Monday 18 August 2014

கழகம் வேறு - கலைஞர் வேறு அல்ல

கழகம் தோன்றிய நாளிலிருந்து கடுமையான உழைப்பை மட்டுமல்ல கருத்துகளில் கூட புதிது புதிதாய் யுக்திகளைப் பயன்படுத்தி கழகத்தை உயிரோட்டமாக மக்கள் நெஞ்சில் உரமூட்டி நிலை பெறச் செய்தவர் கலைஞர் அவர்கள்.

சாவின் விளிம்பிலிருந்த, தனது தந்தையை, பின் தனது மனைவியைப் பிரிந்து சென்று பொதுக் கூட்டங்களுக்குச் சென்று வந்தவர்-பொது நல உணர்வில், புடம்போட்ட தங்கமாய் ஒளிர்ந்தவர்- கலைஞர் அவர்கள்.

அண்ணாவை மறந்து அல்லது அவமதித்து சம்பத் பிரிந்த போது அவர் கலைஞரையும், திரைப்படக் கலைஞர்களின் மீதும் தான் பழி போட்டு விட்டு போனார். ஆயினும் கழகத் தோழர்கள் கலைஞரை சிறிதும் மாறுபட எண்ணியதில்லை.

அண்ணன் மறைந்த நேரத்தில் அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் இருந்ததாகச் சொல்லிக் கொண்ட நாவலரை விடுத்து கலைஞரை தேர்வு செய்தபோது சிறு சலசலப்பை கழகச் சம்பந்தமில்லாவர்கள் உருவாக்கினார்கள். அப்போதும் கலைஞர் மீது கழகத் தோழர்கள் கொண்ட பேரன்பில் கடுகளவும் மாற்றமில்லை.

1972ல் மக்கள் செல்வாக்கை இமாலய அளவு பெற்ற எம்.ஜி.ஆர். ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தனிக் கட்சி தொடங்கியபோது கலைஞர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை வீசினார். அது கூட அவரது மனதில் தோன்றவில்லை. பார்க்கும் விழியிலேயே சகுனியைப் பொருத்திக் கொண்டிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனால் கெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரால் ஏற்பட்டது தான் அந்த நிலை. ஆயினும் கழகத் தோழர்கள் கலைஞர் மீது கொண்ட காதல் மாறவில்லை.

கலைஞரால் வளர்க்கப்பட்டவர், கலைஞரின் போர்வாள் என்று போற்றப்பட்டவர், வல்லமைசாலி, வைரத் தோளன், வரிப்புலி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டவர் என்றாலும் வஞ்சகத்தை நெஞ்சில் வலையாகப் போர்த்திக் கொண்டிருந்த வைகோ-வின் துரோகம் வெளிப்பட்ட போது ஒரு வித்தியாசமான நிலை தோன்றியது.

ஆம். சம்பத் பிரிந்த போதோ, எம்.ஜி.ஆர். விலகிய போதோ தோன்றாத துயரக் காட்சிகள் தோன்றியது. சம்பத் பிரிந்த போது ஒரு கண்ணதாசன் தான் போனார். எம்.ஜி.ஆர். பிரிந்தபோது ஒரே ஒரு எம்.எல்.சி. கே.. கிருஷ்ணசாமி தான் போனார்.

ஆனால் வஞ்சகப் பிறவி வைகோ பிரிந்த போது 8 மாவட்டச் செயலாளர்கள், ஏராளமான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் என்று பிரிந்தவண்ணம் இருந்தார்கள். என் கட்சி, என் கொடி, என் அறிவாலயம் என்று எக்காளமிட்டபடி எகிறிக் குதித்து தலை கால் தெரியாமல் துரோக புத்தியில் தோன்றியதெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வைகோ. பொறுப்புள்ள தினமணி ஏடு கூட .தி.மு.., கோ.தி.மு.. என்று தனது கொழுப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

இன்று கூட அந்தக் காட்சிகள் கண் முன் விரிகிறது. வானத்திற்கும், பூமிக்குமாக தலை கால் தெரியாமல் தாவிக் குதித்து தரமற்ற சொற்களைக் கொட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மிக அமைதியாகவே இருந்தார் கலைஞர்.

கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தனது பொறுப்புகளையும், கடமைகளையும் மிக மிக அமைதியாகவே ஆற்றிக் கொண்டிருந்தார். பொதுக் குழு, செயற்குழு என்றெல்லாம் அரங்கேற்றி, கலைஞர், பேராசிரியரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக வைகோ தனது வக்கரிப்பைக் காட்டிக் கொண்டிருந்தார்.

வைகோ-வின் ஆரவாரம், ஆட்டம், பாட்டம் எல்லாம் சற்று அடங்கிய நேரத்தில் கலைஞர் தன் கண் பார்வையை, கவனத்தை கழகப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை கணக்கெடுக்கும் செயலில் ஈடுபடுத்துகிறார்.

கணக்கெடுப்பைக் கூட பத்திரத்தில் பதிவு செய்யச் சொல்கிறார். வியப்பான காட்சிகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஆம். பெரும்பான்மை பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றியச் செயலாளர்கள் கலைஞரின் பின் இருக்கிறார்கள் என்ற உண்மை உலகோர் கண்ணில் பட்டு உறுதியானது. தஞ்சை மாநாட்டில் உண்மை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவை பத்திரத்தில் பதிய வைத்து புத்தகமாக வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தெளிவான தீர்ப்பால் கழகம் கலைஞர் தலைமைக்குச் சென்றது. ஓரளவிற்கு கடும் நிலை என்றாலும் கழகத் தோழனின் உள்ளம் கலைஞரையே சார்ந்திருந்தது.

இந்த மாதிரி நிகழ்வுகள் தோன்றும் போதெல்லாம் மூத்த கழகத் தோழர்களிடம் நான் கருத்துக்களைக் கேட்பதுண்டு. சனாதன உணர்வுகள் கொண்ட முரட்டு மனிதர்களை முட்டி மோதி ஓட ஓட விரட்டி கழகத் தோழர்களுக்கு தெம்பூட்டிய முன்னாள் நகர செயலாளர் கோ.சந்திரனிடம் நாவலரைத் தேர்ந்தெடுக்காமல் கலைஞரைத் தேர்வு செய்திருக்கிறார்களே! உங்கள் கருத்து என்ன? என்ற போது அவர் சொன்னார் ""இந்த இயக்கத்தின் அடித்தள உணர்வுகள் கலைஞரிடம் இருப்பது போல் நாவலரிடம் இருப்பதற்கு இயற்கையிலேயே வாய்ப்பில்லை'' என்றார். கலைஞர் வளர்ந்ததே இந்த இயக்கத்தின் அடித்தளத்தில்தான் என்றார்.

இதுபோல் வேறு சில நேரங்களில் சில நிகழ்வுகள், சில செய்திகள் பலருடைய உள்ளத்தில் வருத்தத்தை உருவாக்கும். புலம்பி புழுங்கும் நிலை கூடத் தோன்றும். உதாரணத்திற்கு .தி.மு..வில் இருந்து வந்தவர்களுக்கு தந்த பதவிகளும், மரியாதையும் தோழர்கள் பலருக்கு உகந்ததாக இல்லை. குறிப்பாக தாமரைக்கனி போன்றவர்களுக்கு காட்டிய அன்பும், பாசமும் பலரால் சீரணிக்க முடியவில்லை. இருப்பினும் அதற்காக கலைஞர் மீது விமர்சனமோ வேற்றுமை எண்ணமோ கொள்ள கழகத் தோழர்கள் மனம் இணங்குவதில்லை.

கலைஞர் கழகத் தோழன் மீது கொண்ட அன்பும், கழகத் தோழர்கள் கலைஞர் மீது வைத்திருக்கும் பாசமும், பற்றும் இயற்கையாய் மலர்ந்த இனிமைகள். இதைப் புரிந்து கொண்டு செயல்படுவோர் புகழ் பெறுவோர்கள், புரிந்த கொள்ள இயலாதோர், புத்தி கெட்டோர் பொது வாழ்வுக்குப் பொருத்தமில்லாமல் போய் விடுவார்கள்.

இந்த இனிய இயக்கத்தில் எத்தனையோ பேர் வந்தார்கள், வளர்ந்தார்கள், சிறந்தார்கள், மறைந்தார்கள், பிரிந்தார்கள், ஆயினும் இன்றும் தங்கள் தலைவனாக, இயக்கக காவலனாக தலைவர் கலைஞரை ஏற்றுக் கொள்ளும் தோழர்கள் தோன்றியவாறே இருக்கிறார்கள்.

கலைஞர் மீது வைத்த நம்பிக்கைக்குச் சான்றாக ஒரு நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன். அண்ணன் தங்கப் பாண்டியன் மறைவுக்குப் பிறகு திரு.கே.கே.எஸ்.ஆர்.ஆர். அவர்களை மாவட்டச் செயலாளராக ஆக்குவதற்காக அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. நான் அப்போது பொதுக்குழு உறுப்பினர்.

அன்று அங்கிருந்த என் போன்ற ஒரு சிலருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள் மாவட்டச் செயலாளராக ஆவதில் முழு விருப்பமில்லை. ஆனால் இதில் விவாதம் தேவையில்லை என்று தலைவர் சொன்னதால் நானும் வாழ்த்திப் பேசினேன்.

கூட்டம் முடிந்த பின் திரு.பேராசிரியர் அவர்களிடம் ஒரு மாவட்டச் செயலாளரை நியமிப்பது சரிதானா? என்றேன். அதற்கு பேராசிரியர் அவர்கள் கழகத்தைக் கட்டிக் காத்து வளர்த்து - வளர்க்கின்ற கலைஞர் சில சூழல்களில் ஒரு முடிவெடுக்கிறார். அதைக் கேட்க விமர்சிக்க உனக்கேது தகுதி? எனக்குத் தான் உரிமையேது என்றார்.


பேராசிரியரின் மனம் போன்று மொத்த கழகத் தோழர்களுக்கும்  கலைஞர் மீது நம்பிக்கை இருக்கிறது - இல்லாதவர்கள் அந்த இனிமையை இறைஞ்சியாவது பெற வேண்டும். ஏனெனில் கழகம் வேறு - கலைஞர் வேறு அல்ல.

No comments:

Post a Comment