Sunday 10 August 2014

மாமனிதரிலும் மகத்தானவர் கலைஞர்



கருவூலம் காட்டும் கடந்த கால வரலாறு என்று முரசொலியில் வரைந்த கலைஞர் கடிதத்தில் கண்பதித்தபோது இயக்கத்தின் எல்லா நாட்களும் இதயத்தில் இனிமையூட்டியது.

வசைமொழிபாடும் வார்த்தைகளைக் கூட இனியதொரு புதுக்கவிதை என்கிற இதயப்பண்பாட்டை எண்ணி, எண்ணி உள்ளம் இனிமையில் இழைந்தோடுகிறது. வருகைப் பதிவேட்டில் வரைந்ததையெல்லாம் பார்த்து, படித்து மனதில் நிறைந்ததை எடுத்தெழுதி நெஞ்சம் மகிழ்ந்திருக்கிறார்.

இளமை நாள் முதல் இயக்கம் தந்த கொள்கை, கருத்து, உணர்வுகளை உள்ளத்தில் பதிய வைத்து உரம்பெறச் செய்த கலைஞர் ஏற்றுக் கொண்ட கொள்கை மக்கள் நெஞ்சில் இடம்பெறவும், அதனால் அவர்கள் ஏற்றம் பெறவும், ஈடில்லா நல் உழைப்பை இறைத்தவண்ணம் இருக்கிறார் என்பது உவகையோடு, உணர்ச்சியையும் உள்ளத்தில் மலைபோல் உயர்த்திக் கொண்டிருக்கிறது.

கார்த்திகேயக் கண்மணியே, உன்னைப் போன்ற வைரம் பாய்ந்த உள்ளத்தினர் எல்லாம் ஒன்றாகி நில்லுங்கள். எதிர் காலத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் தோன்றுவர். கருவூலம் காட்டும் கடந்தகால வரலாறு அதுதான் என்று நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள் மனதில் உணர்ச்சிப் புயலை உருவாக்கும் வரிகளல்லவா!


பள்ளிப் பருவத்திலிருந்து இன்றைய நேரம் வரை தமிழ்ச்சமுதாயம் தலைநிமிர, இயக்கத்தை வளர்த்து, இரும்பனைய உறுதியை எல்லோரும் பெற உறக்கமின்றி ஓடி ஆடி உழைத்த அந்த பெருமகன், தான் இல்லாத நாளிலும் இந்த இயக்கம் வளர உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு கலைஞர் கருவூலத்தை உருவாக்கி இருக்கிறார், அந்தக் கடமை வீரர் என்பதை, எண்ணுகின்றபோதே இதயம் உருகி கண்கள் வழியே கரைந்து வழிகிறது.

தன் குடும்பம் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட இயக்கத்தைப் பெரிதாகக் கருதி உழைக்கின்ற இயல்பினரான கலைஞர் அவர்கள் விழுப்புரம் மாநாட்டில் வெளிப்படையாய் தன் மைந்தனுக்கு விடுத்த எச்சரிக்கையை "இருபத்து நான்கு வயதில் ஒரு மாநாட்டிற்கு நான் தலைமையேற்றேன். ஆனால், நீ ஐம்பது வயதில் தலைமையேற்கிறாய். ஏற்க மனமில்லாத பேராசிரியர் இதயத்தில் உறைகின்ற வகையில் உழைத்தேன். அதுபோல் நீ உழைக்க வேண்டும். இல்லையெனில் ஒதுக்கப்படுவாய்” என்று உரைத்தது கண்டு நிச்சயம் அவர் தன்னலமற்றவர், தன்மானத் தொண்டர், தரம்பிறலா பெருமனிதர் என்று அவரது எதிரிகள் கூட மறைவாக எண்ணி மகிழ்வர்.

நாற்பதாண்டுகால நட்பை இறைக்காமல் தெளித்ததேனோ என்று எள்ளுகின்ற மனோகரன், செல்வராசு அவர்களே, எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்திற்குப் பயன்பட்டார் என்பதைவிட இந்த இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.நாற்பதாண்டுகால நல்ல நட்போடு இருந்தவர், பதினைந்தாண்டுகாலம் மிகப்பகைமையும் கொண்டிருந்தார் என்பதும் உண்மைதானே
.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சோவியத்திலிருந்து ""வளர்முக நாடுகளில் பாப்புலிசம்'' என்ற நூல் வெளிவந்தது. அதில் தி.மு.-வை விமர்சித்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது.

அதில் இனம், மொழி சார்ந்த உணர்வுகளை அந்த மக்களிடம் புகுத்தி அந்த மக்களை வளம்பெற வைத்தாலும், அந்த இயக்கத்தில் சேர்ந்த விளம்பரப் பிரியர்கள் அல்லது அந்த இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக அந்த இயக்கத்திலுள்ள அறிவாளிகள், உழைப்பாளிகளை குறைகூறி அதைப் பூதாகரமாகக் காட்டி, அரசியல் அறிவில்லாதவர்களையும், அடாவடி மனிதர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, அந்த இயக்கத்தை நலிவுறச் செய்வார்கள். தொடர்ந்து நலிவு செய்யும் ஏதுக்களையும் உருவாக்குவார்கள் சுயநலத்தின் காரணமாக, என்று அந்த நூலில் விளக்கப்பட்டிருக்கும்.

அதைத்தானே எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தில் செய்தார். வெளியேறிய பின்பும் அதைத்தானே தொடர்ந்தார். இந்த மண்ணில் தழைத்து, வளர்ந்து, உருவான திராவிட இயக்கச் சீர்மைகள் மேலும் பொலிவுறாமல் போனதற்கு அவரின் அந்த நிலைதானே காரணம்.

இருந்தும் நாற்பதாண்டுகால நண்பர், நட்பு என்று கலைஞர் கூறுவதற்கு, இறந்தபின் ஒருவரை இகழ்தல் கூடாது என்னும் தமிழிலக்கிய மனமே காரணம். அதுபோலவேதான் அண்ணன் வைகோவையும் இடர்பாடான சூழலில் கடந்ததை எண்ணக்கூடாதென்பதால் இனிய தம்பி என்றழைத்து இதயம் உருகினார்.


அதுமட்டுமல்ல. இன்று ஏளன மொழிகளாலும், இழிந்த சொற்களாலும், கண்ணியக் குறைவாகவும், பகை உணர்வோடும், கலைஞரைச் சாடும் செல்வி ஜெயலலிதாவிற்கு இயற்கையாலோ, எதிரிகளாலோ இடர்பாடு ஏதும் ஏற்பட்டால் கலைஞரின் இதயம் இளகவே செய்யும்.

காரணம் கடுமையான எதிர்ப்பு அரசியல் உலவிய காலத்தில் டெல்லியில் காமராசரை காப்பாற்றிய கோதண்டபாணிகளை உருவாக்கிய கழகத்தை வழி நடத்தியதால் மட்டுமல்ல. அவர் இதயம் தமிழால் ஆனதாலும்தான்.

இன்றும்கூட கலைஞர் தலைமையில் தி.மு.-தான் எல்லாத் தலைவர்களையும் நினைத்து சிலைகள், படங்களுக்கு, உரிய காலங்களில் மாலை அணிவித்து, மரியாதை செய்கிறது. கலைஞர் கருவூலம் கடந்த கால வரலாற்றுப் பாடமாக மட்டுமல்லாது, எதிர்கால எழுச்சிக்கு, ஏற்றத்திற்கு இறைக்கப்படும் நீராகவும், இடப்படும் உரமாகவும் அமையும். அதை எதிர்கால இளைஞர் உலகம் விளைவித்துக் காட்டும்.

மனிதனாக வந்தேன். திரவிடானாகச் செல்கிறேன் என்று கழகக் கண்மணி கார்த்திக் குறிப்பிட்டிருப்பது சிந்தையணு ஒவ்வொன்றையும் சிலிர்க்க வைக்கிறது. திராவிடன் என்பது மனிதரில் மாமனிதர் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தவே கலைஞர் இந்தக் கருவூலத்தை உருவாக்கியிருப்பார் என்ற உணர்வு, எண்ணத்தைத் தொடுகின்றபோதே இனிக்கின்ற பொருளனைத்தும் இதயத்தில் இடம்பிடித்து விடுகிறது.


தம்பி கருணாநிதியிடம் உள்ள கலை உணர்வு எல்லாருக்கும் வரவேண்டுமென்று அண்ணா சொன்னார். அந்தக் கலையுணர்வுதான் இன்றைய கலைஞர் கருவூலம் பிறந்ததற்குக் கருவானது என்பதை தமிழர் உணர்ந்திடும் நாள்தான் அவர்களுக்கு உயர்ந்த நாளாக இருக்குமென்பதை அறிந்திட வேண்டுகிறேன்.

ஒரு மனிதன் வயது கடந்து, வழி நடந்து வருகின்ற ஒவ்வொரு மணித்துளியிலும் காணும் பொருளனைத்தும் கலைக்கண் கொண்டு பார்ப்பது, பார்ப்பதை எழில்படுத்தி இதயத்தில் வைப்பது, விடிகின்ற ஒவ்வொரு பொழுதையும் அழகூட்டிப் பார்ப்பதற்கு தன் ஆற்றலைப் பயன்படுத்துவது, பயன்படுத்திப் புதுமை காண்பது என்பதைக் கலைஞரின் எல்லாப் பொருள்களிலும் காணமுடியும்.

என்னுடைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுகிறது என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை கூறினார். அந்த அண்ணாவின் அருமைத் தம்பி அண்ணன் கலைஞர் எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும் எழில் பூத்ததாய், ஏற்றம் கொண்டதாய், எழுச்சிமிக்கதாய், எப்போதும் அழகுடையதாய் திகழ்வது மட்டுமல்லாது வரலாற்றுச் செழுமை கொண்டதாய் இம்மண்ணில் பதிகிறது என்பதை கருவூலத்தைக் காண்போர் தங்கள் கருத்தில் கொண்டால் எதிர்காலத் தமிழினம் ஏற்றம் கொள்வது உறுதியாகிவிடும்.

தந்தை பெரியாரின் பாசறையில் பயின்று, பேரறிஞர் அண்ணாவின் பாசத்தில் வளர்ந்து, தன் நேசமிகு உடன்பிறப்புகளின் நெஞ்சில் இடம்பெற்று பல்வேறு பேராளர்களின் வாழ்த்துக்களைப் பெற்று வாழ்நாளில் பெற்ற அரிய பொருள்களை கருவூலமாக்கி வரலாற்றை வளம்பெறச் செய்திருப்பது எதிர்காலப் பொதுநலப் பணியாளர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகக் காட்சி தரும். கோவில் கண்டு வியந்ததில்லை. மீண்டும் கருவூலம் காண ஆவல் என்ற கா.கிருட்டிணனின் கருத்தின்கீழ் ஒரு ஆய்வரங்கமே நடத்தலாம்.

ஆடு, கோழி வெட்டி, தன் ஆசைகளை வெளியிட்டு, விரும்பியதைப் படைத்து, வேண்டியதைக் கேட்டு, வேண்டுதலைச் சொல்லி, ஆலயங்கள் முன் சென்று, ஆண்டவனை இறைஞ்சியும், எதிர்பார்த்தது கிடைக்காத மக்கள் இனி அந்தக் கோவில்களுக்குச் செல்ல வேண்டியதில்லை; அறிவுக்குக் கோயிலாம் அண்ணா அறிவாலயம் செல்லுங்கள். இதோ கலைஞர் அழைத்து காவியக் காட்சிகளைக் காட்டுகிறார். விழிநோய் நீக்கி, ஒளிதரும் வெற்றிச் செல்வி அன்பழகன் மருத்துவமனை, கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளிக்கும் கலைஞர் அரங்கம், விவேக விளக்கம் தரும் பேராசிரியர் ஆய்வு நூலகம் திராவிட இயக்க வரலாற்றுக் காட்சியகமாய் தீபஒளி ஏற்றி தெளிவினை ஊட்டும் கலைஞர் கருவூலம் ஆகிய அனைத்தும் ஓரிடத்தில் ஒளிவிடும்

அண்ணா அறிவாலயம் சென்று உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் இனிய உணர்வுகளை இதயத்தில் கொள்ளுங்கள். இனமானக் கொடியேற்றி, இலட்சியக் கீதம் இசைத்து, இனிமை உணர்வை ஏற்படுத்துங்கள். தமிழன வரலாற்றுக் காட்சிகளை ஓரிடத்தில் கல்லில் வடித்துக் காட்ட வேண்டுமென்று கலைஞர் மனதில் திட்டமிட்டு வைத்திருந்தார். ஆட்சி தொடராத காரணத்தால் தொடர்ந்து அது தொலைதூரக் கருத்தாகவே இருக்கிறது.
  

ஆனால், அந்தக் கல்லில் வடித்துக் காட்ட கலைஞர் நினைத்த அந்தக் காட்சியின் கருத்து வடிவம் கலைஞர் கருவூலத்தில் காணக் கிடைக்கும். ஏனெனில், தமிழ்தான் தி.மு.. தி.மு.-தான் தமிழ் என்பதை அந்தக் கரூவூலம் நமக்கு உணர்த்தும்.

கற்றவர் பெருகிவரும் இந்நாளில் இளைஞர்களும் மாணவச் செல்வங்களும், இந்த வரலாற்றுக் காட்சியகத்திற்குச் செல்லுங்கள். செல்லும்போது நீங்களாகச் சென்றால், வரும்போது கலைஞராக வருவீர்கள். வர வேண்டும்.


ஏனெனில், மனிதரில் மாமனிதர் மகத்தானவர் கலைஞர். 

No comments:

Post a Comment