கிஞ்சிற்றும் இல்லாத கீழ்மைக்குணம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

அறிவியல் புரட்சியால் துய்க்கும் பொருள்களுக்கு விளக்கம் தரவேண்டிய தமிழ் வல்லுநர்களோ பித்தா, பிறைசூடி, பெருமாளே அருளாளா என்று ஏழாம் நூற்றாண்டிலேயே நிற்கின்றார்கள்.

சரி. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு அன்றாட வாழ்வில் அத்தமிழின் பயனால் வாழ்க்கைச் சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் சகல தமிழரும் உண்மைத் தமிழ் பற்றாளரை, உழைப்பாளிகளை, தன் எதிரியாகக் கருதுவதைத்தான் தன் இதய கீதமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த எண்பது ஆண்டுகளாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரும், திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழர்களிடம் ஏற்படுத்திய தமிழுணர்வை, ஆக்கத்தை, தமிழ் வளர ஏற்படுத்திய அடித்தளத்தை, எழுச்சிமிகு சூழலை,தமிழைப் பயன்படுத்திய வண்ணத்தை, வடிவத்தை, வாதத்தை, பின் ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்புகளை பார்க்காது, சிந்திக்காது, இனிமைத் தமிழ் அடைந்த எழிலை, இன்னும் பல ஏற்றங்களை எண்ணத்தில் கொள்ளாது கை நீட்டி கழகத்தின் மீது காய்வார்களேயானால் அவர்கள் யார் என்ற அய்யம் தோன்றுவது தவிர்க்க இயலாது போய்விடும். அதுமட்டுமல்ல, நல்லவர்களா? நன்றியுடையவர்களா? என்ற எண்ணம் எழ நேரிடும்.

ஏனெனில், இன்று தமிழகத்தில் எங்கும் புழங்கும் நல்ல பேச்சும், எழுத்தும் திமுகவின் ஸ்டைல்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதை வழங்கியவர்கள் பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்தான் என்பதை சின்ன அரும்பைக் கேட்டால் கூட அது சிரித்தபடி பதில் சொல்லும்.

வேலைக்காரியும், சொர்க்கவாசலும், பராசக்தியும், மனோகராவும் படைத்த பேச்சழகு ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் உயிரோட்டமாய் வாழ்கிறது என்பதை உதவாக்கரைகள் உணராதிருக்கலாம். உயிர் தமிழ் என்போர் உணரவேண்டாமா?

கடிதங்களின் வடிவம் பழைய நாட்களில் எப்படி இருந்தது என்பதை அறியாதவர்களா கழகத்தைக் கடிப்பவர்கள்? கல்லுடைப்பவன் கூட காதல்மொழி பேசி களிப்படைகிறான். கற்பனை என்பது கவிஞனுக்கு மட்டுமே என்றிருந்ததை கடைக்கோடி மனிதனுக்கும் தந்து தமிழ் மீட்டும் நிலை தந்தவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அண்ணா, கலைஞர் எழுத்தோவியங்களை ஏறெடுத்துப் பாருங்கள் எளிதில் விளங்கும்.

அண்ணாவை, கலைஞரைச் சாடும் தனித்தமிழ் பற்றாளர்கள் என்றாலும் சராசரி தமிழர் என்றாலும், நாம் தமிழுக்கு என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தமிழ் காக்கப் போராடி தனிமைச் சிறையில் வாடியது கலைஞரா? இவர்களா?

மொழிப்போரில் ஈடுபட்டு உயிரிழந்து, உடமையிழந்து, ஆண்டுக்கணக்கில் சிறைக்கொடுமைகளில் வதிந்தவர்கள் கழகத்தவரா? அவர்களா? இதயம் உள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று நாட்டில் நிலவுகின்ற பற்பல இடங்களில் நல்ல தமிழ் பெயர்களைப் புகுத்தி மக்கள் நாவில் புழங்குவதற்கு கலைஞரே, கழகமே காரணமென்பதை அறியாதவர்களா அந்த அறிவாளிகள்?

அண்ணாவும், கலைஞரும், அருமை திராவிட இயக்கமும், தந்தைப் பெரியாரும் இந்த நாட்டில் தமிழுக்குச் செய்ததை பட்டியலிட்டுச் சொன்னால் பலநாள் ஆகுமென்பதைத் தெரியாதவர்களா அவர்கள்?

அதுவும் தமிழை கலைஞர் எங்கெல்லாம் பயன்படுத்தினார் என்று எண்ணுகின்றபோதே இதயம் இனிக்கிறது. இதை உணராவதர்களா குறை சொல்லி கலைஞர் மீது கை நீட்டும் அந்தக் குணசாலிகள்?

சட்டசபையில் திருக்குறள் சொல்லி கூட்டம் தொடங்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் கலைஞர் அல்லவா? திருக்குறள் தமிழில்லையா? சாலையில் செல்லும் பேருந்துகளில் வரலாற்றுப் பெயர்களை பொறித்தவர் கலைஞரல்லவா? பேருந்துக்குள் வள்ளுவர்படம், குறள் மொழிகள் , பயணச்சீட்டில்கூட குறள் பதித்த தமிழ்க்குல வேந்தன் கலைஞரை, தெளிந்த உணர்வாளர்களுக்குத் தெரியாது போகுமா?

அறுபத்து ஏழில் இருந்து என்ன செய்தார்கள் என்றே கலைஞரையும், கழகத்தையும் கடிக்கின்ற இவர்கள் அதற்கு முன்னிருந்தவர்களோ, இடை இடையே ஆட்சியில் இருந்தவர்களோ என்ன கிழித்தார்கள் என்று எடுத்துக்காட்டவில்லையே? அல்லது அவர்களை ஏதாவது தமிழுக்கு செய்யச் சொல்லி கடிப்பவர்கள் செய்த காரியம் என்னவென்று ஒன்றைக்கூட காட்டவில்லையே. ஆனால், தமிழுக்குச் செய்தவர்களை திட்டவும், சிறுமைப்படுத்தவும் முனைவதற்குக் காரணமென்ன? பின்னணி என்ன?

உலகத்தமிழ் மாநாடு நடத்தி தமிழர்களை எழுச்சிக்கோலம் கொள்ளவைத்தது திமுகவும், அதன் ஆட்சியும் அல்லவா? பல்வேறு தமிழ் வளர்ச்சி அமர்வுகளை நடத்தி ஆக்கமிகு சூழலை உருவாக்கி எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியது அண்ணாவும், அவரது அறுபத்து ஏழில் வந்த ஆட்சியுமல்லவா?

 மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின்கீழ் இயங்கும் ஒரு மாநில ஆட்சியில் வட்டார மொழியென்றால் அந்த மாநிலத்துத் தாய்மொழிதான் என்பது தமிழிலக்கணம் கற்றவர்களுக்குப் புரியாதா? மேலும் கலைஞர் தரும் விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாது தொடர்ந்து எரிச்சலைக் கொட்டுவதற்கு காரணமென்ன? உள்நோக்கமென்ன?

தமிழுக்கு ஆதரவாக ஆணையிடுகின்ற போதெல்லாம் தன் ஆட்சியை இழந்தாரே கலைஞர்! அந்தத் தியாக சீலன் மீது தீச்சொல் கொட்டுவது சரிதானா? சிந்தையுள்ளோர் செயல்தானா?

சரி, ஓர் அரசில் ஒரு கொள்கை அல்லது திட்டம் செயல்பட்டு வெற்றி காண்பதில் எவ்வளவு சிக்கல், சிரமம் இருக்கின்றது என்பதை அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் தெரிந்து கொள்ளலாம். அரசுத் துறைகளில் பணியாற்றி ஆதிக்கம் செலுத்திய அந்த வேந்தர்களுக்குத் தெரியாதா என்ன?

தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத் துறை என்று ஓர் அரசுத் துறையை உருவாக்கி ஒரு அமைச்சரையும் நியமித்து பல்வேறு செயல்திட்டங்களையும் வகுத்தளித்தார் கலைஞர்.

குறிப்பாக, ஆட்சி மொழியாக தமிழை ஆக்குவதற்காக படிப்படியாக செயல்திட்டங்களை வகுத்துத் தந்தார். அதில் ஒன்று அரசுப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட வேண்டுமென்ற ஓர் ஆணையும் பிறப்பித்தார்.

ஆனால், எத்தனை அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை சரியாகச் செய்கிறார்கள். தமிழாசிரியர்கள் கூட இன்னும் ஆங்கிலத்தில் கையெழுத்திடும் அவலம் இங்கே வாழ்கிறதே? அவர் இட்ட ஆணைகள், ஆக்கமிகு திட்டங்கள் அடுத்து வரும் ஆட்சியிலும் தொடர்ந்தால்தானே செயல்வடிவம் கொள்ளும். இதெல்லாம் தெரியாவர்களா கலைஞரும், கழகமும் ஒன்று செய்யவில்லை என்று சொல்பவர்கள்?

பாடமொழியாகத் தமிழை அறிவித்த நேரத்தில் அதை மாணவர்கள் ஏற்காமல் கலைஞரை முற்றுகையிட்டார்கள். மனம் போன போக்கில் பேசினார்கள். அப்போது, திரு. குன்றக்குடி அடிகளார், திரு..பொ.சி. அவர்கள்தானே வேகம் வேண்டாம் தமிழுக்காக என்று கலைஞரை வேண்டிக் கொண்டார்கள். அன்று இந்த தமிழ்காக்கும் தொண்டர்களாக தங்களைக் காட்டிக் கொள்வோர் மாணவர்களைப் புரியவைக்கக் காட்டிய வேமென்ன? செய்த வேலையென்ன?

கலைஞரின், கழகத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டால் இடம்பெருகும் என்பதை குற்றம் கூறுவோர் அறிந்திடவேண்டும். ஓர் அரசாங்கத்தில் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறைக்கு வந்து வெற்றிபெற அந்த மொழி பேசும் அனைவரின் பங்களிப்பும் வேண்டுமென்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகாலம் கடவுளுக்கும், காதலுக்கும் மட்டுமே பயன்பட்ட ஒரு மொழிவடிவம், புத்துலகத்தின் புதுமை பொருட்களை ஆளுமை செய்யும் நிலைபெற தொடர் முயற்சிகள் வேண்டுமென்பதையும், அதற்கு பற்பல ஆண்டுகளாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞரின் கண்மணியாய், கழகத்தின் மூளையாய்த் திகழும் அண்ணன் முரசொலி மாறனின் குடும்பத்து மலர்கள் நடத்தும் சன் டிவியில் வணக்கம் தமிழகத்தில் சிறப்பு விருந்தினர்களாக வருகின்ற தமிழறிஞர்கள் பலர், தமிழ் எப்படியெல்லாம் இயங்குகிறது. எங்கெல்லாம் இடம்பெற்றிருக்கிறது. எங்கெல்லாம் அழகொளிர வாழ்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். குன்றென வளர்ந்து குவலயத்தில் புகழ் சூடுவதையும் காட்டுகிறார்கள். இதை நூறுபேரைக் கூட்டி வைத்து மூன்று மணி நேரம் புராண இதிகாசப் புழுகுகளை புகழ்ந்துரைப்போர் பார்த்துப் புத்தறிவு பெற வேண்டுகிறேன்.


ரஷ்யப்புரட்சி நடந்து லெனின் தலைமையில் அரசு அமைந்தபோது அன்றிருந்த அரசுப்பணியாளர்களில் அவருக்கு ஒத்துழைப்புத் தராதவர்களும் இருந்தார்கள். அதற்கு அவர் அவர்களை எப்படி நம்முடைய கொள்கைக்கு மாற்றவேண்டும் என்பதை ஒரு விதியாகவே வகுத்தார். சொல்லிப் பார்ப்போம், கெஞ்சிப் பார்ப்போம். பண்படச் சொல்வோம், பின் பயமுறுத்துவோம். இதற்கெல்லாம் உள்ளாகவில்லையென்றால் அப்புறப்படுத்துவோம் என்றார். இதன் பொருள் என்னவென்பதைப் புரிந்தவர்கள் தெரிந்து கொள்ளலாம். அது ரஷ்யா. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசு. இங்கெல்லாம் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் இது சனநாயக நாடு என்று சொல்லப்படும் இடம். அதிலும் ஓர் ஆதிக்க அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அதிகாரமற்ற அரசு இப்படித்தான் இயங்க முடியும். இவ்வளவுதான் செய்யமுடியும்.

தமிழ் ஆட்சிமொழியாக, அகிலமெல்லாம் ஆகவேண்டுமென்ற வேட்கை இல்லாதவரா கலைஞர்? பாடமொழியாகித் தமிழ் எல்லாருக்கும் பயன்பட வேண்டுமென்று எண்ணாதவரா? இணைய தமிழ் மாநாடாம் தமிழ்நெட் நடத்தி உலகெங்கும் பரவியிருக்கின்ற புதிய விசைப்பலகையை உருவாக்கியவரல்லவா அவர்? அதன் விளைவுதானே பில்கேட்சின் செயல்திட்ட மொழிகளில் தமிழும் இடம்பெற்றிருப்பது!

தமிழர் கொண்ட உட்பகைதான் உலகில் முதல்நாடு என்று விளங்க வேண்டிய தமிழகத்தை அடிமைச் சேற்றில் அமிழ்த்தி வைத்தது என்பதை மூவேந்தர்களின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்தவர்கள் உணர்வர். இன்றும், அதுதான் இங்கு தொடர்கதையாகின்றது.

அண்ணன் கலைஞரை, கழகத்தை குற்றம் சொல்லி குறை காண்போரை தமிழாக வாழ்வதால், தமிழறிஞர்களை மதிப்பதால் தரமான சொற்களால் விளக்கம் தருகிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.


தூய மனதுள்ளோர் கலைஞரின் தமிழ்ப்பணியில் குறைகாண மாட்டார்கள். இன்னும் கலைஞரிடம் எவ்வளவு பெற வேண்டும் என்றே எண்ணமிடுவர், ஏற்றம் காண்பர். ஆனால், தமிழ் காப்போரென்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழண்ணலாக இருந்தாலும் சரி, வேறுபல வணிக மன்னர்களாக இருந்தாலும் சரி, ஏன் சித்தர்களே என்றாலும் சரி, வேறு ஆதித்தர்களாக இருந்தாலும் சரி, வருகின்ற வரலாற்று ஆசிரியர்களின் தடித்த சொற்களால் தண்டிக்கப்படுவர் என்று மட்டும் எச்சரிக்க விரும்புகிறோம்

No comments:

Post a Comment