Saturday 23 August 2014

கல்லில் பொறித்த உண்மை

கலைஞரை எதிர்த்து அவர்மீது ஏதாவது ஒரு களங்கம் சுமத்தி பொதுவாழ்வில் இருந்து அவரை ஒதுக்குவதற்கு ஆண்டாண்டு காலமாக யாராவது சிலர் உருவாகி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலே கூட பலர் முயலுகிறார்கள்.

முயன்றவர்கள் முனை முறிந்து முடங்கிவிட்டாலும் கூட தொடர்ந்து பலர் அந்த முயற்சியில் ஈடுபாடு காட்டிய வண்ணம் இருக்கிறார்கள். அதிலும் அவராலேயே உருவாகி வளர்ந்தவர்களையே அவருக்கு எதிராக உருவாக்கும் ஆற்றலை சில சக்திகள் பெற்றிருக்கின்றன.

அதற்குக் காரணம் என்ன? கலைஞரின் பொதுவாழ்வும் அவருடைய உள்ளத்தில் உறைந்திருக்கும் உணர்வும் அந்த சக்திகளுக்கு தெளிவாக புரியும். அதனால்தான் தொடர்ந்து அந்த தொண்டில் ஈடுபடுகிறார்கள், உழைக்கின்ற பெரும்பான்மை மக்களுக்கு உழைப்பதையே தனது இலட்சிய வேட்கையாக கொண்டவர் கலைஞர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதை பொறுக்காத அந்த சக்திகள் அவரை ஒழிப்பதற்கு ஓயாது முயல்கின்றன.

 இன்று இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு கொள்கை அலை வீசுகிறது. ஆனால் அந்தக் கொள்கையை பெற்றெடுத்தது நீதிக்கட்சி; அதை பேணி வளர்த்தது பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்; அதை பெருமைக்குரிய பெருமாட்டியாக வளர்த்தது தானைத்தலைவர் கலைஞர்தான். இட ஒதுக்கீட்டின் வரலாற்றை நுட்பமாய் ஆராய்வோருக்கு அந்த உண்மை புரியும்.


.பி.யின் அலகாபாத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அவர் கொடுத்த குரல் அங்குள்ள சமுதாய பிரதிநிதிகளின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது. பின்னர் அந்தக் கொள்கை வெற்றிபெற பல முயற்சிகளை மேற்கொண்டார். பல்வேறு திசைகளில் திரிந்தோரை ஒருங்கிணைத்து ஜனதாகட்சியை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தார் . அந்த அரசில் மண்டல குழுவை அமைக்கும் நிலையை மேற்கொண்டார் அந்தக் குழுவின் அறிக்கையை செயல்படுத்த தேசிய முன்னணியை உருவாக்கினார். வி.பி.சிங்கின் மூலம் அந்த அறிக்கையை அரசாணையாக்கினார். அதற்காக கலைஞரும் வி.பி. சிங்கும் தங்கள் அரசையே இழந்தார்கள். கொண்ட கொள்கைக்காக கொற்றத்தையே இழந்தார்கள்.


மாநில அரசில் மட்டுமின்றி மத்திய அரசிலும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நிலையாக நிற்க வேண்டுமானால் அதற்குத் துணையாக பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீடும் கிடைத்தாக வேண்டும். அந்த இலக்கை நோக்கித் தான் நெடுங்காலமாகவே கலைஞரின் இத்தனை செயலும் சென்று கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் கலைஞரின் எதிரிகள்; உணராதோர் அவர் உழைப்பின் பயனை துய்ப்பவர்கள்.

துயரப் பட்டோருக்கான அவர் தொண்டு தொலை நோக்கோடு தொடர்வதால் தான் அவரை பலவீனப்படுத்தப் பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறன. செய்தி இதழாளர்கள் பலர் தங்களின் மேட்டுக்குடிக்குணத்தாலும் வாணிப நோக்கத்தாலும் அவருக்கெதிரான நிலையை மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் அவருடன் இருந்தவர்கள், வயது வாராமலேயே தாய்மையடையும் ஆசையைப்போல் தகுதியில்லாமலேயே தலைவராகும் எண்ணத்தை வளர்த்ததால் இன்று சிறு சலசலப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

உள்ளத்தில் பதித்த கொள்கையும், கொள்கை வழிச் செயலும் தூயதாக இருக்கும்போது துரோகங்கள் முயற்சிகள் தோல்விகண்டு துவண்டு விடும். இதய சுத்தி இல்லாதவர்கள் எத்தகைய கொம்பனாக இருந்தாலும் எத்தனை கோடியை எங்கிருந்து பெற்று செலவழித்தாலும், தொண்டுள்ளத்தின் முன் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.


உண்மை உழைப்பாளிகளை அந்தக்கால கட்டத்தில் மக்கள் முழுமையாய் உணராது போயிடினும் வரலாறு தம் வாழ்த்துக்களை அவர்களுக்கு வழங்கிய வண்ணமே இருக்கும். காய்தல், உவத்தல் அற்ற கண்ணியமிக்க காவியப் போராளன் கலைஞரின் புகழ் விண்ணின் விளக்காகி என்றென்றும் ஒளி வீசி நிலைத்து நிற்கும் இது கல்லில் பொறித்த உண்மை

No comments:

Post a Comment