Saturday 9 August 2014

முரசொலி இதழையும் இனிய தலைவர் கலைஞரையும் வியந்து பார்க்கிறேன்

1. வியந்து பார்க்கிறேன்



வியந்து பார்க்கிறேன் -என்
விழிவேந்தன் திறன் கண்டு
அயர்ந்து போகிறேன்!

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் விழிப்புணர்வு; சமூக; அரசியல்; பொருளாதார உயர்வுக்கும்; உறுதிபாட்டுக்கும் தொய்வின்றி; தொண்டு நோக்கில் உழைக்கின்ற உன்னதமான ஏடு முரசொலி.

முரசொலி படித்து எழுத்தாளராய்; பேச்சாளராய் ஆனவர்கள் ஏராளம் என்பதற்கு வரலாற்றில் பற்பலர் சாட்சியமாகிறார்கள். கையெழுத்து பிரதி; கிழமை இதழ்; நாளிதழ் மலர்கள் என்று மக்களின் வளர்ச்சியில் பல்வேறு அழகுடன் பணியாற்றி வருகிறது  முரசொலி.

அரசியல் அரங்கம்; கலைச் சோலை; வெள்ளி வீதி; புதையல்; பெட்டிச் செய்திகள்; தினப்பலன்; கட்டுரை; கவிதை என்று காவிய வடிவங்காட்டி மக்கள் மனதை ஒரு நேர்கோட்டில் நடைபோடச் செய்வதற்கு பயிற்சி ஆசிரியனாக செயல்பட்டு சிறந்த செய்தி இதழாகவும், சீரிய நூலாகவும், செறிவுற்றிருகிறது முரசொலி.

தத்துவங்களின் தேரோட்டம் நடத்திய சித்தர் நடை எழுத்தாளன் அடியார், வில்லம்பை விஞ்சுகின்ற வேகநடை எழுத்தாளன் வில்வம் ஆகிய எழுச்சிமிகு எழுத்து மன்னர்களை உருவாக்கியது முரசொலி. கூட்டம் கூட்டமாய் கட்டுரைகள், கொத்துக் கொத்தாய் கவிதை மலர்கள், நெஞ்சையள்ளும் பல்சுவை செய்திக் குவியல்கள் என்று தெளிந்தோரின் சிந்தனைச் செல்வமாய் வாழ்கிறது முரசொலி. ஒட்டுமொத்தமாய் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும் நூல்கூட்டமாக

உலக அறிஞர்களின் கருத்து மலர்களை தமிழர் கண்முன் காட்டி நெஞ்சை மகிழ வைக்கும் நேர்த்திமிகு ஏடு முரசொலி. மற்ற இதழ்களிலிருந்து வேறுபட்டு அகலமான பத்தியில் அண்ணா, கலைஞர் பேச்சை வெளியிட்டு மக்களை ஓர் ஆவலில் ஆழ்த்திய அற்புத ஏடு முரசொலி.

வையகம் சிறக்கவும், தமிழர் வாழ்வில் வளம் கூடி நலம் பெறவும், வணிக நோக்கின்றி நடைபோடும் நல்ல ஏடு முரசொலி.

"இன்றைய செய்தி நாளைய வரலாறு'' என்று தன் முகத்தில் முத்திரை பதித்து முன்னேற்றக் கருத்துக்களை வழங்கி வருவதோடு "இன்றைய நாளில் அன்றைய செய்திகள்'' என்று எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளை வாரி வழங்கி இதயத்தை இனிமைப் படுத்தியது  முரசொலி.

நில்! நண்பா! எங்கே செல்கிறாய்? என்ற அன்றைய விவாதத் தலைப்பிலிருந்து, ஆண்டியும், போண்டியும், "பட்டிக்காடும், பட்டணமும்'' என்ற இன்றைய விளக்கத்தலைப்பும் தந்து மனதை மகிழ்வில் ஆழ்த்தி வருகிறது முரசொலி.

என்னுடைய பத்து வயதிலிருந்து படிப்பகங்களில், நூலகங்களில் படிக்கின்ற பழக்கம் தொற்றிய நாளிலிருந்து முரசொலி படித்து வருகிறேன். காசு கொடுத்து வாங்கி கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாக முரசொலியைப் படித்து வருகிறேன். தற்சமயம் இரு நூலகங்களுக்கு வாங்கித் தருகிறேன்.

பலரும் படிக்க வேண்டும் என்று பலருக்கு முரசொலியைக் கொடுத்ததால் நான் இழந்த முரசொலி இதழ்கள் ஏராளம். சேர்த்து வைத்த முரசொலியை பாதுகாக்கும் வகை தெரியாத நாளில் சிறந்ததென்று பல்வேறு கருத்துப் பகுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு பிரிந்து விட்ட முரசொலி இதழ்கள் இன்னும் ஏராளம்! ஏராளம்.

தற்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட முரசொலி இதழ்களையும், பற்பல மலர்களையும் பாதுகாத்து வருகிறேன். ஒழுங்கின்றிக் கிடந்தததை நாள் வரிசையில் அடிக்கிட முனைந்து நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் நிரல் படுத்த முனைகிறேன். மாடியில் பெரிய அறையில் முழுக்க விரித்து வைத்து தேதிகளைப் பார்க்கின்றபோது என் விழிகள் வியப்பால் விரிந்து தலைப்புகளில் ஒளி பாய்ச்சி நின்றது. முரசொலியைத் தன் மூத்த பிள்ளை என்று பாசம் கொஞ்சும் மொழியால் பகரும் தலைவர் கலைஞர் அவர்கள் தன் பிள்ளையின் வழியாக எத்தனை எத்தனை வகையில், முறைகளில், தன் இதயத்தை, இயக்கத்தை வெளிப்படுத்துகிறார்?

கதை, கவிதை, கட்டுரைகள், சிறுகதைச் சித்திரங்ள், திறனாய்வுகள், புதினங்கள், நாவல்கள், நல்லவை நிலைபெற நாளெல்லாம் ஓய்வின்றி எடுத்து வைக்கும் விவாத விளக்கங்கள், பழையதை நினைவூட்டும் பயன்மிகு செய்திகள்.பாசத்தை வளர்க்கும் பாங்கான சொற்றொடர்கள். பாதை தவறிப் போன தமிழினத்தை தனக்குரிய இராசபாட்டையில் நடைபோட செய்வதற்காக  நெஞ்சில் தோன்றுவதை நேர்த்தியோடு சொல்வதற்கு அவர் கையாளும் வண்ணங்கள், வடிவங்கள், வாஞ்சைமிகு வாசகங்கள்.

பிற இதழ்களில் தந்த பேட்டிகளை மீண்டும் முரசொலியில்பதிய வைக்கும் பாங்கு; காலந்தோறும் ஏற்படும் அரசியல் சூழல்களில் ஓதல், உணர்வித்தல், சாடுதல் என சகல முறைகளையும் கையாளும் சாமர்த்தியம் ஆகியவையெல்லாம் முரசொலியில் முகம் பதித்தபோது முறுவல் காட்டுகிறது.

முடைநாற்ற முடக்கருத்துகள் முரசொலியில் வாராதிருக்க, முனைப்புக் காட்டியிருப்பது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அறுபது ஆண்டுகள் வணிக ஆசையில்லாமல், வணிக  விளம்பரங்கள் இல்லாது கொள்கை மாற்றமின்றி நடைபோட்ட செய்தி இதழ் ஒன்று இந்தியாவிலேயே... ஏன்.. உலகிலேயே முரசொலிபோல் இல்லையென்றே சொல்லலாம்.

செய்திகளின் தலைப்பு ஒவ்வொன்றையும் உற்று உற்று பார்த்தால் ஓர் உயர்ந்த உண்மையை உணர முடிகிறது. ஆம். அவருடைய வெளிப்பாடுகளில் தெரிகின்ற உண்மை எவ்வளவு பெரிய பதவி கிடைப்பதென்றாலும், எத்தகைய புகழ் என்றாலும், அவர் தமிழர்களைப் பிரிந்து செல்ல விரும்பவில்லை என்பதே அந்த உண்மை.

தந்தை பெரியார் உணர்த்திய, பேரறிஞர் அண்ணா அவர்கள் ஊட்டிய தமிழின மேம்பாட்டு உணர்வுகளை மாற்றவோ, மறக்கவோ அவர் மனம் விரும்பவில்லை என்பதையே முரசொலியை முற்றாகப் படிக்கின்றபோது நம்மால் உணர முடிகின்றது. இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ் என்றாலும் நான் தமிழர்களைத் தாண்டிச் செல்ல மாட்டேன். எந்தக் காரணத்தாலும், என் இனிய தமிழை விட்டு விலகமாட்டேன் என்பதை நீண்டநாள் முரசொலி  இதழ்களில் அவர் பதித்திருப்பதைக் கண்டு நம் உள்ளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.

பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மாநாடுகள், பல்துறை  மன்றங்களில், பல்வேறு தலைப்புகளில் அவர் வெளிப்படுத்திய கருத்து மலர்களை நிரல்படுத்தி நுகர்கின்றபோது தித்திக்கும் திராவிட இயக்க உணர்வுகள் நம்மை ஆளுமை செய்கிறது.

எத்தகைய சிக்கல் என்றாலும், இடர்ப்பாடான சூழல் என்றாலும், எளிதில் தீர்க்கின்ற இதய தூய்மையும், எளிமையும், எதிர்கருத்து கொண்டோரை மதிக்கின்ற பாங்கையும் எந்நாளும் உள்ளத்தில் பதித்திருப்பதை நெடுநாள் முரசொலியை நெருங்கிப் பார்த்தால் உணர முடியும்.

தஞ்சை பொதுக்குழு விளக்கக் கூட்டத்தில் பேராசிரியர் குறிப்பிட்டதுபோல ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும் (முரசொலி) வைத்துக் கொண்டு, ஒரு பேரியக்கத்தைக் காப்பாற்றிய பேராற்றல் உலகில் கலைஞர் ஒருவருக்குத்தான் உண்டு என்பதை தொடர்ந்து முரசொலியை துய்ப்போர் தெரிந்து கொள்ள முடியும். என் இனத்தானை உயர்த்த, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தாழ்த்திக் கொள்வேன் என்று தந்தை பெரியார்  ஒருமுறை கூறினார். அந்த தியாக உணர்வுகளை தன்னிடம் தக்கவைத்து பணியாற்றும் பாங்கு கலைஞரிடம் இருப்பதை பலநூறு முரசொலிகளில் பார்க்க முடிகிறது.

கலைஞர், கதை, உரையாடல் தீட்டிய புதையல் திரைப்படத்தில் ஓர் அருமையான காட்சி; அந்தப் பெண்ணைக் காதலிக்கும் ஓர் இளைஞன், அவளுக்கு கடிதங்கள் எழுதுவான்; நாளும் மடல் தீட்டி மகிழ்வான்; அவளோ, அந்தக் கடிதங்களை கிழித்து கீழே போட்டு விடுவாள். அன்றும் ஒரு கடிதத்தை அஞ்சல்காரரிடம் பெற்ற உடனேயே  கிழித்துப் போடுவாள். அஞ்சல்காரர் அதில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படித்துப்பாரேன் என்பார்; அவளோ அந்த இழவை நீயே படித்துப்பார் என்பாள். அவன் எடுத்து கடிதத்தைப் பிரித்து, ஒட்ட வைத்து படிக்கத் தொடங்கும்போது அந்தக் கடிதம் 608வது கடிதமொன்று கூறி அதில் உள்ள வாசகங்களை, வர்ணனைகளை படிப்பான். அஞ்சல்காரன் படிக்கின்ற அழகு கண்டு அவன் மீது அவள் காதல் கொள்வாள்.

அன்றைக்கு தினசரி கடிதம் எழுதுவதாக கற்பனையாக எழுதிய கலைஞர், பிற்காலத்தில் தினம் தினம் தன் உடற்பிறப்புகளுக்கு மடல் வரைகிறார். அந்த மடல்கள், ஆற்றல்மிகு அறப்போர் வீரர்களை, அரசியல் பணியாளர்களை, பொது அறிவுப்7 பேராளர்களை, புதுமை மனிதர்களை உருவாக்கும் பணிமனையாக, பட்டறையாக தமிழர்களுக்கு பயன்படுகிறது என்பதை முரசொலி படிக்கின்ற யாரும் உணர முடியும்.

சாதனை செய்வோரை தெரிந்தெடுத்து, தன்னில் பதித்துக் கொள்ளும் "கின்னஸ்'' புத்தகம் அறுபத்தாறு ஆண்டு காலம் ஒரு புகழ்  சூடிய பொதுநலப் பணியாளரை, ஈடுபாடு கொண்ட துறையனைத்திலும், நுண்மான் நுழைபுலம் கண்ட மூதறிஞரை, போராட்டமே வாழ்வாகக் கொண்ட போர் வீரரை, சிறைப்பறவையாகி தியாக தீபமேற்றிய செழுமை கொஞ்சும் ஒரு போராளியை, எழிலார்ந்த எழுத்தாளரை, எழுச்சிமிகு பேச்சாளரை, ஏற்றமிகு அறிஞரை, பாசமிகு ஓர் அரசியல் தலைவரை, நாடகாசிரியரை, நல்ல நடிகரை, புதுமைக் கருத்துக்களையும் புடம்போட்டுத் தருகின்ற புகழ் மனிதரை, ஆட்சியில் அய்ந்துமுறை அமர்ந்திருத்த அமைச்சர் பெருமகனை, எண்பது வயதிலும், எதிரிகளின் கொடூர தாக்குதல்களை தாங்கும் திறன்கொண்ட வல்லமைசாலியை, மறுக்கவியலாத வாதத்திறன் கொண்ட திறனாளரை, ஒவ்வொரு காசுக்கும் வெளிப்படையான கணக்கு காட்டும் மனமாசற்ற அரசியல்வாதியை; ""கின்னஸ்'' தன்னில் பதித்துக் கொள்ளவில்லையே  என்று வருந்துகிறேன்.

இத்தகைய ஆற்றலளாளரைவிட வேறு எவரை கின்னஸ் தன்னில் பதித்துக் கொண்டிருக்கப்போகிறது
வியந்து பார்க்கிறேன் என்
விழிவேந்தன் திறன் கண்டு
அயர்ந்து போகிறேன்

கின்னசே! நீ பார்ப்பது எப்போது?

No comments:

Post a Comment